30 – 1

சுயோ வீட்டிலிருந்து புறப்பட்டு அரைமணியும்  சென்றிராது, “ப்ப்பூ!” நெடிய மூச்சோடு காரை ஓரமாக நிறுத்தியிருந்தான், பூபாலன்.

விடைபெறுகையில், சுயோ கதைத்த விதமும் பாறையாகிவிட்ட பூபாலன் முகமும் மனதுள் எதுவோ செய்வித்தாலும், அதில் நின்று சிந்திக்க முடியாது அவள் கவனத்தை தம் பக்கம் இழுத்துவிட்டார்கள், லாதியும் குழந்தையும்.

மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, பிள்ளைகளிருவருக்கும் கொண்டு வந்திருந்த உணவைக் கொடுக்கலாம் என்றெண்ணி எடுத்துக்கொண்டிருந்த கயல் கேள்வியாகப் பார்த்தாள். பூபாலன் பின்னால் எல்லாம் திரும்பவில்லை; அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

“ஏனப்பா நிப்பாட்டிட்டீங்க?” அவனுக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த லாதி, அவன் இருக்கையைப் பிடித்து எட்டிப் பார்த்துக் கேட்டாள். அப்போதும் அவன் திரும்பவில்லை.

 

“ப்பா!” தகப்பன் தோளில் தட்டினாள், மகள்.

“ம்ம்ம்… என்ன செல்லம்மா?” 

“நீங்க அழுறீங்களா?”

கயல் எட்டிப் பார்த்தாள். மகளைப் பார்த்திருந்தவன் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. 

 

“ச்சே ச்சே…இரவு வடிவாத் தூங்கேல்ல…அதான்.”

மகளுக்கு அந்த நம்பிக்கையில்லை. “பொய் அப்பா!” முறைத்தபடி சொன்னவள், தன்னைச் சுற்றி இருந்த இருக்கைப் பட்டியை அகற்றிவிட்டு எழுந்து வளைந்து தகப்பன் கண்களைத் துடைத்து விட்டாள்.

“என்ர செல்லம்மா இருக்கேக்க அப்பாக்கு என்ன கவலை ம்ம்ம்!” இதைச் சொன்ன பூபாலன் குரல் கரகரத்துக் கமறியது. 

மனைவியின் இறப்பின் போது வெளிப்படையாகக் கதறித் துடித்தவன் தான். பிறகோ, மற்றவர் முன்னால் தன் துயரைக் காட்டிக் கொண்டிருக்கவில்லை. 

“நீங்க…ஓகே தானே?” வினவினாள் கயல்.

உடனே பதில் சொல்லாவிட்டாலும், “ம்ம் …ஓம்” என்றவன், “செல்லம் இருந்து பெல்ட்டப் போடுங்க, அப்பா கார எடுக்கப் போறன்.” சொன்ன மறு நிமிடம் காரைச் செலுத்தத்  தொடங்கியிருந்தான். அடுத்து வந்த ஒரு மணித்தியாலம் வாய் திறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பின்னால் அமர்ந்திருந்தவர்களும் அதைப் பெரிது படுத்தவில்லை. லாதி இடையிடை கதைத்தாலும் ‘ம்ம்’ ‘நோ’ ரெண்டு சொற்களுமே அவனிடமிருந்து உதிர்ந்திருந்தன.

நேர் மாறாக பின் இருக்கைகள் கலகலப்பாகவிருந்தன. லாதி, கிழங்கு ரொட்டிகளை உண்ண, அவர்களோடு கதைத்து விளையாடி விளையாடி சின்னவனுக்கு உணவைத் தீத்துவதில் கவனமாகவிருந்தாள், கயல். அவள் தயாரித்துக் கொண்டு வந்திருந்த உருளைக்கிழங்கோடு சேர்த்து மசித்த மரக்கறிகள் சின்னவனுக்குப் பிடித்த பாலாடைக் கட்டியின் சுவையோடு மெல்ல மெல்ல உள்ளே போய்க் கொண்டிருந்தது. இருவரும் சாப்பிட்ட பின்னர், “ஸ்வீட்டி நான் ‘டாப்’ல விளையாடுறன் என்ன?” என்று கேட்டு, அதில் சுவாரசியமாகவிருந்தாள் லாதி. 

நேராக அமர்ந்த கயல் அப்போதுதான் பூபாலனைப் பார்த்தாள்.

‘இன்னும் கோவமா இருக்கிறாரோ!? சுயோவும் அப்படிக் கதைச்சிருக்க வேணாம். அதோட சாப்பாடு கொண்டு வந்த மனிசிட அலட்டல் வேற!’ ’ரியர் வியூ’வில் தெரிந்த அவன் முகத்துக்கு அவள் பார்வை சென்றிட்டு. சுருங்கியிருந்த நெற்றியையும் கலங்கியிருந்த விழிகளையும் யோசனையாகப் பார்த்தவள், உண்மையில்  பெரிதும் அந்தரப்பட்டாள். காயுவின் சகோதர்களோடு நின்ற இந்த இரு நாட்களும் ஒரு கணமேனும் அவள் வேற்றாளாக உணரவில்லை. அவர்கள் அப்படி அவளை நடத்தவில்லை. ஆனால், விடை கொடுக்கையில் பூபாலனோடு அப்படிக் கதைத்தும் இருக்கத் தேவையில்லை. 

‘பிள்ளைகள் என்னை விடுவார்களா இல்லையா எண்டது கேள்வியே இல்லை; நான் போகத்தானே போறன்.’ கண்கள் கலங்க வெளிப்புறம் பார்த்தவளுக்கு, பூபாலன் அப்படி இறுக்கமாகவிருந்து காரோடுவதைப் பார்க்கக் கலக்கமாக இருந்தது. 

‘என்னில ஏதாவது கோவமோ? இதான் வர இல்ல எண்டு அப்பவே சொன்னன்.’ என்றதையும் மீறி, என்ன ஏதென்று எப்படிக் கேட்பது? அவளுக்குத் தெரியவில்லை. அவனுடனான அவள் கதைகள் அநேகம் பிள்ளைகள் இருவர் குறித்து மட்டுமே. ஆரம்பத்தில் பிரணவன், பின் விமலா, சரசு என்று அவர்கள் தான் அவனோடு உரிமையாக நெருக்கமாக அளவளாவுவார்கள். 

“சாப்பிடுறீங்களா? ஒரு மணி தாண்டப்  போகுது.”

“இல்ல வேணாம், நீர் சாப்பிடும்!” நொடி தாமதியாது வந்திட்டு, சீறல் தான்.

“ஏன் வேணாம்? காலமையும் பெரிசாச் சாப்பிடேல்ல எல்லா?” 

ரியர் வியூவால் வந்த அவன் பார்வை, கேள்வி கேட்பவளில் சில நொடிகள் தரித்து நின்று விலகிற்று.  அவ்வளவும் தான்.

“கொத்து ரொட்டியும் கிழங்கு ரொட்டியும் இருக்கு. நல்ல காஸ் ஸ்டேசனா நிப்பாட்டிப் போட்டு சாப்பிடலாம்.” விடாது சொன்னாள்,கயல்.

அவன் பதில் சொல்லவில்லை. அடுத்து வந்த காஸ் ஸ்டேசனில் காரை நிறுத்தியிருந்தான். 

சின்னவன் உண்ட மயக்கத்தில் கண்கள் சொருகிக் கொண்டிருந்தான். லாதி இன்னமும் சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு என்ன தர? கொத்தா கிழங்கு ரொட்டியா?” 

“எனக்கு ஒண்ணும் வேணாம், நீர் சாப்பிடும்.” குரல் ஒன்றும் உயரவேயில்லை. ஆனால்…அந்தத் தொனி ‘தேவையில்லாது கதைக்காதே!’ என்று சொல்வதாய்ப் பட்டிட்டு அவளுக்கு.  

நெற்றி சுருங்க, சற்றே முன்னால் எக்கி அவன் முகம் பார்க்க முயன்றாள், கயல்.

“பச்! உண்மையா எனக்குப் பசியில்ல கயல்.  சாப்பிட்டுப் போட்டுச் சொல்லும், வோஸ் ரூம் போயிட்டுப் போகலாம்.” என்றவன் “குஞ்சம்மா, அப்பா சீற்ற கொஞ்சம் சரிக்கிறன்.” இலேசாகப் பின்னால் சரித்து நெற்றியில் கையைப் படுக்கவிட்டுச் சரிந்து விட்டான்.

கயல்விழிக்கு உண்மையாகவே என்ன செய்வதென்று தெரியவில்லை. 

“உங்களுக்கு என்ன செய்யுது?” கேட்டவளுக்கு உள்ளே சின்னதாகப் பய ஊற்று உருவாகியிருந்தது. அவளால் இந்தக் காரை எடுத்துக்கொண்டு நியூயோர் வரை செல்ல முடியாது. லைசன்ஸ் இருந்தாலும் இங்கு வந்த பின்னர்  நெடுஞ்சாலைப் பயணம் பழக்கமே இல்லை. அடுத்து, எட்டு மணித்தியாலப் பயணம். அதுவே இடையிடை நிறுத்திப் போவதால் பத்து மணித்தியாலம் ஆகலாம். அங்கிருந்து வரும் போது ஒன்பதரை மணித்தியாலம் பிடித்ததே!

‘சின்னப் பிள்ளைகளோட… இவருக்கு ஏதாவது ஏலாமல் போனால் நான் என்ன செய்வன்?’

“உங்களுக்கு ஏதாவது செய்யுதா? சொல்லுங்கவன். சொன்னாத்தானே எங்களுக்கும் விளங்கும். தலையிடிக்குதா? டைனோல்  தரட்டா?” 

“பச்! என்ன நீர் நொய் நொய் எண்டு கொண்டு இருக்கிறீர்? ஒண்ணுமில்ல எண்டு எத்தின தரம் சொல்லுறது?” வள்ளென்று விழுந்தவன், முறைப்போடும் பார்த்தான். கயல்விழி திடுக்கிட்டுப் போனாள். பட்டென்று, தானாகப் பின்னால் நகர்ந்த தேகம் அப்படியே இருக்கையில் சாய்ந்திட்டு. விழிகள் சுர்ரென்று கலங்கின.  

லாதியும் பட்டென்று நிமிர்ந்தாள். “அப்பா என்ன? ஏன் இப்ப ஸ்வீட்டிய பேசுறீங்க?” வெருட்டலாகக் கேட்டாள்.

“அவவ ஒரு வார்த்த சொல்ல முதல் இவ வந்திருவா!” முணுமுணுத்தான். கயலுக்கும் நன்றாகவே கேட்டிச்சு. முகம் கன்ற அமர்ந்திருந்தாள். ஓரிரு நிமிடங்கள் தான். அவன் முகத்தை அழுந்தத் துடைத்தபடி வெளியில் பார்க்க, “நான் எங்க நொய் நொய் எண்டு கொண்டு இருக்கிறன். பாவம் பாத்தா… என்னிலேயே ஏறி விழுறீங்க!”  சீறலாக ஆரம்பித்தவள் குரல் இறுதியில் தடுமாறிற்று. 

error: Alert: Content selection is disabled!!