30 – 2

எப்பிடி என்னோட அவர் சீறலாம்? மனம் சிலுப்பிற்று. 

“பச் சொறி கயல்! கொஞ்சம் தலையிடி அதான்.” பட்டென்று இறங்கி வந்தான். அதனால் அவள் முகபாவத்தை இயல்பாக்க முடியவில்லை.  

“சரி, ரெண்டு டைநோல் தாரும் குடிச்சிட்டு கொஞ்சத்தில சாப்பிடுறன்; நீர் இப்ப சாப்பிடும், எனக்கு ரெண்டு கிழங்கு ரொட்டி போதும்.”  தன்மையாகச் சொன்னவனுக்கு, “உங்களுக்குத் தலையிடியோ குடியுங்க; அதைவிட்டுட்டு ஏதோ எனக்காகக் குடிக்கிறது போல படம் போட வேணாம்.” என்றபடி, குளிசையைக் கொடுத்தாள்.

எதுவும் பேசாது குளிசையைப் போட்டவன், “ஒரு பத்து இருபது நிமிசத்தில வெளிக்கிடுவம்.” முதல் போலவே மீண்டும் சாய்ந்து கொண்டான். 

கயலுக்குள் பதற்றம் அதிகரித்தது. “உங்களுக்கு… வேற எதுவும் செய்யேல்லையே!” தயங்கித் தயங்கி அவள் கேட்க, கையைச் சற்றே  உயர்த்திப் பார்த்தவன், இலேசாகச் சிரித்தான்.

“ஒண்ணும் இல்ல கயல், தலையிடி அவ்வளவும் தான்.” என்றவன், சமாளிப்பது நன்றாகவே தெரிந்தும் அதுக்கு மேல் எப்படிக் கேட்பது?

பூபாலனுக்குள் அப்போதுதான் ஒன்று சர்ரென்று புரிந்திட்டு. ‘எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் பிள்ளைகள் நிலை?’ நெஞ்சு பதறிப் போனான். தலை விண் விண்ணென்று வலித்திட்டு.

மனதின் தடுமாற்றத்தை, வலியை வாய்விட்டுப் பகிர்ந்து கொள்ளவோ, கலந்துபேசி திடம் பெறவோ அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்? எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் மிகவும் தாராளமாகவே இருந்தும் ஒன்றுமே இல்லாதவனாக உணர்ந்தான் அவன். அவன் அத்தனை வெற்றிகளிலும் ஆறாத் துயரிலும் தோளோடு தோள் நின்ற நண்பன் பிரண்வ் கூட அவனை எட்ட நிறுத்தி விட்டானே!

‘காயு நீ போனதோட எல்லாம் சரி! என்னை ஏன்டி இந்த நிலையில நிப்பாட்டிப் போட்ட?’ அருவமாகிவிட்ட அவன் மனைவியோடுதான் கோபிக்க முடிந்தது. 

‘கயல் போகவிட்டு நம்மட பிள்ளைகள எப்பிடி வளக்கப் போறன்? உண்மையாவே எனக்கு தெரியேல்லையே!’ மனதுள் குளறினான்.

அவனையே பார்த்திருந்த கயல், அவன் விழியால் கோடாகக் கசிந்து வழிந்த கண்ணீர் கண்டு அதிர்ந்து போனாள்.

அவனைத் தட்டி என்ன ஏதென்று கேட்க உள்ளம் துடித்தது. அதை அவ்வளவு இலகுவாகச் செய்யவும் முடியவில்லை. 

“லாதி!” இரகசியமாக அழைத்தபடி, குழந்தையால் எக்கி அவளிடம் சரிந்தாள்.

“என்ன ஸ்வீட்டி?” அவளும் இரகசியம் தான்; பார்வை மட்டும் ‘டப்’ இல். 

“அப்பாக்கு இப்ப ஒகே வா எண்டு கேளும் செல்லம். பிறகு விளையாடலாம்.”

“ம்ம்ம் வன் செக்கன் ஸ்வீவீவீட்டி…” இழுத்துவிட்டு சில நொடிகள்  கழித்து நிமிர்ந்தவளோ, “நான் அவுட் ஆகிட்டன்; எல்லாம் உங்களால!” கயல் கன்னத்தைக் கிள்ளிவிட்டு, கிளுக்கிச் சிரித்தாள்.

வழமையாகவென்றால் கயலும் திருப்பிக் கிள்ள அவர்கள் சிரிப்பும் விளையாட்டும் நீண்டு சென்றிருக்கும். 

“அப்பாட்ட தலையிடி சுகமா எண்டு கேளும்.”

“ஓ…கேய் ஓ…கேய்” எழுந்து வளைந்து தகப்பன் முகத்தருகில் குனிந்தாள், லாதி. 

“அப்பாக்குட்டி…” மெல்ல ஆரம்பித்து, “அப்பா அப்பா” கத்தினாள்.

“ம்ம்… என்ன குஞ்சு?”  

“கண்ணைத் திறவுங்கோ!” கரங்களை அகற்ற முனைந்தாள்.

“உங்களுக்கு ஓகேயா எண்டு ஸ்வீட்டி கேக்கிறா?”

சற்று நேரம் மௌனமாக இருந்தவன், “ம்ம் ஒகே தான்.” என்றான், சின்னக் குரலில்.

“அப்பா, கண்ணத் திறந்து எழும்புங்கோ போகலாம்.” மீண்டும் மீண்டும் அவள், அவன் கரங்களைப் பிரிக்க முனைந்தாள்.  மெல்லக் கண்களைத் திறந்து அழுந்தத் துடைத்துவிட்டு மகள் முகத்தையே பார்த்திருந்தான், பூபாலன். 

“அப்பா நீங்க அழுகிறீங்க. ஐயாம் சூர்!  ஸ்வீட்டி அப்பாவப் பாருங்க!” 

“இல்ல செல்லம்மா, பிள்ளேட அப்பா என்ன சின்னப்பிள்ளையா  அழ?” நிமிர்ந்தவன், அதே வேகத்தில் இறங்கினான்.

பனிக்கால சோம்பலோடு இருந்தது வெளிப்புறம். பனிப்பொழிவு, மழை, காற்று என்று இல்லையென்றாலும் சுள்ளென்று எரித்த வெயிலில் சுரீரென்று உடலை ஊடுறுத்துச் சென்ற குளிர் கடும் நடுக்கத்தை உருவாக்கிற்று. 

பின்கதவைத் திறந்து மகளைத் தூக்கி நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான், பூபாலன். அவன் ஏன் யாருமில்லை என்று எண்ண வேண்டும்? மகனும் மகளும் அவனுக்கு யானைப் பலம் தருவார்களே! தருகிறார்கள்! இவர்களைவிட வேறு யார் வேண்டும்? அவன் இன்னமும் திடமாக ஓடுவான், அவர்களுக்காக. மனதில், இப்படிப்பட்ட நேர்மறை எண்ணங்களோட கண்களை மூடிக்கொண்டு நின்றான். 

தகப்பனின் செல்ல அணைப்பில் மகிழ்ந்த மகள், அவன் முகம் பற்றி இரு கன்னங்களிலும் மாறி மாறிக் கொஞ்சினாள்.  

“செல்லகுட்டி அப்பாக்குத் தலையிடி எல்லாம் ஒகேவா?” தன் குட்டிக் கரங்களால் முகம் வருடியபடி கேட்டவள், அவன் மனதுள் தொய்ந்து கிடந்த நம்பிக்கையை நிமிர்ந்து நிற்க வைத்தாள்.

மகளை இருத்திவிட்டுக் காரை எடுத்தவன், “காஸ் ஸ்டேசனுக்குப்  பக்கத்தில நிப்பாட்டினா, சாப்பிட்டுட்டு வோஸ் ரூம் போகச் சுகம்.” எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில் கதைக்கவும் ஒற்றை வார்த்தை பேசாது அமர்ந்திருந்தாள், கயல்விழி.

மனதுள் பெரும் போராட்டம் நடத்தி ஓரளவேனும் தெளிந்திருந்தவன், இரு கிழங்கு ரொட்டிகளை உள்ளே தள்ளிவிட்டு சற்றே தெம்போடுதான் காரை எடுத்தான்.

அவன் மனம் முழுமையாகத் திடம் பெறவில்லை என்று, அடுத்தடுத்து வந்த நாட்கள் பிட்டுப் பிட்டுப் வைக்கப் போவதை அவன் அப்போது அறியவில்லையே! 

 

error: Alert: Content selection is disabled!!