என்னவோ கடந்துபோன பத்து வருடங்களும் அப்படியே மாயமாய் மறைந்துவிட்டதுபோல், தன்னை உயிராக நேசிக்கும் மயூரி மீண்டும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தவன் ஆசையோடு அவளையே பார்த்தான். அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா.. தன் சந்தோசத்தை நேசத்தை அவளிடம் உணர்த்திவிட மாட்டோமா என்று அவன் ஏங்க அவளோ பார்க்கவே இல்லை.
சொன்னது எல்லாம் மனதிலிருந்துதான் சொன்னாள். அவனும் அவளிடம் சொன்னானே, ‘குழந்தையை வேண்டாம் எண்டு சொன்னது மட்டுமே நான் இல்ல மய்யு. அதற்கு முந்தின வாழ்க்கையையும் யோசித்துப்பார்’ என்று. உண்மையில் அவன் நல்லவன் தானே. அவளும் அந்த நல்லவனிடம் தானே தன்னை எந்தப் பயமுமே இன்றி நம்பிக் கொடுத்தாள். அதைத்தான் அவனது பெற்றவர்களிடமும் சொன்னாள். அதைவிட, அவனும் அவளும் செய்ததற்கு அவனுடைய அன்னை ஏன் வருந்தவேண்டும்?
ஆனால், தனிப்பட்ட முறையில் அவன் மீது அவளுக்கிருந்த கோபம், குறை, விலகல் எல்லாமே அப்படியேதான் இருந்தது. அவனுக்கும் அவளுக்குமான விரிசல் விரிசலாகவேதான் கிடந்தது. அதில், அவனுடைய பார்வையை உணர்ந்தாலும் பதில் பார்வை பார்க்க மறுத்தாள் மயூரி.
புஸ்பவதி அம்மா அப்படியே அமைதியாகிவிட்டார். வெளிப்படையாகச் சொல்ல முடியாது போனாலும், தன் மகன் ஒரு பெண்ணோடு திருமணத்துக்கு முதல் உறவு வைத்திருந்தான் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. அது காதலின் பெயரில் என்றாலுமே ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவரின் வயிற்றில் பிறந்தவனா? அவர் தூக்கி வளர்த்த ஆம்பிளை பிள்ளையா என்று மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், அவனைப்பற்றி அவனின் அவளோடான திட்டங்களைப் பற்றி மயூரி சொன்னபோது, காதலித்தவளிடமும் தங்களைப் பற்றிப் பேசியிருக்கிறான், அவர்களைப் பார்ப்பதுதான் அவனுடைய பொறுப்பிலேயே முதன்மையாக இருந்திருக்கிறது, அதனால்தான் முட்டாள் தனமான முடிவுகளையும் எடுத்திருக்கிறான் என்பது சற்றே அவரை ஆற்றுப்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். குமுறிக்கொண்டிருந்த மனது மெல்ல அடங்க அவரும் அமைதியாகிப்போனார்.
மயூரிக்கும் மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் நந்தினி ஓடிப்போய் எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். மயூரி அருந்தும் நிலையில் இல்லை. அவளையே கவனித்துக்கொண்டிருந்த பிரதீபனும் தன் கப்பினை ஜன்னல் கட்டிலேயே வைத்துவிட்டான்.
வந்ததில் இருந்து திருநாவுக்கரசு மயூரியைத்தான் கவனித்துக்கொண்டிருந்தார். தனியாக வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளத் தெரிந்த பெண், நல்ல வேலை நல்ல சம்பளம் என்று இருப்பவள் எப்படி நடப்பாள், அவர்களை எப்படி நடத்துவாள் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவளின் குண நலன்கள் எப்படியானது என்று கணக்கிட்டுக்கொண்டேதான் இருந்தார்.
புஸ்பவதி அவளைப் பேசியபோது அமைதியாக இருந்தது, பெற்றவர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் விலுக்கென்று நிமிர்ந்தது, பிரதீபனைப்பற்றி ஒன்று சொன்னதும் அவனுக்காகப் பேசியது, அவனை மட்டுமே குற்றம் சாட்டாமல் இருவரும்தான் நடந்ததற்கு பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டது என்று அவள் நடந்துகொண்ட விதமெல்லாம் நியாயவதியான பெண் என்றே உணர்த்திற்று. அவள் அடங்கியும் போகவில்லை அலட்சியமாகவும் நடக்கவில்லை. அவள் அவளாக இருந்தாள். அதுவே அவருக்கு அவளைப் பிடித்துப்போகக் காரணமாயிற்று!
எப்படியும் மகனுக்குப் பிடித்தவளுடன் பேசி திருமணத்தை முடித்துவைக்கவேண்டும் என்கிற கடமைக்காக வந்தவருக்கு அவள் நல்ல பெண் என்பது இன்னுமே மனதுக்கு ஆறுதல் சேர்த்தது.
எனவே, தன் மனதை உணர்த்துகிறவராக, “எங்கயம்மா எங்கட பேத்தி?” என்று, அந்த ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு ஆவலோடு கேட்டார். புஸ்பவதிக்கும் பேத்தியின் முகத்தைப் பார்த்ததும் மீண்டும் கண்கள் கலங்கிற்று. ஆவலோடு அவரும் அவளைப் பார்க்க, “பள்ளிக்கூடம் போய்ட்டாள்.” என்றாள் மயூரி.
“உங்க ரெண்டுபேருக்கும் பிள்ளையா பிறந்த பாவத்துக்கு அந்தக் குழந்தை படுற பாடு இருக்கே.. கடவுளே..” என்று மீண்டும் அரற்றியவர், “இது இனிச் சரிவராது. உடனேயே தாலியைக் கட்டவேணும். கோயில் ஐயாட்ட கேட்டு நல்ல நாளை பாருங்கோப்பா. ஒருத்தரும் வேண்டாம். நாங்க மட்டுமே போதும்!” என்று, அவளோடு பேசி சம்மதிக்க வைக்க என்று வந்தவர் அவளைக் கேளாமலே முடிவை எடுத்து நடக்கவேண்டியதைச் சொல்லிக்கொண்டே போக, அதிர்ந்துபோய் பார்த்தாள் மயூரி.
இது இப்படித்தான் வந்து நிற்கும் என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. ஆயினும், அவனை மணக்கத்தான் வேண்டுமா என்பதில் மனம் முரண்டிக்கொண்டே நின்றது. அவள் மறுத்தாலும் அதுவே இறுதியான முடிவாக இருக்கப்போவதில்லை என்பதும் தெரியும். முதல் காரணம், ஆதிரா. அவனும் இனி விடமாட்டான் தான். ஆனால் அவள்? அவளின் விருப்பு வெறுப்புக்கள்? அவளின் உணர்வுகள்?
அன்றைக்கு, நந்தினியின் சித்தி என்பதால் தனியறைக்குள் போனதும், “எனக்கு இந்தக் குழந்தை வேணும் டொக்டர். ஆனா இத அவரிட்ட சொல்லாதீங்க.” என்று அவரின் காலில் விழுந்து கதறித்தானே, குழந்தையைக் காப்பாற்றிக்கொண்டாள். அந்த அறையில் காத்திருந்த பொழுதில், கதவைத் திறந்துகொண்டு ஓடிவரமாட்டானா.. ‘டொக்டர் வேண்டாம் குழந்தையை ஒன்றும் செய்துபோடாதீங்க’ என்று சொல்லிவிடமாட்டானா என்று அவளின் உயிர் துடித்ததே. அன்றைக்கு கல்லாக இறுகிப்போய் நின்றவனை இன்று மணக்கவேண்டுமா என்கிற கேள்வி அவளுக்குள் எழுந்துகொண்டு இருந்தது.
என்னைப் பிடித்துவைக்கத் திட்டம் போட்டுக் கருவைச் சுமந்தாயா என்று கேட்டானே!
அவளைக் கவனித்துவிட்டார் புஸ்பவதி. “இப்ப வேற யாரையும் கல்யாணம் கட்டுற எண்ணம் இருக்கா உனக்கு?” நேரடியாகக் கேட்டார் அவர்.
அந்தக் கேள்வியே அவளுக்குள் ஒரு அதிர்வைக் கிளப்ப தலை தானாக மறுத்து அசைந்தது. “அப்ப இவனைக் கட்டம்மா. இது சத்தியமா நான் அவனுக்காக சொல்லேல்ல. உனக்காகவும் உன்ர மகளுக்காகவும் தான் சொல்லுறன். நான் அவனுக்கு அம்மா தான். ஆனா அவனை வயித்தில சுமந்து பெத்த ஒரு பொம்பிளை. எனக்கு விளங்கும் உன்ர மனம் என்ன, அவன்ல உனக்கு இருக்கிற கோபம் என்ன எண்டு. அதனாலேயே இவன் இல்லாம வேற நல்ல பெடியன் அமைஞ்சா கட்டலாம் எண்டுற எண்ணம் இருந்தா மட்டும் சொல்லு நாங்க இப்பவே போறோம். அதுக்குப்பிறகு அவன் உன்னட்ட வரமாட்டான். அதுக்கு நான் பொறுப்பு.” என்றார் உறுதியான குரலில்.
அவளுக்கோ அவர் இன்னொருவனைப்பற்றி மீண்டும் கதைத்தது கசந்து வழிந்தது.
“இவனைக் கல்யாணம் கட்டுறதால எல்லாம் சரியாகும் எண்டோ அதுக்குப் பிறகு நீ மனுசியா கடமை எல்லாம் செய்யோணும் எண்டோ நான் சொல்லவே மாட்டேன். நீ உன்ர மனதுக்கு சரி எண்டு படுறமாதிரியே இரு. அங்க எங்கட வீட்டை வந்திருந்து மருமகளா எனக்கு பணிவிடை செய், என்ர மகனை பார் எண்டு சொல்லுற சீரியல் மாமியாரும் இல்ல நான். நான் முதல் ஒரு பொம்பிளை. ரெண்டு பொம்பிளை பிள்ளைகளை பெத்த தாய். அதுக்குப்பிறகுதான் அவனுக்கு அம்மா. எனக்கும் விளங்கும் உன்ர மனம். கல்யாணம் முடிஞ்ச பிறகும் நீங்க இங்கயே இருங்கோ. இவனுக்கு என்ன தண்டனை எண்டாலும் குடு. அவன் உன்ன மாத்துவானா இல்ல நீ அவனை மாத்துவியா தெரியாது. எண்டைக்காவது ஒருநாள் எல்லாம் சரியான பிறகு எல்லாருமா சேர்ந்து சந்தோசமா வாழலாம்.” என்றார் அவர்.
அப்போதும் மயூரியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தயங்கிக்கொண்டு நிற்க, நந்தினிக்கோ இனியும் வாயை மூடிக்கொண்டு இருந்தால் இவள் சரிவரமாட்டாள் என்று புரிந்துபோயிற்று! அதைவிட, ஒற்றை மனுசியாக புஸ்பவதி அம்மா அனைத்து விடயங்களையும் கையாண்ட அழகு அவளை மிகவுமே கவர்ந்திருந்தது. அவருக்குத்தான் மயூரி மருமகள். நந்தினி முடிவெடுத்துவிட்டிருந்தாள். எனவே, “அவள் ஓம் எண்டு சொல்லுவாள் ஆன்ட்டி. இப்படி ஒரு மாமி கிடைக்க அவள் குடுத்து வச்சிருக்க வேணும். என்னடி ஓம் எண்டு சொல்லன்!” என்று அவரிடம் ஆரம்பித்து மயூரியிடம் கொண்டுவந்து முடித்தாள் அவள்.
மயூரி நந்தினியைப் பார்க்க, “என்ன பாக்கிறாய், அப்ப கேகே வேண்டாமா உனக்கு?” என்றாள் காதோரமாக.
அவள் சொன்ன ‘கேகே’யில் மயூரிக்குச் சிலிர்த்தது. இந்தக் கேகேயில் தானே எல்லாமே ஆரம்பித்தது. அது அவளின் தீபனை நினைவுபடுத்த அவ்வளவு நேரத்துக்குப்பிறகு அவளாக அவனைப் பார்த்தாள். கவலைக்கோடுகளை முகம் முழுக்க நிரப்பிக்கொண்டு, ‘என்ன சொல்லப்போகிறாள்’ என்று அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“சொல்லடி..” நந்தினி தூண்ட, சம்மதம் என்பதாக பிரதீபனிடம் தான் தலையை அசைத்தாள் மயூரி. சட்டென மின்னியது அவன் கண்கள். அப்படியே விளக்கைப் போட்டதுபோல் அனைவரின் முகமும் மலர்ந்துபோயிற்று! பிரதீபனின் சகோதரிகள் கூட அவனை முறைத்தாலும் தங்களுக்குள் ஆறுதலாகப் பார்த்துக்கொண்டனர்.
“அம்மா!” என்றபடி வந்து பிரதீபனும் அன்னையை அணைத்துக்கொண்டான். இரவு அவனிடம் அவ்வளவு கத்தினாலும் திட்டித் தீர்த்தாலும் அவனால் முடியாததை அவர் சாதித்துவிட்டாரே! மனது நிறைந்துபோயிற்று அவனுக்கு.
“என்னடா அம்மா? கண்டதையும் செய்யேக்க உனக்கு இந்த அம்மாவை நினைவு வரேல்லத்தானே..” எனும்போது குரல் அடைத்துக்கொண்டது அவருக்கு.
“இனி அப்படி ஒண்டும் நடக்காதம்மா.” என்றான் அவன் சமாதானமாக.
“நீ ஒண்டும் என்னை சமாதானப்படுத்த வேண்டாம் போ!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், மகனின் மறைமுகமான மன்னிப்பு வேண்டலில் தாயின் கோபம் குறைந்துதான் போயிற்று. அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் முறுக்கிக்கொண்டார். அவனோ புன்னகையோடு அவரை இன்னுமே இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
சூட்டோடு சூடாகவே திருமணம் பற்றிய பேச்சும் அவர்களுக்குள் எழுந்தது. அதன்பிறகு மயூரி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள். நேரம் மத்தியானத்தை நெருங்குவதைக் கவனித்துவிட்டு சமைக்க அவள் ஆரம்பமாக, “சமைக்காதயம்மா. இன்னொரு நாளைக்கு பேத்தியும் இருக்கேக்க வந்து உன்ர கையால சாப்பிடுறோம்.” என்று நல்லமாதிரியே மறுத்தார் புஸ்பவதி அம்மா.
“இரவு முழுக்க நித்திரையே இல்ல. குண்டை போட்டமாதிரித்தானே இவன் வந்து உன்னைப்பற்றி சொன்னவன். இனி நீ என்ன சொல்லுவியோ என்னவோ எண்டு ஒரே யோசனை. இப்ப போய் நிம்மதியா ஒரு நித்திரை கொண்டு எழும்பவேணும். பிறகுதான் என்ன எண்டாலும்.” அவள் குறையாக நினைத்துவிடக்கூடாது என்று விளக்கமாகச் சொன்னவர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
தன்னுடைய அத்தானையும் மச்சானையும் நோக்கி, “நீங்க எல்லாரையும் கூட்டிக்கொண்டு போங்கோ. நான் பிறகு வாறன்.” என்றான் பிரதீபன்.
“நாங்க கோவமா இருக்கிறோம் பிரதீபன். நீ எங்களோட கதைக்காத!” என்றார் அவனின் அத்தான் செல்வன்.
“கோவம் என்னோடதானே. உங்கட மாமா மாமியோட இல்லைதானே. என்ன நான் சொல்லுறது சரிதானே தயாளன்?” என்றான் அவன் தன் மச்சானை நோக்கி.
“செய்றதை எல்லாம் செய்துபோட்டு நல்லபிள்ளை மாதிரி சமாதானத்துக்கு வாறான். ஒருத்தரும் அவனோட கதைக்காதீங்கோ!” என்று அவனிடம் முறைத்தாலும், மயூரியிடமும் நந்தினியிடமும் நல்லமாதிரி சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் அவனுடைய சகோதரிகள்.
உதட்டில் சிரிப்புடன் அவர்கள் போவதைப்பார்த்திருந்தான் பிரதீபன். மனம் நிறைந்துபோயிருந்தது.

