காதல் காயங்களே 23 – 2

தொடக்கூடாது என்று சொன்னாள் தானே. அது ஆறமறுத்தது அவனுக்கு. அன்றைய அவர்களின் உறவு கூட காதலின் உச்சமாய்த்தான் இருந்திருக்கிறதே தவிர காமத்தின் வெளிப்பாடாக இல்லை. அன்றைக்கே அப்படி இருந்தவன் இன்றைக்கு மட்டும் பிழையாகத் தொடுவானா?

 

‘என்னையே நினைச்சுக்கொண்டு எனக்காகவே வாழ்ந்துபோட்டு நான் தொடக்கூடாதா உன்ன.. இருடி உனக்கு எண்டைக்காவது இதுக்கு இருக்கு!’ அந்த நினைப்பிலேயே மெல்லிய உல்லாசம் அவனுக்குள் எழுந்தது. அவளை மாற்றுவான். அவனுடைய மய்யுவை மீட்டே தீருவான்! மனம் சங்கல்பமே பூண்டது!

 

அவள் டீ கப்பினை அவன்புறமாக நகர்த்தினாள். அதை எடுக்காமல், “நீ தொட்ட கப்பையாவது நான் தொடலாமா?” என்றான் வேண்டுமென்றே. “என்ர வாயும் படும். பரவாயில்லையா?” என்றான் விசமத்துடன்.

 

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே உணர்வற்ற முகம் தான். சின்ன முறைப்பாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனான். அவனை அங்கேயே விட்டுவிட்டு, ஹாலில் இருந்த சாப்பாட்டு மேசையில் போய் அமர்ந்துகொண்டு தன்னுடையதைப் பருகினாள் மயூரி.

 

‘கஷ்டம்தான் போல’ மனதில் நினைத்துக்கொண்டு தானும் சென்று அவளின் முன்னே அமர்ந்தான் அவன். அவளோடு அருந்தும் அந்தத் தேநீரை ரசித்துச் சுவைத்தான்.

 

“ஷாப்பிங் போவமா மயூரி? கல்யாணத்துக்கு தேவையானதை பாத்து வாங்கிக்கொண்டு வரலாம்.” அவளோடான அவனுடைய நேரத்தை நீட்டிக்கொள்ள முயல்கிறான் என்று விளங்க ஒரு முடிவுடன் கப்பினை மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

 

“நீங்க உங்கட மனதில என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எண்டு விளங்கேல்ல பிரதீபன். கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொன்னதாலேயே எல்லாம் சரியா போச்சு எண்டு நினைக்கிறீங்க போல.” என்றவள், அப்படியல்ல என்று உணர்த்துகிறவளாக மறுத்துத் தலையசைத்தாள்.

 

அவள் மனதிலிருப்பதைச் சொல்லவேண்டும் என்றுதானே அவனும் எதிர்பார்த்தான். சொல்லட்டும் என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“நீங்க சொன்னமாதிரி எனக்கும் மனச்சாட்சி இருக்கு. எல்லாத்தையும் செய்தது ரெண்டுபேரும் சேர்ந்துதான். ஆனா உங்கட அம்மா உங்களை அதிகமா திட்டினவா. தன்ர வளர்ப்பு பிழையோ எண்டு வருந்தினவா. அது பிழை எண்டு மனதில பட்டது. அதாலதான் உங்கட அம்மாட்ட அப்படி சொன்னனான். கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு காரணம் நீங்களோ நானோ கிடையாது. ஆதிரா. அவளுக்கு என்னைத்தவிர சொந்தம் எண்டு ஒருத்தர் கூட இல்ல. உங்களோட ஒரு குடும்பமே சொந்தமா கிடைக்கேக்க அவளுக்கு அதை நான் மறுக்கக்கூடாது எண்டு நினைச்சன். அதைவிட, எனக்கு நீங்க வேண்டாம் எண்டு சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு. ஆனா, ஆதுக்கு அவளின்ர அப்பா வேண்டாம் எண்டு சொல்ல எனக்கு உரிமை இல்லை. முறையா அவளுக்கு கிடைச்சிருக்க வேண்டிய உறவை, பாசத்தை நான் என்ர சொந்த விருப்பு வெறுப்புக்காக இவ்வளவு காலமும் பறிச்சிட்டன். இனியாவது அது வேண்டாம், அவளும் எல்லா பிள்ளைகளை மாதிரி தன்ர அப்பாவோட வளரட்டும் எண்டு நினைச்சன். என்ர அம்மா அப்பாக்குத்தான் நல்ல மகளா நான் இருக்கேல்ல அவளுக்காவது நல்ல அம்மாவா இருக்கோணும் எண்டு நினைக்கிறன்…” அதுவரை சீராகவும் தெளிவாகவும் சொல்லிக்கொண்டு வந்தவள் தடுமாறி பேச்சை நிறுத்தினாள். குரலில் ஒரு நடுக்கம், வலி. நடுக்கத்தோடு அவளின் கைகள் கப்பினை இறுக்கிப் பற்றிக்கொண்டது.

 

கையாலாகாதவனாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீபன். இது இரண்டாவது தடவை. அவள் தன்னைத்தானே கீழிறக்கி நொந்துகொள்வது. பெற்றவர்களுக்கு

நல்லதொரு மகளாக நடக்கவில்லை என்று சொல்வது. ஒன்றுமே சொல்லாமல் தேநீரைப் பருகினான் அவன். இப்போது தொண்டைக்குள் கனத்துக்கொண்டு இறங்கியது அது.

 

“இதெல்லாம் தான் காரணம் இந்தக் கல்யாணத்துக்கு. நானோ என்ர மனமோ இல்ல. இப்பவும் எனக்கு நீங்க தேவையில்லை. ஆதிராவுக்கு அப்பாவா மட்டும் இருந்தா போதும்.” தெளிவாகத் தன் மனத்தைச் சொன்னவளை நேராகப் பார்த்தான் பிரதீபன்.

 

ஏதும் சொல்வானோ என்று அவள் பார்க்க, எதுவுமே சொல்லவில்லை.

 

அதற்குமேல் அவன் முன் அமர்ந்திருக்கப் பிரியப்படாமல் அருந்திமுடித்த கப்புடன் அவள் எழுந்துகொள்ள, “ஆது எத்தனை மணிக்கு வருவாள்?” என்றான் அவன் சாதாரணமாக.

 

“மூண்டுமணியாகும்.” என்றுவிட்டு நடந்தாலும், அவளுக்குள் மெல்லிய குழப்பம். ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று அவ்வளவு தெளிவாக அவனைத் தூக்கி எறிந்தும் அமைதியாக இருக்கிறானே! ‘நான் சொன்னதை விளங்கிக்கொண்டானா இல்லையா’ என்று குழம்பிப்போனாள் மயூரி.

 

“நான் போய் கூட்டிக்கொண்டு வரவா?” சாதாரணமாகக் கேட்டாலும் அவளைப் பார்க்கும் ஆர்வம் அவனுக்குள் இருப்பதை உணர்ந்துகொண்டாள். அது மனதுக்கு இதமாயும் இருந்தது. எது எப்படியானாலும் ஆதிராவுக்கு இனி அவனும் இருக்கிறான்.

 

“சரி! நான் ஆபிசுக்கும் போகவேணும். ஹாஃப் டேதான் லீவு.” என்று அறிவித்தாள் அவள்.

 

‘சரி காணும் கிளம்பு’ என்கிறாள். அவனுடைய உதட்டோரம் சின்னச் சிரிப்பில் துடித்தது. ‘என்னை துரத்துறதிலேயே குறியா இருக்கிறா..’

 

அவ்வளவு இலகுவா எல்லாம் நான் போகமாட்டேன் என்பதுபோல அமர்ந்துகொண்டு, “அவசரமா இப்பவே போகவேணுமா?” என்றான் அவன்.

 

அவனுடைய விடாத கேள்விகளால் முகம் கடுக்க, புருவச் சுழிப்புடன் கேள்வியாகப் பார்த்தாள் மயூரி.

 

“சாப்பாட்டை தந்திட்டு போ. பசிக்குது.” என்றான் அசராமல்.

 

‘அதற்கு நீ வேறு யாரையும் பார்’ என்பதுபோல் அவனை நிதானமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தயாராகப்போனாள் அவள்.

 

ஏமாற்றம் தான் அவனுக்கு. உணவைக்கூடத் தரமறுப்பாள் என்று நினைக்கவில்லை. நேற்று இருந்த பதட்டத்தில் இரவு உண்ண மறந்திருந்தான். காலையில் இங்கு வரும் அவசரம். மனதின் அந்தரிப்பு, பயம், யோசனை எல்லாம் ஒரு கரையைத் தொட்டிருந்ததில் இப்போதுதான் பசி தெரிந்தது. அதனால்தான் வாய்விட்டுக் கேட்டான்.

 

அவளோ எதற்கும் அசரமாட்டேன் என்று தன் மனவலிமையைக் காட்டிவிட்டாள்.

 

ஆனால் அவனும் பிடிவாதக்காரன் தான்! அவள் தராமல் உண்பதில்லை! அது எத்தனை நாளானாலும்! ‘பார்ப்போம் நீயா நானா’ என்கிற பிடிவாதச் சிரிப்பு அவன் உதட்டினில் அரும்பியபோது அவள் தயாராகி வெளியே வந்துகொண்டிருந்தாள்.

 

தோற்றத்தில் முற்றிலும் அலுவலகப் பெண்ணாக மாறி வந்தவளை அவன் விழிகள் ரசனையுடன் வருடிற்று! அது பிடிக்காததில் வெளிப்படையாகவே முகத்தைச் சுளித்தாள் மயூரி.

 

அதைப் பிரதீபன் பொருட்படுத்தவில்லை. “ஆதுவ வீட்ட கூட்டிக்கொண்டு போகட்டா?” என்றான் ஆவலாய்.

 

“வந்தா கூட்டிக்கொண்டு போங்கோ. ஆக லேட் பண்ண வேண்டாம். இரவு வடிவா(ஒழுங்கா) படுக்க இல்ல.” முகம் பாராமல் சொல்லிவிட்டு அவள் வேலைக்குப் புறப்பட, வேறு வழியின்றி மனமில்லாமல் தன் வீட்டுக்கு அவனும் புறப்பட்டான்.

error: Alert: Content selection is disabled!!