ரோசி கஜனின் மீரா 17 – 1

17

 

“என்னதான் எண்டாலும் நீ அவள அழ வச்சு அனுப்பினத நியாயப்படுத்த நினைக்காத!” ஒருபோதுமின்றிக் குறைப்பட்டார், ஹெலன்.

தன்னைக் குற்றவாளி போல் பார்த்திருக்கும் பெரியவரைப் பார்க்காது தொலைகாட்சியில் விழிகள் பதிந்திருந்தான், ஜோரிக்.

“நீ உள்ள இருந்து கொண்டே இல்ல எண்டாய் எண்டு தெரிஞ்ச பிறகும் ‘அட போடா!’ எண்டு அப்பிடியே போகாமத் திரும்பவும் வந்தாள் எண்டால், அதில இருந்து உனக்கு என்ன விளங்குது?”

விடாது தொடர்ந்த ஹெலனை ஒரு பார்வை பார்த்தவன், பதில் சொல்லாது திரும்பிக் கொண்டான்.

“ ‘ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டான் ஹெலன். மெசேஜ் போட்டாப் பதில் போடவும் மாட்டான்.’ எண்டு, அவளே என்னட்டச் சொல்லியிருக்கிறாள்.” என்றவர், “இங்க பார் ஜோரிக், இதில இருந்து உனக்கு என்ன தெரியுது?” மீண்டும் அதட்டல் போட்டார்.

அவன், முகம் இறுக அமர்ந்திருந்தானேயொழிய ஹெலனைப் பார்க்கவே இல்லை.

ஆனால், மனம்?

கேட்டுக் கேள்வியின்றி, இருநாட்களுக்கு முன் மீராவைச் சந்தித்த கணத்துக்குத் தாவியிருந்தது.

அன்றும், இவன் இதே கேள்வியைத்தானே அவளிடம் கேட்டான்! அதற்கு அவள் சொன்ன பதில்?

“எனக்குப் பொய் கதைக்கிறது பிடிக்காது ஜோரிக். உண்மையாவே விளங்கேல்ல. நேரில் காணேக்க நெருக்கமானவனாக் கதைக்கிற…ஆனால்…” என்கையில் அவள் வதனம் பிரதிபலித்த பாவங்கள் தான் எத்தனை?

நேசிக்கிறேன் என்றுணர்ந்து நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்து போனவளை அப்படியெல்லாம் குழப்பவோ வருத்தவோ ஒருவனால் முடியுமா?

ஆனால், நான் என்ன செய்தேன்?

“இங்க பார்…எனக்கு உன்னோட கதைக்கவோ, தொடர்பில இருக்கிறதிலேயோ கொஞ்சமும் விருப்பமில்ல எண்டதுதான் காரணம்.” என்று சீறிய கணம், அவள் இதழ்களில் நெளிந்த அழகிய முறுவலின் வாசத்தை இப்போதும் அவனால் நுகர முடிந்தது.

‘அவ்வளவு நம்பிக்கையாடி என்னில? ஆனால், நான் அதுக்கு லாயக்கில்லாதவன்!’ வலியோடு முணுமுணுத்தது அவன் மனம்.

அவளைக் கடிந்து, கண்ணீரோடு அனுப்பிய பின்னர் அவன் சுவாசமே கயர்ப்பாக மாறிவிட்டது என்பதேயுண்மை. ஆனால், அதை, அதன் காரணத்தை அவனால் ஏற்க முடியாதிருந்தது.

‘அதென்ன அவளில அத்தனை பிரியம்?’

அந்தப் பிரியத்தில் தள்ளாடும் மனத்தையே பிடிக்கவில்லை, அவனுக்கு!

‘அப்பிடிக் குழம்பிக் கிடந்தவன அவசரமாக வரச்சொல்லி இவர் படுத்திற பாடு!’ திரும்பி, ஹெலனை முறைத்தான். கோபமாகத்தான் பார்த்தான். அவன் மனதின் ஏக்கம், ஒருவகை இயலாமை, எல்லாரையுமே கோபப் பார்வையாலேயே அளக்க முயன்று நின்றது.

“என்னடா முறைக்கிற?” அவன் பாட்டிக்கு மட்டும் கோபம் இல்லையா என்ன?

“முறைக்காம? அவசரமா வா! டொக்ட்டரிட்ட போகோணும் எண்டுதானே வர வச்சீங்க? இருந்த வேலைகள எல்லாம் அப்பிடியே போட்டுட்டு இங்க வந்தால், .ஒரு சதம் பிரயோசனம் இல்லாத கதை கதைக்கிறீங்க!”

“இங்க பார், பொய் சொல்லித்தான் கூப்பிட்டன். இல்லையோ வந்திட்டுத்தானே முதல் வேல பார்ப்ப நீ!” அவனுக்கும் மேலாக எகிறினார் ஹெலன்.

“எது பிரயோசனம் இல்லாத கதை? மீரா பற்றினதா? அல்லது உனக்கு அவளில உள்ள நேசத்தை இல்லவே இல்லையெண்டு சாதிக்கிறயே, அது பற்றினதா?”

“பாட்டி!” கையிலிருந்த ரிமோட்டை ‘சட்’டென்று சோஃபாவில் விட்டெறிந்தவன் எழுந்துவிட்டான்.

தானும் எழுந்துகொண்டார் ஹெலன்.

“இங்க பாருங்க பாட்டி, இனிமேல் பட்டு அவள் பற்றி ஒரு வார்த்த என்னோடு கதைக்க வேணாம்!”

வயோதிபத்தில் சுருங்கிய ஹெலனின் விழிகள் பளபளத்தன.

‘அவளோ அவனப் பற்றி மட்டுமே கதைப்பன் எண்டு சொல்லுறாள். இவனோ, கதைக்காதே என்கிறானே!’

இவனிடமிருந்து கண்ணீரோடு வந்தவள் நேரே இங்கேதானே வந்தாள்.

மனம் கசங்கி, கலங்கிப் போய் வந்தவள், இங்கிருந்து போகும் பொழுது வேறு வகையான குழப்பத்தில் சென்றாளேயொழிய, இவன் மீது படிந்த நேசத்தில் மாற்றமிருக்கவில்லையே!

அந்த நேசத்தின் ஆயுள் கெட்டி என்பதை வார்த்தைகளில் உணர்த்திவிட்டல்லவா சென்றிருந்தாள்.

“ஜோரிக், உங்கட பேரனா எனக்கு அறிமிகமானான் ஹெலன். எனக்கு அவனப் பிடிச்சிருந்தது. இப்பவும் பிடிச்சிருக்கு! இப்பப் பார்த்தால்…” மெலிதாகச் சிரித்தாள்.

“என்ர மனசில, நான் முதல் முதல் சந்திச்ச ஜோரிக்கில கொண்ட நேசம் எப்பவுமே மாறப்போறதில்ல எண்டு அவனிட்டச் சொல்லி வையுங்க! அவனுக்கு நான் தான். தப்பவே முடியாதெண்டும் சொல்லிவிடுங்க ஹெலன்!” என்றுவிட்டல்லவா சென்றிருந்தாள்.

‘இதை இவனிட்ட இப்பச் சொன்னால் குதியோ குதியெண்டு குதிப்பான்!’ பெருமூச்செறிந்தார்.

“ ‘பதினேழு வயசில உன்னச் சந்திக்கேக்க எப்பிடி இருந்தியோ, எவ்வளவு நேசத்தை என்னில கொட்டினயோ, இண்டு வரைக்கும் கொஞ்சமும் குறையாமல் அதே அன்பைக் காட்டுறயோ, அந்த ஹெலனை மீராவில பாக்கிறன், நான்!’ என்றார் தெரியுமா உன்ர தாத்தா!” தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார்.

அவன் முகம் அஸ்டகோணலாகியது!

‘இவேட்ட வரவே கூடாது. அப்பிடி வந்தால் என்னையும் சேர்த்துக்கொண்டு அவள் விரிச்ச சுழலில விழுந்து விடுவீனம்!’ இப்படி எண்ணுவதே அபத்தம் என்று அறிந்தாலும், மனமும் முகமும் கசங்கக் கசங்க அப்படித்தான் நினைத்தான்.

அவனையே பார்த்திருந்தவர், “ஏன்யா உனக்கு இந்தப் பிடிவாதம்? அவள் அருமையான பிள்ள! உன்னில உண்மையான நேசம் வச்சிருக்கிறவள். அவள நோகச் செய்து அப்பிடி எதைச் சாதிக்கப் போற சொல்லு?” மெதுவாக, ஆனால், நிதானமாகக் கேட்டார்.

“அய்யோ பாட்டி!” தன் தலையில் அடித்துக்கொண்டான், அவன்.

“உங்களுக்கு எத்தின தடவைகள் சொன்னாலும் விளங்குதில்லயே! அவளுக்கு என்னில அப்பிடி ஒரு நேசமும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. அதேபோல, எனக்கும் அவளில ஒரு மண்ணும் இல்ல!” சீறினான்.

“சாதாரணமாக ஒரு ஃப்ரெண்டா நினச்சுக் கதைச்சன். இனி அதுவும் இல்ல. அந்தக் குடும்பத்தோட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்கிற அளவுக்கு நான் இல்ல!” என்றவன் முகம் கன்றிக் கிடந்தது.

நெருங்கி வந்து அவன் தோளில் ஆதரவாகத் தடவினார், ஹெலன்.

“சரி, உன்ர வழிக்கே வாறன். இவ்வளவு தெளிவுள்ளவன் ஏன் ரெண்டு நாட்களா ஒழுங்காகச் சாப்பிடாமல், கடைப்பக்கம் போகாமல் வீட்டுக்க அடைஞ்சு கிடந்த?”

கேட்டுவிட்டுக் கூர்மையாகப் பார்த்தவரின் பார்வையைத் தவிர்த்தான், அவன்.

“அது…உண்மையிலயே உடம்புக்குக் கொஞ்சம் சரியில்ல பாட்டி! நீங்களும் தாத்தாவும் நம்பேல்ல எண்டதுக்காக என்ர உடம்புக்கு முடியாமல் போனது இல்லையெண்டு ஆகிருமா?”

அலுப்பும் கோபமாகவும் கேட்கிறானாம்! அவன் பாவனையில் தன்னுள் எழுந்த நகைப்பை இலாவகமாக மறைத்துக்கொண்டார், ஹெலன்.

‘இளரத்தமாச்சே! மனம் அவள்ட வசமிழந்ததை அவ்வளவு சுலபத்தில ஏற்றுக்கொள்ள முடியாமல் கிடக்குப் போல! ‘அந்தக் குடும்பத்திலா? சரிவரவே வராது’ எண்டிட்டு, இப்ப எப்பிடி எண்டு தவிக்கிறானோ!’ பார்வையால் சீண்டினார்.

அவன் வேறு என்ன செய்வான்? பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“ம்ம்…சரி ஜோரிக், மீரா பற்றிக் கதைச்சு இனி உன்னக் கரச்சல் (தொந்தரவு) செய்யமாட்டன். நீ எப்பவும் போல இரு!” என்றவர், “ஒண்டை மட்டும் நல்லாவே நினைவில வச்சிரு, இந்த வயது போனவேண்ட பார்வை எண்டைக்குமே உன்னத் தொடரும்!” என்றபோது, அவரையும் மீறிக் கண்கலங்கிவிட்டார்.

மகன், பேத்தி இவர்கள் யாரிடமும் கிடைக்காத ஒரு ஒட்டுறவு பேத்தியின் வயிற்றில் பிறந்த இவனிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்திருந்தது.

அவன் வரவில், அருகாமையில், கரிசனையான செய்கைகளில், பேச்சில் என்று மகிழ்ந்து போகும் தம்மைப் போலவே, அவனும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதே இவர்கள் ஆசை!

‘அது எங்க?’ பெருமூச்சுடன் நகர்ந்தார், ஹெலன்.

“சரி ஓமா(பாட்டி), நான் போயிட்டு வாறன்.” தாமதிக்காது கிளம்பிச் சென்றவனைத் தொடர்ந்தது ஹெலனின் பார்வை; மனமோ, சில திட்டங்களைத் தீட்ட முனைந்தது.

அதன்படி, மறுநாளே அவர்கள் சென்ற இடம் மதுரா வீடு.

“இப்பிடித் திடுதிப்பென்று போய் நிக்கிறது அழகில்லையே ஹெலன்; ஃபோன் பண்ணிக் கேட்டுட்டே போவம்.” மிகவும் தயங்கிய கணவரையும் இழுத்துக்கொண்டு, திருமண அழைப்பிதழில் இருந்த விலாசத்தில் சென்று நின்றவர்களை, வரவேற்றார் மதுரா.

தாமதிக்காது உதிர்ந்த சொற்களில் வரவேற்பிருந்தாலும், மதுராவின் முகத்தில் அதிர்வும் அதிருப்தியுமே ஓடித் திரிந்தன.

அதையுணர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை பீட்டர் தம்பதியினர். அன்பான நலவிசாரிப்போடு சென்றமர்ந்தார்கள்.

அப்படியிருக்கையில், கோபத்தையும் வெறுப்பையும் காட்டவா முடியும்.

“ஃபோன் பண்ணாமல் வெளிக்கிட்டு வந்திட்டம்!” சங்கடத்தோடு ஆரம்பித்தார் பீட்டர்.

“பரவாயில்ல; எங்கட வீட்டில எப்பவும் யாராவது இருப்பீனம். இல்லையெண்டாலும் கிளினிக் பின்னுக்குத்தானே! இவர்…கார்த்தி நிற்பார்.” முறுவலித்தார் மதுரா.

ஹெலனின் பார்வை மதுராவில் நிலைத்து விலகியது.

இங்கே, திருமணமொன்று பிழைத்துப் போவதெல்லாம் ஒரு விசயமே இல்லை எனலாம்.

அதே, திருமணங்கள் வெற்றி பெறுவதென்பது நிச்சயம் பெரிய விசயமே!

மேலை நாடுகள் என்றில்லை, மணமென்பது வாழ்வில் ஒருமுறைதான் என்று சொல்லும்/சொல்லிய மக்களிடையேயும் இதே நிலைதானே?

அப்படியிருக்கையில், கணவனின் வஞ்சத்தில் கலங்கி, இரட்டைக்குழந்தைகளோடு தவித்து நின்றவருக்கு அருமையான வாழ்வொன்று அமைந்து, இத்தனை வருடம் மகிழ்வோடு வாழ்ந்த ஜொலிப்பில் நின்றார், மதுரா.

தன்னையும் மீறிப் பெருமுச்செறிந்தார் ஹெலன்; தன் பேத்தியின் நினைவில்!

அவளுக்கும் வாழ்வு தடுமாறிப் போனது தானே? அதிலிருந்து மீண்டு, இன்னொரு துணை அமைந்து இன்று நன்றாகவும் இருக்கிறாள் தான்; அதேநேரம், அவள் முதன் முதலாகத் தாங்கிப் பெற்ற குழந்தைகள்?

ஹெலனின் மனக்கண்ணில், ஆரணி ஆரபியின் திருமண வரவேற்பு வந்து போனது.

ஆரோக்கிய சூழலில் வளர்ந்தவர்கள் என்பது பளிச்சென்று தெரிய, அன்றைய நாளுக்கேயுரிய அழகோடு ஜொலித்தவர்கள் எங்கே?

பெற்றவர்களின் அரவணைப்பை மறந்து வாழ்ந்த நிக்கி, ஜோரிக் எங்கே?

‘இந்தப் பெண்ணைப் போல, நீ பெற்ற குழந்தைகளை அரவணைக்கிறது உன்ர தலையாய கடமை எண்டு மறந்திட்டியே!’

மனதுள் பேத்தியைக் கடிந்து கொண்டார், பயனேதும் இல்லை என்றறிந்தே!

அதோடு, வாய்விட்டே மதுராவைப் பாராட்டத் துணிந்துவிட்டுச் சட்டென்று நிறுத்திவிட்டார்; ‘இப்ப, நாம் வந்த வேலையப் பார்ப்பம்; மிகுதி பிறகு.’ என்ற முடிவில்,

“நாங்க வந்தது மீராட தாய் தகப்பனச் சந்திக்கத்தான். அவேட விலாசம் இல்லாததால கலியாண அழைப்பிதழில இருந்த விலாசத்துக்கு வந்தம்.” தாமதமின்றி ஆரம்பித்தார்.

“ஓ! நித்தி வீடு நாலு வீடுகள் தள்ளி இருக்கு. அதனால என்ன? நான் ஃபோன் பண்ணிச் சொல்றன், இங்க வருவீனம்.” என்ற மதுரா, தொலைபேசியை எடுத்து முதலில் அழைத்தது கணவனை.

அடுத்த நிமிடம் வந்துவிட்டார், கார்த்திகேயன். அவர் கதைத்துக் கொண்டிருக்க அப்பால் சென்று விபரத்தைச் சொன்ன மதுரா, கேட்டதும் மிகையாகக் கோபப்பட்ட நித்திக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லித்தான் வர வைத்தார்.

கூடவே, கார்த்திகேயனின் தமக்கை, அவர் கணவர் என்று வந்தார்கள்.

‘நல்ல காலம் பிள்ளைகள் இல்ல.’

error: Alert: Content selection is disabled!!