4- 2

காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற பெரும் பசி நோய் இருந்ததாம். அது தனக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது அவளுக்கும் தோன்றும். அவளது தோழி டாக்டர் மாரியம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள்  

“அக்கா,  காயசண்டிகைக்கு என்ன சாப்பிட்டாலும் பசி அடங்காதாம். யானைத்தீனு ஒரு நோய் இருந்ததுன்னு கூட தமிழம்மா சொல்லிக் கொடுத்தாங்கல்ல, எனக்கும் அது மாதிரி ஏதாவது நோய் இருக்கான்னு பாருங்க அக்கா. பசி அடங்கவே மாட்டிங்குது. ஒரு நாளைக்கு அஞ்சு வேளை சாப்பிடுறேன். நடு ராத்திரி எல்லாம் எந்திரிச்சு சாப்பிடுறேன் அக்கா. பயம்மா இருக்கு”

“அதுக்குப் பேரு  ஸ்ட்ரெஸ் ஈட்டிங்டீ. உனக்கு என்ன வயசாச்சு. இருபத்தி ஒன்னு தானே. முதலில் நல்ல காலேஜ்ல சேர்ந்து படி. உன் வயசு பிள்ளைகள் கூட பழகு. மற்ற விஷயங்களில் கவனம் போகப் போக ஸ்ட்ரெஸ் போகும். சாப்பாட்டு ஆசையும் குறையும். பேசாம சொந்தக்காரங்க யார் வீட்டுக்காவது போகலாமே”

“நடக்குற கதையா பேசுங்க அக்கா. என் அத்தை குடும்பம் ஒண்ணுதான் எங்களுக்கு நெருங்கின சொந்தம். தோட்டத்துக்கு நடுவுல இருந்த வீட்டை தோட்டத்தோட சேர்த்து வித்ததுக்கு அப்பறம், கிராமத்தில் இருக்குற சின்ன வீட்டுக்கு வந்துட்டோம். அக்கம் பக்கத்தில் வீடு இருக்குறதால ஏதோ இவ்வளவு கஷ்டத்துக்கும் உங்களை எல்லாம்  பாத்துட்டு பைத்தியம் பிடிக்காம இருக்கேன். இப்பல்லாம் இதுவே போதும்னு தோணுதுக்கா. என்ன சாப்பாடு பிடிச்சா சாப்பிட்டுப் போறது. நோய்  ஏதாவது வந்தால் சீக்கிரம் போய்டலாமேன்னு கூட தோணுதுக்கா”

அவளது மன அழுத்தம் அதிகமாவதைக் கண்டு வேறு இடத்துக்கு வேலைக்காவது செல் என்று பார்க்கும்போதெல்லாம் வற்புறுத்தி வருகிறார் மாரியம்மா. 

எங்கெங்கோ மனம்  பயணம் செல்வதை உணர்ந்து தனது கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வந்தாள். அவினாஷ் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். கொஞ்சம் இறுக்கமான பேச்சு. பிசினெஸ் விஷயம் போல. 

ஒரே பிரெட் துண்டு கூட இருந்த சாலட் மற்றும் பழம் நறுக்கி போட்ட யோகர்ட் வயிறு முழுவதும் நிறைவது கண்டு ஒரே ஆச்சிரியம் செம்பருத்திக்கு. 

அவளது நிம்மதியைக் குலைப்பது போலவே டக் டக் என்ற குளம்போசையுடன் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிய காவ்யா “ஹ்ஹம்ம்… “ என்று கணைத்தாள். அவளது கையில் ஒரு பை. அவினாஷ் கண்ணைக் காட்ட அதனை டேபிளில் செம்பருத்தியின் முன்னே தூக்கி போட்டாள் இல்லை கிட்டத்தட்ட எறிந்தாள். 

“காவ்யா… அதை கையில் எடுத்துக் கொடு” என்று அவன் கண்டிப்புக் குரலில் சொல்லவும் 

“இந்தாங்க மேடம். பெரிய மனசு பண்ணி தயவு செய்து வாங்கிக்கிறிங்களா” என்று போலியான பவ்யத்தோடு காவ்யா செம்பருத்தியிடம் நீட்டி முழக்க. 

“வாங்கிக்கோமா… ப்ளீஸ்…” என்றவன் “காவ்யா நீ காரில் காத்திரு நான் வந்துட்டேன்” என்றபடி தனது அலைப்பேசியில் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவரிடம்

“ஒரு நிமிஷம் லைன்ல இருங்க…” என்று சொல்லி மியூட் செய்தான். . 

“சாரிம்மா ரொம்ப அவசர வேலை. நான் கிளம்புறேன். நீ சாப்பிட்டுட்டு பத்திரமா போய்டுவேல்ல” என்று ஏதோ ஒவ்வொரு நாளும் அவன்தான் பார்த்துக் கொள்வதைப் போல கேட்க. 

“நான் போய்டுவேன் சார். நீங்க கிளம்புங்க” என்றாள். 

நல்லவேளை கிளம்புகிறான். இனி மேனேஜர் கை காலில் விழுந்து காசைக் கட்ட வேண்டியதுதான். 

“பை” என்றபடி  “இன்னும் பத்து நிமிஷத்தில் இருப்பேன்” யாரிடமோ சொல்லியபடி  ரஜினியின் வேக நடையில் மறைந்தான். 

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள். பில் இன்னும் வராததைக் கண்டு 

“பில்” என்றாள்  இருந்தவளிடம். 

“ஸார் கட்டிட்டாங்க மேடம். இங்க பக்கத்தில் ஒரு டாக்சில உங்களை இறக்கி விடச் சொல்லி அதுக்கும் பே பண்ணிட்டாங்க”

திகைத்துப் போய் பேச வாய் எழும்பாமல் அவள் முன் இருந்த அந்த பாக்கெட்டைப் பிரித்தாள். அழகான நீல வண்ணத்தில் வெள்ளை நூல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த டாப்ஸ். அவளது உடையில் காப்பி கொட்டிவிட்டதால், வேலைக்கு காப்பிக் கரை உடையுடன் செல்ல வேண்டாம் என்று புதிய குர்த்தி வாங்கி வரச் சொல்லி காவ்யாவை அனுப்பி இருக்கிறான். அதுவும் அவள் அப்போது அணிந்திருந்த பாண்ட்டுக்கு பொருத்தமான டாப்ஸ். என்ன ஒரு அக்கறை, சமயோசித புத்தி. அப்படியே பச்சக் என்று அவளது மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டான் அவினாஷ். 

இதுவரை ஏன் வாழ வேண்டும் என்று தெரியாமல் திகைத்த செம்பருத்திக்கு வாழ்க்கையின் ஒரு புதிய பக்கம் திறந்ததைப் போல இருந்தது. 

error: Alert: Content selection is disabled!!