6 – 2

ஒரு மனதாக செம்பருத்தியே தேர்ந்தெடுக்கப்பட்டாள். 

“இங்க பாரும்மா… இந்த வேலை உனக்குப் பிடிக்கலைன்னா ஒத்துக்கிட்டதுக்காக சகிச்சுட்டு அங்கேயே இருக்கணும்னு அவசியமில்லை. உடனே கிளம்பி நம்ம ஊருக்கு வந்துடு” என்று வக்கில் நம்பிராஜனும் அழுத்தமாகவே அதிலும் அங்கிருக்கும் அனைவரின் மனதிலும் நன்கு பதியும்படி சொன்னார். 

“சரி சார்” என்று அப்போதைக்கு தலையாட்டினாலும் தான் எடுத்த முடிவு நல்ல முடிவுதானா என்பதில் செம்பருத்திக்கும் ஐயமே. கிணற்றுத் தவளையாய் ஓரிடத்திலேயே தேங்கிவிட்ட அவள் யாரிடம் கலந்து ஆலோசிப்பாள்? மிட்டாய் கடை முதலாளி மங்கிலாலிடமா? சில மாதங்கள் மட்டுமே தெரிந்த பாவத்திற்காக, உறவினர்களே ஏற்கத் தயங்கிய பெண்ணின் பாதுகாவலை உறுதி செய்த வக்கில் ஸாரிடமா? இல்லை தனக்கே குடியிருக்க நிழல் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் தோழி ஜலப்பிரியாவிடமா?

வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவரின் கையை எதிர்பார்த்து நிற்பது நம்மை யோசிக்கும் திறனற்றவராக்கி விடும். 

வக்கில் சொன்னார் என்று அவருக்காக ஒப்புக் கொண்டு வேலைக்குச் சென்றால் அங்கிருந்த யாராவது முகம் சுளித்தால் கூட உடனே ஓடி வந்துவிடத் தோன்றும். 

சின்னதோ பெரியதோ அடுத்தவரிடம் தகவல் குறித்து, பலன் குறித்து  ஆலோசனை கேட்கலாம். ஆனால் அதனை செய்வதா வேண்டாமா என்ற  முடிவு எப்போதும் நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும். நாமே அதற்கு முழு பொறுப்பாளி என்ற நிலை வந்தால்தான் அதில் உறுதியாக நிற்க முடியும். 

கிளம்பி விடுவது என்று ஒரே மனதாகத் தீர்மானம் செய்தாள். 

மங்கிலாலிடம் சொல்லும்போது மட்டும் மனது வலித்தது. அப்பா மறைவிற்குப் பின்னும் கூட அவளை மகள் போலப் பார்த்துக் கொள்பவர். மதியம் சாப்பிட்டாளா என்று மறக்காமல் கேட்பார். அந்த அக்கறைக்காவே விடுமுறை தினங்கள் கூட இப்போதெல்லாம் வேலைக்கு வந்து விடுகிறாள். 

“நீ போயே ஆகணுமா பேட்டி”

அருகில் அமரவைத்து அன்பாகக் கேட்பவரிடம் பதில் சொல்லாமல் முடியாமல் தொண்டை அடைத்தது. 

“அந்த வீட்டுல இருக்குறது கஷ்டம்தான். அதே தெருவில்தானே அந்த துரோகி குடும்பமும் இருக்கு. பேசாம வேற இடத்துல வீடு பார்த்துட்டு வந்துடுறியா? ஆனா வயசுப் பொண்ணுக்கு பாதுகாப்பு இருக்காதே” அவரே கேள்வியும் கேட்டு பதிலும் சொன்னார். 

“அந்த பிராடு குடும்பத்தில் கல்யாணம் வேற. அதுக்கு நம்ம கம்பெனில சுவீட் சப்ளை பண்ணனும்னு நம்ம கம்பெனில வேலை பாக்குற சிங்காரம் வந்து நிக்கிறான். நான் ஒரு சுவீட் கூட அந்த கல்யாணத்துக்கு கிடையாதுன்னு சொல்லிட்டேன்” அவளுக்குத் தெரியாத தகவல்களைச் சொன்னார். 

“ஆமாம் அந்த சிங்காரம் உன்னோட உறவுகாரன் தானே”

“சித்தப்பா முறை வேணும்”

“அடப்பாவி… “ வாய்விட்டே வருத்தப்பட்டவர் “உன் உறவுக்காரங்க கூட நம்மகிட்ட வேலை செய்றாங்க. அவங்களை தினமும் பாக்குறது கூட உன் மன வருத்தத்தை அதிகமாக்கும். மாறுதல் கூட நல்லதுதான்”

“ஆமா எங்க வேலை கிடைச்சிருக்கு?” 

என் நிறுவன வேலையை உதறிவிட்டுப் போகிறாயே என்று கொதிக்கவில்லை. இங்கிருந்து கிளம்ப முயற்சிக்கிறாய் என்றால் எத்தனை வேதனை பட்டிருப்பாய் என்று புரிந்து கொள்ளும் இவர் மற்றொரு தந்தை தானே. 

வக்கிலிடம் போன் பேசி விவரங்களைக்  கேட்டுக் கொண்டார். “செம்பருத்தி ஒரு வருஷம் கான்டராக்ட் போடணுமாமே. புது வேலை எப்படி இருக்குன்னு தெரியாது. பிடிக்கலைன்னா வந்துடு” என்று நம்பிக்கை ஊட்டினார். 

‘கடவுளே! இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கும்போது ஏன் இப்படி சோதிக்கிறாய்?’ என்று மனதினுள் வேண்டினாள் செம்பருத்தி.

“உறுதியாவா  சொல்லுற?” என்று கவலையாகக் கேட்டாள் ஜலப்பிரியா. 

“ போட்டுக்க நல்லதா நாலு டிரஸ் வாங்கணும். பேங்கில் இருந்து பணம் எடுத்துட்டு வந்திருக்கேன். நாளைக்கு தின்னவேலி போகணும் வா…”

“வீடு பாக்கப் போகணும்டி”

“அதுக்கும் தான்”

“என்ன சொல்லுற?”

“எங்க வீட்டுக்கு வந்திருக்கல்ல… “

“ஆமாம்” என்றாள். 

“அந்த வீட்டை என்னால அப்படியே விட்டுட முடியாது. நீ இப்ப தரப்போற வாடகையை வக்கில் கிட்டத்  தந்துட்டு ஒரு வருஷத்துக்கு கான்டராக்ட் போட்டு அங்க இருந்துக்கோ”

“நிஜம்மாவா சொல்ற… உன்னோட பொருளெல்லாம்”

“அதை ஒரு ரூமுக்குள்ள போட்டு வைக்கப் போறேன். ஆனால் நான் எப்ப வந்தாலும் வீட்டை என்கிட்டே திரும்பத் தந்துடணும்”

மறுநாள் ஜலப்பிரியா வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து விட்டு சம்மதம் சொன்னாள். 

“வீட்டில் தண்ணி அடிச்சா, சண்டை போட்டா  உடனே வக்கில் காலி பண்ண சொல்லிடுவாரு. அதனால வாயை மூடிட்டு இருக்கணும்” என்று சொல்லி குடும்பத்தினரை பயமுறுத்தி இருப்பதாகச்  சொன்னாள் ஜலப்பிரியா. 

அன்று மாலையே வீட்டினை சுத்தம் செய்ய செம்பருத்தியுடன் வந்துவிட்டாள்.

பழைய வீடு. வாசலில் திண்ணை. பின்னர் ஒரு கூடம். சமையலறை. ஒரு படுக்கை அறை. அதை படிக்கும் அறை என்று கூட சொல்லலாம். சமயலறைக்கு பின்னே மேலே இரும்பு சட்டத்தால் நன்றாக மூடப்பட்டு பாதுகாப்பாய் இருக்கும் ஒரு முற்றம் போன்ற இடம், குளியலறை கழிவறை. கிணறு ஒன்று அதனை மூடி மோட்டார் போட்டு இருந்தார் அப்பா. பின்னர் அதனை ஒட்டினாற்போல ஒரு அறை. அதில் அந்த காலத்தில் மளிகை சாமான்கள், தேங்காய் எல்லாம் சேமித்து வைத்திருப்பார்களாம். அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்திருக்கிறாள். 

“இந்த ரூமில்தான் என்னோட பொருள் எல்லாம் போடலாம்னு இருக்கேன் ப்ரியா. முன்ன இருக்குற ரூமை உபயோகப் படுத்திக்கோங்க”

கண்கள் விரிய வீட்டினை பார்த்தாள் ஜலப்ரியா. 

“வேண்டாம் முன் அறைல உன் பொருளை எல்லாம் போட்டுக்கோ. பின்னாடி இருக்குற இந்த ரூமை நாங்க எடுத்துக்கிறோம்”

“என்னடி சொல்ற… இது பின்னாடி இருக்குற ரூமு. இதெல்லாம் ஒட்டு வீடு. இங்கிருந்து தும்மினாலே  பக்கத்து வீட்டுலேருந்து என்ன சளியான்னு கேப்பாங்க”

“இல்ல செம்பருத்தி. நான் தர்ற வாடகை எல்லாம் இந்த ஹாலுக்கும் சமையல் ரூமுக்குமே சரியாயிடும். பழைய வீட்டில் இதே வாடகைக்கு காமன் பாத்ரூம் டாய்லெட்தான். தெரு குழாயிலேருந்து தண்ணி பிடிச்சுட்டு வரணும். அது கூட பாக்குறப்ப இந்த வீடு எங்களுக்கு சொர்க்கம்.

இந்த மாதிரி நல்ல குடுத்தனக்காரங்க இருக்குற இடத்தில் குடிச்சுட்டு வந்தாலோ இல்லை வீண் சண்டை போட்டாலோ  நமக்கு மானக்கேடுன்னு தெரிஞ்சா எங்க வீட்டு ஆம்பளைங்க கொஞ்சம் அடங்குவாங்க”

“அதுக்கும் இந்த ரூமை அவங்களுக்குத் தர்றதுக்கும் என்ன சம்பந்தம்?”

“என்னதான் நீ ரிஸ்க் எடுத்து இந்த வேலைக்குப் போனாலும் திடீருன்னு திரும்பி வர வேண்டிய சூழ்நிலை வந்தால்? தயங்காம வந்து அந்த ரூமில் இருந்துக்கோ. நான் தர்ற வாடகை இந்த ஹாலுக்கு சமையல் ரூமுக்கும்தான்னு சொல்லிடுறேன்”

“நீ ஏண்டி இப்படித் தயங்கற?”

“நீ பெரிய மனசு படைச்சவளா இருக்கலாம். நான் பேராசைக்காரியா இருக்கக் கூடாதே”

செம்பருத்தி அந்த ஊரை வீட்டுக் கிளம்பிச் செல்வதை இன்னமும் ஜலப்பிரியாவால் நம்பவே முடியவில்லை. அதற்குள் மற்றொரு குண்டையும் தூக்கிப் போட்டாள். 

“அடுத்த ஒரு வருஷத்தில் இந்த வீட்டுக்கு வரும்போது அந்த ப்ளூ குர்த்தி போடுற அளவுக்கு எடை குறைஞ்சிருக்கணும்டி”

“அடேங்கப்பா… நாங்க எல்லாரும் அத்தனை தடவை சொல்லியும் கேட்காத உன்னை அப்படி என்ன செஞ்சுடி அவன் மாத்தினான்?”

“அக்கறை. எனக்குன்னு யாருமே இல்லைன்னு நினைச்சு நின்னேன். நான் குண்டா இருக்க எத்தனையோ காரணம் இருக்கலாம். உடம்பு சரியில்லாம இருக்கலாம். ஸ்ட்ரெஸ் ஈட்டிங்கா இருக்கலாம். இல்லை என் உடல் வாகே பருமனா இருக்கலாம். ஆனால் இதை வச்சு என்னை பாடி ஷேம் பண்ணவங்க எத்தனை பேரு  தெரியுமா? இதில் ஒருத்தன் கூட  சிவகார்த்திகேயனோ இல்லை ஜெயம் ரவியோ இல்லை. ஆனால் என்னை மாதிரி பொண்ணுங்களை யானைன்னும், போத்து (எருமை) குட்டின்னும் கிண்டல் பண்ண தயங்கினதே இல்லை. 

அழகான பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி பின்னாடியே சுத்துற இவனுங்கதான் சுமாரான என்னை மாதிரி பொண்ணுங்களைக் கட்டிக்க லட்ச லட்சமா பணம் கேட்பாங்க. இந்த மாதிரி  பசங்கள பாத்து வெறுத்து போயிருந்தப்பத்தான் அவினாஷ் மாதிரி ஒரு ஆளை பாக்குற சந்தர்ப்பம் கிடைச்சது. 

யாருன்னே தெரியாத என் மேல அவன் காட்டின அக்கறை. இது போல நல்ல மனுஷங்க இந்த உலகத்தில் இருப்பாங்க இல்ல. இந்த இட மாற்றம் எனக்குள்ளும் மாற்றத்தைத் தரும்னு நம்புறேன் ப்ரியா”

“இந்தா “ என்று ஒரு விலாசத்தைத் திணித்தாள் ஜலப்பிரியா. 

“இதென்னடி”

“எங்க தூரத்து சொந்தக்காரங்க ஏழிக்கரால இருக்காங்க. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா காண்டாக்ட் பண்ணு” என்றாள். 

“கண்டிப்பா” 

அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு லங்கையில் இருக்கும் ராவணனைத் தேடிப்  பயணமானாள் நம் செம்பருத்தி. 

error: Alert: Content selection is disabled!!