“இவ்வளவு நாளும் எங்களோட இருந்துபோட்டுப் போற நேரத்தில் முகத்தை நீட்டிறது எல்லாம் நல்ல வேலையா கயல்?” நேரடியாகவே கேட்டுப் பார்த்தான். பயன் கிடைக்கவில்லை.
மகனையும் மகளையும் வைத்தே கதை வளர்த்துப் பார்த்தான்.
“சூட்டி அப்பாவோட மட்டும் கோவமாம் குட்டியன்.” தூக்கி வைத்திருந்த மகன் கரத்தால் அவள் தலையில் தட்டினான். வேலை செய்து கொண்டிருந்தவளில் அப்படியே சரிந்து தாவினான் அவன். அவ்வளவும் தான்.
“சரியடா அப்பாக்கு நல்லா அடி போடு வாங்கிறன்.” மகன் பிஞ்சுக் கரத்தால் தன் கன்னத்தில் பச் பச் என்று அடித்து மகனையும் மகளையும் கிளுகிளுத்துச் சிரிக்க வைத்தான்.
“அடிக்கிறது எல்லாம் கக்கா பழக்கம் எண்டு அம்மா சொல்லி இருக்கிறா!” லாதி. பட்டென்று முறைப்போடு திரும்பியது, கயல் பார்வை.
“கடவுளே! அத ‘அடி’யில சேர்க்கேலாது . தட்டு… சின்னதா ஒரு தட்டு.” எதையுமே கயல் பொருட்படுத்தவில்லை.
“இதுக்கும் மேல நான் என்ன செய்யிறது?” அலுத்துப் போய் அமைதியாகிவிட்டான்.
“நான் போன பிறகு நீங்க வச்சு எப்பிடியும் சாப்பாடு தீத்துங்க, குளிப்பாட்டுங்க, நித்திரை கொள்ள வைங்க எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. அதுவரைக்கும் நானே செய்யிறன்.” வெடு சுடுவென்று சொல்லிவிட்ட கயல், பிள்ளைகளுக்குச் செய்யும் எந்த வேலைகளிலும் அவன் குறுக்க வரவில்லை. ஒரு மாதிரி ஒதுங்கிவிட்டான்.
இப்படியே ஆறு ஏழு நாட்கள் கடந்திருந்த வேளை…
இரவு விழிப்புத் தட்டி நேரத்தைப் பார்த்தாள், கயல்விழி. நடு இரவு இரண்டு கடந்திருந்தது. விழிப்பும் தானாக ஒன்றும் வரவில்லை, வரவேற்பறையில் மெல்லிய சத்தத்தில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. நிசப்த நடு இரவில் அருகிலிருந்த இவளை அதுவே எழுப்பி விட்டிருந்தது.
இன்றென்றில்லை நாலைந்து நாட்களாக, ‘இல்ல…பிள்ளைய அடிச்ச அண்டில இருந்து இவர் ஒழுங்காத் தூங்கிறேல்ல!’ நினைத்தவாறு வந்து மெல்லக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
தொலைக்காட்சியில் செய்திதான் போய்க்கொண்டிருந்தது. கைகள் இரண்டையும் குறுக்காக தலையில் வைத்துச் சரிந்திருந்தான், பூபாலன்.
“நித்திரையா?” கதிரையில் கிடந்த ஃபுல் ஓவரை எடுத்துப் போட்டுக்கொண்டு பூனை போல வந்து எட்டிப் பார்த்தாள்.
அவன் பார்வை தொலைக்காட்சியில் தான் இருந்தது.
வீட்டில் பெரியவர்கள் என்று இருப்பதே அவனும் அவளும் தான். அதில் அவனோடு கதைக்காது இருக்க வேண்டும் என்று அவளுக்கு விருப்பமா என்ன? கனடா போய் வந்ததிலிருந்து எந்நேரமும் புறுபுறுப்பும் முறைப்புமாக வித்தியாசமாக அவன் தான் நடந்து கொண்டிருந்தான்.
ஒரு படி மேலே போய், சின்னவனை அடித்தும். ‘எங்களுக்கும் கோவம் வரும் எண்டது அவருக்குத் தெரியோணும்’ என்ற எண்ணமே இவளை அவனிடம் பாராமுகம் காட்ட வைத்திருந்தது. இப்போது பார்க்கையில் மிகுந்த பாவமாக இருந்தது.
“தூங்கேல்லையா நீங்க?”
படக்கென்று திரும்பிப் பார்த்தவன், “பச்” மீண்டும் தொலைக்காட்சிக்கே திரும்பிவிட்டான்.
“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” அவனுக்கு வலப்புறமாக இருந்த இருக்கையில் வந்தமர்ந்து கொண்டாள்.
பதில் சொல்லாது அவள் விழிகளையே பார்த்தான், பூபாலன். ‘ஏன் உனக்குத் தெரியாதா?’ என்றது அந்தப் பார்வை. சில கணங்கள் தான், மீண்டும் தொலைக்காட்சியையே பார்த்தான்.
விசுக்கென்று எழுந்தாள், கயல். அவன் அருகில் கிடந்த ரிமோட்டை எடுத்த வேகத்தில் தொலைக்காட்சியின் உயிரை அடக்கிவிட்டு, மின் விளக்கை போட்டுவிட்டு அமர்ந்தவளிடமிருந்து, “ஏன் இப்பிடி ஒவ்வொருநாளும் முழிச்சு இருக்கிறீங்க?” அதட்டலாகவே கேள்வி வந்திருந்தது.
காதில் வாங்காத பாவனையில் இருந்தான், அவன்.
“நீங்க முழிச்சு இருக்கிறது வேற, நித்திரை கொள்ளுற மனுசரையும் அதுக்கு விடாமல் டிவிய போட்டுக்கொண்டு இருந்து…” அவள் முடிக்கவில்லை, “சொறி, இனிமேல் இப்பிடி நடக்காது.” விருட்டென்று எழுந்து நகர முயன்றான்,அவன்.
கணத்தில், மின்னலாகச் சென்று அவன் வழியை மறித்தபடி நின்றிருந்தாள், கயல்விழி.
“வேணாம் கயல், எனக்குக் கெட்ட கோவம் வரும்.”
“ஓஓ! அது இனியா வர வேணும்? அய்யோம்மா எங்களுக்குப் பேப் பயமா இருக்கே!”
“வேணாம் எண்டனான். உமக்கு என்னோட கதைக்க விருப்பம் இல்ல எண்டது போல எனக்கும் விருப்பம் இல்ல, ஆள விடும்.”
“இவரிட கதையப் பாருங்கவன், உங்கள இங்க ஆரோ பிடிச்சு வச்சிருக்கிறது போலக் கதைக்கிறீங்க!” தன்னையும் மீறியே வாயாடிக்க வெளிக்கிட்டிருந்தவளை ஒரு மாதிரிப் பார்த்தவன் கைகள் இடுப்புக்குப் போயிருந்தன.
“நீர் நினைக்கிற நேரத்துக்குச் சிரிக்க, கதைக்க பிறகு முறைக்க நான் ஆளில்ல சரியோ?”
“அத நான் சொல்ல வேணும். கனடா போயிட்டு வரேக்க இருந்து சுடுதண்ணி குடிச்ச கணக்கில எரிஞ்சு எரிஞ்சு விழுந்து கொண்டு இருந்தது நானா நீங்களா? மென்டல் போல பிள்ளைக்கு அடிக்கிறது, லாதிய ஏசுறது இதெல்லாம் ஆர்? நானா? பிறகு பெரிசாக் கதைக்கிறார் கதை!”
“பச்… ப்ப்பூ!” முதல் இருந்த இடத்திலேயே அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான், அவன்.
தானும் சென்றமர்ந்து கொண்டவள் முதுக்குப் புறமிருந்த சிறு அணையை மடிக்கு மாற்றிவிட்டு, கால்களைத் தூக்கி மடக்கி அமர்ந்து கொண்டாள்.
வெளிப்புறத்தில் சடசடத்துப் பெய்து கொண்டிருந்த மழையும் கிர் கிர்ரென்று சுழன்றடித்த காற்றும் பூபாலன் மனநிலையை ஒத்து இருக்கின்றதோ என எண்ண வைத்திட்டு.
அவனையே பார்த்திருந்த கயலுக்கு அக்கணம் நிலவிய மௌனம் மிக்க கனமாகவிருந்தது.
“உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும்.” ஆரம்பித்தாள்.
அப்படியே நிமிர்ந்தவன் கரங்கள் வாயடியை மூடி முகத்தைத் தாங்கியிருக்க அவளைப் பார்த்தான்.
“அது வந்து…அண்டைக்கே உங்களிட்ட ஒரு வார்த்த கேட்டிட்டு…இல்ல இல்ல…சொல்லிட்டு ஒகே சொல்லுவம் எண்டுதான் வந்தன். அதுக்குள்ள நீங்க தம்பிக்கு அடிச்சிட்டிங்க.”
“கயல் நான் அவன அடிக்க இல்ல, சின்னதாத் தட்டினன்.”
“ஓகே ஓகே அதைக் கதைக்கேல்ல. என்ன எண்டாலும் அது அடிதான்.” அழுத்திச் சொன்னாள்.
“பச் உம்மோட கதைக்கேலா விடும்.” அலுத்தவன், “நானே கேட்க வேணும் எண்டு இருந்தனான், வீட்ட கொண்டுபோக ஏதாவது வாங்கோணுமா? என்ன எண்டாலும் சொல்லும் என்ன? போக முதல் எங்கயாவது போய்ட்டுப் போகப் போறீர் எண்டாலும் சொல்லும். என்னால இயன்றளவுக்கு முயற்சி செய்வன்.” அவசரமாகவே இடையிட்டிருந்தான்.
அவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்திட்டு. “எப்படா என்னைக் கலைச்சு விடுறது எண்டு நாள எண்ணிக்கொண்டு இருக்கிறீங்க போல! ம்ம்ம்” என்றாள், ஒருமாதிரி.
அவன் முகம் சுருங்கிற்று. தொண்டைக்குள் முட்டி நின்றவற்றை அப்படியே அவளிடம் கொட்டிட அவனால் முடியவில்லை. சிறிது நேரம் இருவருமே கதைக்கவில்லை.
“நான்… நானோ என்ர பிள்ளைகளோ அப்பிடி நினைப்பம் எண்டு உண்மையாவே சொல்லுறீரா கயல்?”
“பிள்ளைகள நான் சொல்லேல. அவே எனக்கும் செல்லங்கள் சரியோ!”
“நான் இல்லை எண்டு சொன்னனா இப்ப?” என்றவன், “அப்ப நான் நினைப்பன் எண்டு உறுதியாச் சொல்லுறீர்!”
மெல்ல முறுவல் செய்தாள், அவள்.
“அவள் இனி இல்லவே இல்ல எண்டு ஆன பிறகு” மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தபடி கதைத்தான்.
“எங்கட பிள்ளைகள அவள் விரும்பின மாரியே வளக்க என்னால ஏலும் எண்டு நிச்சயமா நம்பினன் கயல். அது… அந்த உறுதி கொஞ்சம் கொஞ்சமா ஆட்டம் கண்டு… இப்ப… இப்ப உண்மையா எனக்குச் சரியான பயமா இருக்கு! மனம் விட்டு ஆரிட்ட இத நான் சொல்லுறது?” குரல் கரகரக்கச் சொன்னவன், விழிகளையும் சேர்த்து மூடிக்கொண்டான்.
மனம் திறக்க யார் உள்ளார் என்று வருந்தியவன், கைக்கெட்டும் தூரத்தில் இருந்தவளிடம் முதன் முறையாக, தன்னையும் அறியாதே மனம் திறந்தான். அவள் தம் கைக்கெட்டாத தூரம் போகப் போகிறாள் என்ற பதைபதைப்பே தூண்டு கோலாக இருந்ததோ என்னவோ!
“ஒவ்வொருவரும் அக்கறையாக் கதைச்சுக் கதைச்சு ‘உன்னால அவேய ஒழுங்கா வளக்க முடியா’ எண்டு, மறைமுகமாக் கதைக்க கதைக்க எனக்கு எப்பிடி இருக்கும் சொல்லும்?” அவளை பார்த்தான்.