“உண்மையா அப்பிடிக் கதைக்கிறவையில என்ர அம்மா உட்பட பேயா கோவம் வாறது. சரசுச் சித்திய மலை போல நம்பினன். நீர் போனாலும் அவவிட உதவியோட சமாளிக்க ஏலும் எண்டு உறுதியா இருந்தன் தெரியுமா? ஆனா, என்ர பிள்ளைகளை வளக்க ஆரையும் நம்பிக் கொண்டு இருக்கிறது முட்டாள்தனம் எண்டு இப்ப விளங்குது. இருந்தாலும் நீரும் போய்ட்டா… அவேய எப்பிடி வளக்க ஏலும் எண்டு எனக்கு உண்மையாவே பயம் பிடிச்சிட்டுக் கயல்.” கண்கலங்கச் சொன்னவனை, கண்கள் கலங்கப் பார்த்திருந்தாள் , கயல்விழி.
முதன் முதலாக சற்றே சற்று மனம் விட்டுக் கதைக்கிறான், பூபாலன். அதுவும் அவளுடன். அந்த வீட்டை, குழந்தைகளை தன் உற்றவர்களாக எண்ணி, பிரதிபலன் பாரா அன்போடு நடந்துவந்தவளாச்சே! அக்கணம், வலு வலு இதமாக உணர்ந்தாள், கயல்விழி.
அவனே தொடர்ந்தான். “காயு…அவள் போன துக்கத்தில உழன்றாலும் பிள்ளைகள நினைச்சு நிமிர நினைக்கிற எனக்கு இதுக்கு என்ன தீர்வு எண்டே தெரியேல்ல! எத்தினை எண்டு ஒருத்தன் சமாளிக்கிறது? அப்படியிருக்க, சிடுசிடுக்காமல் என்ன செய்வன் சொல்லும்?” தன்னையும் மீறிச் சொல்லிக்கொண்டு வந்திருந்தான் போலும் பட்டென்று நிறுத்திவிட்டான்.
“என்ன எண்டாலும், உம்மோட கோவிக்கிறது பிழைதான், தயவு செய்து மன்னிச்சுக்கொள்ளும்.”
“பெரிய மன்னிப்பு! அப்பிடியே ஒரு சிப்பர் பாக்குக்க போட்டு பிரீசருக்க போட்டு வையுங்க!” என்றவள், “ரெண்டு வருசத்தால போகேக்க…” இதை அழுத்தம் திருத்தமாக உச்சரித்து, “மறக்காமல் வாங்கிட்டுப் போறன்.” வலு அமைதியாக முடித்தாள்.
முதலில் அவள் சொன்னதன் பொருள் முழுதாய் அவனுக்கு விளங்கவில்லை. சில கணங்கள் சென்றபின்னரே தன்னையே பார்த்திருந்தவளை திகைப்போடு பார்த்தபடி விசுக்கென்று எழுந்தான்.
“என்ன சொன்னீர் கயல்? திருப்பச் சொல்லும்? ரெண்டு வருசத்தால எண்டா அம்மாடியோவ்! எனக்கு உண்மையாவே என்ன சொல்லுறது எண்டே தெரியேல்ல கயல். கடவுளே!”
கையிரண்டையும் தலையின் பின்னால் கட்டிக்கொண்டு சிறுவனாகக் குதூகளித்தவன் கண்கள் கலங்கிவிட்டன. மனதை அழுத்தி வலி தந்த பெரும் சுமை மெல்ல மெல்ல வடிவதை அப்படியே உணர்ந்தான் அவன்.
அவனால் அப்போதும் இதை முழுதாக நம்ப முடியவில்லை. கடந்த கணம் வரை அவன் மனதுள் எத்தனை எத்தனை வகையான பயங்கள்?
“எங்கட சந்தோசத்துக்காகப் பிள்ளைகளைப் பெறுற நாங்க, அவையள நல்ல மனுசரா வளத்து விடவேணும். நல்ல பழக்க வழக்கமும் படிப்பும் மட்டுமில்ல, உங்கட அம்மா எப்பவும் சொல்லுறது போல நம்மட பழக்க வழக்கங்களோட எங்கட பிள்ளைகள் வளர வேணும்.” என்பாள் காயு.
“இங்க பிறந்து வளருற பிள்ளைகள், இங்க வாழ, இங்க உள்ளவையோட, சூழலோட ஒத்துப்போக வேணும். இருந்தாலும் எப்பயும் தயக்கமே இல்லாமல் ‘இதுதான் பா நான்’ என்று காட்டவும் வேணும். அந்த உறுதிய, நிமிர்வ நாம தான் அவேக்குக் குடுக்க வேணும்.” எப்போதுமே சொல்லுவாள். இவற்றை அறிவுரை என்றவகையில் இல்லாது பேச்சோடு பேச்சாக லாதிக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து இரசிப்பான் பூபாலன்.
இதையெல்லாம் மகனுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?
இப்ப வரைக்கும் கயல்விழியும் அதே விசயத்தில் கண்ணும் கருத்துமாகப் பார்க்கிறாள். நாளை அவள் போன பின்னர்?
பிள்ளைகளின் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியாகத் தெரிந்ததால் தான் பூபாலன் மிகவும் தடுமாறியிருந்தான்.
அவன் தொழில் வேறு சரியான கவனிப்பு இல்லையோ அப்படியே விழுந்து விடும். அதையும் கவனித்துக் குழந்தைகளையும் எப்படி முறையாகக் கவனித்துக்கொள்ளப் போகிறான்.
பேசாமல் தொழிலை விட்டுவிடுவோமா என்றளவு யோசித்திருந்தவனுக்கு, கயல் சொன்ன விசயம் கடவுள் வரம் தந்த கணக்கில் இருந்தது.
அவன் மகிழ்வை முறுவலோடு பார்த்திருந்தவள் கண்களும் நிறைந்து வழிந்தன.
“எனக்குமே பிள்ளைகளை விட்டுப் போட்டு எப்படிப் போறது எண்டு விசாராத்தான் இருந்திச்சு! பேசாமல் அங்கயே கூட்டிக்கொண்டு போயிருவம் எண்டு கூட நினைச்சன்.” கண்களைத் துடைத்துக் கொண்டே சிரித்தாள்.
“ஒரேயடியா என்னைத் தனியா அலையவிட பிளான் பண்ணப் பாத்திருக்கிறீர் என்ன?” மீண்டும் அமர்ந்தவனுக்கு இன்னமும் அவள் உண்மையாகத்தான் சொல்லுறாளா என்று இருந்தது.
“ஏன் அலையோனும், நீங்களும் அங்க வர வேண்டியதுதானே! உங்கட அம்மா ஆக்கள் எல்லாம் அங்க தானே” பகிடியாகச் சொன்னவள், “அண்டைக்கு, அதான் குட்டியனுக்கு அடிபோட்டிங்க அண்டைக்கு” என்று இவள் சொல்ல பத்திரம் காட்டியவன் முகம் முழுதும் அத்தனை நிம்மதி.
“இன்னும் ரெண்டு வருசத்துக்கு கொன்டராக்ட் எஸ்ட்டர்ன் செய்ய விருப்பமா எண்டு கேட்டு மெயில் வந்திச்சு. கொரோனா எண்டதால புதுசா அங்க இருந்து ஆக்களக் கூப்பிடாம இப்பிடிச் செய்யினமாம். ஓகே சொல்ல முதல் உங்களிட்ட ஒரு வார்த்தை கேட்பம் எண்டு வந்தா…” முறைத்தாள்.
“இப்ப… இப்ப ஓமெண்டு சொல்லீட்டீர் தானே? பிறகு ஆருக்கும் குடுத்திட்டாலும்.” படபடத்தான்.
“அதெல்லாம் அண்டைக்கே ஓகே சொல்லிட்டன். நான் இங்க இருக்கிறதில உங்களுக்குப் பிரச்சினை ஒண்ணுமில்லையே? என்ன இருந்தாலும் சொல்லலாம்.” நமுட்டுச் சிரிப்போடு சொன்னவளை முறைத்தான் பூபாலன். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாது, “உம்மட அம்மம்மா ஆக்களுக்குத் தெரியுமா கயல்? கட்டாயம் கத்தப்போகினம். நான் எடுத்துக் கதைக்கவோ?”
“சொல்ல வேணும்…” இழுத்தாள். நிச்சயம் அம்மம்மா கத்துவார் ஏசுவார் என்றதைக் கடந்து கவலைப்படுவார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
“இந்த ரெண்டு வருசத்துக்குள்ள நிச்சயமா இங்கயே ஒரு மாப்பிள்ளையப் பாத்து உங்கட பேத்திக்கு கட்டி வைக்கேல்லையோ நான் பூபாலன் இல்லை எண்டு அம்மம்மாட்டச் சொன்னா, கொஞ்சம் சரி நிம்மதியா இருப்பா!” முறுவலோடு அவன் சொல்ல, மடியில் இருந்த தலையணை அவன் முகம் நோக்கிப் பறந்திட்டு.
“தேவையில்லாமல் ஏதாவது அலட்டினா நான் அதுக்குப் பொறுப்பில்லை சரியோ!” எச்சரித்தாள்.
“நான் எங்க அலட்டினன் அதும் தேவையில்லாமல்? உண்மையாத்தான் சொல்லுறன்.”
“கடவுளே! தயவு செய்து இன்னொருக்கா தொடங்காதீங்க சொல்லிட்டன். என்ன பாடு பட்டாலும் நான் அதுக்கெல்லாம் ஓமெண்டு சொல்லப் போறதில்ல, நினைவில் வச்சிருங்க!” முகம் சுருங்க அவள் சொன்ன விதத்தில் சட்டென்று ஒரு மாதிரியாகிற்று, அவனுக்கு.
“எனக்காக பிள்ளைகளுக்காக எண்டு நீர் இவ்வளவு யோசிச்சா உமக்காக நான்…” தொடங்கியவனைத் தொடர விடவில்லை அவள்.
“ப்ளீஸ் …கலியாணக் கதை மட்டும் வேணாம். நான் இங்க இருக்கப் போற ரெண்டு வருசத்தில கனடா முழுசும் நேரம் கிடைக்கே சுத்திக் காட்டுங்க, ஆர் வேணாம் எண்டு சொல்லுவினம் ம்ம்ம்!” இலகுவாகக் கதைத்துப் பேச்சை மாற்ற முனைந்தாள்.
அவளுக்கு உதவுவது போல, மாடியிலிருந்து சின்னவனின் அழுகைக் குரல் வந்திட்டு.
“எழும்பிட்டான். இனி தூங்க விட்டுட்டாலும். உம்மட்டத்தான் வர நிப்பான்.” அவன் சொல்லிக்கொண்டு இருக்க, ” கட்டிலால விழுந்தா?” பாய்ந்து ஏறி ஓடினாள் கயல்.
அவளையே பார்த்து நின்றவனுள் இந்த அன்புக்கும் அக்கறைக்கும் எந்தவகையில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்ற கேள்வியே! அவளுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்வை அமைத்துக் கொடுப்பது அவனின் தலையாய கடமை. ஆனால், ‘அதுக்கு அவவும் ஒத்துழைக்க வேணுமே!’ எண்ணியபடி அமர்ந்து விட்டவன், மேலே சென்று நிறைய நேரமாக அவள் இறங்கி வராதிருக்கவும் மாடியேறினான்.
அங்கோ, சுவரோரமாக லாதி நல்ல உறக்கத்திலிருக்க, கட்டிலில் கால்கள் வெளியில் தொங்க சரிந்திருந்து ஆதித்தைத் தட்டிக்கொடுத்து உறங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள், கயல்.
கட்டிலோடு அணைந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவள், இடைக்கிடை இலேசாகக் கண்களைத் திறந்து குழந்தை தூங்கிவிட்டானா என்று பார்த்துக் கொண்டாள். அவனோ, கரமொன்றால் அவள் பின்னலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களை மூடுவதும் திறப்பதுமாக விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் நின்று அவர்கள் மூவரையுமே பார்த்திருந்தான், பூபாலன். சில நாட்களாக மனதை அழுத்திய பயமும் செய்வதறியாத திண்டாட்டமும் அகன்றுவிட்டதில் முகம் மென் முறுவலைப் பூசி நின்றிட்டு.
“கயல்…அவர் கள்ளன்! நீர் இருக்கிறீரா என்று முழிச்சு முழிச்சுப் பாக்கிறார். ரெண்டு பேரும் உம்மட அறையில போய்த் தூங்குங்க!”
திடீரென்று அவன் குரல் கேட்கவும் எழ முயன்றவள், கண்களை முழுதாக விரித்துச் சிணுங்கியவனையும் தூக்கிக் கொண்டு எழுந்து நின்றாள்.
“ஆரோ தன்ர பிள்ளைகள் தன்னோட தூங்க வேணும் என்று நிண்டு சதிர் ஆடினவே! ஆர் எண்டு தெரியுமா உங்களுக்கு?
“அப்பிடியோ! ஆராயிருக்கும் நீரே சொல்லுமன்.” இலகுவாகச் சொல்லியபடி, “வாடா அப்பாட்டா…கீழ கொண்டுவந்து தாறன்.” கைநீட்டவே அவன் பட்டென்று அவள் கழுத்தில் புதைந்து பின்புறத்தை உயர்த்தி அப்படியே அவள் நெஞ்சில் கால் வைத்து ஏறத் தொடங்கியிருந்தான் .
“டேய் பெடியா உன்ன…” அவன் பின்புறத்தில் ஒரு தட்டுப் போட்டுவிட்டு, “இது அடியில்ல, சின்னதா ஆசையில தட்டினது ஒகே!” பல மாதங்களுக்குப் பிறகு அவன் முகத்தில் சின்னதாக இளக்கமும் முறுவலும் தெரிந்ததை பார்த்துவிட்டு, “அண்டைக்கு அடிச்சது அடிதான் மலுப்பல் வேணாம். நீங்களும் தூங்குங்கோ!” கீழே வந்தாள் அவள்.