“என்ன சொல்லுறீர்?” சந்தேகமாகக் கேட்டான், பூபாலன். அவள் அமைதி சரியாகத் தான் கேட்டாய் என்றிட்டு.
நிறைந்து தளம்ப ஆயத்தமாகிய விழிகளால் அவன் விழிகளையே பார்த்திருந்துவிட்டு, மெல்லப் பார்வையை விலக்கிக் கொண்டாள், அவள்.
‘திடீரெண்டு வெளிக்கிட அப்பிடி என்ன நடந்தது?’ உண்மையில் நிறையவே தடுமாற்றமும் பதற்றமுமாக அந்தரித்துப் போனான், பூபாலன்.
வேலைக் காலம் முடிந்துவிட்டால் இலங்கை திரும்பத்தான் வேண்டும் என்று தெரியாதா என்ன? ஆனால், அது இக்கணம் வரை அவன் சிந்தையில் வந்ததில்லையே!
மின்னலாகக் கணக்குப் போட்டுப் பார்த்தான். விசா முடிய இன்னும் ஆறுமாதம் அப்படி இருக்கே!
“என்ன கயல் நடந்தது? வேலையில ஏதாவது பிரச்சினையா? இங்க நம்மட வீட்டில உமக்கு ஏதாவது பிரச்சினையா?” வலு இயல்பாக ‘நம்மட’ என்ற சொற்பதத்தை உபயோகித்திருந்தான். அவள் கருத்தில் அது துல்லியமாகப் பதிந்திட்டு. மீண்டும் அவன் பார்வையை எதிர்கொண்டாள்.
“என்ன கயல்? வீட்டாக்கள் ஆரும் எடுத்தீனமோ? என்ன எண்டாலும் சொல்லுமன் பார்க்கலாம். அதவிட்டுட்டு, இப்பிடித் திடுதிப்பெண்டு போறன் எண்டு சொல்லுறதா கயல்? பிள்ளைகள் அந்தரிக்கப் போகீனம்!” அவன் மனதின் பதற்றம் அப்படியே குரலில் ஒட்டிக்கிடந்தது.
“அப்பிடியெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல, அம்மம்மாக்குக் கொஞ்சம் வருத்தமாம்; என்னைப் பாக்க வேணும் எண்டு அழுது அந்தரிக்கிறாவாம், அதான்.” முடித்துவிட்டாள், அவள்.
இதற்கு எப்படி மறுப்புச் சொல்ல முடியும்? அசையாதிருந்தான் பூபாலன்.
“பிள்ளைகளிட்ட இப்பவே சொல்ல வேணாம்; போறதுக்கு முதல் நாள் அப்பிடி நானே சொல்லுறன்.” விழிகளின் கலக்கத்தை இலாவகமாக மறைத்து விட்டாள்.
பிள்ளைகள் அந்தரிக்கிறது மட்டுமா? அவர்களால் அவளை விட்டு இருக்க முடியுமோ என்ற சந்தேகத்துக்கும் கேள்விக்கும் முதல், அவளால் அவர்களை விட்டு விட்டு இருக்க முடியுமா? கயல் மனம் தாங்கொணா வலி எடுத்திட்டு.
‘என்னால ஏலுமா ஏலாதா எண்ட கேள்வியே தேவேல்ல; ஏல வேணும்! முதல் நான் ஆர் இந்த வீட்டுக்கு? ஆருமே இல்ல. அது எனக்கு விளங்க வேணும்.” தன்னைத்தானே ஏசி, குட்டிக்கொண்டாள்.
தொப்பென்று அமர்ந்து விட்டான், பூபாலன். பார்வை கயல்விழியின் முகம் விட்டு நகரவில்லை.
அந்நேரம், “சூட்டி!” சிணுங்கலோடு கத்திக்கொண்டு பின்புறமிருந்து ஓடிவந்தான், சிறுவன். அங்கு தந்தையைக் காணவும், “ப்பா!” அவன் மடியில் ஏறியமர்ந்துவிட்டு தான் வந்த வழியை மெல்ல எட்டிப் பார்த்தான்.
“ஸ்வீட்டி, தம்பிய ஒருக்கா என்ன எண்டு கேளுங்கோ!” வேகமாக ஓடிவந்த லாதி, “அப்பா எப்ப வந்தனிங்க?” என்றுவிட்டு, “ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” கயல்விழியில் அணைந்தபடி கேட்டவள் பார்வை, அவள் விழிகளின் சிவப்பில்.
“ஒண்ணுமில்லையே!” சமாளித்த வேகத்தில், “என்ன ரெண்டு பேரும் பிடுங்குப்பாடு?” கதையை மாற்றிவிட்டாள், கயல்.
“என்ர டொய் எல்லா அது? தரச் சொல்லுங்க, அவரிண்டைய எடுத்து விளையாடச் சொல்லுங்க!” லாதி சொல்ல, “நோ… இதான் என்ர!” என்றான், சின்னவன்.
“நீ என்ன பொம்பளப் பிள்ளையோ? அதப் பார் ரோஸ் நிறம். அது என்ர ஆதித்!”
“ஆதித் ஆம்பளப் பிள்ள!” தகப்பன் மடியிலிருந்து கொண்டே கையில் இருந்த கரடிப்பொம்மையை தமக்கை நோக்கி வீசினான், சின்னவன். அது அவள் முகத்தில் உரசி கீழே விழுந்திட்டு.
“ஆதித் என்ன வேல இது? இனி இப்பிடி ஒண்டையும் வீசக் கூடாது. அக்காட்ட சொறி கேளுங்க!” கயல்விழி அதட்ட, தகப்பனிடம் இருந்து ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்தவன் தமக்கையை கயல்விழியிடம் இருந்து தள்ளி விட்டான்.
“பச் ஏன் செல்லம்? சொறி சொல்லிட்டு டெட்டி பியர எடுத்து அக்காட கையில் குடுங்க.” அவனை இறக்கி விட்டாள், கயல்விழி.
முகம் அழுவது போல் போனாலும் சொன்னதைச் செய்துவிட்டு மீண்டும் அவள் மடியில் ஏறியமர்ந்தவன், “எனக்கும் வேணும்.” தமக்கை கையில் இருந்த கரடி பொம்மையைப் பார்த்து உதடு பிதுக்கினான்.
“பிள்ளேட எங்க?”
“அத ‘ஃபிஸ் பொண்ட்’டுக்க போட்டுட்டு என்ரய பறிச்சவர். நோட்டி தம்பி!”
“தவறி… விழுந்திட்டு” பம்மினான் சின்னவன்.
“இந்தா எடுத்திட்டன், காயவிட்டு விளையாடலாம்.” என்றபடி வந்த சரசு, “தம்பியும் வந்திட்டாரோ…தேத்தண்ணி ஊத்துறன் என்ன?” தோட்டத்தில் தான் நட்ட மரக்கறிகளில் இருந்து கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், சுக்கினி என்று ஒரு கூடை நிறைய எடுத்துக் கொண்டு சென்றார்.
“நான் கொஞ்சம் வெளில போயிட்டு வாறன் சித்தி; பிறகு குடிக்கிறன்.” பதிலுக்கும் காத்திராது வெளியேறிவிட்டான், பூபாலன்.
‘சரி அம்மம்மாக்கு வருத்தம், போயே ஆகோணும் எண்டா டிக்கட் எல்லாம் போட்டுட்டா சொல்லுவா!’ அவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. இந்த ஒன்றரை வருடங்களில் அவனுக்கு நல்ல நண்பியாக இருந்திருக்கிறாள். வீடு, குழந்தைகள் பற்றி மட்டுமல்ல தொழில் விடயங்கள் கூட அவளோடு ஆலோசிப்பான் இவன். அப்படியிருக்க…
மனதுள் எரிச்சல் ஊற்றெடுக்க எங்கென்றிலாது காரைச் செலுத்தினான்.
“தம்பி எங்க போறன் எண்டு ஏதும் சொன்னவரா கயல்? இன்னும் வந்தபாடில்ல!” நன்றாக இருட்டியிருந்தது. கிட்டத்த மூன்று மணி நேரம் கடந்தும் பூபாலன் வந்து சேரவில்லை.
பிள்ளைகளுக்கு இரவுணவு கொடுத்து படுக்கவும் விட்டாயிற்று.
“அப்பிடி ஒண்டும் என்னட்டச் சொல்லேல்ல. இன்னும் கொஞ்ச நேரம் பாத்திட்டு கோல் செய்து பாக்கிறன்.” என்ற கயல்விழி, அப்போதுதான் தான் இலங்கை செல்லவுள்ளதை சரசுவிடமும் பகிர்ந்து கொண்டாள்.