Skip to content
அவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்வோடு பேச்சற்றிருந்ததில் தெளிவாகிற்று. அவளை இந்த வீட்டு ஆளாகவே, அந்தக் குழந்தைகளின் தாயாகவேதான் கண்டார் அவர். பூபாலனோடு அப்ப அப்ப, அதுவும் பிள்ளைகள் விசயத்தில் அவன் கடிந்து கொள்ளும் போதுதான் அவர்களுள் தர்க்கங்கள் வரும். அதைவிட்டு மிகக் கலகலப்பாக நட்போடு அவர்கள் கதைத்துப் பழகுவது நிச்சயமாக விரைவில் அடுத்த கட்டத்துக்குப் போகுமென்றும் எண்ணியிருந்தார். ஆசைப்பட்டார். இப்போ இதென்ன?
மெல்ல அங்கிருந்து நகர முயன்றாள், கயல்.
“என்ன சொல்லுறீர் பிள்ள? அதும் திடீரென்று இப்பிடிச் சொன்னா! நானும் என்னவோ நினைச்சன்.” நேராகவே சொன்னவர், “தம்பிக்குத் தெரியுமோ?” என்றார் யோசனையாக.
“ம்ம்ம்…அவர் வெளில போக முதல்தான் சொன்னனான்” சின்னக் குரலில் சொன்னவள், “சின்னவனும் மொண்டிசுரி போகத் தொடங்கிட்டார், லாதில கண் வச்சிருந்தா சரி, தன்ர வேலைகளை வடிவாவே பார்ப்பா. நீங்களும் இருக்கிறீங்க தானே? எப்பிடி எண்டாலுமே இன்னும் ஆறு மாசத்தில போகத்தானே இருந்தன் ஆன்ட்டி. கொஞ்சம் முதல் போறன்.” என்று விட்டு நகர்ந்து விட்டாள்.
“முடிவு எடுத்து டிக்கட்டும் போட்டுட்டுச் சொன்னா நான் என்ன சொல்லக் கிடக்கு!” ஏமாற்றத்தோடு சொன்ன சரசு, “நீர் சாப்பிடுமன், தம்பிக்கு கிளையன்ட் மீட்டிங்கோ என்னவோ! சாப்பிட்டிட்டும் வருவார்.” என்றுவிட்டு, “இண்டைக்குத் தோட்டத்தில வேலையா நிண்டதாக்கும் பேக் களை, கண்ணைச் சுழற்றுது.” நகர்ந்தவர், தன் அறைக்குள் நுழைந்த வேகத்தில் காயுவின் தங்கைக்கு அழைத்து விசயத்தைச் சொல்லிவிட்டே சாய்ந்தார்.
மேலும் ஒரு மணிநேரம் கடந்தே வீடு வந்திருந்தான் பூபாலன். அதற்கிடையில் காயுவின் சகோதரி, சகோதரன் என்று அவனுக்கும் கயல்விழிக்கும் அழைப்புகள். சரசுவிடம் சொன்னதையே சொல்லிவிட்டு வைத்து விட்டாள், கயல்விழி.
“நாங்க இத எதிர்பார்கேல்ல அத்தான்.” என்றிருந்தாள், காயுவின் தங்கை.
“இன்னும் ஆறு மாசத்தில போக வேண்டியவோ இப்ப வெளிக்கிடுறா. இதில நாம என்ன சொல்லக் கிடக்கு?” அவர்களிடம் விட்டேற்றியாகக் கதைத்துவிட்டு வைத்தாலும் அவன் மனதுள் முழுமையாக ஏமாற்றம்.
உள்ளிட்ட வேகத்தில் மாடியேறியவனை, “சாப்பிடேல்லையா?” என்ற குரல் தயங்கி நிற்கச் செய்திட்டு. பார்வை திரும்பவேயில்லை. இதுதான் என்று வரையறுக்க முடியாதவகையில், அவள், அவன் மனதைப் புண்படுத்திவிட்டாள். போகத்தான் போகிறேன் என்று வெளிக்கிடுபவளை அவன் ஒன்றும் இழுத்தும் பிடிக்கப் போவதில்லை. போகட்டும். இவ்வளவு நாட்களும் இந்த வீட்டுக்காகவென நிறையவே செய்தவள், அவள். மிகத் தேவையான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவிக்குமே பெறுமதியே இட முடியாது என்று நினைப்பவன் அவன். அப்படிப்பட்டவளை ஒற்றைச் சொல் கொண்டு சரி கடிந்திட விரும்பவில்லை, அவன்.
“நான் வெளில சாப்பிட்டுட்டன்.” மாடியேறிவிட்டான்.
“பொய், வாங்க சாப்பிட; நானும் இன்னும் சாப்பிடேல்ல.” அவள் சொன்னதைக் காதில் வாங்காத பாவனையில் சென்றுவிட்டான்.
சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு மனம் கனக்க அறைக்குள் புகுந்தவளால் கண்களை மூடவே முடியவில்லை. கட்டிலில் நிம்மதியாக உறங்கும் சின்னவனையே பார்த்தபடி நெடுநேரமாக அமர்ந்திருந்தாள்.
அடுத்த இரு நாட்களும் பூபாலன் கயலோடு முகம் கொடுக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை வழங்காது வெகு சாமர்த்தியமாகத் தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்தவளும் இயல்பைத் தொலைத்தே நடமாடினாள். இருந்தும் பயண ஆயத்தங்களைச் செய்வதில் பின்னிற்கவில்லை.
அன்று காலையிலேயே அலுவலகத்துச் சென்றுவிட்டு விடைபெற்று வர மாலையாகியிருந்தது. வந்த கையோடு குளித்துவிட்டு வந்தவளை, பிள்ளைகள் அங்கு இங்கு அரக்க விடவில்லை. லாதிக்குச் சொல்ல எப்போதும் போல் பாடசாலை விசயங்கள் இருந்தன. தமக்கைக்குப் போட்டியாக சின்னவன் சூட்டி சூட்டி என்று அன்று முழுநாளும் நடந்த சின்ன சின்ன விடயங்களையும் அவளிடம் ஒப்பித்தபடி ஒட்டிக்கொண்டே இருந்தான்.
‘இந்தா இடையில ஒரு நாள்தான்; வெள்ளி இரவு போயிருவன்.’ கயல் மனம் நிலையில்லாது தவித்திட்டு. ‘பூபாலன் இப்படி முகத்த நீட்டிக்கொண்டு இருந்து தான் அனுப்பி வைப்பாரோ’ என்றதையும் கடந்து ‘நாளைக்கு பிள்ளைகளிட்ட சொல்ல வேணும். எப்பிடிச் சொல்லி விளங்க வைக்க?’ என்றது பெரும் பிரச்சினையாக இருந்தது, அவளுக்கு.
“தம்பி இன்னும் ரெண்டு இடியப்பம் எடுங்கோ!” என்ற சரசு, “வாரும் பிள்ள, சின்னாக்கள் தூங்கிட்டினமே?” சாப்பாட்டு மேசை நோக்கி வந்தவளிடம் கேட்டார்.
“அவே அப்பவே துங்கிட்டினம். தங்கச்சி எடுத்தவா அதான் கதைச்சிட்டு வர லேட்.” எப்போதும் தான் உண்ணும் தட்டில் இடியப்பத்தையும் கறி, சம்பலையும் பரிமாறியவள் ஒருபோதுமின்றி பூபாலன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“இன்னும் ஒருநாள் தான் இருக்கு ஆன்ட்டி.” சரசுவுக்கு சொல்வது போல இருந்தாலும் பார்வை அருகில் இருப்பவனில். பூபாலன் அவள் வந்தபோதும் பார்க்கவில்லை. இப்பவும் அவள் புறமே பாராது இடியப்பத்தைப் பிய்த்து சம்பல் பருப்புக் கறியோடு வாய்க்குள் அடைத்துக்கொண்டான்.
“நாளைக்கு மட்டன் புரியாணி செய்து தாறிங்களா? கடைசித் தடவையா!” அவள் சொல்லி முடிக்கவில்லை விசுக்கென்று நிமிர்ந்தவன், “என்ன கதை இது? கடைசித் தடவை அது இது எண்டு கொண்டு!” வலு கடுமையாகக் கேட்க, “இனி எப்ப உங்கட பிரியாணி சாப்பிடக் கிடைக்குமோ தெரியாதே! அதான் அப்பிடிச் சொன்னன். செய்து தருவீங்க எல்லா?”
வாயடி வரை கொண்டு சென்ற இடியப்பத்தை அப்படியே பிடித்தபடி அவளைப் பார்த்தவன் விழிகள் பட்டென்று கலங்கியதை அவதானித்தாள் கயல். சரசு கூட கவனித்துவிட்டார்.
“சாப்பிடுங்கோ பிள்ளைகள், நான் இண்டைக்கு வழமையை விட கூடவே சாப்பிட்டுட்டன்.” மெல்ல அங்கிருந்து நழுவிட்டார், சரசு.
“ஒவ்வொரு லீவுக்கும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அங்க வாங்க என்ன?” கேட்கையில் அவள் விழிகளும் கசிந்தன.
பூபாலனுக்கு அதற்குமேல் உண்ண முடியும் போல் இருக்கவில்லை. அவளுக்குப் பதில் சொல்லவும் வார்த்தைகள் வரவில்லை. எழுந்தான்.
“அப்ப இப்பிடி முகத்த நீட்டிக்கொண்டு தான் என்ன அனுப்பி வைக்கப் போறிங்க ம்ம்?” கேட்டவள் குரல் கமறியது. தொண்டைவரை வந்துவிட்ட விக்கல் வெளியில் வந்துவிடாதிருக்கப் படாத பாடு பட்டாள், கயல்.
மீண்டும் அமர்ந்து கொண்டான், விழிகள் தீர்க்கமாக அவள் விழிகளில் படிந்திட்டு.
“உமக்கே நீர் செய்தது சரியா இருக்கா சொல்லும்? அந்தளவு ஆரோ ஒருத்தனுக்கு விசயம் இப்பிடி எண்டு சொல்லுறது போல வெள்ளி வெளிக்கிடுறன் என்று சொல்லுறீரே! அப்பிடி நீர் செய்தது சரியா? போகப்போறன் எண்டு முடிவெடுத்தா முதலே சொல்லி இருக்கலாம் எல்லா? போக முடிவெடுத்து ஒஃபிசில கதைச்சு அவை ஓமெண்ட பிறகு தானே டிக்கெட் போட்டிருப்பீர். இவ்வளவும் நடந்தும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லேல்ல! எனக்கு அதுதான் சரியான கவலை கயல். என்ன ஆரோ மூண்டாவது மனுசனா நினைச்சிட்டீர் என்ன? இந்த ஒன்றரை வருசத்தில நான் என்ன எண்டாலும் உம்மட்ட சொல்லுறனானா இல்லயா?” கேட்டவனுக்கு அவள் விழிகளால் உருண்டு தெறித்த கண்ணீர் மட்டும் தான் பதில்.
“இப்ப என்ன அப்பிடிப் பெரிசாக் கேட்டனான்?! ஒரு மட்டன் பிரியாணி. ஏலாது எண்டா விடுங்கோ! நானே எல்லாருக்கும் சேர்த்துச் செய்து தந்திட்டுப் போறன்.” பட்டென்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றவளை என்ன செய்வதென்று பார்த்தான்.
அதுவரை அவளோடு கதைக்காதிருந்தது போல அதன் பிறகும் இருக்க முடியவில்லை.
பின்னாலே வந்தவன், “கயல், கொண்டுபோக ஏதாவது வாங்க வேணும் எண்டாலும் சொல்லும் கடைக்குப் போயிட்டு வர வேணும் எண்டாலும்…நீர் கேட்டு நான் எதையுமே மாட்டன் எண்டு சொல்ல மாட்டன்.” தன் விழிகளை உற்றுப் பார்த்தானோ! கண்களைச் சிமிட்டிவிட்டுப் பார்க்க நகர்ந்திருந்தான்.
error: Alert: Content selection is disabled!!