35 – 2

“நீங்க ரெண்டு பேரும் அப்பாவோடயும் பாட்டியோடயும் இருந்து அச்சாப்  பிள்ளைகளா…” கமறிய குரல்  இடைஞ்சல் செய்திட்டு.

சின்னவனைக் கொஞ்சும் சாட்டில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“நான் ஸ்ரீலங்காவுக்குப் போகப் போறன் லாதிம்மா.”

“நோ நோ நோ…” துள்ளி இறங்கி வந்து அவளில் மோதி நின்று அவள் முகத்தைப் பார்த்த லாதியின் விழிகளில் அதிர்வும் கண்ணீரும்.

“நீங்க போகக்  கூடாது ஸ்வீட்டி!” மீண்டும் சொன்னாள்.

“ஸ்வீட்டிட அம்மம்மாவத் தெரியும் தானே? அவாக்குச் சரியான வருத்தம். ஸ்வீட்டிய பார்க்கோணும் எண்டு ஒரே அழுறாவாம். பாவம் எல்லாம்மா?”

“ஓ!” 

“நானும் பாக்கக் வேணும். அந்தப் பாட்டி என்னையும் பாக்க அழுறா!” அவள் கழுத்தைக் கட்டிக்கொண்ட சின்னவன்.

“கள்ளப்பெடியா!” 

“நானும் வருவன்.” உதடு பிதுக்கி அழுகைக்கு ஆயத்தமானான், அவன். 

“அப்ப எப்ப திரும்ப வருவீங்க? வேலைல இன்னும் ரெண்டு வருசம் இன்னும் ரெண்டு வருசம் இன்னும் ரெண்டு எண்டு எப்பவும் எங்களோட இருப்பீங்க எல்லா ஸ்வீட்டி?” லாதி முகத்தில் தீவிரம்.

 

அவள் பதில் சொல்லவில்லை. அவளையும் மீறி பூபாலனிடம் பாய்ந்தது பார்வை. அவனோ இலக்கற்ற பார்வையில் அமர்ந்திருந்தான்.

“ஸ்வீட்டி பிள்ளைகளோட ஒவ்வொருநாளும் எப்ப வேணும் எண்டாலும் பேஸ் டைம் ல  கதைப்பன்.”

“ஆனா இங்க வீட்டுக்கு எப்பத்  திரும்பி வருவீங்க?” அதிலேயே குறியாக நின்றாள், லாதி.

இப்பவே அவள் வெளிக்கிட்டு விட்டது போல் நெஞ்சோடு அட்டையென ஒட்டிவிட்ட ஆதித், திடீர் செய்தி ஏற்படுத்திய அதிர்வில் கண்ணீர் பளபளக்க, உதடு துடிக்க அழுகையைக் கட்டுபடுத்த முயன்றபடி கேள்வி கேட்கும் லாதி…

வார்த்தை வராது தடுமாறினாள், கயல். பார்வை பூபாலனையும் சரசுவையும் தொட்டு வந்தது. 

“கதையுங்கோ, நான் கொஞ்சம் சரியப் போறன்.” சரசு எழுந்து சென்றுவிட்டார். பூபாலனோ இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற கணக்கில் அமர்ந்திருந்தான். முகம் மட்டும் இறுகிப் போயிருந்தது. 

“சொல்லுங்கோவன், எங்களிட்ட…வர மாட்டிங்களா ஸ்வீட்டி?”  முத்தென கண்ணீர் உருளக் கேட்டவளை அப்படியே வளைத்து அணைத்துக் கொண்டாள், கயல்விழி. 

“ஸ்வீட்டிக்கு இங்கயே…அப்பிடி எண்டா இந்த நாட்டில இருக்க ஏலாது செல்லம். வேலைக்கு எண்டு எல்லா வந்தனான். அது முடிய கட்டாயம் போக வேணும். ஸ்வீட்டிட வீடு ஸ்ரீலங்காலதான் இருக்கு.” 

“ஆதித் வீடும் ஸ்ரீ…லங்கால தான் இருக்கு. நானும்… போக வேணும்..” அழுகையோடு சொன்னான், சின்னவன். 

“நான் வெளில போயிட்டு வாறன்.” விசுக்கென்று எழுந்து சென்று விட்டான், பூபாலன்.

அவன் குழந்தைகள் இந்தப் பிரிவை எப்படித் தாங்கப் போகிறார்கள்? எப்படி அவனால் தேற்ற முடியும்? மீண்டும் ஒரு பிரிவு…அதில் அவன் இரு பிள்ளைகளும் துவளப் போகிறார்களே! நெஞ்சு கனத்தது அவனுக்கு. காயுவின் பிரிவில் துவண்டு நிண்ட லாதியை, ஏன் இந்தக் குடும்பத்தையே இயல்பாக்கியதில் பெரும் பங்கு கயல்விழியினது என்று அவர்களோடு நெருக்கமானவர்கள் எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்க அவளே சென்று  விட்டால்?

 

அக்கணம் அவ்விடம் விட்டுப் போனால் போதுமென்று வெளியில் வந்தவன் கரத்தில் கார் இலக்கின்றி பயணப்பட்டது.

வீட்டிலோ, லாதி சட்டென்று அமைதியானது போலிருந்தது, கயல்விழிக்கு. அவளை அவளை அடிக்கடிப் பார்த்தாள்; இவளோடு அணைந்து இருந்தவள் இவளைப் பார்க்கவேயில்லை. ஆதித் “நானும் வரப்போறன் சூட்டி!” சிணுங்கலை விடவேயில்லை.

“ஆதித் குட்டிட முறுக்கு முடிஞ்சிட்டு என்ன? முறுக்குச் செய்வமா?”

“வேணாம்…முறுக்கு…” கண்ணீர் வழிய இருகரத்தாலும் போட்டிருந்த பெனியன் கழுத்தில் பிடித்து இழுத்தபடி அவன் விம்மியதைப் பார்க்க முடியவில்லை. தன்னையே அவள் பார்க்கவும், “அம்மம்மா பாக்க நானும் வரப்போறன்” அதிலேயே நின்றான்.

“லாதி பனானா கப் கேக் செய்ய வேணும் எண்டு சொன்னிங்க எல்லா, செய்வமா?”

“ம்ம் செய்…வம்” கேக் வகை செய்வது என்றால் அவளுக்கு அவ்வளவு விருப்பம். பட்டென்று நகர்ந்து நின்று கயல்விழியையே பார்த்தாள்.

“என்னடா குஞ்சம்மா?” ஆதித்தைத் தூக்கிக்கொண்டே எழுந்து அவளையும் அணைத்தபடி சமையலறைக்குள் உள்ளிட்டவள், அதன் பின்னர், பெரும் பிரயத்தனம் செய்துதான் அவர்கள் கவனத்தைத் திருப்ப வேண்டியிருந்தது.

அவளை விட்டு இறங்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த ஆதித்தைத் தூக்கி வைத்துக்கொண்டே, கேக் தாயாரிக்கத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தாள்.

 “இனி எங்கட குட்டியர் இதில இருக்க வேணும்.” சமையலறை மேடையில் சின்னவனை இருத்திவிட்டு, லாதியைக் கவனித்தபடி கடகடவென்று முறுக்குக்குக் குழைத்தாள். கடலை மாவோடு அளவாக அரிசிமா, உப்பு, கொஞ்சமாக எள்ளு,  ஒலிவ் எண்ணெய், தனி மிளாகாய் தூள் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு மென்மையாகப் பிசைந்து உருண்டையாக வைத்துவிட்டு, “இனி செல்லம் இதில இருந்து விளையாடுங்க, சூட்டி முறுக்குப் பொரிச்சுத் தர எல்லாம் நொறுக்கிறது குட்டியனிட வேலை ஒகே.” அருகில் இருந்த உணவு மேசைக் கதிரையில் அவனை இருத்திவிட்டு தேன்குழல் போல் பெரிய வட்டமாக முறுக்கைப் பொரித்தெடுத்தாள். 

“பேக் செய்வம் ஸ்வீட்டி!”  லாதி தயாரித்த பன்னிரண்டு கப் கேக்குகள் ஓவனுள் வெப்பக் குளியல் எடுக்க ஆரம்பித்திருந்தன.

“அப்பாக்கு கொஞ்சம் மிக்சர் செய்வமே!” திடீரென்று ஒரு ஆசை அவளுள். கொஞ்சமாக காரப்பூந்தி, ஓமப்பொடி செய்து வைத்துவிட்டு, பக்கற்றுகளுள் இருந்த பொரித்த பச்சைப்பட்டாணியையும் எடுத்து வைத்தவள், “வறுத்த கச்சான் வறுத்த கஜு ரெண்டையும் ஒருக்கா பொரிப்பம்.” போட்டு எடுத்துவிட்டு, கொஞ்சமாகப் பாதாம் பருப்புகளையும் பொரித்தெடுத்து, ஒரு பிடி அவல், கொஞ்சமாக உலர்திராட்சை என்று எல்லாம் பொரித்தெடுத்து வைத்தாள். 

தனி மிளகாய்த் தூள், பொரித்த கறிவேப்பிலை, ஒரு கரண்டி சீனி  எல்லாம் சேர்த்து, ஆதித் நொருக்கித் தந்த ஓமம், காரப்பூந்தி, பொரித்த பருப்புவகைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து குலுக்கி ஒரு வட்டத் தட்டில் அழகாக எடுத்து வைத்துவிட்டு,  தேன்குழல் முறுக்கை நொருக்க ஆதித்திடம் கொடுத்தாள்.

அப்போதுதான் சரசு அங்கு வந்தார்.

“இங்க என்ன நடக்குது, ஒரே பலகாரச் சூடோ?!” என்று வந்தவர் கண்ணீரோடு கயலை அணைத்துக் கொண்டார்.

“ஏனன, வடிவா யோசிச்சுத்தான் ஒரேயடியா போயிருவம் எண்ட முடிவ எடுத்தியா? இதுகள் தாங்குங்களா ஆச்சி? ஒருக்கா  யோசியன!” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கெஞ்சலாகச் சொன்னார். 

“ஆன்ட்டி அவே இப்ப அதை மறந்திட்டினம். ப்ளீஸ்” விட்டுவிடு என்கிறாள், கோபமா பட முடியும்?

“அவரவருக்கு எண்டு விதிச்சது தானே நடக்கும்!?” அவளுக்குக் கேட்கவே சொன்னவர் பார்வை, மெல்ல மெல்ல உப்பி வரும் கேக்கில் பார்வை பதித்திருந்த லாதியிலும் தன் முன்னால் இருக்கும் பெரிய வட்ட முறுக்கை இரு கைகளாலும் சந்தோசமாக நொருக்கிக்கொண்டிருக்கும் ஆதித்திலும்.

அடுத்து, பூபாலன் மிகவும் விரும்பிச் சாப்பிடும் மிக்சரைப் பார்த்தவர், பெருமூச்செறிந்தார். 

“மணி ஆறு ஆகுது என்ன? எங்க தம்பிட சிரமன் இல்ல.” அவர் கேட்கையில் தான் அவன் வெளியில் சென்றது நினைவில் வந்தது, கயல்விழிக்கு.

“அப்பவே வெளில போனாரே!” அவனுக்கு அழைத்துப் பார்த்தாள். விடாது பல தடவைகள் அழைத்த  பின்னரே எடுத்தவன், “நான் வர ஒன்பது ஆகும்.” சொன்ன கையோடு வைத்து விட்டான். 

முறுக்கும் கேக்கும் உள்ளே போயிருந்ததில் கொஞ்சமாக இடியப்பம் சாப்பிட்டுவிட்டுக் கண்கள் சொருகியும் படுக்கைக்குச் செல்லேன் என்று அடம்பிடித்தான் சின்னவன். லாதியுமே கயல்விழியை ஓட்டிக்கொண்டே திரிந்தாள்.

“இண்டைக்கு இங்கயே மூண்டு பேருமா தூங்குவம்.” சேர்ந்து படுத்த கயல், வேறு எதையும் கதைக்கவோ யோசிக்கவோ விடாது கதைகள் சொல்லி ஒருவாறு கண்ணயர வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.

இரவு ஒன்பது போல்  உள்ளே வந்தான், பூபாலன். கையில் ஒரு பெரிய பை. அங்கிருந்த சரசு, கயல்விழி இருவரையும் பாராது, “இதையும் கொண்டு போக எடுத்து வையும்.” கயல்விழியின் அருகில் வைத்த வேகத்தில் மாடியேற எத்தனித்தான்.

“தம்பி சாப்பிடேல்லையா?”

“வெளில சாப்பிட்டுட்டன் சித்தி.” விறுவிறுவென்று சென்றுவிட்டான்.

 

“பொய் என்ன ஆன்ட்டி, சாப்பிட்ட ஆள் மாதிரியா இருக்கு!” என்று சொன்னாலும்,  “தூங்கப் போறன் ஆன்ட்டி.” அமைதியாகச் சென்றுவிட்ட கயல்விழி, அவன் வாங்கிவந்த பைக்குள் விதம் விதமாக இருந்த சொக்லேட்டுகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!