காதல் காயங்களே 24 – 1

அத்தியாயம் 24

 

 

ஆதிராவை அழைத்துவர நேரமிருந்ததில் வீட்டுக்கே காரைத் திருப்பினான் பிரதீபன். ‘நீங்க எனக்குத் தேவையில்லை’ என்று எவ்வளவு தெளிவாகக் கண்களைப் பார்த்துச் சொன்னாள். வறட்சியான முறுவல் ஒன்று அவன் உதட்டோரம் வந்துவிட்டுப் போனது. இதைவிடவும் மோசமாக அவளால் அவனைத் தூக்கி எறிந்துவிட முடியாது என்றே தோன்றிற்று!

 

நல்லகாலம் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து அவளுடன் பேசியது! இல்லையேல் அவன் தலைகீழாக நின்றிருந்தாலும் திருமணத்துக்குச் சம்மதித்திருக்கவே மாட்டாள். அப்படி அவளைச் சம்மதிக்க வைத்த தாயை மனது தேடியது. அவர் எல்லோர் முன்னும் அவனை ஒரு வாங்கு வாங்கியதில் பெரிய மனதுபண்ணி இறங்கி வந்திருக்கிறாள். நினைக்கையிலேயே உதடுகளில் மென்னகை மலர்ந்துபோயிற்று!

 

‘இன்னும் என்னை யாரிட்டையும் விட்டு குடுக்கமாட்டா.. ஆனா என்னோட கோவமாம். எத்தனை நாளைக்கு எண்டு நானும் பாக்கிறன். நான் தேவையில்லையாடி உனக்கு?’ தனக்குள் பொருமியவனின் எண்ணங்கள் அவன் மீது கோபத்துடன் இருக்கும் சகோதரிகளை நோக்கிப் பயணித்தது.

 

எப்படியும் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டு இருப்பார்கள். என்றாவது ஒருநாளைக்கு அவர்கள் வீட்டுக்கு மனைவி மகளோடு குதித்துவிட்டால் துரத்தவா போகிறார்கள். அவனை முறைத்தாலும் அவன் குடும்பத்தை நல்லபடியாகவே உபசரிப்பார்கள்.

 

காரை வீட்டினுள் விட்டான்.

 

உறங்கி எழுந்து ஹாலில் அமர்ந்திருந்தார் புஸ்பவதி. சிந்தனை முழுக்க மகனையே சுற்றிக்கொண்டிருந்தது. டீவி அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் வந்தவனைப் பார்த்து முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

 

முறுவல் அரும்பிற்று அவனுக்கு! இந்த நிமிடம் வரைக்கும் அவரின் சிந்தனையில் அவன் தான் இருப்பான். இருந்தாலும் அவனோடு கோபமாம்.

 

‘ஆளாளுக்கு என்னை வச்சு செய்யினம்!’

 

நேராக அவரிடமே சென்றான். வருகிறான் என்று தெரிந்தும் தெரியாததுபோலவே அமர்ந்திருந்தார் புஸ்பவதி. அருகில் அமர்ந்து அவர் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். புஸ்பவதியிடம் அசைவே இல்லை. திகைப்புடன் மகனைப் பார்த்தார். எத்தனை வருடங்கலாயிற்று அவன் இப்படி மடியில் படுத்து?

 

தாயின் திகைப்பில் அரும்பிய சிரிப்பை அடக்கிக்கொண்டு ‘என்ன?’ என்றான் புருவங்களை உயர்த்தி. ஒருகணம் தடுமாறினாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு முறைத்தார் புஸ்பவதி.

 

“என்னடா? நீ வந்து மடில படுத்தா நான் எல்லாத்தையும் மறந்துடுவன் எண்டு நினைச்சியா? ஒழுங்கு மரியாதையா எழும்பு!”

 

அவர் சொன்னதை ஒரு விடயமாக அவன் எடுக்கவே இல்லை.

 

“பேசுறத பேசுங்க. அப்படியே தலையையும் கோதிவிடுங்கம்மா.” அவரின் கைகளை எடுத்துத் தானே தன் கேசத்துக்குள் வைத்துவிட்டான் அவன்.

 

அவருக்கோ மனம் ஆறவே மறுத்தது. எவ்வளவு பெரிய காரியங்களை எல்லாம் பதறாமல் செய்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் நடக்கிறானே! படக்கென்று தன் கைகளை அவன் தலையிலிருந்து எடுத்துக்கொண்டார்.

 

கவலையோடு அவன் பார்க்க, “என்ர பிள்ளை பாவம். எனக்குப்பிறகு அவனை பாத்துக்கொள்ள ஒருத்தரும் இல்ல. தனிச்சுப்போவான். எப்பாடு பட்டாலும் ஒரு கல்யாணத்தை கட்டி வைக்கவேணும் எண்டு நான் நினைச்சா அவன் பிள்ளையையே பெத்து வச்சிருக்கிறான். அதுவும் பத்து வருசத்துக்கு முதல். அப்ப இந்த அம்மாட்ட இவ்வளவு காலமும் எல்லாத்தையும் மறைச்சு பொய்யாத்தானே நடந்திருக்கிறாய். கனவில கூட நினைக்கேல்ல என்ர மகன் இப்படிச் செய்வான் எண்டு.” சொல்லும்போதே குரல் அடைத்துக்கொண்டது அவருக்கு.

 

திடீரென்று கேட்ட மனைவியின் சத்தத்தில் அறையிலிருந்து தானும் எழுந்துவந்தார் திருநாவுக்கரசு.

 

தாயும் மகனும் இருந்த காட்சி அவரையும் அசைத்தது. ஒருகணம் அப்படியே நின்றுவிட்டு, “விடு புஸ்பா. திரும்பத் திரும்ப அதையே கதைக்காத. நடந்தது நடந்து போச்சு. இனி நடக்கவேண்டியதை பார்!” என்றார் தணிவாக.

 

“ஓம் ஓம்! எல்லாரும் எல்லாம் சொல்லுவீங்கள். உங்களுக்கு என்ன வந்தது? அவனோட ஒவ்வொருநாளும் மல்லுக்கட்டி படாதபாடு பட்டவள் நான். எனக்குத்தான் தெரியும் என்ர வலியும் வேதனையும்.” என்று கணவரிடம் சினந்துவிட்டு மகனிடம் திரும்பினார்.

 

“உன்ர அக்காக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் முடிஞ்ச கையோடையாவது சொல்லியிருக்கலாமேடா. எத்தனை வருசம் சொல்லு, நீ பிரிஞ்சு இருந்ததும் காணாம எங்களையும் எங்கட பேத்திட்ட இருந்து பிரிச்சிட்டியே!” என்றார் தாங்கமாட்டாத தவிப்புடன்.

 

அவனோ அன்னையின் கையைப் பற்றிக்கொண்டான். “அம்மா சொரி அம்மா. நான் அவளை தேடாத இடமில்லை. அவுஸ்திரேலியாக்கு போயிருக்கிறாள். அதாலதான் என்னால கண்டுபிடிக்க முடியேல்ல. குழந்தை இருக்கிறது எனக்கும் இப்ப தானேம்மா தெரியும். அவள் இன்னொரு கல்யாணம் கட்டிட்டாளா இல்லையா எண்டு தெரியாம என்னத்தையம்மா உங்களிட்ட சொல்ல சொல்லுறீங்க. இவ்வளவு காலமும் கல்யாணம் கட்டுறான் இல்லையே எண்டுற ஒரு கவலைதான் உங்களுக்கு இருந்தது. இதையெல்லாம் சொல்லியிருந்தா எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பீங்க சொல்லுங்க? அவளை திரும்ப பாப்பனா இல்லையா எண்டு தெரியாது. பாத்தாலும் கல்யாணம் கட்டாம இருப்பாளா தெரியாது. இதெல்லாம் தெரியாம எப்படி மா சொல்ல?” என்றான் அவன் தணிவாக.

 

அவருக்கும் புரிந்ததுதான். என்றாலும் சட்டென்று ஏற்றுக்கொண்டு சமாதானமாகப் போகமுடியாமல் மனம் முரண்டிக்கொண்டிருந்தது. அதெல்லாம் சரியாகி அவர் பழைய நிலைக்கு வர சற்று நாளாகும். எனவே, “நேரமாகுது, எழும்பு. எழும்பிச் சாப்பிட வா!” என்றார் அந்தப் பேச்சிலிருந்து வெளியேறி.

 

அவனோ வாகாக அன்னையின் மடியில் தலையை வைத்துக்கொண்டு, “சாப்பிட்டுட்டன்.” என்றான்.

 

கணவரிடம் பார்வை சென்று மீள, “எங்க?” என்றார் அவர்.

 

“வேற எங்க? என்ர மனுசிதான் தந்தவள். என்ன ருசி எண்டு கேக்குறீங்க. அமிர்தமா இருந்ததம்மா.” என்றான் அவன்.

 

‘என்ர மனுசி’ என்று அவனது வாயிலிருந்து கேட்ட வார்த்தையில் அன்னையின் மனம் குளிர்ந்து போயிற்று. அதைக் காட்டிக்கொள்ளாது, “இப்ப என்ன சொல்லுறாய்? அவள் சமைச்சதுதான் நல்லாருக்கு என்ர சமையல் சரியில்லை எண்டுறியோ?” என்று சண்டைக்கு வந்தார் அவர்.

 

“லைட்டா நல்லா இருக்கிறேல்ல தான்மா. நான் சொல்லுறது பொய் எண்டால் அப்பாட்ட கேட்டுப்பாருங்கோ. வேற வழி இல்லாம சாப்பிடவேணும் எண்டுறதுக்காக சாப்பிட்டதுதான். நான் மயூரிட்ட சொல்லிவிடுறன். டைமிருக்கேக்க அவள் வந்து சமைக்கிறது எப்படி எண்டு உங்களுக்குச் சொல்லித்தருவாள். அதுக்குப்பிறகாவது சுவையா சமைங்கம்மா.” வெகு தீவிரமாகச் சொன்னான் அவன்.

 

அவரோ அவனைப்பிடித்துத் தள்ளிவிட்டார். “எழும்படா முதல்! இங்க எனக்கு ஒருத்தியும் வந்து சொல்லித்தர தேவையில்லை. இனி நீ அவளிட்டையே சாப்பிடு! இங்க வரப்படாது! போடா! போய் அவளின்ர மடியிலேயே படு! அதுதான் இதைவிட இன்னும் நல்லாருக்கும்!” என்றார் அவர்.

 

அவன் அசைந்தால் தானே. “அதுக்கு தான்மா சொல்லுறன். கெதியா கலியாணத்தை கட்டி என்ர புகுந்த வீட்டுக்கு என்னை அனுப்பிவைங்க எண்டு. நானும் வாழத்தானே வேணும். நீங்கதான் கேக்கிறீங்களே இல்லை.”

 

அவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வளர்ந்த கம்பீரமான அவரின் மகன் வாழ்வதற்காகப் புகுந்த வீட்டுக்குப் போகப்போகிறானாமே! பழைய மகனைப் பார்ப்பது போலிருந்தது. அந்த மயூரி அவருக்கு ஒரு பேத்தியை மட்டுமல்ல அவருடைய மகனையும் சேர்த்துத்தான் திருப்பித் தந்திருக்கிறாள். மகன் மீதான பாசம் அந்த மருமகள் மீதும் படர்ந்துபோயிற்று!

 

அவனும் சிரிப்புடன் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். நிறையவே தானும் அவரை நோகடித்திருக்கிறோம் என்று புரிந்தது. “எல்லாத்துக்கும் சொரிமா..” என்றபடி அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டான்.

 

அவருக்குத்தான் கூச்சமாய் போயிற்று! இவ்வளவு பெரிய மகன் இப்படி வந்து கட்டிப்பிடிக்கிறானே என்று. “டேய் விடடா! விட்டா குழந்தைப்பிள்ளைக்கு நடிப்பாய். இனி நீ உன்ர மனுசின்ர மடிலதான் படுக்கவேணும். என்ர மடி என்ர பேத்திக்கு மட்டும் தான்!” என்று அவர் துரத்தவும் தான் எழுந்துகொண்டான்.

 

தாயும் மகனும் செல்லமாய் முறுக்கிக்கொண்டிருந்தாலும் இருவர் மனங்களும் நிறைந்துபோயிருந்தது. திருநாவுக்கரசு எதிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் தனக்குள் ரசித்துக்கொண்டிருந்தார்.

 

“என்னவாம் மயூரி?” என்று கேட்டார் புஸ்பவதி.

 

“சமாதானம் ஆகிறாளே இல்லையம்மா.” முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க எழுந்து அமர்ந்துகொண்டு தலையைக் கோதிச் சீர் செய்தபடி சொன்னான் அவன்.

error: Alert: Content selection is disabled!!