காதல் காயங்களே 24 – 2

“பின்ன! நீ பாத்த வேலைக்கு உன்னை கொஞ்சவும் வேணுமாக்கும்!”

 

அவனோ சிரித்தான். “கொஞ்சுறாளோ இல்லையோ நிறைய நாளைக்கு என்னட்ட கோபம் சாதிக்க அவளால ஏலாதம்மா.” என்றான் அவன்.

 

வேகமாகக் கணவரைத்தான் பார்த்தார் புஸ்பவதி. இந்த ஆழமான நேசம்தான் இத்தனை வருட இடைவெளி இருந்தும் இருவரையும் வேறு வாழ்க்கை தேடவிடாமல் தடுத்திருக்கிறது போலும்.

 

“வாற வெள்ளிக்கிழமையே நல்ல நாளாம் எண்டு அப்பா சொன்னவர் தம்பி.”

 

“வெள்ளியாம்மா? அதுக்கு இன்னும் ஒரு கிழமை இருக்கம்மா.” என்றான் அவன் பெரும் சோகத்தோடு.

 

அவனை முறைத்தார் அன்னை. “எனக்கு திரும்பவும் கோபத்தை வரவைக்காம ஓடிப்போ!”

 

“உங்களோட கதைக்க இப்ப எனக்கும் நேரமில்லை. நான் என்ர மகளை பாக்க போகோணும். அதால போறன். வந்து கதைக்கிறன்!” உற்சாகமாய் தன் அறைக்கு எழுந்துசென்றான் பிரதீபன்.

 

புஸ்பவதியின் முகம் மலர்ந்துபோயிற்று! “அப்படியே இங்கயும் கூட்டிக்கொண்டு வா தம்பி! பாக்க ஆசையா கிடக்கப்பு!” பேத்தியின் நினைவில் நெகிழ்ந்துவிட்ட குரலில் சொன்னார் அவர். அவன் மீதான கோபங்களைக்கூட அந்தப் பேத்தி ஆற்றிவிடுவாள் போலிருந்தது.

 

துள்ளலோடு குளித்துத் தயாராகியிருந்தான் ஆதிராவின் முதல் ஹீரோவாகப்போகிறவன். சரியாகப் பள்ளிக்கூடம் முடிகிற நேரத்துக்கு அரைமணி முன்னதாகவே வாசலில் காவல் காக்கத் தொடங்கியிருந்தான். கையும் காலும் காருக்குள் அடங்கியிருக்காமல் பரபரத்தது. கடிகார முற்கள் நகரவே இல்லை. ஒருமுறை இறங்கிப்போய் நடந்துவிட்டு வந்தான். இன்னோர் முறை அவள் தந்த வண்ணத்துப்பூச்சியை எடுத்துப் பார்த்தான். ஆசையாய் வருடிக்கொடுத்தான். அதை அவள் தந்த பொழுது நினைவில் வந்தது. மயூரி இனித் தனக்கில்லையோ என்று துடித்துக்கொண்டிருந்தபோது உனக்கு நானிருக்கிறேன் என்பதுபோல தத்தளித்துக்கொண்டிருந்தவனை கைநீட்டிக் கரையேற்றிவிட்ட ரட்சகி அவன் மகள்.

 

அந்த மகளைக் காணவேண்டும். அதுவரை பேசாத கதைகளை எல்லாம் பேசவேண்டும். வாரி அணைக்கவேண்டும். உச்சி முகரவேண்டும். கடவுளே.. காத்திருத்தலைப்போல கொடுமை எதுவுமே இல்லை. அந்தக் கொடுமையைக் கடந்த நொடியில் மனம் பரபரப்படைந்தது. காரை விட்டு இறங்கிக் கதவில் சாய்ந்து நின்றுகொண்டான். கண்களோ வாசலைத்தாண்டி இம்மியும் நகரவில்லை.

 

மரத்தைப்பிடித்து உலுப்பியதும் சடசடத்துப் பறக்கும் வெள்ளைப் புறாக்களைப்போல, ஒருவழியாக பள்ளிக்கூட வாசல் கதவு திறந்ததும் வெளியேறிய வெள்ளைச் சீருடை மாணவியரிடையே அவனுடைய மணிப்புறா துள்ளல் நடைபோட்டு வந்துகொண்டிருந்தாள்.

 

இமைக்கவும் விரும்பாமல் ஆசையோடு மகளையே விழிகளால் வருடிக்கொண்டிருந்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று.

 

இரட்டைப் பின்னலில் ஒன்று அவிழ்ந்து இருக்க, வெள்ளை சாக்ஸ் ஷு இரண்டுமே மண்ணின் நிறத்துக்கு மாறியிருந்தது. சட்டை கூட தோய்த்தே ஆகவேண்டிய நிலையில் தான். படிக்கிற காலத்தில் அவனும் இப்படித்தான். காற்சட்டையைக் கிழித்துக்கொண்டும் வருவான். திட்டித் திட்டி புஸ்பவதி தைத்துக்கொடுப்பார். மயூரியிடமும் வாங்கிக் கட்டுவாளாய் இருக்கும். ஓடிப்போய் அள்ளிக்கொள்ள மனம் துடித்தாலும், அடக்கிக்கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

 

அன்னையைத் தேடிச் சுழன்ற அவளின் விழிகள் அவனைக் கண்டதும் ஆனந்த அதிர்ச்சியில் விரிந்து பெரிதானது! நடை நிற்க அவனையே பார்த்தாள். பார்த்தவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 

பிரதீபனின் முகம் கனிந்துபோயிற்று! நெஞ்சுமுழுக்க பாசத்தை நிரப்பிக்கொண்டு, அவளருகில் சென்று பள்ளிக்கூட பேக்கினை வாங்கிக்கொண்டான்.

 

“வா! இண்டைக்கு உன்ன கூட்டிக்கொண்டு போக நான்தான் வந்தனான்.” என்றபடி, அவள் பக்கத்துக் கார் கதவைத் திறந்துவிட்டான். தலையை ஆட்டிவிட்டு ஏறிக்கொண்டாள் ஆதிரா. அவளின் பெல்ட்டைத் தானே போட்டுவிட்டான்.

 

அவள் அவனையே பார்க்க, உருகிப்போனான் பிரதீபன். “என்னம்மா?” என்றவனின் குரல் பாசத்தில் குழைந்து கரகரத்து ஒலித்தது. ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள் ஆதிரா. ஒருமுறை அவள் தலையை வருடிக்கொடுத்துவிட்டு நிமிர்ந்து அவளின் பக்கக் கதவைச் சாற்றிவிட்டு வந்து, காரில் ஏறினான் அவன்.

 

அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா. கம்பீரம் குன்றாமல் ஏறி பெல்ட்டை மாட்டிக்கொண்டு, அனாயாசமாகக் காரை இயக்கிய அப்பாவிடமிருந்து விழிகளை அகற்றமுடியவில்லை. அதுவும் அவன் ரிவர்ஸில் சர்ர் என்று எடுத்தபோது, அவளுக்கு அத்தனை ஆனந்தம்.

 

அவன் ஏறியது, அமர்ந்தது, காரை ஸ்டார்ட் செய்தது, ஸ்டேரிங்கை வளைத்தது, கியரை மாற்றியது என்று எல்லாமே அழகாய் தெரிந்தது. அடர்ந்த புருவங்கள், வீதியில் பார்வையைப் பதித்திருக்கும் கனிந்த விழிகள், நீண்ட மூக்கு, கருத்தாடர்ந்த மீசை, அதிலிருந்த ஒரேயொரு வெள்ளை முடி, அவளிடம் பேசும்போதெல்லாம் சிரிக்கும் உதடுகள் என்று தன் வாழ் நாளில் முதன் முறையாக அப்பாவாகப் பார்க்கும் அப்பாவை அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தாள் பெண். அணிந்திருந்த மெரூன் வண்ண ஷர்ட் கூட அவளின் அப்பாவுக்கு அழகாய் இருந்தது.

 

‘அப்பா எண்டு கூப்பிட்டா என்ன சொல்லுவார்?’ ஏக்கத்துடன் அவனில் படிந்தது அவள் விழிகள்.

 

‘அவருக்கு தெரியுமா நான் அவரின்ர மகள் எண்டு.. தெரிஞ்சிருந்தா எனக்கு சொல்லியிருப்பார் தானே? தெரியாது போல.. பிறகு ஏன் வீட்டை வந்தவர்?’ சின்ன இதயத்துக்குள் புரியாத நிறையக் கேள்விகள். தயக்கம் அந்தக் கேள்விகளை எல்லாம் அவள் நெஞ்சுக்குள்ளேயே அடக்கியது.

 

காலையில் இருந்து அவளுக்குள் இருந்த ஒரே ஏக்கம், எப்படியாவது அப்பாவைப் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. ‘எப்படி பாக்கிறது? எங்க இருக்கிறார் எண்டு தெரியாதே. இவ்வளவு நாளும் அவராத்தானே வந்து என்னை பாத்தவர்..’ ஆசை மலையளவு இருந்தும் அந்தச் சின்னமனம் அதைப்பற்றி தாயிடம் எதுவுமே சொல்லவில்லை.

 

‘அப்பாவைப்பற்றி கேட்டா அம்மா அழுவா..’ அது ஒன்றுதான் அவள் மனதில் ஆழப்பதிந்துபோயிருந்தது.

 

எதிர்பாராமல் அப்பாவே அவளைப் பார்க்க வந்ததில் நிறையச் சந்தோசம். அவனுக்கே தெரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

பிரதீபனின் மனதும் மகளின் அருகில் பொங்கும் அலைகளைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது. நான்தான் உன் அப்பா என்று மெதுவாகச் சொல்லும்வரை யாரோவாகத் தள்ளித்தான் நிற்கவேண்டி இருந்தது. அப்படியான தன் நிலையை அவனே சபித்தான்.

 

“எப்படி போச்சு ஸ்கூல்?” கார் வீதியில் வழுக்கிக்கொண்டிருக்க, தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு அவள் புறம் திரும்பிக் கேட்டான் அவன்.

 

“நல்லம்.” என்றாள் அவள்.

 

“டென்னிஸ் இருக்கா இண்டைக்கு?” வீதியில் முழுக் கவனத்தையும் வைக்கமுடியாமல் நொடிக்கொருதரம் மகளிடம் ஓடிற்று அவன் விழிகள்.

 

“இல்லை. நாளைக்குத்தான் இருக்கு.”

 

அவளிடம் என்னவோ குறைவதாகப் பட்டது பிரதீபனுக்கு. களைத்துப் போனாளோ? “பசிக்குதாம்மா? ஏதாவது சாப்பிட்டு போவமா?” பாசத்தில் கனிந்த குரலில் கேட்டான் அவன்.

 

ஒருமுறை தடுமாறிவிட்டு இல்லை என்று தலையசைத்தாள் ஆதிரா.

 

என்னவோ சரியில்லை. இது அவன் அறிந்த ஆதிரா இல்லையே!

 

“சரி வா! அந்த பார்க்கல ஐஸ்கிறீம் கடை இருக்கு. அங்க போயிட்டு வீட்டை போவம்.” அவளின் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே இருந்த பார்க்கிற்கு காரைவிட்டான்.

 

அவளுக்கு விருப்பமான பிளேவரிலேயே ஐஸ்கிறீமூக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அப்பாவும் மகளும் அமர்ந்துகொண்டனர். மாலை ஆகியிராததில் பார்க்கில் பெரிய கூட்டமில்லை. ஒருசில குழந்தைகள் தான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். “நீயும் விளையாடுறதா இருந்தா போய் கொஞ்சநேரம் விளையாடிப்போட்டு வா. ஐஸ் வந்ததும் கூப்பிடுறன்.” என்றான் அவன்.

 

“இல்ல. நான் போகேல்ல.” என்றுவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள். அவன் பாராதபோது அவனையே பார்த்தாள். அவன் பார்க்கிறான் என்றதும் திருப்பிக்கொண்டாள்.

 

என்ன நடந்தது இவளுக்கு? உள்ளே யோசனை ஓட பார்வையால் அவளையே அளந்துகொண்டிருந்தவனின் காதில், “அங்கிள்! எனக்கு ஒரு கொர்னெட்டோ தாங்கோ!” என்று, ஒரு குழந்தை, ஐஸ் கடைக்காரரிடம் கேட்பது காதில் விழுந்தது.

 

சட்டென்று நிமிர்ந்தான் பிரதீபன். மனதில் பரபரப்போடு மகளையே பார்த்தான். வார்த்தைக்கு வார்த்தை அங்கிள் என்கிறவள் வந்ததில் இருந்து அங்கிள் என்று அழைக்கவே இல்லை!

 

அவளையே பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக் கண்கள்.. என்ன சொல்கிறது? அவளுக்குத் தெரிந்துவிட்டது.. அவன் உள்ளம் ஆர்ப்பரித்தது.. அவனுடைய பெண்ணுக்கு அவனைத் தெரிந்துவிட்டது. கண்ணோரம் கசிய தொண்டை அடைத்தது. சிரிப்பிலா அழுகையிலா தெரியவில்லை. அந்தத் தந்தையின் உதடுகள் மெல்ல மெல்ல விரிந்தன. கனிவு நிறைந்துகிடந்த விழிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீரும் நிறைந்து போயிற்று! தொண்டை அடைத்துக்கொண்டது. முகம் சிவக்கக் கைகளை விரித்து மகளை வா என்று கண்களால் அழைத்தான்.

 

error: Alert: Content selection is disabled!!