காதல் காயங்களே 25 – 2

“என்ன மேடம், பெரும் சந்தோசத்துல இருக்கிறீங்க போல?”

 

கலீர் என்று நகைத்தாள் ஆதிரா.

 

“நந்து ஆன்ட்டி! நானும் அப்பாவும் சமைக்கிறோமே. இத்தாலியன் பாஸ்தா. உங்களுக்கும் வேணுமா?” என்று, ஆசைகாட்டினாள் அவள்.

 

“அடிப்பாவி மகளே! ஆன்ட்டிக்கு கொண்டுவந்து தருவோம் எண்டில்லை. வேணுமா எண்டு ஆசை காட்டுறாய் என்ன? பொறு பொறு! நானும் செய்துபோட்டு உனக்குத் தராம சாப்பிடுறன்.” என்றவள், மயூரியின் சைகையை உணர்ந்து, “அதுசரி, இந்தச் சமையல் எங்க நடக்குது?” என்று விசாரித்தாள்.

 

“எங்கட வீட்டதான். பாக்கப்போறீங்களா?” என்றவள் ஃபேஸ் டைமுக்கு வந்திருந்தாள்.

 

‘எங்கட வீட்டை’ என்றதுமே மயூரியின் முகம் கலவரமாயிற்று! அவளின் சமையலறை இன்றைக்குச் சரிதான் என்று திகிலோடு எட்டிப்பார்க்க, ஜீன்ஸ் வெள்ளை பெனியன் சகிதம் சட்டியோடு அவன் சண்டையிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

 

“அப்பா! நந்தினி ஆன்ட்டிக்கு ஒரு ஹாய் சொல்லுங்கோ!” என்று, ஃபோனை அவனிடம் கொடுத்தாள் ஆதிரா.

 

வேகமாக கழற்றி வைத்திருந்த சட்டையை அணிந்துகொண்டடு, “ஹாய்!” என்றான் அவன். நந்தினிக்கோ சிரிப்பதா முறைப்பதா என்ற திண்டாட்டம். அவன் என்றதும் மயூரி முகத்தை இழுத்துக்கொண்டபோதும், அதற்குள் அவளைக் கண்டுவிட்டுப் புருவங்களை உயர்த்தினான் அவன்.

 

“யாரோ வேலை இருக்கு எண்டு சொல்லிப்போட்டு போனமாதிரி இருந்ததே.” அவன் குரல் அவளைச் சீண்டியது.

 

“வேலையை முடிச்சுக்கொண்டுதான் வந்தனான்.” அவனைப் பாராமல் சொன்னாள் மயூரி.

 

அவனோ அவளை மட்டுமே பார்த்தான். மறந்தும் இணக்கம் காட்ட மறுக்கும் அவளின் கோபத்தை ரசிக்கும் முறுவல் மலர்ந்தது அவனுடைய உதட்டில்.

 

“முடிஞ்சா இங்க வரவேண்டியதுதானே.” என்றான் நகைக்கும் குரலில்.

 

முறைக்க நினைத்து அவனை நோக்கியவள், திரை முழுவதிலும் நிறைந்திருந்த முகத்தைக் கண்டு, அதுவும் அவனுடைய சிரிக்கும் விழிகளைக் கண்டதும் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

 

“ஏய் என்னடி? உங்க ரெண்டுபேருக்கும் என்னை பாத்தா எப்படி தெரியுது? நீ இங்க வரக்கூடாதா? அவரும் கேக்கிறார் நீயும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறாய்!” என்று தோழியிடம் சீறினாள் நந்தினி.

 

அப்போதும் வாயைத் திறக்கவில்லை மயூரி. பிரதீபனின் உதடுகளில் அவளை அறிந்த முறுவல் மலர்ந்தது. “உனக்கும் சேர்த்துத்தான் பாஸ்தா செய்றன், வா!” அப்போதும் அவளிடம் தான் சொன்னான்.

 

ஒருமாதிரி ஆயிற்று மயூரிக்கு. மரியாதைக்கேனும் நந்தினியைச் சாப்பிட அழைக்கவே இல்லை அவன். பெரும் சங்கடத்துடன் கெஞ்சலாக நந்தினியை நோக்கினாள்.

 

பாத்ரூம் சென்றுவிட்டு வந்த ஆதிராவும் அப்போதுதான் அன்னையைக் கவனித்தாள். “அம்மா, நந்து ஆன்ட்டி வீட்டையோ நிக்குறீங்க, இங்க பாருங்கோ அப்பம்மா எனக்கு இந்த செயின் போட்டுவிட்டவா.” என்று கழுத்தில் கிடந்த ஒன்றைக் காட்டினாள்.

 

“பார்றா! ஆதுக்கு வந்த காலத்தை. வேற என்ன சொன்னவா அப்பம்மா?” நந்தினி விசாரிக்கிறாள் என்று விளங்க ஒரு புன்னகையோடு மகளைப் பார்த்தான் பிரதீபன்.

 

“அப்பம்மா காசு தந்தவா. நான் வேண்டாம் எண்டனான். அப்பா வாங்கச் சொன்னவர். அப்பப்பா சுவாமிப்படம் தந்தவர். என்ன வேணும் எண்டாலும் கேக்க சொன்னவர். வாங்கித் தருவாராம். நான் அப்பப்பா அப்பா எல்லாரும் காரம்போட் விளையாடினாங்க. அத்தையாக்களோட கதைச்சனான். அவே என்னை பாக்க வருவோம் எண்டு சொன்னவே. நானும் லீவுக்கு வரவேணும் எண்டு சொன்னவே. நானும் அப்பம்மாவும் கோயிலுக்கு போயிட்டு வந்தனாங்க. கோயில்ல அப்பம்மா அழுதவா. நான் ஏன் எண்டு கேக்க என்னை தந்தத்துக்கு கடவுளுக்கு நன்றி சொன்னவாவாம்..” என்று அன்றைய நாளின் நிகழ்வுகள் அத்தனையையும் அப்படியே ஒப்பித்தாள் அவள்.

 

“போற போக்கில ஆதிரா பெரிய ஆளாத்தான் போகப்போறாள் போல கிடக்கு. மேடம் இனி எங்கட வீட்டை எல்லாம் வருவீங்களா?” அவள் சொன்னதை எல்லாம் கேட்ட நந்தினிக்குச் சந்தோசமாய் இருக்க, சும்மா சீண்டினாள்.

 

“டைமிருந்தா பாப்பம் ஆன்ட்டி” என்றுவிட்டு நகைத்தாள் அவள்.

 

“பாத்தியாடி உன்ர மகளை. அச்சு அப்படியே கேகே மாதிரியே இருக்கிறாள்.” மயூரியின் காதருகில் சீறினாள் நந்தினி. மயூரியோ யாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி, பாவமாக நந்தினியைப் பார்த்தாள்.

 

“நடிக்காதயடி! நீயும் கேகேக்கு தாளம் போடுற ஆள்தான்.”

 

அங்கே மகளுக்கான கோப்பையில் அவன் பாஸ்தாவை போடுவது தெரிந்தது.

 

“ஆதுக்குட்டி வாங்கோ சாப்பிட. சூட்டோட சாப்பிட்டா தான் டேஸ்ட்டா இருக்கும்.” என்று அவளை உண்ண அமர்த்திவிட்டு, ஃபோனைக்கொண்டு பால்கனிக்கு வந்தான்.

 

“எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீங்களா?” காலையில் கொட்டிவிட்ட கோபத்தைக் கொஞ்சம் சமாளிக்க நினைத்தாள் நந்தினி.

 

“கேகேயா இருக்கிற நான் எண்டைக்கு பிரதீபனா மாறுறேனோ அன்றைக்கு வாங்கோ சாப்பிட!” என்றான் அவன்.

 

நந்தினிக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. எதையாவது அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று அவள் நினைக்கையிலேயே, “அப்பதான் நீங்களும் முழு சந்தோசத்தோட எங்கட வீட்டை வருவீங்க. பசியாற சாப்பிடுவீங்க. நான் சொல்லுறது சரிதானே மயூ?” என்றான் மயூரியிடம்.

 

பதிலின்றி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

 

அதை உணர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டவன் நந்தினியிடம் தன் விழிகளைத் திருப்பினான். “எண்டைக்கும் நான் உங்கள மறக்கமாட்டன் நந்தினி. தாய்க்குச் சமனா அவளைத் தாங்கினது நீங்கதான் எண்டு எனக்குத் தெரியும். மயூ எங்க இருக்கிறாள் எண்டு தெரியாம தேடின நாட்கள்ல கூட நீங்க அவளை விட்டிருக்க மாட்டீங்க எண்டுதான் நினைச்சிருக்கிறன்.” என்றான் மனதில் இருந்து.

 

நந்தினிக்கே குரல் அடைத்துப்போயிற்று. “அவள் என்ர ஃபிரெண்ட்.” என்றாள் சமாளித்துக்கொண்டு.

 

“எனக்குத் தெரியும்! இத்தனை வருசத்தில கொஞ்சமாவது ஆறுதலை தந்த விசயம் அது ஒன்றுதான்.” என்றான் அவன்.

 

மயூரியும் நெகிழ்வோடு தோழியின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

‘எனக்கும் ஒண்டுக்கு ரெண்டு தோள் இருக்கு மயூ. அதுவும் நீ சாய்றதுக்காகவே!’ ஏக்கத்தோடு தனக்குள் சொல்லிக்கொண்டான் அவன்.

 

“சரி, நீங்க சாப்பிடுங்கோ. நான் மயூரியை அனுப்பி வைக்கிறன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு மயூரியைப் பாத்தாள்.

 

“கேகேயோட அஞ்சு நிமிசம் கதைச்சதிலேயே என்ர கோபம் போயிட்டு போல இருக்கு. அப்ப உன்ர நிலமை? கொஞ்சம் கஷ்டம் தான். திரும்பவும் மயூ டார்லிங் அம்மா ஆகவும் சான்ஸ் இருக்கு!” விசமச் சிரிப்புடன் சொன்னாள் நந்தினி.

 

“மாடு! உளறாத!” அவளை அதட்டிவிட்டுப் புறப்பட்டாள் மயூரி.

 

“அட அட அட வெக்கத்தை பாரு!” என்று அவளை ஒருவழியாக்கியே சந்தோசமாக அனுப்பிவைத்தாள் நந்தினி.

 

மயூரி புறப்பட்டிருப்பாள் என்று கணித்து மகளின் கைப்பேசியில் இருந்து மீண்டும் நந்தினிக்கு அழைத்து, அர்ஜுனைப் பற்றி முழுமையாக விசாரித்து அறிந்துகொண்டான் பிரதீபன்.

 

எதற்காக அவனைப்பற்றி விசாரிக்கிறான்? ஏதும் சந்தேகமோ? மனம் கலங்க நந்தினி கேட்க பிரதீபன் சிரித்தான்.

 

“என்னில எனக்கு சந்தேகம் வந்தாலும் வருமே தவிர மயூல வராது. சிலநேரம் அர்ஜுனை அவளுக்கு பிடிச்சு ஆதுக்காக வேண்டாம் எண்டு சொன்னாளோ என்று ஒரு எண்ணம் இருந்தது.. அதுதான்.” என்றும் விளக்கினான் அவன்.

 

அப்படி எதுவுமில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டு, “ஒருவேளை அவளுக்கு அவரை பிடிச்சிருந்தா?” என்று கேட்டுவிட்டிருந்தாள் நந்தினி.

 

கேட்டபிறகுதான், இந்த நேரத்தில் இது தேவையில்லாத கேள்வி என்று அவள் அமைதியாகிவிட, “உண்மையிலேயே உயிரோட செத்திருப்பன்.” என்றான் அவன் உடனேயே.

 

“இவ்வளவு காலமும் எங்கயோ எனக்குத் தெரியாத ஊர்ல அவள் நல்லா இருக்கவேணும்; சந்தோசமா வாழவேணும்; வாழுவாள் எண்டுதான் மனதார நினைச்சனான். அவளை பாத்த நேரமும் கல்யாணமாகி மனுசனை பிரிஞ்சிட்டாளாம்; ஒரு மகள் இருக்காம் எண்டுதான் கேள்விப்பட்டனான். பெரிய அதிர்ச்சிதான். இருந்தாலும், அவளை அவளின்ர மனுசனோட சேர்த்துவச்சிட்டுத்தான் எனக்கொரு வாழ்க்கை தேடுறது எண்டு நினைச்சுத்தான் அவளிட்ட கதைக்க வந்தனான். அது உண்மையா இருந்திருந்தா தலைகீழா நிண்டு எண்டாலும் அவளை சேர்த்து வச்சிருப்பன் நந்தினி.” என்றான் அவன்.

 

“இவ்வளவு அவளுக்காக யோசிக்கிற நீங்க ஏன் அப்படி நடந்தீங்க கேகே?”

 

“வேற என்ன? இதெல்லாம் நான் படவேணும் எண்டு எனக்கு எழுதி இருக்கு போல!” என்றான் அவன். “இல்லாம, அவளை சந்தோசமா வச்சிருக்க வேணும் எண்டு நினைச்ச நானே அழ வச்சிருப்பனா?” என்று அவளிடமே கேட்டான் அவன்.

 

என்ன சொல்லுவாள்? ஒன்றும் சொல்லத் தெரியாமல் அமைதியாக இருந்தாள் நந்தினி.

 

“ஆனா அதுக்கு அவள் எனக்குத் தந்த தண்டனையும் ஆகப்பெருசு நந்தினி. நானும் இதே ஊர்லதான் இருக்கிறன் எண்டு அவளுக்கு ரெண்டு வருசமா தெரியுமாம். அப்பவும் அவளா என்னை தேடி வரேல்ல. நான் வேணும் எண்டு நினைக்கேல்ல. என்ர மகளை எனக்கு காட்டோணும் எண்டுற எண்ணம் கூட அவளுக்கு வரேல்ல. இதைவிடவும் மோசமா அவளால என்னை தண்டிக்கவே ஏலாது.” என்றுவிட்டு, கடைசியில் அவன் சிந்திய வறண்ட சிரிப்பில் நந்தினிக்கு பெரும் வேதனையாகப் போயிற்று!

 

“அவள் உங்கள நிறைய நம்பினவள் கேகே. குழந்தையை வேண்டாம் எண்டு நீங்க சொல்லி இருக்க கூடாது தானே.” மெல்லிய குரலில் சொன்னாள் நந்தினி.

 

“சொல்லியிருக்க கூடாதுதான். அது பெரிய பிழைதான். அதுக்கு பிரிஞ்சு போறதுதான் சரியான முடிவா நந்தினி? அவளுக்கு நல்லா தெரியும்; அவள் இல்லாம நான் வாழமாட்டன் எண்டு. தப்பித்தவறி கோழைத்தனமா நான் ஏதும் பிழையான முடிவை எடுத்திருந்தா? அப்ப என்ன செய்திருப்பாள்? சந்தோசப்பட்டிருப்பாளா? இல்ல அம்மா கட்டாயப்படுத்தி எனக்கொரு கல்யாணம் நடந்து அதுக்குப்பிறகு அவளை நான் இப்படி குழந்தையோட பாத்திருந்தா என்ர வாழ்க்கை நரகமாகி இருக்காதா சொல்லுங்க?” அவனுடைய எந்தக் கேள்விக்கும் நந்தினியிடம் பதிலே இல்லை.

 

“அண்டைக்கும் குழந்தை வேண்டாம் எண்டு சொன்னதுக்கு காரணம், நான் உல்லாசமா இருக்கவோ இல்ல அந்தக்குழந்தை எனக்குச் சுமை எண்டு நினைச்சோ, இல்ல வாழுற வரை வாழ்ந்திட்டு மயூரியா சத்தமே இல்லாம கைகழுவிப்போட்டு இன்னொரு வாழ்க்கையை தேடுறதுக்கோ இல்ல நந்தினி. பெயர் கெட்டுடும், மரியாதை போய்டும், சனம் கேவலமா கதைக்கும் எண்டு அவளுக்கும் சேர்த்துத்தான் யோசிச்சனான். அது பிழைதான்; என்ன நம்பி வந்தவள் அவள்; எந்த நிலைலையும் அவளுக்கு உறுதுணையா நான் நிண்டிருக்க வேணும். நிக்காம விட்டுட்டன். ஆனா நான் துரோகியோ, ஏமாத்துக்காரனோ, கெட்டவனோ இல்ல. அதைத்தான் சொல்லவாறன்.” என்றான் ஆழ்ந்த குரலில்.

error: Alert: Content selection is disabled!!