அன்று அவள் திட்டியபோது எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமர்ந்து இருந்தாலும் அனைத்தையும் மனதுக்குள் எடுத்து வைத்திருந்திருக்கிறான் என்று இன்றைய அவனின் விளக்கத்தில் விளங்கிற்று அவளுக்கு.
“எனக்கு விளங்குது கேகே. ஆனா இவ்வளவு காலமும் அவள் அனுபவிச்ச வேதனையும் கொஞ்சநஞ்சமில்லை.” அவன் மீது இரக்கம் சுரந்தபோதிலும் தோழிக்காகவே பேசினாள் நந்தினி.
“அதுக்கு நீங்க ஏன் அனுமதிச்சீங்க நந்தினி? நீங்களாவது என்னோட ஒருமுறை கதைச்சிருக்கலாமே? அன்றைக்கு மாதிரி சண்டையாவது பிடிச்சிருக்கலாமே. இவ்வளவு பெரிய பிரிவு வராம இருந்திருக்குமே.” நிறைய நாட்களாக மனதுக்குள் எண்ணியெண்ணி நொந்ததை அன்று கேட்டான் பிரதீபன்.
“அதுக்கு நான் முயற்சி செய்திருக்க மாட்டன் எண்டு நினைக்கிறீங்களா நீங்க? உங்கள்ள எனக்கு நிறையக் கோபம் இருந்ததுதான். ஆனாலும், அவளுக்காக.. அவளால உங்களை மறக்கவே முடியாது எண்டு நினைச்சு நிறையமுறை ட்ரை பண்ணியிருக்கிறன். அவள் சம்மதிச்சதே இல்ல. ஆதிராவுக்காகவாவது யோசி எண்டு சொன்னதுக்கு, அவளுக்காகத்தான் பிரிஞ்சு வந்ததே எண்டு சொல்லியிருக்கிறாள். ஆதிரா பிறந்தநேரம் அழுதுகொண்டே இருந்தவள். அதைப் பாக்கேலாம உங்களை நான் இங்க தேடினதை எப்படியோ கண்டு பிடிச்சிட்டாள். ‘அவரோட சேர்த்து வைக்கிறன் எண்டு ஏதாவது வேலை பாத்தாய் எண்டால் என்ன உயிரோடயே பாக்கமாட்டாய்’ என்று கத்தினவள் கேகே. ‘எனக்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். உன்னையும் பிரிஞ்சு போக வச்சிடாத’ எண்டு அழுதவள். பிறகும் என்ன செய்ய சொல்லுறீங்க? அர்ஜுன்ர விருப்பம் எனக்கு முதலே தெரியும். சோ.. மெல்ல மெல்ல அவரை ஏற்பாள் மனம் மாறுவாள் எண்டு நினைச்சதுல நானும் உங்களைப்பற்றி அதுக்கு மேல யோசிக்க இல்ல.” அர்ஜுனைப்பற்றிச் சொன்னபோது அவளின் குரல் உள்ளே போயிற்று. ஆனாலும் சொன்னாள்.
அதைக் கேட்டவனின் மனம் இன்னுமே ஆழமாகக் காயப்பட்டுப்போயிற்று. உயிரைக்காட்டி மிரட்டுகிற அளவுக்கு அவனை வெறுத்திருக்கிறாள். மயூரியின் கார் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கேட் பூட்டி, கார் பார்க் செய்து மயூரி வீட்டுக்குள் வருவதற்கு எடுத்த நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்தான் பிரதீபன். எவ்வளவுதான் வெறுத்தாலும் அவனை மறந்து இன்னொரு வாழ்க்கையை அவள் தேடவில்லை. இந்தப் பத்து வருடங்களும் அருகிலேயே இருந்த ஒருவனால் அவளின் மனதை அசைக்கவே முடியவில்லை என்கிற அளவுக்கு அவளுக்குள் அவன் ஆழமாகப் பதிந்திருக்கிறானே. இதைவிட வேறென்ன வேண்டும்?
அவனுடைய மயூரி மட்டும் தான் அவனுக்கு வேண்டும்!
அவள் வீட்டுக்குள் வந்தபோது சலனமற்ற தெளிந்த மனதுடன் எதிர்கொண்டு சாப்பிட அழைத்தான் பிரதீபன்.
“நான் குளிக்கவேணும்!” அவன் முகம் பாராமல் உரைத்தவளிடம், “அம்மா! அப்பா செய்த பாஸ்தா நல்ல ருசியா இருக்கு சாப்பிட்டு பாருங்கோ.” என்றபடி வந்தாள் ஆதிரா.
“நான் சாப்பிடுறன். நீ போய் வீட்டுப்பாடம் எடுத்துச் செய். நேற்று படுக்கப்போனது லேட். இண்டைக்கு நேரத்துக்கே கட்டிலுக்கு போகவேணும்!” என்று அதட்டிவிட்டு அறைக்கு நடந்தவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீபன்.
தன் காதல் பைங்கிளியாய் தன்னைக் காதல் செய்தவள் இன்றைக்கு அன்னையாக முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் மிளிர்ந்தாள். பாசம் தெரிந்தது பேச்சில். கூடவே ஒரு கண்டிப்பும்.
அவள் சொன்னதும் ஆதிராவும் சென்று மேசையில் அமர்ந்துகொண்டாள். அருகில் அமர்ந்திருந்து அவள் வீட்டுப்பாடம் செய்யும் அழகை ரசித்தான் பிரதீபன்.
புருவங்களைச் சுருக்கி யோசிப்பது, தலைமுடி மேசையில் கவிழ்ந்துகிடக்க சின்ன விரல்களால் பேனையைப் பற்றி முத்து முத்தாய் எழுதுவது, அவ்வப்போது பேனையை கடிப்பது, தலை முடியைப்போட்டு ஒற்றை விரலில் சுற்றுவது, “அப்பா! என்னையே ஏன் பாக்கிறீங்க?” என்கிற அவளின் செல்ல அதட்டல் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.
அப்படியே அள்ளிக் கொஞ்சியபடி கைகளுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் போலொரு வேகம் உந்த, நெற்றியில் ஆதூரமாய் ஒரு முத்தமிட்டான்.
உடனேயே அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் ஆதிரா. “அப்பா.. இத இப்ப நான் செய்யத்தான் வேணுமா? எனக்கு நித்தா வருது..” என்று செல்லம் கொஞ்சினாள்.
‘ஒழுங்கா வீட்டுப்பாடம் செய்த பிள்ளையை கெடுத்திட்டியேடா!’ மனச்சாட்சி அவனைத் திட்டினாலும் மகளை அணைத்துக்கொண்டான்.
“இதெல்லாம் பெரிய வேலையாம்மா. கெதியா முடி. இல்லாட்டி அம்மா வந்து பேசுவா.” அவளின் முடியைக் காதோரம் ஒதுக்கியபடி சொன்னான். “இந்த முடியை பிடிச்சு கட்டு செல்லம். பிள்ளையின்ர கண்ணுக்க கண்ணுக்க வருது.”
“இப்ப அதாப்பா உங்களுக்கு முக்கியம். பாருங்க எவ்வளவு ஹோம்வேர்க் எண்டு. எனக்கு கை நோகுது. நாளைக்கு செய்றன் எண்டு அம்மாக்கு சொல்லுங்கோ. மண்டே தான் இது குடுக்கவேணும்.”
பிரதீபன் மகளைக் கலவரமாகப் பார்த்தான். “சொன்னா ரெண்டுபேருக்கும் கிழிதான் விழும்! இப்ப வந்து இவ்வளவு நேரம் என்ன செய்தாய் எண்டு உன்ன கேக்கப்போறா.” என்றான் பரிதாபமாய்.
அவளோ தகப்பனை முறைத்தாள். அந்தக் கருவண்டு விழிகளில் தெரிந்த செல்லக்கோபத்தில் இன்னும் முறைக்கமாட்டாளா என்று ஏங்கிப் போனான் அவன்.
“அம்மா எனக்கு பேசினா நீங்க அம்மாக்கு பேசமாட்டீங்களா?” என்றவள், எப்படிப் பேசுவது என்று தகப்பனுக்குச் சொல்லிக்கொடுத்தாள். “என்னை பாருங்கோ. முகத்தை இப்படி கோவமா வச்சுக்கொண்டு, ‘மயூரி. பேசாம இரு! ஆது நாளைக்கு செய்வாள்.’ எண்டு சொன்னீங்க எண்டா அம்மா ஒண்டும் சொல்லமாட்டா.” என்று, குழந்தைத்தனமான குண்டு முகம் காட்டிய பல பாவங்களில் தொலைந்துபோனான் தகப்பன்.
‘உன்ர அம்மாவை பாத்தாலே நீ கம்பீரமா பாக்கிற உன்ர அப்பா தொலைந்துபோய் அவளை பைத்தியமா காதலிக்கிற காதலன் வெளில வந்திடுவான் குட்டி. இதுல எங்க இருந்து நான் அவளை கோவமா பாக்கிறது?’
மகளிடம் மனதைச் சொல்ல முடியாமல், “உன்ர அம்மாவ நான் பேசிட்டாலும். நடக்கிற கதையாம்மா இதெல்லாம்?” எனும்போதே மயூரி இரவுக் குளியலை முடித்துவிட்டு வரும் அரவம் கேட்டது.
‘படி!’ என்ற தகப்பனின் கண்ணில் தெரிந்த கவனத்தையும் தாண்டிக்கொண்டு மயூரியைத் திரும்பிப் பார்த்திருந்தாள் ஆதிரா.
மயூரி கண்டிப்புடன் வாயைத் திறக்க முதலே, “ஆது! என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? படிக்கேக்க விளையாடக்கூடாது எண்டு உனக்கு எத்தனை தரம் சொல்லுறது? ஏறி இருந்து ஒழுங்கா படி!” என்றது ஆதிராவேதான்.
இதை எதிர்பாராத பிரதீபன், ஒருகணம் மகளின் குறும்பில் அதிர்ந்து அடுத்தகணம் அடக்கப்பார்த்தும் முடியாமல் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியிருந்தான்.
‘அவளுக்கு முன்னால இப்படி சிரிச்சா இன்னும் ஆடுவாள் அவள்!’ அவனை முறைத்தாள் மயூரி.
படக்கென்று அடங்கிப்போயிற்று அவன் சிரிப்பு. ‘சாரி’ என்றான் உதட்டசைவில்.
‘கண்ணாலையே எல்லாத்தையும் ஆஃப் பண்ணுறாள்.’
அவள் பேசாமல் சாப்பிடப்போக, “சத்தம் போடாம படிக்கவேணும் ஆதும்மா. அம்மாவும் பாவம் தானே. வேலைக்கு போயிட்டு களைச்சுப்போய் இப்பதான் வந்திருக்கிறா. நாங்களும் கரைச்சல் கொடுக்கக்கூடாது. சரியா.” என்று மகளை இருத்திவிட்டு, தானும் எழுந்து சென்றான் பிரதீபன்.
அவள் பாஸ்தாவை போட ஆரம்பிக்க, “பொறு!” என்றவன், மெல்லியதாய் அதை மீண்டும் சூடுகாட்டி ஒரு தட்டில் இட்டு முள்ளுக்கரண்டியினால் குற்றி அவளின் உதட்டருகே கொண்டுபோனான்.
“எனக்குச் சாப்பிடத் தெரியும்!” முகத்தில் இறுக்கத்துடன் அவள் கையை நீட்டினாள்.
“பத்து வருசத்துக்கு முதலும் சாப்பிட உனக்குத் தெரிஞ்சுதான் இருந்தது!” தட்டைக் கொடுக்காமல் சொன்னான் அவன்.
மாற்றமின்றி அப்படியே நின்றாள் மயூரி.
“வாயைத்திற மயூ!”
அவள் அசையவில்லை.
“தொடத்தானே கூடாது. சாப்பாடு தரவும் கூடாதா? வாயை திற மயூ.” என்றான் அவன்.
“எனக்குப் பசியில்லை!” என்றுவிட்டு அவள் நடக்க, முகம் இறுகிப்போயிற்று அவனுக்கு.
அவன் கையால் வாங்குவதற்குச் சாப்பிடாமல் இருப்பது மேல் என்கிறாளா?
“நீயே சாப்பிடு!” தட்டை மேசையில் வைத்துவிட்டு விருட்டென்று அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான் அவன்.
அதன்பிறகுதான் பாஸ்தாவை வாயில் வைத்தாள் மயூரி. அதன் சுவையில் அவளின் புருவங்கள் உச்சிமேட்டுக்கே சென்றுவந்தது. இருந்த பசிக்கு தட்டில் இருந்ததை வேக வேகமாக உள்ளே தள்ளினாள்.
“சாப்பிட்டீங்களா அப்பா?” என்று ஆதிரா கேட்பது காதில் விழ, வாயருகில் கொண்டுபோன பாஸ்தா அப்படியே நின்றுபோயிற்று! ‘அவன் இன்னும் சாப்பிடேல்லையா?’
“அப்பா சாப்பிட்டன். நீங்க படிங்கோ!” என்று அவன் சொல்வது கேட்க தட்டை மேசையில் வைத்துவிட்டாள் மயூரி.
சாப்பிட்டுவிட்டதாக அவன் சொன்ன பொய்யில் தவறிழைத்துவிட்டவள் போன்று முகம் கன்றிப்போயிற்று அவளுக்கு.
அப்போதுதான் காலையில் அவன் கேட்டதும் அவள் மறுத்துவிட்டுப் போனதும் நினைவில் வந்தது.
இப்போது சாப்பிட எப்படி அவனை அழைப்பது? சாப்பிட்டுவிட்டதாக ஆதிராவிடம் அவன் சொல்லிவிட்டதால் அவளைக்கொண்டும் கேட்க முடியாது.
வெகுவாகத் தயங்கி எப்படியாவது கேட்போம் என்று எண்ணிக்கொண்டு அவள் வராண்டாவுக்கு வருவதற்குள் அவன் சட்டையை அணிந்துகொண்டு புறப்படுவதற்குத் தயாராகியிருந்தான்.
“ஆதும்மா, அப்பா போயிட்டு விடிய வரட்டா?” மகளின் தலையை வருடிக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
வேகமாகப் பேனையை மேசையில் போட்டுவிட்டு, அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு, “போகப்போறீங்களா அப்பா?” என்று, ஏக்கத்துடன் வினவினாள் பெண்.
“இப்ப போயிட்டு விடிய வெள்ளன(காலை) பிள்ளையை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட அப்பா வந்திடுவன்.” என்றான் சமாதானமாய்.
“விடியவே வரவேணும். உங்களோடதான் நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போவன். இல்லாட்டி போகமாட்டன் அப்பா!” என்று மிரட்டலோடு விடைகொடுத்தாள் ஆதிரா.
“இப்ப போயிற்று விடிய வாறன். கவனம் ரெண்டுபேரும்.” ஆதிராவும் அங்கே இருந்ததில், அவளின் முகம் பாராமல் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
தடுக்கமுடியாமல் போகிறவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மயூரி!

