காதல் காயங்களே 27 – 1

அத்தியாயம் – 27

 

 

அன்று ஒரு மீட்டிங் மட்டுமே இருந்ததில் அதை முடித்துக்கொண்டு மத்தியானம் இரண்டு மணிக்கே அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருந்தாள் மயூரி. ‘ஓடிப்போய் சமைக்கவேணும்.’ அந்த நினைப்பே மலையைப் புரட்டுவதுபோன்ற மலைப்பைக் கொடுத்தது. உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்துவிட்ட சோர்வு.

 

முன்னர் போன்று தெளிந்த நீரோடை போல் அதிகாலையிலேயே எழுந்து சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு மகளோடு தயாராகி என்று தினவேலைகளைச் சீராகச் செய்யவிடாமல் அவளைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தான் பிரதீபன்.

 

கோபமோ சினமோ துன்பமோ ஏதோ ஒரு உணர்வைக் கொடுத்தபடி அவளின் நினைவுகளில் மறையாமல் நின்று தொந்தரவு செய்துகொண்டே இருந்தான். உறக்கம் வராமல் விழித்துக்கிடந்து பழங்கணக்குப் பார்ப்பதும் நள்ளிரவில் உறங்குவதும் அடித்துப் பிடித்துக்கொண்டு நேரம் கடந்து காலையில் எழுவதும் இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டிருந்தது.

 

வீட்டுக்குள் காரை விடுகையிலேயே நின்ற அவன் காரைக் கண்டுவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள் மயூரி.

 

ஆதிரா நேற்று அவனிடம் வீட்டுத் திறப்பைக் கொடுத்தது அப்போதுதான் நினைவில் வந்தது.

 

அவனைத் தனியாக எதிர்கொள்வதை நினைத்தாலே பெருமூச்சு வெளியேறியது. தன் வீட்டுக்குள் நுழைவதற்குத் தன்னையே தயங்க வைத்துவிட்டவனை மனதில் தாளித்தபடி கதவைத் திறந்தாள். உடனேயே நல்லதொரு உணவு வாசனை நாசியை வருடிக்கொண்டு போயிற்று!

 

அவனும் இவளைக் கண்டதும், முகம் மலர, “சாப்பாடு ரெடி!” என்றான். அன்றுபோலவே ஜீன்ஸ்பேண்ட் உள் பெனியன் சகிதம் நின்றிருந்தவனைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள். அவன் அணிந்து வந்திருந்த ஷர்ட் ஒரு நாற்காலியின் முதுகில் கிடந்தது.

 

அவளின் முன்னே உணவுத் தட்டை வைத்தான் அவன். ஃபிரைட் ரைஸ். பார்த்ததுமே பசியைக் கிளறியது. ஆனாலும், “எனக்கு பசியில்லை!” என்றாள்.

 

“பசிக்குத்தான் சாப்பிடவேணும் எண்டு கட்டாயமா என்ன? சும்மா டேஸ்ட் பார்.”

 

அன்றுபோல் இன்று ஊட்டிவிட அவன் முனையாதது பெரும் ஆறுதலைத் தந்தது. கூடவே தன் பசியைக் கண்டுகொண்டான் என்றும் விளங்கிற்று. அன்று அவன் வாயால் கேட்டும் அவள் செய்துகொடுக்க மறுக்க, இன்று பசியோடு வருவாள் என்று ஊகித்து உணவிட்டவனின் செயலில் முகம் கன்றிப்போயிற்று அவளுக்கு.

 

“சாப்பிடு!” தன்மையாக அவன் தூண்ட தயக்கத்துடன் தட்டில் கைவைத்தாள்.

 

ஃபிரைட்ரைஸ் அருமையாய் இருந்தது.

 

தனக்கும் எடுத்துக்கொண்டுவந்து அவளின் முன்னே அமர்ந்து, “என்ன எண்டாலும் என்னட்ட வா மயூ. உனக்காகத்தான் நான் இருக்கிறன்.” என்றான் மெல்ல.

 

‘எதற்குச் சொல்கிறான்’ என்று ஓடிற்று அவளின் சிந்தனை.

 

“நந்தினி உனக்கு பெஸ்ட் பிரென்ட்தான். அதுக்காக என்னை விட்டு விலகிப்போகாத!”

 

அன்று நந்தினி வீட்டுக்குப் போனதைச் சொல்கிறான். சுர் என்று ஒரு கோபம் தலைக்கு ஏற, “அவள் என்ர பெஸ்ட் பிரென்ட். எண்டைக்குமே நல்ல நண்பி! நான் அவளை நம்பின எந்த இடத்திலையும் அவள் என்னை கைவிடேல்ல. அப்படியானவளை விட்டு விலகச் சொல்லி எப்படி சொல்லுறீங்க? அதுசரி! உங்கட குணமே அதுதானே!” என்றாள் இகழ்ச்சியாக.

 

பிரதீபனின் முகம் இறுகிற்று. பார்வையில் அனல் பறந்தது. “நானும் உன்னை விட்டுட்டு ஓடேல்ல மயூரி! நீதான் சொல்லாம கொள்ளாம கோழை மாதிரி ஓடிப்போய்ட்டாய். கல்யாணம் நடந்தபிறகு இப்படி ஒரு பிரச்சனை வந்திருந்தாலும் இப்படித்தான் விட்டுட்டு போயிருப்பியா? அதுதான் ஒரு பெண் குடும்பம் நடத்துற லட்சணமா? என்னை புருசனாவும் நாம வாழ்ந்த வாழ்க்கையை குடும்ப வாழ்க்கை எண்டும் நீ நினைச்சிருந்தா பிரிஞ்சு போயிருக்க மாட்டாய். இருந்து பிரச்னையை தீத்திருப்பாய். நான் செய்த பிழையை எனக்கு உணர்த்தி இருப்பாய். அதைவிட்டுட்டு மின்னல் மாதிரி மறைஞ்சு போய் என்ன கண்டாய் நீ?” அவனுடைய கேள்விகளில் விக்கித்துப்போனாள் மயூரி!

 

அவனுக்கோ நந்தினியோடு தன்னை ஒப்பிட்டு இகழ்ந்தது மிகுந்த மனக்கசப்பை உண்டாக்கி விட்டிருந்தது. “நீ விட்டுட்டு போற அளவுக்கு நான் குடிச்சிட்டு வந்து உன்னைப்போட்டு அடிக்கிறவனோ, பொம்பளை பொறுக்கியோ, அல்ல நீ எவ்வளவோ திருத்த பாத்தும் திருந்தாத ஜென்மமோ இல்ல தானே மயூரி. அல்ல அதுக்கு முதலும் நாலஞ்சு முறை கருக்களைப்பு செய்து இதுக்குமேல தாங்காது எண்டுற அளவுக்கு உன்னை பயன்படுத்தினானா நான்? எனக்கு தெரிஞ்சு குழந்தை விசயத்தில மட்டும் தான் பிழை செய்திருக்கிறன். அது ஒண்டே காணுமா நீ என்ர வாழ்க்கையில இருந்து பிரிஞ்சு போறதுக்கு? கல்யாணம் நடந்தபிறகு இனியும் ஒரு பிரச்சனை வந்தா இப்படித்தான் திரும்பவும் செய்வியா?”

 

சரமாரியாக அவன் வீசிய கேள்விகளில் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தாள் மயூரி.

 

கடைசியில் அவளையே குற்றவாளியாக்கிவிட்டானே! உதட்டோரம் ஏளனமாய் வளைந்தது.

 

“ஆக நீங்க செய்தது எல்லாம் பிழையே இல்ல. நான் போனதுதான் பெரும் குற்றம். இல்லையா?”

 

அவனோ விழிகளை ஒருமுறை முடித்திறந்தான்.

 

“இப்ப நீ செய்தது பிழையா இல்ல நான் செய்தது பிழையா எண்டுற விவாதம் நடத்தேல்ல நான். நான் செய்தது மகா பிழைதான். அந்த இக்கட்டான சூழ்நிலைய உன்னோட நிண்டு நான் சமாளிச்சிருக்க வேணும். அது எனக்கும் விளங்குது. பிடிவாதமா கருவை களைப்போம் எண்டு நான் நிண்டதாலதான் நீ போயிருக்கிறாய். அதுவும் விளங்குது. ஆனா, நீ பிரிஞ்சு போனதும் இல்லாம பத்து வருச தண்டனையும் எனக்கு தந்திருக்கிறாய். நான் செய்த பிழைக்கு அது காணும் எண்டு சொல்லுறன். இனி வாற நாட்களையாவது எல்லாத்தையும் மறந்து சந்தோசமா வாழுவோம் எண்டு சொல்லுறன்.” என்று தன்னை விளக்கினான் அவன்.

 

அவளோ அவன் தன்னையே குற்றவாளி ஆக்கிவிட்ட கோபத்தில் அழுத்தமாய் அமர்ந்திருக்க, “அதே மாதிரி நந்தினிட்ட போகாத, அவளை விட்டு விலகு எண்டும் நான் சொல்லேல்ல. சண்டையோ கோபமோ அழுகையோ எதை எண்டாலும் என்னட்ட காட்டு எண்டுதான் சொல்லுறன். என்னை விட்டு போகாத. எனக்கு பயமா இருக்கு. திரும்பவும் நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு பாக்கேலாம இருக்கு எண்டுதான் சொல்லுறன்.” எனும்போதே அதுவரை இருந்த கோபமெல்லாம் கரைந்து அவன் குரல் கமறிப்போயிற்று.

 

ஒரு ஆணுக்கு காதலியேயானாலும் தன்னிலை இறங்கி இறைஞ்சுவது என்பது அத்தனை இலகுவல்லவே! தண்ணீர் கப்பை எடுத்து அருந்தினான். குரலைச் செருமிச் சீர் செய்தான்.

 

“அண்டைக்கு மாதிரி இனியும் நான் முட்டாள் தனமான முடிவுகளை எடுக்கலாம். அதுக்காக உன்னோட சண்டையும் பிடிக்கலாம். அது பிழை எண்டு உனக்கு தெரிஞ்சா தலைகீழா நிண்டு எண்டாலும் என்னோட சண்டை பிடி. விட்டுட்டு போயிடாத. அதைத்தான் திரும்பத் திரும்ப சொல்ல வாறன்.” என்றான் மீண்டும்.

 

“நந்தினி இருக்கிற துணிவிலதான் நீ அண்டைக்கு என்னை விட்டுட்டு போனியோ எண்டு பலமுறை நினைச்சிருக்கிறன். அதேமாதிரி இன்னொரு முறை நீ போனா திரும்பி வாறதுக்கு நான் இருக்கமாட்டன். அதையும் நல்லா நினைவில வச்சிரு!” என்றவன், அதற்குமேல் உண்ண முடியாமல் எழுந்துவிட்டான்.

 

சமையலறைக்கு விரைந்தவனின் நெஞ்சை என்றுமில்லாத ஒரு பயம் கவ்வியது. இவ்வளவு இறங்கித் தன்னை விளக்கியும் அவள் அசையவே இல்லையே! இன்னும் என்ன செய்தால் மன்னிப்பாள்; நடந்ததை மறப்பாள்? அவள் இல்லாத நாட்களைக்கூட எப்படியோ கடந்துவிட்டான். ஆனால், அவளை அருகில் வைத்துக்கொண்டு அவளோடு வாழ்ந்த இனிமையான நாட்களை நெஞ்சில் சுமந்துகொண்டு யாரோபோல் தள்ளி இரு என்றால் எப்படி முடியும்? வயதும் வாலிபமும் அவளுக்காக மட்டும் தானே ஏங்கிச் சாகிறது!

 

அங்கே மயூரியோ உண்ணக்கூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள்!

 

அவன் கையைக் கழுவிக்கொண்டு வந்தபோது அவளும் எழுந்தாள். அப்போதுதான் பசியோடு வந்தவளைச் சாப்பிடவிடாமல் செய்துவிட்டோம் என்பது விளங்க தன்னையே நொந்துகொண்டான். சமாளித்துக்கொண்டு, “நீ சாப்பிடு!” என்றான் அவன்.

 

“காணும்.” என்று முணுமுணுத்தவளின் முகம், இரத்தபசை இழந்து கன்றிப்போயிருந்தது. கண்கொண்டு பார்க்க முடியவில்லை.தன் வார்த்தைகள் அவளை மிகவுமே காயப்படுத்திவிட்டதை உணர்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!