காதல் காயங்களே 27 – 2

அதைச் சரிக்கட்டும் பொருட்டு, “என்னத்தை காணும்? ஒழுங்கா சாப்பிடவே இல்ல. இப்படியே விட்டா காத்துல கரைஞ்சுதான் போய்டுவாய். ஆனா..” என்றவனின் கண்களில் இப்போது குறும்பு வந்திருந்தது. அவளை நிதானமாக மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்துவிட்டு, “ஷேப் நல்லா வந்திருக்கு!” என்றான் கண்ணைச் சிமிட்டி.

 

இவ்வளவு நேரமும் அவளை முழுக்குற்றவாளியாக்கிக் கேள்விகளால் சாடிவிட்டு இப்போது என்ன கதைக்கிறான் என்பதாக அவனை முறைத்துவிட்டு சமையலறைக்கு நடந்தாள் மயூரி. ஆனாலும், அவன் பார்வையிலிருந்து மறைந்துவிடும் வேகமிருந்தது அவளின் நடையில்.

 

அதை உணர்ந்தவனின் உதட்டினில் சிரிப்பு முளைத்தது.

பின்னாலேயே சென்று, “உனக்கு கால் பிடிச்சு விட்டு, கை அமுக்கிவிட்டு சேவகம் செய்ய என்ர மனது கிடந்து துடிக்குது. இதுல உன்ர மகள் சொல்லுறாள் உன்ன பேசட்டாம்(திட்டட்டாம்) எண்டு.” என்று, மகளின் பேச்சை அவளிடம் பகிர்ந்துகொண்டான்.

 

‘அஞ்சு நிமிசத்துக்கு முதல்தான் அந்த வாங்கு வாங்கினான். இப்ப நடிக்கிறான்!’ சமாளிக்க முயல்கிறான் என்று விளங்கினாலும் காட்டிக்கொள்ளாமல் சமையல் கட்டை ஒதுக்கினாள் மயூரி.

 

“ஒரு பிள்ளை பிறந்தா பொம்பிளைகளுக்கு உடல் கட்டு மாறிடுமாம் எண்டு கேள்விப்பட்டன். ஆனா உனக்கு அந்தமாதிரி எதுவும் நடந்தமாதிரி தெரியேல்லையே!” சமையல் கட்டில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு அவளை நிதானமாக அளவிட்டுக்கொண்டிருந்தான் அவன்.

 

மயூரிக்கோ அவன் முன்னாலேயே நிற்கமுடியவில்லை. எங்கெல்லாம் பார்க்கிறானோ என்று கண்ட கண்ட கற்பனைகள் ஓடி தேகத்தையே கூசச் செய்தது.

 

“நீ இப்படி வெக்கப்பட்டா என்னென்னவோ செய்ய சொல்லி மனசு சொல்லுது. ஆனா நீதான் உன்ன தொடக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறாய்.” என்று இன்னுமே சீண்டினான்.

 

அவளைச் சமாதானம் செய்ய என்று ஆரம்பித்த வம்பிழுத்தல் அவனை உல்லாச மனநிலைக்கு மாற்றிவிட்டிருந்தது. நேற்று அவளைத் தூக்கியத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அறிந்துகொண்ட சின்ன இடையின் மென்மை வேறு நினைவில் வந்து போதையேற்றியது.

 

அவளோ பாத்திரங்களை வெகு மும்முரமாகக் கழுவிக்கொண்டிருந்தாள்.

 

இப்படியே போனால் இவள் மாறவே மாட்டாள் என்று முடிவே கட்டிவிட்டான் பிரதீபன். கெஞ்சியாயிற்று, கோவப்பட்டாயிற்று, எடுத்துச் சொல்லியாயிற்று! இனி அவனுக்கே அவனுக்கான ஆயுதத்தைத் தூக்கவேண்டியதுதான்!

 

வேகமாக அவளின் பின்னே வந்து இருபுறமும் கையை வைத்துச் சிறை செய்தபடி, “சொல்லு, உன்ன தொடலாமா கூடாதா?” என்று காதோரமாக வினவினான்.

 

ஒருகணம் மயூரியின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோயிற்று! வேறு பொழுதாக இருந்திருக்க ஒற்றை முறைப்பில் அவனை ஓட வைத்திருப்பாள். ஆனால், சற்றுமுன் அவன் கேட்ட கேள்விகள் இன்னும் அவளுக்குள் நின்று சுழன்றதில் தடுமாறிப்போயிருந்தாள்.

 

கன்னத்தை தீண்டிய மூச்சுக்காற்று, செவியை மோதிய கிறக்கமான குரல், சமையல் கட்டைப் பற்றியிருந்த வலிய இரு கரங்கள் எல்லாமே அவளைப் பலகீனமானவளாக மாற்றிவிட முயன்றுகொண்டிருக்க, சிரமப்பட்டுத் தன்னை அடக்கி இல்லை என்று தலையை அசைத்தாள்!

 

“ஏன் எண்டு சொல்லு!” நெருக்கத்தை நீக்காமல் நின்றான் அவன்.

 

அவளுக்குப் புரிந்துபோயிற்று! கைச்சிறைக்குள் வைத்துக் காரியம் சாதிக்கப் பார்க்கிறான். கையைக் கழுவிக்கொண்டு நிதானமாகத் திரும்பி, “எனக்குப் பிடிக்கேல்ல!” என்றாள் அவனையே பார்த்து.

 

அப்படிச் சொல்வாள் என்று எதிர்பாராதவன் நிலைகுலைந்து நின்ற கணத்தில், அவன் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்தாள். மின்னல் வேகத்தில் எட்டி அவளின் இடையைப் பற்றித் தன்னிடம் கொண்டுவந்து சேர்த்திருந்தான் அவன். “நீ மட்டும் என்னை தொடுவியோ?” என்கிற கேள்வியோடு.

 

“என்னை தொடுற ரைட்ஸ உனக்கு யாரடி தந்தது? உன்ன நான் தொடக்கூடாது எண்டா நீயும் என்னை தொட்டிருக்கக் கூடாது! என்ன உரிமையில தொட்டனி? வேற எவன் நெருங்கி வந்தாலும் இப்படித்தான் உரிமையா நெஞ்சுல கைய வச்சுத் தள்ளி விடுவியோ?” கேள்விகளைக் கணைகளாக வீசியபடி அவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான் அவன்.

 

தான் செய்த முட்டாள் தனம் அப்போதுதான் உறைக்க, மீண்டும் அவளைத் தாக்கிய கேள்விகளில் தடுமாறி, “எனக்கு பிடிக்கேல்ல எண்டு சொன்னனான். விடுங்கோ!” என்று, விடுபடப் போராடினாள் அவள்.

 

“என்ன பிடிக்கேல்ல? நானா? இல்ல இந்த நெருக்கமா? சொல்லு! என்னை பிடிக்காதா உனக்கு? வார்த்தைக்கு வார்த்தை நான் தேவையில்லை, என்ன பிடிக்கேல்ல எண்டு சொல்லுறியே அது எனக்கு எவ்வளவு வலிக்கும் எண்டு தெரியாதா உனக்கு? சொல்லு மயூ? உண்மையாவே நான் வேண்டாமா உனக்கு?” அவளைத் தன் முகம் பார்க்க வைத்துக் கேட்டான் அவன்.

 

வேறு வழியின்றி அவளும் பார்க்க, அவன் கண்களில் தெரிந்த வலி, தவிப்பு, இன்னும் என்னைப் புரிந்துகொள்ளவே மாட்டாயா என்கிற ஏக்கம் அனைத்தும் முதன் முதலாக அவளின் வாயைக் கட்டிப்போட்டது!

 

பேச்சற்று நின்றவளின் மீதே விழிகள் இருக்க, “என்னை பிடிக்காட்டி ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாய்? வேண்டாம் எண்டு சொல்லியிருக்க வேண்டியதுதானே. ஆதுக்காக எண்டு சொல்லாத. அவள் பிறந்ததில இருந்து தூக்கி வளத்தவன் அந்த அர்ஜுன். உன்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவனும். அவளுக்கு அப்பா ஆகிறதுக்கு அவன் தயாராத்தான் இருந்தவன். உன்னை இப்படியே ஏற்க அவன் குடும்பத்துக்கே விருப்பம் தான். அவனுக்கு ஓம் எண்டு சொல்லி, ஆதுக்கு அவனை அப்பாவா காட்டி கல்யாணத்தை கட்டி இருக்க வேண்டியதுதானே. ஏன் செய்யேல்ல?” என்றவனின் கேள்வியில் அவனை உக்கிரமாய் முறைத்தாள் மயூரி.

 

பின்னே, தன் கைப்பிடியில் நெருக்கமாய் அவளை வைத்துக்கொண்டு இப்படிக் கதைக்க நா கூசவில்லையா அவனுக்கு!

 

ஆத்திர மிகுதியில் அவனைத் தள்ளிவிட முயல, அதற்கு விடாமல், “சொல்லு மயூ! உனக்கு நான் தேவையில்லை. ஆதுக்கு ஒரு அப்பா மட்டும் தான் வேணும். நான் வேற நம்பிக்கை துரோகி. உன்ர குழந்தையை அழிக்கச் சொன்ன கெட்டவன். பிறகு என்னத்துக்கு என்னை கட்டுறாய். சொல்லு?” ஆவேசம் கொண்டவனாய் அவளை உலுக்கினான் அவன்.

 

“ஆதுக்கு அப்பா நீங்க இருக்கேக்க நான் ஏன் இன்னொருத்தனை அப்பாவா காட்டவேணும்? அதால மட்டும் தான் உங்களை கட்டுறன். போதுமா!” என்று ஆத்திரமிகுதியில் இரைந்தவளின் பேச்சில் அவன் கைகள் தளர்ந்து போயிற்று!

 

மீண்டும் ஆதிராவுக்காக மட்டுமே அவனைத் திருமணம் செய்கிறாள் என்றுவிட்டாளே! இவள் மாறவே மாட்டாளா? ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று இன்னும் எத்தனை முறைதான் அவனைத் துச்சமாக்கித் தூக்கி எறியப் போகிறாள்?

 

அவள் அங்கிருந்து நகரப்பார்க்க, விடாமல் அவளின் முன்னே வந்து நின்று, “எனக்கு வேற ஒரு கல்யாணம் நடந்திருந்தா?” என்றான் விடாமல்.

 

இதற்குள் நிதானத்துக்கு வந்திருந்தாள் மயூரி! அவனை நிமிர்ந்து பார்த்து, “அண்டைக்குச் சொன்னதுதான். அப்பா இல்லாத பிள்ளைகள் இந்த உலகத்தில இல்லையா என்ன?” என்றவளின் பேச்சில் வாயடைத்துப்போனான்.

 

வார்த்தைகளைக் கூர் வாளாக வீசுவதில் அவள் பட்டமே பெற்றிருப்பது நன்கு புரிந்தது!

 

“அப்ப நான் யார் மயூரி உனக்கு?” வறண்ட குரலில் கேட்டான்.

 

“என்ர பிள்ளைக்கு அப்பா.” அவன் முகம் பாராமல் சொன்னாள் அவள்.

 

“உனக்கு… நான் யார் எண்டு கேட்டனான்?” கேட்கையிலேயே உஷ்ணம் ஏறிப்போயிருந்தது அவன் குரலில்.

 

அந்தக் கேள்வியையும் அவனையும் அலட்சியம் செய்து அவள் நகர, கையைப் பற்றி நிறுத்தினான் அவன்.

 

“கேள்விக்கு பதில் இல்லையா இல்ல சொல்ல விருப்பம் இல்லையா?” அடக்கப்பட்ட கோபத்தில் ஒவ்வொரு வார்த்தைகளாக நிதானமாக வந்து விழ, ‘இந்த நிதானம் நல்லதற்கு அல்ல’ என்று மயூரிக்குள் எச்சரிக்கை மணி மிக வேகமாக ஒலித்தது!

 

“எதை நிரூபிக்கிறதுக்கு இந்தப்பாடு படுறீங்க பிரதீபன்? எனக்கு நீங்க யாரும் இல்ல. என்ர மனதிலயும் நீங்க இல்ல. எனக்கு நீங்க தேவையும் இல்ல. இதை ஏற்கனவே தெளிவாச் உங்களுக்குச் சொல்லிட்டேன். இன்னும் கிளியரா சொல்லவேணும் எண்டால், ‘என்ர பழைய காதலன்’ மட்டும் தான் நீங்க! எக்ஸ் லவ்வர்!” என்று அவன் விழிகளைப் பார்த்து அவனைவிட மிகுந்த நிதானத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள் அவள்.

 

இதயம் ஆழமாய்க் காயப்பட்டுவிட, செயல்திறன் மொத்தமாய் இழந்து அப்படியே நின்றிருந்தான் பிரதீபன்.

 

 

error: Alert: Content selection is disabled!!