ரோசி கஜனின் மீரா 19 – 1

19

 

அம்ஸ்டர்டாம் விமான நிலையம் எப்போதும் போலவே பரபரப்புப் போர்வை போர்த்தி நின்றது.

சற்றுமுன், இத்தாலியிலிருந்து வந்திறங்கிய விமானத்தின் பயணிகள் வரும் வழியில் பார்வையிருக்க, முதல் ஆளாக நின்றிருந்தார், கார்த்திகேயன்.

சற்று நேரத்துக்கே வந்திருந்ததில், புதுமணத்தம்பதிகளை அழைத்துச் செல்ல வந்திருந்த கார்த்திகேயனின் தமக்கை, அவர் கணவர் மற்றும் மதுராவும், பின்னால் ஒரு புறமாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளை நிறைத்திருந்தார்கள்.

கணவனருகில் நிற்கவில்லை என்றாலும், மதுராவின் பார்வையும் பயணிகள் வரும் வாயிலில் தான்!

தந்தை அழைத்துச் செல்ல வருவார் என்ற நம்பிக்கையோடு வந்து கொண்டிருந்த ஆரணி, ஆரபி, கார்த்திகேயனைக் கண்டதும் தான் தாமதம், “ஹாய்ப்பா!” ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்.

மகள்களை இறுக அணைத்துக் கொண்ட கார்த்திகேயனுக்கு விழிகள் நிறைந்து போயின!

சாதாரணமான நேரமென்றால் இப்படி வெளிப்படையாகக் கண்கலங்க வரவேற்றிருப்பாரோ என்னவோ! அப்படியே கலங்கியிருந்தாலும், இந்த சில நாட்களின் பிரிவுத்துயரில் நிகழ்ந்திருக்கும்!

இப்போதோ, மனம் முழுதும் தவிப்பும் சஞ்சலமும் கிடந்து வாட்டியெடுக்குதே!

‘அப்பா எண்டு ஓடிவரும் என்ர குழந்தைகள், ‘நீ எங்கட அப்பா இல்லையா?’ எண்டு கேட்கிற நிலையொண்டு வருமேயானால்?’

ஆயிரமாம் தடவைகள் தழுவிச் செல்லும் இக்கேள்வியால் நெஞ்சம் முறுக, மகள்களின் தலைகளைப் பரிவோடு வருடியவர், “பயணம் எல்லாம் எப்படிம்மா இருந்திச்சு?” சில கணங்கள் என்றாலும் மகள்களின் மௌனம் தாங்க முடியாதுதான் கேட்டார்.

அவர் மகள்களோ, தொண்டை அடைக்க, பதில் சொல்லத் தடுமாறி நின்றார்கள்.

அதை அவதானித்த சந்துரு, “பத்து நாட்களுமே நல்ல சந்தோசமாப் போச்சு மாமா!” என்றபடி வர, மகள்களை மெல்ல விலக்கிவிட்டு அவனை அணைத்து விட்டவர், ஆரபியின் கணவன் ராகுலையும் அவ்வாறே அணைத்து வரவேற்க, “வாங்க வாங்க!” என்றபடி, கார்த்திகேயனின் தமக்கையும் கணவரும் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களுக்கு பின்னால் தயங்கியவாறே வந்தார், மதுரா!

மகள்களில் நிலைத்திருந்த அவர் பார்வையோ அப்பால் இப்பால் அசையவில்லை.

முன்னால் வந்த மாமா மாமியைத் தாண்டிச் சென்ற சகோதரிகளின் விழிகளும் அடக்கமுடியாத கலங்கலோடு தாயை நாட, துணை செய்தன அவர்களின் கால்கள்.

“ம்மா! எப்படிம்மா இருக்கிறீங்க?”

மதுரா கைவிரித்து அணைக்க முதல், விரைந்து சென்ற இருவருமாகத் தாயை இறுக அணைத்துக் கொண்டார்கள்.

தன் வாழ்வில், கடந்த காலம் செய்த கோலம் இளையவர்களின் பார்வைக்கு வந்தாச்சு என்றதிலிருந்து, கலகலத்த மதுராவின் நெஞ்சம், இப்போ, மகள்களின் அண்மையிலும் இறுகிய அணைப்பு ஏற்படுத்தியக் கதகதப்பிலும் ஸ்திரம் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

தாயில் செலுத்தும் அன்பை விட ஒரு படிமேலாகவே தாம் நேசிக்கும் தந்தை, ‘தம்முடைய இரத்தம் இல்ல எண்டு தெரிஞ்சி கொண்டால்?’ இந்தப் பயம் மட்டும் தான் அவரின் மனதில்!

அதுகூட, கார்த்திகேயனின் அதீத தவிப்பால் வந்ததுதான். மற்றும்படி, மகன் சொன்னதையே மகள்களிடமிருந்தும் எதிர்பார்த்தது, அத்தாயுள்ளம்.

சுரந்த விழிகளை மூடித் திறந்தவர், “குஞ்சுகள்! எப்படிம்மா இருக்கிறீங்க?” முயன்று கம்பீரமாகவே கேட்டார்.

அடுத்த கணம் அவரைப் பார்த்தார்கள் இருவரும். அவர்களின் கரங்கள் ஆளுக்கொன்றாகத் தாயின் விழிகளின் கசிவைத் துடைத்து விட்டன.

“நல்லா இருக்கிறம்மா!”ஆரபி சொல்ல, “குறையெண்டா, அம்மாண்ட சாப்பாடு இல்ல எண்டதுதான்; அடுத்து, எங்கட அப்பாவோட அடிக்கிற அரட்டையை மிஸ் பண்ணினம்!” என்றபடி, அருகில் வந்த தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள், ஆரணி.

‘தகப்பனுக்கும் மகள்களிற்குமிடையிலான இந்தப் பாசத்தில விரிசலா? தம்பி, உனக்கு விசர் தான்டா!’ மனதுள் சொல்லிக்கொண்டே வந்தார், கார்த்திகேயனின் தமக்கை.

“ம்ம்…போதும் போதும் வீட்ட போகலாம். பத்து நாட்களுக்கே இந்தப்பாடு எண்டால்?” பொய்யாகச் சலித்தும்கொண்டார்.

“அதுதானே மாமா? பேசாமல் நாங்க இங்க வரலாம் போலக் கிடக்கே!” பகிடி பண்ணிய ஆரபியின் கணவன், மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.

“இது எண்டால் நல்ல ஐடியாதான்! இல்லையாக்கா?” கணவனை முறைத்தபடி, தமக்கையிடம் கேட்டாள், ஆரபி.

“நீங்களே சொல்லுங்கோ அத்தை? என்ன செய்யலாம்? இவே ரெண்டு பேரையும் இங்க வரச் சொல்லுறதுதான் சரியா இருக்கும் என்ன?” ஆரணியின் சீண்டல், கார்த்திகேயனின் தமக்கையிடம் பொய் முறைப்பை வாங்கிக் கொண்டது.

“நல்ல மகள்களடா தம்பி! ரெண்டு பேரும் அப்பாக் கோந்துகள்!” என்றவர், மருமகள்களின் தலைகளைப் பாசமாக வருடியபடி, நலம் விசாரித்தவாறே நடக்கத் தொடங்க, பின் தொடர்ந்தார்கள் மற்றவர்கள்.

வழமையாக, எல்லோரும் சேர்ந்து விட்டால் எப்படிக் கலகலவென்று இருக்குமோ, அதே கலகலப்போடுதான் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். வந்ததும் சகோதரனைத்தான் தேடினார்கள்.

விமானநிலையத்திற்கே வருவான் என்று நினைத்திருந்தவர்கள், அவன் வரவில்லை என்றதும் சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், காரணமெல்லாம் கேட்கவில்லை.

அதுவே, வீட்டிலும் இல்லை என்றதும் அமைதியாகப் போக முடியவில்லை.

“ஆதவ் எங்கம்மா?” ஆரணிதான் கேட்டாள்.

“ஆதவ், நிரூஜ் ரெண்டுபேரும் கம்பஸுக்குத்தான், இண்டைக்கு வரக் கொஞ்சநேரம் செல்லும் எண்டவே மா!” என்றார் மதுரா.

“ஓ! அக்காக்கள் வருகீனம் என்றில்லை…” முணுமுணுத்தாள், ஆரபி.

“இந்த மீராவையும் பாருங்க அக்கா, ஏர்போர்ட்க்கு வரேல்ல எண்டாலும் பரவாயில்ல; இங்கயும் இல்லயே!” தொடர்ந்து மனத்தாங்கலோடு சொன்னாள்.

“அவள் வீட்டில தானம்மா நிற்கிறாள். இப்ப வருவாள்.” என்ற மதுரா, “இந்தா நித்தி வாறாள்?” என, அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்த மைத்துனியை முறுவலோடு வரவேற்றவர், “மீரா வரேல்லையா நித்தி?” என வினவினார்.

அதற்குப்பதில் சொல்லாது, திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மருமகள்களை அணைத்துக் கதைக்கத் தொடங்கினார், நித்தி.

தாயின் பின்னால் தான் வந்து கொண்டிருந்தாள், மீரா.

நித்தியின் வெளிப்படையான பாராமுகமும் முறைப்பும் முகத்தைக் கன்ற வைத்தாலும், இயன்ற மட்டும் சலனமின்றியே இருக்க முயன்றாள், அவள்.

மைத்துனிமாரின் விழிகளோடு மோதிய மீராவின் விழிகள், சிறிதுநேரம் கதைபேசியதை யாரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.

நித்தியோடு ஆரபி கதைக்க, மீராவோடு சிறிது நேரம் கதைத்த ஆரணி, “இரு மீரா, ஃப்ரெஷாகீட்டு வாறம்.” என்று நகர, “அத்தை, நாங்க யாருமே காலமயில இருந்து வடிவாச் சாப்பிடேல்ல.” என்றான், சந்துரு.

“உங்கட சாப்பாட்டுக்காக அரைகுறையாக் கொறிச்சிட்டு வந்தம் அத்தை. சாப்பாடு எடுங்கோ, நாங்க பத்து நிமிசத்தில வருவம்.” தொடர்ந்தான், ராகுல்.

சட்டென்று அவனைப் பார்த்து அர்த்தமுள்ள முறுவல் ஒன்றை உதிர்த்தான், சந்துரு.

மீரா இங்கு நடந்ததைச் சொன்னதைக் கேட்டு, பரிதவித்து அழுகையில் கரைந்த மனைவியரைத் தேற்றி, இந்தளவுக்குத் தெளிவுபடுத்தி அழைத்து வருவதற்குள் இவர்கள் இருவரும் பட்ட பாடு, அவர்கள் இருவருக்கும் தானே தெரியும்! இதில் சாப்பிடுவது எங்கேயாம்?

இது எதுவும் அறியாத மதுராவோ, மருமகன்களை அன்போடு பார்த்தார்.

‘நிச்சயம் நான் சமைச்சு வைப்பன் எண்டு தெரிஞ்சு சாப்பிடாம வந்திருக்கினம்!’ என எண்ணியவரின் உள்ளத்தில் மகிழ்வு ஏற்படாது இருக்குமா என்ன?

“உங்களுக்குப் பிடிச்ச சமையல் எல்லாமே தயாரா இருக்கு, கெதியா வாங்க.” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தார்.

அவரைத் தொடர முயன்ற நித்தி, தன்னருகால் கடந்து சோஃபாவை நோக்கிச் சென்ற மகளை, மீண்டும் சுடு பார்வை பார்த்தபடிதான் நகர்ந்தார்.

“இவ்வளவு சந்தோசமா வந்திருக்கிற பிள்ளைகளிட்ட எப்பிடிச் சொல்லுறது?” சோர்ந்தமர்ந்தார் கார்த்திகேயன்.

“இங்க பார் தம்பி, வீணாக் கவலைப்படுற எண்டு சொன்னாலும் கேட்கிற இல்லயே! இங்க பார், இப்ப ஒண்டும் சொல்ல வேணாம். அங்க வீட்ட போன பிறகு சமயம் பார்த்துச் சொல்லுறம்.” என்றார், அவன் தமக்கை.

“அதுதான் சரியெண்டு நானும் நினைக்கிறன்.” என்றார், கார்த்திகேயனின் அக்கா கணவர்.

“இல்ல! இல்ல!” சட்டென்று மறுத்துவிட்டார், கார்த்திகேயன்.

“இனி இதில மறைக்கிறதுக்கு என்ன இருக்கு? என்ர கண் முன்னாலயே அவே எல்லாம் தெரிஞ்சுகொள்ள வேணும்.” என்று சொல்கையில், உஷா குடும்பமும் வந்து சேர்ந்தது.

அதன்பின், வழமையான கலகலப்பில் சிறுகுறையுமின்றி நகர்ந்தது மணித்துளிகள்.

“நல்லா இருட்டிப் போச்சு! நாங்க போயிட்டு வாறம்.” உஷா குடும்பம் புறப்பட, “நாங்களும் போவம் கா!” எழுந்தார் நித்தி.

நித்தி குடும்பமும் கார்த்திகேயனின் தமக்கை குடும்பமும் விடைபெற்றுச் சென்ற பின்னும் கதைத்துக் கொண்டிருந்தார்கள், புதுமணத்தம்பதிகளும் கார்த்திகேயன், மதுராவும்.

“என்னம்மா இன்னும் இவனக் காணேல்ல?” வாயிலைப் பார்த்தபடி கேட்டாள் ஆரணி.

“ஆதவ் கொஞ்சம் முதல் ஃபோன் பண்ணினவன் மா, பத்து மணியாகும் எண்டு சொன்னான். நிரூஜும் அவனுமா வருவினம் தானே?” என்ற மதுரா, “பத்து நாட்களாக அங்க இங்க எண்டு திரிஞ்சு ஒரே அலைச்சல் தானே, நேரத்துக்குப் போய்த் தூங்குங்க!”

error: Alert: Content selection is disabled!!