ரோசி கஜனின் மீரா 19 – 2

மகள்களிடம் சொன்னபடி எழ, தொலைபேசி அழைப்பொன்றுடன் நகர்ந்தார், கார்த்திகேயன்.

சட்டென்று எழுந்து செல்லாது தந்தையைத் தொடர்ந்தது, மகள்களின் பார்வை!

“என்ன ஆரணி யோசன?” கேட்டவாறே மனைவியின் பார்வையைத் தொடர்ந்த சந்துரு, “இங்க பாரும், மாமா அத்தையாக ஏதாவது கதைச்சாப் பார்க்கலாம். நீங்களா எதையும் தொடங்க வேணாம்!” என்றான், தாழ்ந்த குரலில்.

“இல்ல சந்துரு. எனக்கென்னவோ நாமளே அப்பாட்டக் கதைக்கிறது நல்லதெண்டு தோன்றுது!” இடையிட்டாள், ஆரபி.

“ம்ம்…நானுமே அதைத்தான் நினைக்கிறன்.” சகோதரியின் கூற்றை ஆமோதித்தாள், ஆரணி.

“அப்பாவப் பார்த்தீங்க தானே சந்துரு? இந்த விசயத்த மனசுக்குள்ள வச்சுக்கொண்டு தவிக்கிறார். இயல்பாக இருக்கிறது போல காட்டிக்கொள்ள பெரும்பாடுபடுகிறார். அவரைப் பார்த்து பார்த்து அம்மாவும் தவிக்கிறார்.” கண்கலங்கியபடி சொன்னாள், ஆரணி.

“சரி சரி, கதைக்கிறது எண்டால் கதைக்கலாம். ஆனா, அழுது அவையளை இன்னும் தவிக்க வைக்க வேணாம். இதில அழுகைக்கு இடமே இல்ல. திடீரென்று மீரா சொல்லித் தெரிய வந்ததும் அழுதது சரி, வேண்டிய மட்டும் அழுதும் முடித்தாயிற்று!”

ஆரணியின் கண்ணீர் ஆரபியின் விழிகளையும் கசியச் செய்ய, இருவரையும் கண்டிப்போடு பார்த்துச் சொன்னான், ராகுலன்.

“உண்மைதான் ராகுலன்!” என்ற சந்துருவும் அதையே வலியுறுத்தினான்.

இவர்கள் இப்படித் தாழ்ந்த குரலில் உரையாடிக் கொண்டிருக்கையில், “என்னம்மா இன்னும் தூங்கப் போகேல்லையா?” சமையல் அறையிலிருந்து வந்து மாடிப்படியேறப்போன மதுரா தயங்கி நின்றார்.

“ஆதவைப் பார்த்திட்டுப் போகலாம் எண்டு இருக்கிறம்மா. பத்து நாட்களுக்குப் பிறகு அக்காக்கள் வருகீனம் எண்டில்லாமல் இண்டைக்கு எண்டு இவ்வளவு பிந்தியா வருவான்?” குறைப்பட்டாள், ஆரபி.

“நானும் தான் இதைக் கேட்டன். படிப்பு விசயம் எண்டால் என்னம்மா செய்யிறது? நாளைக்கு விடிய சந்திக்கலாம் தானே?” என்றார் அவர், சமாதானமாக!

அதன் பிறகு, மனமே இல்லாதுதான் மேலே சென்றார்கள். இருந்தும், “அப்பாவோட கதைச்சிட்டாத்தான் நிம்மதியாத் தூங்க முடியும்!” மீண்டும் மீண்டும் முணுமுணுத்தாள், ஆரபி.

“எனக்கும் தான்…” ஆரணி.

“சொல்லுறதைக் கேளுங்க, இப்ப எதுவும் கதைக்க வேணாம். காலேல கதைப்பம். எப்பிடியும் நாம அவுஸ்திரேலியா போக இன்னும் அஞ்சு நாட்கள் இருக்கே!

ஒருவேள உங்களிட்ட இப்பச் சொல்ல வேணாம் எண்டும் நினைச்சிருக்கலாம் தானே? அவர்களாச் சொல்லட்டும்.”

சந்துருவும் ஆரபியின் கணவனும் மாறி மாறிச் சொன்னார்கள்.

அரைமனதாக உறங்கச் சென்ற சகோதரிகள் அடுத்த அரைமணியில் ஒன்றாக நின்றார்கள்.

“வா ஆரபி, அப்பாவோட கதைச்சிட்டே வருவம்!” என்று புறப்பட்டும் விட்டார்கள்.

சேர்ந்து செல்ல முயன்ற கணவர்மாரையும் தடுத்து விட்டார்கள்.

“இது அப்பாவுக்கும் எங்களுக்கும் மட்டுமானது…” ஆரபி ஆரம்பிக்க, “நீங்க வர வேணாமே…ப்ளீஸ்!” முடித்தாள் ஆரணி.

அவர்களின் பதிலுக்குக் காத்திராது நகர்ந்தவர்கள், தாய் தந்தையின் அறைக்கதவைத் தட்டினார்கள்.

உள்ளிருந்து பதிலின்றிப் போகவே, “அதுக்குள்ள தூங்கீட்டினமா?” என்றபடி மெல்லத் தள்ளியதும் திறந்தது அறைக்கதவு.

“அம்மா! தூங்கீட்டீங்களா?” மீண்டும் அழைத்தாள், ஆரணி.

பதில் வராது போகவே, “இங்க இல்ல போல!” என்றபடி உள்ளே சென்ற ஆரபி, அங்கு படர்ந்திருந்த இருளை விலக்கிப் பார்த்துவிட்டு, மின்விளக்கை அணைத்தாள்.

“கீழே இருப்பினம் போல! எப்பிடியும் ஆதவ் வரும் வரைக்கும் அம்மா தூங்க மாட்டார் ஆரபி. வா, போய்ப் பார்ப்பம்.” மாடிப்படி நோக்கித் திரும்பினாள், ஆரணி.

கீழேயும் அவர்கள் இருக்கவில்லை. சற்றே யோசித்தவர்கள், “மொட்ட மாடியில இருக்கீனமோ!” விறுவிறுவென்று மேலே ஏறினார்கள்.

 

மகள்கள் வந்ததிலிருந்து உறவுகள் சூழ இருந்ததில், எதுவுமே நடவாத பாவனையில் தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பெரும்பிரயத்தனம் செய்தார், கார்த்திகேயன். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருந்தார்.

அதுவே, எல்லோரும் சென்ற பின்னரோ மகள்களை ஏறிட முடியவில்லை.

‘வாய் விட்டு விட்டால்?’ எனத் தவித்தவரைக் காப்பது போல் வந்தது அந்தத் தொலைபேசி அழைப்பு. கதைத்துக்கொண்டே மொட்டை மாடிக்கு வந்திருந்தார்.

மாடி முழுவதையும் மென்வெள்ளொளி தன் வசப்படுத்தியிருந்தது.

அங்கிருந்த மரம், செடி கொடிகள் அனைத்துமே, இத்தனை நாட்களும் சந்தோசத்தையும் கலகலப்பையும் மட்டுமே சுவாசித்தவை; அதனாலேயே அவைகளுக்குத் தனிக்களை; பளபளப்பு!

இந்தக் குடும்பங்களின் மகிழ்வு, ஆரவாரம் பற்றிய பல சுவாரசியங்களைக் கண்டு இரசித்தவையாச்சே!

பலசமயங்களில், வெட்கத்தில் தலை கவிழ்ந்து, சுவாசிக்கவும் மறந்து, சிறு இடைஞ்சலுமின்றி அமைதி காத்த அனுபவங்களும் அவைக்கு உண்டே!

இன்று?

எப்போதுமே, முறுவல் பூசிய முகத்தோடு அன்பைத் தெளிக்கத் தெரிந்த அந்த வீட்டுத்தலைவர், சித்தத்தில் தத்தளிப்போடு வந்து நிற்கிறாரே!

ஒரே பார்வையில் அதைக் கண்ணுற்ற அச்சுற்றம் சோபை குன்றிப் போயிற்று!

சில நிமிடங்கள், ஏதோ அறியாத தேசம் நுழைந்த பாவனையில் கருத்தின்றி அலைந்தது, கார்த்திகேயனின் பார்வை.

அவரின் பார்வையிலும் தொடுகையிலும் செழித்து வளர்ந்த சுற்றுப்புறமோ, அவரின் பாராமுகத்தில் மிகையாய்ச் சிணுங்கிப் போயின!

தொலைபேசி உரையாடல் முடிந்ததற்கு அறிகுறியாக கோட் லெஸ் தொலைபேசியை அங்கிருந்த சிறு மேசையில் வைத்தார் அவர்.

மீண்டும் சிறுபொழுது, இலக்கின்றி இருளைத் துளாவின, அவர் விழிகள்.

சிலநாட்களாக மனதைக் கவ்விய அயர்ச்சி உடலையும் தொட, அப்படியே அமர்ந்துவிட எண்ணியவர், எப்போதும் போல் அங்குகிடந்த சோஃபாவில் அமரவில்லை. அது முதுகுக்கு அணைவாக இருக்க, கால்களை நீட்டி நிலத்தில் அமர்ந்து கொண்டார்.

சிந்தனைச் சுழலில் பிடிபட்டுத் தொய்ந்து தளர்ந்த தலையோ, அப்படியே சோஃபாவில் சாய்ந்துகொண்டது.

கருமை படர்ந்திருந்த வானை வெறித்தன, விழிகள்.

வேண்டா வெறுப்பாக எழுந்த வலக்கரம், நெற்றியின் குறுக்கே சென்று அமர்ந்து கொண்டது.

திருமணம் ஏற்படுத்திய புத்தம் புது உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் மகள்களிடம் போய், ‘நீங்கள் நான் பெற்ற குழந்தைகள் இல்லை’ என்று எப்படிச் சொல்வதாம்?

இது ஒருபுறமென்றால், மறுபுறம் மீரா!

‘அவளிட அமைதி இயல்பானது இல்ல. ராது சொல்லுறதைப் போல அவள் அவனை மறந்திட்டு இருக்கிறாள் எண்டதை என்னால நம்ப முடியேல்ல.

இதே சந்தேகம் தானே நித்திக்கும்.

அதேநேரம், நிச்சயம் அவன் அவளுக்கு ஏற்றவனும் இல்ல. அப்படியிருக்க, அவனை எப்பிடி அவள் மனசில இருந்து அகற்றுறது?

நேரில போய் அவனோட கதைச்சா என்ன?’ சிந்தனையோடியது.

“ம்ம்… முரடன்! உன்ர வீட்டுப்பெண்ணைத் திருத்து, இங்க ஏன் வாற எண்டு கேட்டாலும் கேட்பான்!”

தன்னையும் மீறி முணுமுணுத்தார், கார்த்திகேயன்.

முதல் முதல், சிறியதாயாரின் பணிப்பின் பெயரில் மதுராவைச் தேடிச் சென்ற போது, அவனைச் சிறுவனாகக் கண்டிருக்கிறார். இப்போதோ, அச்சிறுவன் தான் ஜோரிக் என்று பார்க்கையில் அவன் தந்தையின் சாயல் இருப்பது போன்றிருந்தது. இதற்கு முதல் ஜோரிக்கைச் சந்திக்கையில் தோன்றாத உணர்வு அது!

‘ச்சே!’

கணேஷ் என்ற எண்ணமே அகத்தையும் புறத்தையும் தகிக்க வைத்தது. அப்படியொருத்தன் இருந்தான் என்றதையே அல்லவா மறந்திருந்தார்கள்.

‘அதெப்பிடி முடியும்? நான் இல்லையெண்டாலும் என்ர மகன் உருவில வந்திட்டன்!’

கணேஷ், ஆங்காரமாக கூச்சலிடுவது போலவே இவருக்குத் தோன்றியது.

“பச்!” தலையை உலுக்கிக் கொண்டார்.

“ஏன் என்ர சிந்தனை இப்பிடியெல்லாம் போகுது?’

தவிப்பு, தயக்கம், கலக்கம் எல்லாம் சேர்ந்து தன்னை ஆட்டிப் பார்ப்பதில் அதையும் இதையும் எண்ணத் தோன்றுகின்றது என்பது புரிந்தாலும், அவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளிவர முடியவில்லை..

நெடிய மூச்சொன்றை வெளியேற்றியவர் எழுந்து உள்ளே செல்லும் எண்ணமின்றி அப்படியே இருந்த போது, அவரைத் தேடி வந்த மதுராவின் பார்வையில் பட்டார்.

கணவருக்குச் சமாதானம் சொல்லி சொல்லிக் களைத்துப் போயிருந்த மதுராவால், அவரின் வேதனையைப் பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.

மகள்கள் வரும் வரை, கணவருக்குச் சமாதானம் சொல்வது என்னமோ எளிதாகத்தான் இருந்தது. அதே, இப்போதோ, ‘மகள்கள் இந்த விசயத்தை அறிந்தால் எப்பிடி எப்பிடி நடந்து கொள்ளுவீனமோ!’ என்று வரையறுக்க முடியாத தடுமாற்றம் தான் அவருள்ளும்.

அவருக்கு மட்டுமா? ஆதவுக்கும் தானே?

தாய் தந்தைக்குத் தைரியம் சொன்னவனே தமக்கைமாரைச் சந்திக்கத் தயங்கி நிரூஜ் வீட்டில் அல்லவா நிற்கிறான்.

“இப்படி இப்படியெண்டு சொல்லிவிடுங்க அம்மா. நீங்க சொல்லேக்க என்னால அங்க நிற்க முடியாது. நாளைக்குக் காலம அக்காவையளைப் பார்க்கிறன்.” என்றவன், எவ்வளவோ சொல்லியும் வர மறுத்து விட்டானே.

“அக்கா ஆட்கள் தூங்கப் போய்ட்டார்கள், நீ வாறியா?” சில நிமிடங்களுக்கு முதல் அழைத்துக் கேட்டிருந்தார், மதுரா.

“அப்ப, ஒண்டும் இன்னும் சொல்லேல்லையா?” என்றான், ஆதவ்.

error: Alert: Content selection is disabled!!