காதல் காயங்களே 28 – 1

அத்தியாயம் – 28

 

அன்று வியாழக்கிழமை. கணவருக்காக காலைத் தேநீரை ஆற்றி எடுத்துக்கொண்டு வந்தார் புஸ்பவதி. “நாளைக்கு கல்யாணம். இந்தப் பெடியன் இண்டைக்கும்(இன்றைக்கும்) நாளைக்கும் லீவு எண்டான். ஆனா இன்னும் ஆளைக் காணேல்ல. இதை பிடிங்கோ என்ன செய்றான் எண்டு பாத்துக்கொண்டு வாறன்.” என்று அவரிடம் கப்பைக் கொடுத்துவிட்டு பிரதீபனின் அறைக்கு வந்தவர், அவன் பெட்டி கட்டுவதைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார்.

 

“என்ன தம்பி செய்றாய்?”

 

அவரைத் திரும்பிப் பார்த்து முறுவலித்தான் அவன். “இண்டைக்கே அங்க போகப்போறன் அம்மா. அதுதான் தேவயானதை எல்லாம் எடுத்துவைக்கிறன். முதல் ஒரு தேத்தண்ணி தாங்கம்மா. விடிஞ்சதுக்கு ஒன்றுமே குடிக்கேல்ல.”

 

அவன் சொன்னதைக்கேட்டு அவருக்கு அதிருப்தி உண்டாயிற்று.

 

“தாறன் அப்பு. ஆனா ஏன் திரும்பவும் அவசரப்படுறாய். இண்டைக்கு மட்டும் தானே. பொறு, கல்யாணம் முடிஞ்சபிறகு முறையா எல்லாம் செய்யலாம்.” என்று எடுத்துச் சொன்னார் அவர்.

 

அவனோ அவரருகில் வந்து அமர்ந்துகொண்டு கையைப் பற்றினான். “அவசரப்பட்டு போகேல்ல அம்மா. அவளுக்காகப் போறன். எனக்கு நீங்க, அப்பா, அக்கா குடும்பம், தங்கச்சி குடும்பம் எண்டு எல்லாரும் இருக்கிறீங்க. அவளுக்கு என்னைத்தவிர யாருமே இல்லை. எல்லாமா நான்தான் இருக்கவேணும். அவளின்ர கழுத்துல ஒரு தாலிய கட்டுறதைவிட துணைக்கு நான் இருக்கிறன் எண்டு காட்டுறது தானம்மா முக்கியம். அவள் பாவம். நாளைக்கு கல்யாணம். ஆனா எடுத்துச் செய்ய ஒருத்தரும் இல்ல.” என்றான், தன்னவளின் துணையற்ற நிலையை எண்ணி வேதனையோடு.

 

புஸ்பவதி அம்மாவுக்கும் கஷ்டமாகப் போயிற்று! மயூரியைப் பாவம் என்றும் நினைத்துக்கொண்டார். அவளைக் காலம் சற்று அதிகமாகவே வஞ்சித்துவிட்டது போலிருந்தது. அதைவிட, இது ஒரு விசித்திரத் திருமணம். இங்கே அளவுக்கு அதிகமாகச் சடங்குகளைப் பார்ப்பதில் ஒன்றுமில்லை. எனவே அவர் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.

 

அதைவிட, அந்தப் பெண்ணுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் மகன் தானும் வாழ்ந்து அவளையும் வாழவைப்பான் என்கிற நம்பிக்கையும் உண்டாயிற்று! இதைவிட வேறு என்னதான் வேண்டும்?

 

“சரி நீ வெளிக்கிடு. நான் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு நகர்ந்தார் அவர்.

 

“நீங்களும் அப்பாவும் இனி தனிய எண்டு கவலையா இருக்காம்மா?” மெல்லக் கேட்டான் மகன்.

 

“நாங்க எங்க தனியா இருக்கப்போறம்? வேற வேற வீடு அவ்வளவுதான். எங்களுக்கு ஒண்டு எண்டால் எங்கட பிள்ளைகள் மூண்டுபேருமே ஓடிவருவீங்க. ஒரே ஊருக்க தான் இருக்கிறோம். பிறகு என்னடா? உண்மையைச் சொல்லப்போனா இப்பதான் எனக்கு மனம் நிறைஞ்சுபோய் இருக்கு. எங்களைப்பற்றி யோசிக்காம நீ சந்தோசமா வாழுற வழியை மட்டும் பார்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

 

‘சந்தோசமாக வாழ்வதா?’ அவனுடைய உதடுகள் கோடாய் அழுந்தின. எக்ஸ் லவ்வர் என்றுவிட்டாளே! ‘எக்ஸ் மட்டுமில்ல மயூ வை இசட் லவ்வர் எல்லாமே உனக்கு நான்தான். பாப்பம், உன்ர கோபம் இன்னும் எத்தனை நாளைக்கு எண்டு..’ அவளின் மனமாற்றத்துக்காகக் காத்திருக்கத் தயாரானான். அவனுக்கு அது என்ன புதிதா? பத்து வருடப் பழக்கம் அல்லவா!

 

திருநாவுக்கரசுக்கும் செய்தி போனது. புறப்பட்டு வந்தவனுக்கு உணவு கொடுத்து அனுப்பிவைத்தார் புஸ்பவதி.

 

மயூரியும் அன்றும் நாளையும் விடுமுறை எடுத்திருந்தாள். அப்படியே வார இறுதி. இந்த நான்கு நாட்களும் என்ன செய்வது? உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. ஆதிராவை மட்டும் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்தாள். அவளிடம் எதுவுமே அவர்கள் சொல்லவில்லை. சொல்லும் எண்ணமும் இல்லை. அவளுக்கு அவர்கள் இருவரும் அம்மாவும் அப்பாவும். அவ்வளவுதான்.

 

நாளைக்குத் திருமணம். ஆயினும் எந்தவிதமான பரபரப்பும் அவளுக்குள் இல்லை. நாளைய நாள் வேகமாகக் கடந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணிக்கொண்டாள். அவள் வீடு திருமணக்கோலம் பூணவில்லை. எடுத்துச் செய்ய அப்பா இல்லை. நகைநட்டு, பட்டுச்சேலை என்று பொறுத்தம் பார்த்து வாங்கி அழகுபார்க்க அம்மா இல்லை. அவளே அவளை மணமகளாக்கி, மணமேடை புகுந்து தாலியும் வாங்கிக்கொள்ளப் போகிறாள். அம்மா அப்பா இல்லாத நிலை பூதாகாரமாகத் தாக்கிற்று!

 

ஒற்றைப் பிள்ளையாக செல்லம் கொஞ்சிய நாட்கள் இனிப்பாகத்தான் கடந்திருந்தன. இன்றைக்கு நினைத்துப்பார்க்கையில் ஒரு சகோதரம் இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று!

 

மனமெங்கும் விரக்தி சூழ, எல்லாமே வெறுத்துப்போனது போலொரு எண்ணம். ஒரு காலத்தில் திருமணம் பற்றி ஓராயிரம் கனவுகள். ஆனால் இன்றோ.. எல்லாமே மரித்துப்போனதாய் ஒரு உணர்வு.

 

வீட்டுக்குள் காரை விட்டபோது அவளுக்கு முன்னேயே அவன் கார் நின்றிருந்தது. அன்றைக்கு அழுத்தம் திருத்தமாய் ‘எக்ஸ் லவ்வர்’ என்று சொன்னபிறகு அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான தனிமையை அவன் உருவாக்கவே இல்லை. சூழ்நிலை அமைந்தாலும் அவனே விலகிப்போனான். அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று அடிக்கடி மனதில் தோன்றினாலும், அவனுடைய தொந்தரவு இல்லாமல் சற்றே ஆசுவாசமாகத்தான் உணர்ந்தாள்.

 

அப்படி அவன் விலகி நின்றதாலேயே அவனுடைய கேள்விகள், அதிலிருந்த நியாயங்கள் எல்லாம் சிந்தைக்குள் நின்று அவளைச் சிந்திக்கத் தூண்டிக்கொண்டும் இருந்தது. அவளின் கோபங்களின் சூடு குறைந்துகொண்டிருந்தது.

 

காரை விட்டு இறங்கியவளிடம் எந்தவித அனாவசியப் பேச்சும் இன்றி, “வெளி வேலை கொஞ்சம் இருக்கு; வா போவம்!” என்று தன் காரில் அழைத்துக்கொண்டு போனான்.

 

அவளைக்கொண்டே திருமணச் சேலை எடுத்து, அன்றே வேண்டுமென்று இரண்டு மடங்கு பணம் தருவதாகச் சொல்லி பிளவுஸ் தைக்கக் கொடுத்து, அவனுக்கு வேட்டி சட்டை எடுத்து, தேவையான நகைகள் வாங்கி, ஐயரைச் சென்று சந்தித்து தேவை என்று அவர் சொன்ன பொருட்களை எல்லாம் அவருக்கு வாங்கிக்கொடுத்து, திருமணம் முடிந்த பிறகு மதிய உணவுக்கு ஒரு சைவ ஹோட்டலில் உணவுக்கு ஆர்டர் கொடுத்து என்று எல்லா வேலைகளையும் பார்த்து முடித்தபோது அன்றைய நாளே முடியும் தறுவாயில் இருந்தது.

 

ஆதிராவைப் பள்ளிக்கூடத்தால் அழைக்கும் பொறுப்பையும் டென்னிஸ்க்கு விட்டு எடுப்பதையும் தன் தந்தையிடம் ஒப்படைத்திருந்தான் பிரதீபன்.

 

மிகுதியாய் இருந்த வேலைகளை அவனது அத்தான், மச்சான், ஜெய், நந்தினியின் கணவன் என்று யாரையும் விட்டுவைக்காமல் ஒப்படைத்தான்.

 

கடைசியாக ஒரு ஃபேஷியல் கடையின் முன்னே கார் வந்து நின்றபோது, ‘கோயில்ல நடக்கிற சிம்பிளான கல்யாணத்துக்கு இதெல்லாம் தேவையா’ என்று அவள் பார்க்க, அதற்குப் பதிலிறுக்கவில்லை அவன்.

 

அப்போதுதான், அன்றைய நாளில் தேவை இல்லாமல் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் அவன் பேசவில்லை என்பதை உணர்ந்தாள் மயூரி. அவன் காரை விட்டு இறங்க வேறு வழியின்றித் தானும் இறங்கியவளை ஒரு சோர்வு வந்து தாக்கிற்று!

 

நெருங்கி வந்தபோது தள்ளி நிறுத்தியவள் அவன் விலகி நின்றபோது எதையோ இழந்ததைப்போல் உணர்ந்தாள்.

 

என்ன வாழ்க்கை வாழ்கிறாள் அவள்? அந்தக் கணத்தில் எல்லாமே வெறுத்துப் போயிற்று!

 

அவளுடன் கூடவே வந்து, நாளைக்குத் திருமணம் என்பதைச் சொல்லி அதற்கான ஃபேஷியலுக்கு ஏற்பாடு செய்து, நாளைய நாளுக்கான மேக்கப்புக்கும் அவர்களையே ஒழுங்கும் செய்தான் அவன்.

 

அதிகாலையிலேயே பெண்ணை தயார் செய்ய வருவோம் என்று அவர்கள் சொல்ல, “ஆதிரா இருப்பா. ஏன் இதெல்லாம்.” என்றவளிடம், “இன்றைக்கு மட்டும் ஆதுவ அம்மாவை வச்சிருக்கச் சொல்லிட்டன். நாளைக்கு அங்க இருந்தே பள்ளிக்கூடம் போகட்டும்.” ஒட்டாத குரலில் அவளின் முகம் பாராமல் சொன்னான்.

 

“எல்லாம் முடிஞ்சதும் வா. நான் வெளில நிக்கிறன்.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் அவன்.

 

போகிறவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரி.

 

எல்லா அலுவல்களையும் முடித்தபிறகு நடுச்சாமத்தில் மயூரியின் வீட்டில்தான் ஜெய் குடும்பம், அவனது அத்தான் மற்றும் மச்சான், நந்தினி குடும்பம் எல்லோரும் குழுமியிருந்தனர். அடுத்தநாள் காலையில் என்னென்ன வேலைகளை எப்படியெப்படி எடுத்துச் செய்வது என்று பேசிக்கொண்டிருந்தனர்.

 

அத்தனை காரியங்களையும் ஓடி ஓடிப் பார்த்த பிரதீபனின் முகத்தில் மலர்ச்சி இல்லாததைக் கவனித்துவிட்டு, “கேகேயோட சண்டை ஏதும் பிடிச்சியாடி?” என்று மயூரியைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து கேட்டாள் நந்தினி.

 

அங்கே களைத்த முகத்துடன் தளர்வாக அமர்ந்திருந்து ஜெய்யிடம் என்னவோ கதைத்துக்கொண்டு இருந்தவனிடம் பார்வை சென்று மீள, “ஏன் கேக்கிறாய்?” என்று எதையும் காட்டிக்கொள்ளாமல் வினவினாள் மயூரி.

 

“ஒன்றுமே நடக்காத மாதிரி நடிக்காத எரும! நீ என்னவோ அவருக்கு நல்லா சுடுற மாதிரி சொல்லி இருக்கிறாய். பாக்கவே தெரியுது! இல்லாம கேகே இப்படி இருக்கமாட்டார்.” கடுப்புடன் சிடுசிடுத்தாள் நந்தினி.

 

“இல்லாத எதையும் நான் சொல்லேல்ல நந்து.” இதழோரம் பூத்த வெற்றுப் புன்னகையுடன் சொன்னாள் மயூரி.

 

“போதும் மயூ உன்ர விதண்டா வாதம். எதுக்கும் ஒரு அளவு இருக்கு. இப்ப நீ நடந்துகொள்ளுறது ஆக ஓவர்! அவ்வளவுதான் நான் சொல்லுவன். திரும்பவும் எதையாவது இழுத்து வச்சுப்போட்டு அவரோட சேர்ந்து நீயும் அனுபவிக்காத!” என்றவள் அவன் தன்னுடன் பேசியதைப் பகிர்ந்துகொண்டாள். “யோசிச்சுப் பாரு! நீ என்னதான் கோபத்தை பிடிச்சுக்கொண்டு அலைஞ்சாலும் அவருக்கு இன்னொரு கல்யாணம் நடந்திருந்தா தாங்கி இருப்பியா? இல்ல தற்கொலை ஏதும் செய்துஇருந்தா சந்தோசப்பட்டிருப்பியா?” எனும்போதே அவள் கண்கள் கலங்கிப் போயிற்று!

error: Alert: Content selection is disabled!!