அதேநேரம், இவளைக் கண்டுவிட்டு வந்தான் கடையின் மனேஜர்.
“ஹாய்!” வரவேற்பு முறுவலோடு வந்தவனுக்கு “ஹாய்!” சொன்னவள், “ஜோரிக் இல்லையா?” முறுவலோடு வினவினாள்.
“இப்பக் கொஞ்ச முதல் தான் மேல வீட்டுக்குப் போனார்.” என்றான் அவன்.
“ஓ! சரி, நான் அங்க போய்ப் பார்க்கிறன்.” என்று திரும்பி, விரைந்து சென்று, இரண்டிரண்டு படியாகத் தாவியேறி அவன் வீட்டுக் கதவின் முன்னால் நின்று ஆறுதலாக மூச்சொன்றை வெளியேற்றினாள்.
முதல் முறையாக வந்த போது அவனல்லவா அழைத்து வந்திருந்தான். அன்றிருந்த மனநிலை வேறு இன்று நிச்சயம் வேறுதான். இக்கணம், தன் சொந்த இடம் வந்த உணர்வு அவளை ஆட்கொண்டது. கூடவே சிறு தவிப்பும். அன்று அப்படிக் கதைத்து அனுப்பியவன் அல்லவா?
“வேண்டாம் போய்விடு!” என்றவன், இன்று, வாவா என்றா வரவேற்பான்?
சட்டென்று முகத்தில் வாட்டத்தின் தழுவல். மறுநொடி, ‘நீ என்ன வரவேற்கிறது?’ என்ற பிடிவாதம்.
‘என்ர இடம் எண்டு சொல்லுறன். பிறகு, என்னை வரவேற்க நீ ஆரடா…ஆர்?’ அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.
‘ம்ம்…என்ன சத்தமே இல்லை?’ மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தியவள், அவன் பெயரைச் சொல்லியழைக்க முனைய திறந்துகொண்டது, கதவு.
கதவில் அசைவைக் கண்டதும் பூவாய் மலர்ந்த அவள் வதனம், சட்டென்று அதிர்வில் குளித்து அவனையே பார்த்து நின்றது.
“என்ன இப்பிடி இருக்கிறான்? உடம்புக்கு எதுவும்…’ எண்ணியவாறே “ஹாய்!” என்றவள், அவன் பார்த்த கூர்ப்பார்வையில் கலங்கித்தான் போனாள்.
அதுக்கென்று அப்படியே பின் வாங்கிவிட்டால் எப்படி?
“வீடு தேடி வந்தவள வா எண்டு கூப்பிட வேணாம் ஜோரிக். கொஞ்சம் தள்ளு, உள்ள வர.” அவனைத் தொட்டு விலக்கிவிட்டு உள்ளே வந்தவள், கையிலிருந்த உணவுப் பையை மேசையில் வைத்துவிட்டுத் திரும்ப, அவனோ, கதவில் பிடித்த பிடியை விலக்காது அங்கு நின்றே இவளைப் பார்த்திருந்தான். சும்மா பார்வை இல்லை, அதே நெருப்புப் பார்வை.
அவன் மனத்தின் கொதிப்பைத் துளிகூட மறைக்காது தான் நின்றான். அதைப்படித்த பின்னும் உள்ளே வந்தவளைப் பற்றி என்ன நினைப்பது?
‘அவ்வளவுக்குத் திமிராடி உனக்கு?’ அவன் மனதின் கூச்சலைப் படிக்கவில்லை அவள்.
“இங்க பார் ஜோரிக், உன்ன நான் காண்டீபன் எண்டே கூப்பிடப் போறன். மற்றவேக்கு நீ ஜோரிக் ஆக இரு. எனக்குக் காண்டீபன், சரியா?”
அவள் பார்வையும் வார்த்தைகளும் அவன் மனதின் கோபாக்கினிக்கே சவால் விட்டன.
அவளைக் கண்ட கணம், கடின வார்த்தைகளைத் கடித்துத் துப்ப எண்ணியவன் தொண்டை அடைத்துப் போக நின்றான்.
அசையாது நிற்பவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தாள், மீரா.
“உனக்கு என்னட்ட என்ன சொல்ல இருந்தாலும், நல்லா ஏச வேணும் போல இருந்தாலும் இண்டைக்கு மட்டும் வேணாம் காண்டீபன்.” என்றபோது, யாரோ வேறொருவருடன் உரையாடுகிறாள் போலுணர்ந்தான் தான்.
ஆனாலும், ‘ஆவணங்களில் மட்டுமே இடம் பெற்றிருந்த பெயரை இத்தனை ஆசையாக உச்சரிக்கவும் முடியுமா?’ தன்னையுமறியாது அதை இரசித்த மனம் முணுமுணுத்தாலும், ‘ஜாலக்காரி! ஒண்டுமே அறியாதவள் போல என்னமாதிரி நடிக்கிறாள்!’ உறுமவும் செய்ததே!
“என்னடா அப்பிடிப் பார்க்கிற? சரி, சரி…உனக்கு என்னில சரியான கோபம் இருக்கும். ‘போயிரு; உன்னோட பழகிறதில எனக்கு எந்த விருப்பமுமில்ல’ எண்டு நீ சொன்ன பிறகும் வந்திருக்கிறன் எண்டால் கோபமும் எரிச்சலும் வாறது எல்லாம் சகஜம் தான்.” இதைச் சொன்னபோது அவளையும் மீறி தொண்டை கரகரத்தது.
‘நான் அவனில வச்சிருக்கிற அன்பை அறிவான் தானே? அதைப் புரிஞ்சுகொள்ள மாட்டானா?’ என்ற ஏக்கம் தந்த கரகரப்பு அது.
என்றாலும், அழகாகச் சமாளித்தாள், மீரா.
“என்னடா செய்யிறது? இண்டைக்கு எனக்குப் பிறந்தநாள் ஆச்சே! உன்னச் சந்திச்சப் பிறகு வாற முதல் பிறந்தநாள் இது! நீ வாழ்த்தவில்லையெண்டால் எப்படி?”
புருவங்களோடு சேர்ந்து எழுந்து கேள்வி கேட்டது அவளின் குறுகுறு நயனங்கள்; கூடவே சேர்ந்த மலர்ந்த இதழ்கள்.
‘ராட்சஷி ஒன்றுமே தெரியாத குழந்தை போலக் கதைக்கிறாளே!’
தன்னுள் தடுமாறிப்போனவன் அதற்கும் அவளையே பழிபோட்டான்.
“இவன் என்ன இந்தக் கதவை விடாது பிடிச்சுக்கொண்டு நிக்கிறான்? கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளிருவானோ!”
வாயினுள் சொற்களை அரைத்தபடி, “மை டியர் காண்டீபன், ஒரே ஒரு விஷ், அது போதும் எனக்கு. உனக்கு விருப்பமான சாப்பாடு கொண்டு வந்திருக்கிறன். அதோட என்ர பர்த்டே கேக்கும் இருக்கு, சாப்பிடு!” படபடவென்று சொன்னவள், அவன் புறமாகத் தன் வலக்கரத்தை நீட்டினாள்.
“என்ன பார்வை இது ஜோரி…காண்டீபன்? அந்தக் கதவ விடு! அது விழுந்திருமா என்ன?”
உள்ள நிலை தெரியாதவள் பகிடி பண்ணினாள்!
“நீயாக வாழ்த்த வேணும். சரி பரவாயில்ல, நாமே போய் வாழ்த்தை வாங்கிக் கொள்ளுவம் எண்டு வந்தால், நீயோ இப்பிடி விளங்காத பார்வை பார்த்தபடி நிற்கிற! ஏமாற்றிப் போடாதடா, என்ர மனசு தாங்காது!”
மென்மையாக ஒலித்த குரலும் கெஞ்சல் பார்வையுமாக நின்றவள், அவனை ஆட்டிப் பார்க்காதில்லை.
கதவைச் சாத்திவிட்டு வந்து அவள் கரம் பற்றி வாழ்த்தினான், மீராவின் காண்டீபன்.
“தேங்க்ஸ் காண்டீபன்.” உதடுகள் முணுமுணுக்க, பார்வை அவன் முகத்தை விட்டு அசையாத மாதிரியே, கரமும் அவன் கரத்தை விடவில்லை.
ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்தவனுக்கு, தொடர்ந்து அந்தப் பார்வையைச் சந்திக்கும் திராணி இருக்கவில்லைத் தான்.
பார்வையை விலக்கி மேசையில் இருந்த பைகளைக் காட்டி, “என்ன இதெல்லாம்?” என்றான்.
“ஹ்ம்…உனக்கு இரவுச் சாப்பாடு. உன்னோட சேர்ந்து சாப்பிட முடியாமல் போயிட்டு!” என்றபடி அவனிடமிருந்து விலகி, கேக் இருந்த பெட்டியைத் திறந்து சிறு துண்டைக் கிள்ளி எடுத்தவள், “ஆ” அவன் வாயருகில் கொண்டு சென்றாள்.
தன் வாயருகில் வந்த கரத்தைப் பிடித்து நிறுத்தியவன், “உனக்குத்தானே பிறந்தநாள்…” என்றபடி, அவள் கையில் இருந்ததை வாங்கி அவள் வாயில் ஊட்டிவிட்டான். மெல்ல வாயைத் திறந்து வாங்கிக் கொண்டவள் விழிகளில் சர்ரென்று சுரந்தது கண்ணீர்!
“தாங்க்ஸ் டா!” கேக்கை விழுங்காதே சொன்னவள், “உனக்கு…” தன் கரத்தில் மிச்சமாக இருந்ததை கொடுக்க வாய் திறந்து வாங்கிக் கொண்டவன் பார்வையும் அப்பால் இப்பால் நகரவில்லை; அவள் வதனத்தில் தான்.
அவள் தளிர் விரல்களில் ஒட்டியிருந்த கேக் கிரிமை ஒரு பார்வை பார்த்தவள், “அதென்ன வந்ததும் அப்படியொரு முறைப்பு! ம்ம்…வா எண்டு கூப்பிடாமல் மெல்ல கலைச்சு விடப்பார்த்தனி தானே?”
இதழ்கள் முணுமுணுக்க, விரல்களோ, அவன் மூக்கில் அப்படியே ஒரு கோட்டை இழுத்தது.
இதைச் சற்றுமே எதிர்பாராதவன், “ஏய்!” விலக முதல் அப்படியே அவன் நெஞ்சில் ஒன்றிக்கொண்டாள், மீரா.
கனன்று கிடந்த நெஞ்சின் மீது பூப்பந்தாய் சாய்ந்தவளை ‘எப்படிக் காயப்படுத்துவது? கலங்கிப் போனான், அவன்.
“என்ன ஏய்!” கிசுகிசுத்த குரலில் சொன்னவள் கையில் மிச்சமிருந்த கிரீமை அவன் அணிந்திருந்த கிரீம் கலர் டீசேர்ட்டில் ஆற அமரத் துடைத்தாள், கடைக்கண் பார்வை அவன் முகத்தையும் அதில் ஆடித் திரிந்த உணர்வுகளையும் படிக்க முயன்று நிற்க!
அவள் செய்கை ஒவ்வொன்றிலுமே ஆட்டம் கண்டது, இவன் மனம்.
இத்தனை நேரமாகக் கொதித்த கொதி கூடத் தணிந்து விடுமோ என்றளவுக்கு, அவள் அருகாமை அவனைக் குளிர்வித்ததை உணர்ந்தவன் அக்கணம் முற்றிலுமாகத் தடுமாறித்தான் நின்றான்.

