23
ஒரு புயல் நாளில் தன்னை நெருங்கியிருந்தவள், இன்றோ, புயலாகத் தாக்கிவிட்டுச் சென்றதில் நிலைகுலைந்து நின்றான், ஜோரிக்.
எல்லாம் அவள் உரு மறையும் வரை தான். மறுகணம், சுயம் வரப்பெற்றவனின் கனத்த இதயத்திலிருந்து நெடிய மூச்சொன்று கடினப்பட்டு வெளியேற முயன்ற வேளை, மீண்டும் வந்து நின்றாள், மீரா.
அத்தனை உக்கிரத்தைக் காட்டிவிட்டுச் சென்றவள் அக்கினிப் பார்வையோடு வந்து நிற்க, இவன் உள்ளமோ, அவனையும் அறியாது அதிர்ந்தே போயிற்று!
அவள் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தான். அதையும் கடந்து சினத்தைக் காட்டி வாயடைக்க வைத்திருந்தாளே அவள். அதுவும் கன்னத்தில் விளாசிவிட்டு அவள் சென்ற பின்னர் இவன் இதயம் பலமாக ஏங்கித் தவித்தது. அந்த ஏக்கம் தந்த நெடுமூச்சு கூட முழுமையாக வெளியேறி முடியவில்லை; மீண்டும் வந்து நிற்கிறாளே!
“மீ…ரா!”
“என்ர பேரச் சொல்லாத!”
ஆட்காட்டி விரல் நீண்டிருந்த விதம் அவன் விழிகளை குத்திக் குதறிவிடும் போலிருந்தது.
‘சற்று முன் காண்டீப் என்று குழைந்தவளா இவள்!’
கணத்தில் தோன்றிய எண்ணம், அவள் சீறல் வந்த வேகத்தில் மறைந்தது.
“என்னடா பார்க்கிற? வா சேர்ந்து வாழுவம் எண்டோன்ன பல்லைக் காட்டிக் கொண்டு வந்திருவன் எண்டு நினைச்ச எல்லா? அப்படிப்பட்ட உனக்கு…” சொல்லிக்கொண்டே தான் கொண்டு வந்து வைத்த உணவுப் பையை எடுத்தவள், என்ன செய்யப் போகிறாள் என்று இவன் குழம்பி நிற்கையில் “உனக்குப் பிடிச்சதாப் பார்த்து சாப்பாடா கொண்டு வந்து தர வேணும்?” அத்தனையையும் அவன் முகத்தில் விசிறி அடித்தாள்.
உச்சகட்ட அதிர்வில் ஆடிப்போனவன் சுதாகரித்து, ‘இப்படி ஒரு சம்பவத்தைப் புரிந்தவள் அவள் தானா?’ என உணரும் முன்பே கண்ணிமைப்பொழுதில் வெளியேறியும் இருந்தாள்.
அப்படியிருந்தும் “ஏய் மீரா! உனக்கு என்ன பைத்தியமா?” உச்சஸ்தானியில் கத்தினான், ஜோரிக். தன் மீதும் அப்பகுதியெங்கும் சிதறிவிட்ட உணவைப் பார்த்தவனுக்கு கண்மண் தெரியாது கோபம் தான் வந்தது.
“ஒரு பருக்கையையும் வீணாக்க மாட்டன்.” அன்றொருநாள் சொன்னது மிகச் சரியாக நினைவில் வந்து போனது.
“ஏய்! உன்ர வீட்டில என்னப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக் கதைச்சவே! நான் அப்பிடி என்ன கெட்டதாக் கேட்டுட்டன் எண்டு இந்தக் கோபம்? இரு உனக்குச் செய்யிறன்.”
எதிரில் அவள் நிற்கிறாள் என்ற வகையில் கடிந்தவாறே முகத்தையும் உடையையும் சுத்தப்படுத்தும் நோக்கில் நகர முயன்றவன், “ஜோரிக்!” என்றபடி வந்து நின்ற பீட்டரைக் கண்டுவிட்டு அசையாது நின்றான்.
பேரனைச் சந்திக்கச் சென்றவள் வருகிறாளா என்று அங்கேயே கண் வைத்திருந்தார், பீட்டர்.
காரணம், பேரன் அவர்களில் எவ்வளவு கோபம் கொண்டிருந்தான் என்றுதான் தெரியுமே!
அப்படியிருக்க, அவன் வீட்டிலிருந்து தடதடவென்று வந்த மீராவோ பீட்டரைக் கடந்து செல்ல, இருவருக்கும் இடையில் பிரச்சனை என்று ஊகித்துவிட்டவர், அவளை நிறுத்திப் பேச முயன்றார்.
அதற்காக, “என்னம்மா மீரா, கொண்டு போனவைகளைச் சாப்பிட்டானா?” என்றுதான் ஆரம்பிக்க வேணுமா?
அவரைக் கடந்து முன்னேறியிருந்தவள் ஒரு கணம் தான் நின்றிருப்பாள். திரும்பி, பீட்டரைப் பார்த்தவள் விழிகளில் சிறுதுளி கலக்கம் இல்லை; அந்தளவுக்கு கோபம் மட்டுமே!
“மீராம்மா!” தன்மையாக அழைத்தபடி நெருங்கியவரைத் தாண்டிக்கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் ஜோரிக்கின் வீடு நோக்கிச் செல்ல, என்ன ஏதென்று நின்றவர், போன வேகத்தில் அவள் திரும்பி வந்து வெளியேறியதையும், காரைச் சீறவிட்டபடி செல்வதையும் பார்த்துவிட்டு கவலையோடுதான் மாடியேறினார்.
அங்கே, பேரனும் அவன் வீட்டு வரவேற்பரையும் இருந்த நிலை பார்த்தவருக்கு பேரனில் மிகுந்த எரிச்சல்தான் உருவானது.
‘தேடிவாற அன்பான வாழ்க்கையை, அதிண்ட அருமை தெரியாது தட்டி விடுறானே! இது தேவைதான்!’ கடுகடுவென்று அவனைப் பார்த்து வைத்தார்.
“எனக்குத் தெரிஞ்ச நாளா மீரா எதுக்குமே கோவப்பட்டதில்ல. சிரிக்கச் சிரிக்கப் பழகத் தெரிஞ்சவள். கொஞ்சமுதல் எவ்வளவு ஆசையா உன்னச் சந்திக்க வந்தாள் தெரியுமா?” என்றவரை, முறைத்தான் பேரன்.
“பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து, வேறென்ன எதிர்பார்த்தாள்? உனக்குப் பிடித்தவையாப் பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு வந்தாள்.” சொன்னவர், நினைவு வந்தவராக, “அப்பவும், ‘உங்கட பேரன் எசகு பிசகாக் கதைச்சானோ விளாசிவிட்டிருவன், குறை நினையாதீங்க’ எண்டும் சொல்லீட்டுத்தான் வந்தவள்.” என்றுசொல்லி, நக்கல் முறுவலோடு அவனையும் அவ்விடத்தையும் அளந்தார்.
“அது பார்த்தால்…ம்ம்…ஏன் ஜோரிக் அடியும் விழுந்ததா என்ன?” கேட்டவர் குரலில் இருந்த நகைப்பில் கொலை வெறியானான், அவன்.
“உங்கட பேரன் நான்…அவள் இல்லை. அவள் ஒரு பிசாசு! இதுக்கு அவள் பதில் சொல்லியே ஆகவேணும்.” அடிக்குரலில் முழங்கினான்.
“இப்பிடி அவள் நடந்துகொண்டாள் எண்டா…நிச்சயம் நீ ஏதோ சொல்லி இருக்கிற. அதுக்கு அவள் பதில் சொல்லி இருக்கிறாள்.” அவன் நின்ற கோலத்தைச் சுட்டிக் காட்டினார், பீட்டர் .
“ஒப்பா!(தாத்தா)”
“அது உனக்கு நினைவிருந்தால் சரி.” என்றவருக்கு பேரன் நின்ற கோலத்தைவிட, தான் கதைக்கக் கதைக்க நிற்காது சென்ற மீராவும், அவள் காரோட்டிச் சென்ற வேகமும் தான் நினைவில் முதன்மையாக நின்றன.
“பச்! உங்களோட கதைச்சுப் பிரயோசனம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் கண்ணை மூடிக்கொண்டு அவளுக்காகக் கதைக்கிற ஆட்கள்.”
அடிக்குரலில் முணுமுணுத்தபடி குளியலறை நோக்கி நகர்ந்தான், ஜோரிக்.
“இங்க பார் ஜோரிக், மீரா இண்டைக்கு அவள்ட வீட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னாள்.” நடக்கத் தொடங்கியவன் திரும்பி, “அதுக்கு? அவள் எங்க வேணுமெண்டாலும் போகட்டுமே! எனக்கு என்ன வந்தது?” என்றான் மறையாத கோபமும் எரிச்சலுமாக!
“இல்ல ஜோரிக், காரை எடுத்துக்கொண்டு போறதைப் பார்க்கவே திக்கெண்டு இருக்கு. அவ்வளவு வேகமாகப் போறாள் தெரியுமா?” கவலையாகச் சொன்னார், பீட்டர்.
சட்டென்று அசைவற்று நின்றான், ஜோரிக். மறுநிமிடம் குளியலறைக்குள் புகுந்து அரையும் குறையுமாக முகத்தை அலம்பிய வேகத்தில் வெளியே வந்தவன், “போய்ப் பார்த்திட்டு வாறன்” முணுமுணுத்தபடி, கார்ச் சாவியையும் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
“அவளுக்கும் எனக்கும் இடையில எதுவுமே இல்ல. இனியும் அப்படியெதுவும் வரும் வாய்ப்பும் இல்ல எண்டு அடித்துச் சொல்லுறவன் செய்யும் செயலா இது? இந்த அன்பையும் அக்கறையையும் வச்சுக்கொண்டு இதெல்லாம் என்ன?”
சத்தமாகவே முணுமுணுத்துக்கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்ய முயன்றார், பீட்டர்.
‘வீடு சென்றதும், ஆவல் பொங்க எதிர்கொள்ளும் மனைவிக்கு என்ன பதில் சொல்வதாம்?’ அவர் மனதில் இக்கேள்வியும் சுழன்றோடியது.
மின்னலாகச் சென்று காரில் ஏறியமர்ந்து அவள் வீடு செல்லும் பாதையில் செலுத்திய ஜோரிக்கின் மனமோ, ‘அவள் கவனமாப் போய்ச் சேர்ந்திருக்க வேணும்’ மீண்டும் மீண்டும் உருப்போட்டது.
சற்றுத்தூரம் தான் சென்றிருப்பான், ‘சும்மா நேரத்திலயே சாகசம் காட்டுறன் எண்டுதான் கார் ஓடுவாள். இப்ப என்னில உள்ள கோபத்தில…’ என்ற எண்ணம் இம்சை செய்து அவன் பொறுமையை விரட்டிவிட்டதில் கைப்பேசியை எடுத்தான்.
அப்போதும் சட்டென்று அழைப்பை ஏற்படுத்தவில்லை. கணம் தயங்கினான் தான். பின்னர், முதல் முதலாக மீராவுக்கு அழைத்தான்.

