அந்தோ பரிதாபம்! எப்படியும் அழைப்பை ஏற்பாள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நன்றாகவே அடிவாங்கிக் கொண்டது.
‘நான் முகம் திருப்பினாலும் வலிய வருபவள் அல்லவா?’ என்று, அவள் கோபத்தைக் குறைத்து எண்ணிவிட்டானோ!
“பச்!” கைபேசியைப் போட்டுவிட்டு வேகமெடுத்தவன் மனமோ எண்ண அலைகளின் பிடியில்.
உண்மையில் திருமணபந்தம் என்றதில் எல்லாம் அவனுக்கு நாட்டமில்லையே! அதேநேரம், மீரா என்பவள் இவனை எவ்வாறு நேசிக்கிறாளோ அதற்குச் சற்றும் குறைவில்லாதது, இவன் நேசமும்.
அதற்காக, திருமணமின்றி சேர்ந்து வாழ்வாள் என்றெல்லாம் கனவிலும் எண்ணிப் பார்த்தவன் இல்லை. அந்தளவுக்கு விபரம் இல்லாதவனா என்ன?
அவனுக்குத் தெரிந்த இந்நாட்டு வாலிபன் ஒருவன், இலங்கையிலிருந்து இங்கு வந்து பல வருடங்களாக வசிக்கும் குடும்பத்துப் பெண்ணொருத்தியை விரும்பினான். பெண்வீட்டு எதிர்ப்பையும் மீறி இருவரும் தனியாகச் சென்று வசிக்கத் துணிந்தார்கள். அதையறிந்த பெண் வீட்டார் மகளே இறந்துவிட்டதாக முடிவெடுத்து ஒதுக்கி விட்டார்கள். பெரிய தலைகுனிவு நடந்துவிட்டதாக அவர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்திருக்கிறான்.
இவனும் இலங்கைதானே? என்றைக்கும் அந்த நாட்டுக்குரிய அடையாளத்தோடு வளர்க்கப்பட்டவன் இல்லை. அதற்காக, அதை அறியாதவனோ, மதியாதவனோ இல்லை. இந்நாட்டு வளர்ப்பில் வளர்ந்தான் என்றதற்காக கட்டவிழ்த்துத் திரிபவனும் இல்லை. தனி மனித ஒழுக்கத்தின் தேவை நன்கறிந்தவன், மதிப்பவன்.
மீராவைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்திலிருந்தே அவளை விட்டு ஒதுங்க நினைத்தான். இப்படியே அவள் அமைதியாக இருந்திருக்க, அவனும் அவள் வழிக்கே சென்றிருக்க மாட்டானே.
அவளிலும் அவள் வீட்டினரிலும் மிகுந்த கோபம் கொண்டிருந்தான் தான். காரணம், தன் பிறப்பை அவர்கள் கேவலமாகக் கதைத்ததில். அதற்கு அவர்கள் யார்? இந்தக் கோபம் கூட நாள்ச் செல்ல செல்ல மறந்து, மறைந்து போயிருக்கும்.
அப்படியிருக்கையில், ‘இண்டைக்கு அவளாகத்தானே வந்தாள். என்ர கோபத்தையெல்லாம் கொட்டிடச் சந்தர்ப்பம் அமைத்துத் தந்தாள். அவளுக்குக் கோபம் வருமெண்டு தெரிஞ்சு, வேண்டுமெண்டே தான் அப்பிடிக் கேட்டன். அதுக்காக…’ தன்னை ஒருதரம் குனிந்து பார்த்தான்.
உணவின் கலப்பட வாசம் கார் முழுதும் பரவி மீராவின் கோபத்தைப் பறைசாற்றி நிற்க, சட்டென்று வாய்விட்டு சிரித்து விட்டான், அவன்.
“கையில எதுவும் கிடைச்சிருந்தால் கொலையும் செய்திருப்பாள்!” என்றவனுக்கு, இத்தனை நாட்களை விடவும் அவளை மிகவும் பிடித்திருந்தது.
அதுவும், அவளின் ‘காண்டீப்’ என்ற கிசுகிசு குரல் இப்போதும் அவன் செவியோரம் தழுவிச் செல்ல, அவள் ஊட்டிவிட்ட கேக்கின் தித்திப்பை இப்போதான் முழுமையாய் உணர்ந்தது நா!
ஆனால்? பெரிதாக இழுத்துக்கொண்டிருந்தது அந்த ‘ஆனால்’!
‘இதெல்லாம் என்றாவது சாத்தியப்படும் விசயமா என்ன?’
‘வீட்டாரின் சம்மதத்தோட கலியாணம் செய்வாளாமே! ஏதோ, பாட்டி தாத்தா அங்க போனது தெரியாத மாதிரியே கதைச்சாளே!’ என எண்ணியவனுக்கு, ‘உண்மையாவே தெரிஞ்சிருக்காதோ!’ எனும் சந்தேகம் இப்போதான் வந்து தொலைத்தது.
“பச்! ஒருதரம் அவளிட்டக் கேட்டிருக்கலாமோ! அப்பிடித் தெரியாமல் இருந்திருந்தால் அவள் பாவமல்லவா?”
சீறிப்பாய்ந்த கார் போலவே அவன் மனமும் சீறலாகவே கிடந்தது.
மிக வேகமாகச் சென்று அவள் வீட்டு வாயிலருகில் நிறுத்தி உள்ளே கார் நிற்கின்றதா எனப் பார்த்தான்.
அங்கு இரு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. “ம்ம்… இதில அவளிட கார் இல்லையே!” முணுமுணுத்தபடி, பாதையின் இருமருங்கும் பார்த்தவனுக்கு, ‘வீட்டில காராஜ் இருக்கே …அதுக்குள்ள …” என்ற சந்தேகமும் எழுந்தது.
மீண்டும் மீராவுக்கு அழைத்தான். பொறுமையாகக் காத்திருந்தான். அவளோ அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போலும். எடுக்கவே இல்லை. மனத்துள் எழுந்த சோர்வு, அவள் அழைக்கும் பொழுதெல்லாம் தான் உதாசீனம் செய்ததை நேர காலம் தெரியாது குத்திக் காட்டியது.
‘பேசாமல் இறங்கிப் போய்ப் பார்க்க வேண்டியதுதான்.’ பின்புறமாகச் சற்றுத் தள்ளியிருந்த நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், அங்கே, அருகில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவனைக் கண்டு அப்படியே நின்றான்.
“அவள் மாமா மகன்…” முணுமுணுத்தவனுக்கு, சட்டென்று பெயர் நினைவு வரவில்லை.
‘இவனிட்டக் கேட்கலாமா?’ தயங்கினான்.
அவர்கள் யாருக்குமே தன்னைப் பிடிக்காது என்று நன்றாக அறிந்ததாலோ என்னமோ தாடைகள் இறுகி மனதின் இறுக்கத்தை வெளிக்காட்டி நின்றன.
‘ஃபோன் பண்ணினால் அவள் எடுக்கிறாள் இல்லையே! பிறகு என்ன செய்யிறது? இவனிட்டக் கேட்டுப் பார்ப்பமே!’ ஆதவ்வை நோக்கி ஓரடி எடுத்து வைத்திருப்பான், ஏதோ யோசனையில் நடந்துகொண்டிருந்த ஆதவ், தற்செயலாகத்தான் இவனைப் பார்த்தான். அடுத்தநொடி, விழிகள் இடுங்கப் பார்த்தபடி நின்று விட்டான்.
‘இவன் எங்க இங்க?’ சட்டென்று திரும்பித் தன் வீட்டையும் சற்றே தள்ளியிருந்த அத்தை வீட்டையும் பார்த்தவனுள் எரிச்சலை மீறிய பதற்றம்.
‘பிறந்தநாளும் அதுவுமா இந்தா வாறன் எண்ட மீரா வரேல்ல எண்டு ஏற்கனவே யாருக்குமே மனம் சரியில்லை. இதில இவன் வேற! இப்ப எதுக்கு வந்திருக்கிறானோ?’
ஆதவ்வின் பார்வையில் தயங்கி நின்றவனை ஓரெட்டில் நெருங்கியவன், வாய் திறக்க முதல், அவன் நின்ற கோலத்தில் ஆச்சரியப்பார்வை பார்த்தான்.
‘இந்தாள் எங்க விழுந்து எழும்பி வந்திருக்கு?’ பாதை வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான்.
அவனோ தயக்கத்தை உதறி, “ஹை!” கரத்தை நீட்டினான்.
அவ்வளவு இலேசில் பற்றிக்கொள்ளவில்லை, ஆதவ்.
அறியாதவரே என்றாலும், இன்முகமாய் நலம் விசாரிக்கும் சிநேகமான நாட்டில் ஆதவ்வின் செயலில் முகம் சுருங்கினான், ஜோரிக்.
‘இப்ப இவனுக்கு ‘ஹை’ சொல்லவா வந்தன்?’ தன்னையே கடிந்துகொண்டான்.
“மீரா…மீரா வீட்டுக்கு வந்திட்டாளா?” மீண்டும் தயக்கம்; என்றாலும் கேட்டுவிட்டான்.
மேலும் அதிர்ந்து போனான், ஆதவ். நெற்றி சுருங்க ஜோரிக்கைப் பார்த்தவன், “மீரா இண்டைக்கு…” என்று ஆரம்பிக்க, “இத்தாலியானாவில தான் பிரெண்ட்ஸுக்கு பார்ட்டி குடுத்தாள்.” என்றான், ஜோரிக்.
கன்றிய முகத்தோடு முறைத்தான், ஆதவ். மீராவிலும் எக்கச்சக்கக் கோபமே வந்தது.
“பார்ட்டி முடிஞ்ச பிறகு என்னட்ட வீட்டுக்கும் வந்தவள். வந்த இடத்தில எங்களுக்குள்ள சின்னச் சண்டை…” கன்றிச் சிவந்த முகத்தோடு நின்ற ஆதவிடம் தன்னைக் காட்டியவன், “எனக்குக் கொண்டு வந்த சாப்பாட்டைத் தூக்கி…” மிகுதியை சைகையில் சொல்லி முடித்தான்.
அதைச் சொல்கையில் அவனையும் மீறி உதடுகளில் முறுவல் நெளிந்தது.
அவனையே பார்த்திருந்த ஆதவ்வினுள் மின்னலாகத் திடுக்கிடல்.
இந்த விரிந்தும் விரியாத முறுவல் அவனுக்கு மிகமிகப் பரீட்சயமானது. அவன் அன்பு அக்காக்கள் இருவருமே இப்படித்தானே முறுவல் செய்வார்கள்!
கண்கலங்க அவனையே பார்த்தான், ஆதவ். சற்றுமுன் மனத்தை வியாபித்த கோபமும் ஆத்திரமும் எரிச்சலும் ‘இருக்கவா? போகவா?’ ஒற்றைக்காலில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தன.
ஆதவனையே பார்த்திருந்த ஜோரிக்கின் கண்களுக்கு அவன் மாற்றம் புரியவில்லை. அவனுக்கு மீரா பற்றி அறிந்தாலே போதுமென்றிருந்ததே!
“காரை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தாளா? அதுதான் கவனமாக வந்து சேர்ந்திட்டாளா எண்டு பார்க்க வந்தன். ஃபோன் பண்ண பண்ண எடுக்கிறாளும் இல்லை.” குரல் பிசிறியது அவனுக்கு!
ஜோரிக்கின் பதற்றத்தைத் தெளிவாகவே உணர்ந்தான், ஆதவ்.
“அவள்…” தன்னைமீறி ஆரம்பித்தவன் சட்டென்று நிதானித்தான்.
‘இங்க வரேல்ல, அறையில எண்டு நாம சொல்ல இந்தாள் அங்க போய் நின்றால்? மீரா இப்படிக் கோபப்பட்டிருக்கிறாள் எண்டால் அது நிச்சயம் சின்ன விசயம் இல்லை. இனி இந்தாளின்ட முகத்திலும் விளிப்பாளோ என்னவோ!’ மைத்துனி பற்றி நன்றாக அறிந்தவன் மனதுள் எண்ணிக்கொண்டே, “அவள் வந்திட்டாள்.” என்றான், சுருக்கமாக.
“அப்பாடா!” தன்னையும் மீறிப் பெருமூச்செறிந்தான், ஜோரிக்.
“அப்ப நான் போயிட்டு வாறன்.” சிறு சினேக முறுவலோடு மீண்டும் அவன் கைநீட்ட, மறுக்க நினையாது பற்றி விடைகொடுத்தான், ஆதவ்.
அவன் கார் சென்று மறையும் வரை அங்கேயே பார்த்து நிற்கவும் செய்தான்.

