24
இத்தாலியானாவில் இருந்து புறப்பட்ட வேகத்தில், தான் தங்கியிருக்கும் அறைக்கே வந்துவிட்டாள், மீரா.
குறிப்பிட்டளவு வேகத்தைவிட சிறிது அதிகமானாலே நல்ல தொகையில் ஃபைன் கட்ட வேண்டிவரும். வீதியின் இருமருங்கிலும் ஆங்காங்கே வைத்துள்ள கமராக்கள் தம் கடமையில் மிகவும் கருத்தாகச் செயல்படுபவையாச்சே!
அப்படியிருக்கையில், இவள் இன்றைக்கு வந்த வேகத்துக்கு? நிச்சயம் சில நூறு யூரோக்கள் வந்து சேரும்.
நல்லவேளையாக காவல்துறையின் கண்ணில் நேரடியாகப்படவில்லை.
தான் அதிக வேகத்தில் வருவது தெரிந்தும் குறைக்க முடியவில்லை, அவளால்.
இப்படி வேகமாக ஓடுவதில் சரி மனத்தின் வெம்மையைக் குறைக்க நினைத்தாள்; அது எங்கே?
வீட்டினுள் நுழைந்ததும், எதிர்ப்பட்ட வீட்டுக்காரப் பெண்மணிக்கு ஒரு ‘ஹை’ சொல்லிவிட்டு மாடியேறியவளை, அவரே விசித்திரமாகத்தான் பார்த்தார்.
“நின்று சிலநிமிடங்கள் சரி கதைக்காமல் போக மாட்டாளே! என்ன நடந்திட்டு?” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே தான் அப்பால் சென்றார், அவர்.
அதுவே, இவளை எதிர்பார்த்திராத தோழியர் முகத்திலும் யோசனை.
“என்னப்பா! வீட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னியே?” என்றவர்கள், மீராவின் முகத்திலிருந்த கடினத்தைப் பார்த்துவிட்டு தம்முள் பார்வைப் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள்.
அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவள் கையிலிருந்த கைப்பேசியையும் கைப்பையும் மேசையில் வைத்த வேகத்தில், மாற்றுடைகளோடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
குளிர்காலத்தில், சற்றே அதிகளவு சுடுநீரில் குளிப்பதென்றால் கொள்ளைப்பிரியம் இவளுக்கு. இன்றோ, அவளே தகித்து நிற்கிறாளே! அதைப் போக்கிவிடும் ஆவேசத்தில் சில்லிடும் குளிர் நீரைத் திறந்து அதனடியில் நின்றாள்.
“ஹையோ! எனக்கு என்ன விசர் பிடிச்சிட்டா?”
உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை சுர்ரென்று தாக்கிய குளிரிலிருந்து சட்டென்று விலகியவள், நடுநடுங்கியபடியே வெதுவெதுப்பான நீருக்கு மாற்றிவிட்டு தலையைக் கொடுத்தாள்.
அப்போதோ மூச்சு முட்டியது. சவரிலிருந்து பூவாய் கொட்டிய நீரிலிருந்து தலையை மட்டும் விலக்கி, முகத்தில் வழிந்த நீரை இரு கரங்களாலும் வழித்து விட்டவளுக்கு இப்போதோ முழுக்கோபமும் தன் மீதுதான்.
கனத்துக்கிடந்த இதயம் கசந்து வழிந்தது.
‘போயும் போயும் அவனப் போய் மனசார விரும்பினனே! அவனுக்காக என்ர வீட்டாக்கள மொத்தமா எதிர்த்தும் இருக்கிறன்.
அந்தளவுக்கு ஒருத்தனை எடை போடத் தெரியாத முட்டாளா நான்?
கடைசியில், அம்மாவும் மற்றவேயும் சொன்னது போலவே அவன் குணம் இதுதான் எண்டு காட்டிட்டானே!’
அண்ணாந்து மெல்லிய கம்பிக்கொடுகளாக இறங்கிய வெது வெது நீரை முகத்தில் மட்டுமே தாங்கி நின்றாள், மூச்சடைக்க அடைக்க!
‘அவன், இந்நாட்டு முறையில வளர்ந்தவன்; பரஸ்பரம் விரும்பிறதால சேர்ந்து வாழலாம் என்றான்; இதில என்ன பிழையைக் கண்ட?’ இடித்துரைக்க முயன்றது, நேசம் வைத்த பாவப்பட்ட மனம்.
சட்டென்று முகத்தை விலக்கி ஒற்றைக் கரத்தால் நீரை வழித்து விட்டு ஆழ் மூச்செடுத்து விட்டவள், பற்களை நறநறத்தாள்.
‘அப்பிடியே வச்சுக் கொள்வமே! இங்க, ‘பரஸ்பரம் விரும்பிறம் தானே? இனி என்ன? சேர்ந்து வாழ்வமே!’ எண்டு தீர்மானிக்கிற ஆருமே பிரிவப் பற்றிக் கதைக்கிறேல்லயே!
சேர்ந்து வாழ முதலே, ‘விருப்பங்கள் மாறேக்க நான் என்ர வழி, நீ உன்ர வழி’ எண்டு கதைப்பீனமா என்ன?
காலம் முழுதும் ஒண்டா வாழ, இப்பிடிச் சேர்ந்திருக்கிற நாட்களை ஒரு ஆரம்பக் கட்டமாவே பார்ப்பீனம். அங்க, அது, புரிந்துணர்வுக்கான காலமாப் பார்க்கப்படுறதே ஒழிய, தேவைகள் தீர்ந்தோன்னயோ, அலுப்படிச்சோன்னயோ இலகுவாப் பிரிஞ்சு போறதுக்கான காலமாப் பார்க்கிறதில்லையே!
இதைவிட மேலான துணையொன்று கிடைச்சா எண்டோ, இலகுவா விலகலாம் எண்டோ ஒரு எண்ணமும் அங்க இருக்கிறதில்லையே!’
மீண்டும் கொதித்துப் போனாள், மீரா.
‘அதைச் சொல்லேக்க அவன்ட முகத்தில பிரதிபலித்த எகத்தாளம் தான் எவ்வளவு?’
“கள்ள ராஸ்கல்! என்னப்பற்றி எந்தளவுக்குக் கேவலமாக நினைச்சிருந்தா அப்படியொரு பார்வையும் பேச்சும் வந்திருக்கும்?”
வாய்விட்டே சொன்னவளின் கண்கள் மளுக்கென்று நிறைந்து தளம்பி, வழிந்த நீரோடு சேர்ந்து மறைந்தது. இதுபோலவே, மனதுள் பதிந்துவிட்ட அவனையும் கழுவி அகற்றிட விரும்பினாள், அவள்.
“டேய் கள்ள நாயே! இந்தளவில உன்னப் பற்றி வெளிக்காட்டிட்டியே! அந்தளவில எனக்கு நல்லதுதான் செய்திருக்கிற. உன்னைப் போல ஒருவனை விரும்புகிறன் எண்டு சொல்லி என்ர வீட்டில எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டனே!” அரற்றியவளுக்கு, மிகுந்த அவமானமாகவும் இருந்தது.
“என்னில என்ர சொந்தங்கள் வச்ச நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தன். அவையளக் கலங்க வச்சன். வீட்டிலும் சந்தோசம் இல்லாமல் போகச் செய்தன். எல்லாம் ஆருக்காக? எதுக்காக?
இண்டைக்கு நீ சொன்னவைகளைக் கேட்டு அப்படியே குளிர்ந்து போகவா?
என்ர நேசத்த நீ அற்பமா நினைச்சிட்டியே எண்டு உணர்ந்து குன்றிக்குறுகி நிக்கவா?”
எதிரில் நிற்கிறான் எனும் வகையில் வாய்விட்டே கதைத்தாள்.
“நான் உங்களுக்கெல்லாம் செய்த தவறுக்கு நிச்சயம் பரிகாரம் செய்திருவன் அம்மா.” தாயின் நினைவில் மீண்டும் மீண்டும் கண்ணீர் சொரிந்தாள்.
‘உங்கட பயம் எவ்வளவு சரியானது எண்டும் விளங்கிட்டிது மாமி!’ மதுராவிடம் ஆத்மார்த்தமாக மன்னிப்பை யாசித்தாள்.
‘இனிமேல் என்ர வாழ்க்கை பற்றிய தீர்மானம் உங்கட கையில!’ உறுதியாகச் சங்கல்பம் கொண்டாள்.
எந்த விசயத்தையும் வைத்து இழுத்தடித்து, அதிலே மூழ்கிக் கிடந்து என்றில்லாது, யதார்த்தமாக எதிர்கொள்ளும் இவளின் சுபாவம் சட்டென்று சுதாகரித்துவிடவே முனைந்தது.
அழுது கண்ணீர் விட்டு என்றெல்லாம் அறிந்திராதவள் இவள். அதையும் விட, கண்ணீர் மிகப் பெறுமதியானது, தேவையற்று விரயம் செய்யவே கூடாது என்று எண்ணுபவள், கொஞ்சமும் தகுதியில்லாத நேசத்துக்காக அதை விரயம் செய்வாளா?
விழிகளின் கசிவைத் தடை செய்யவே முயன்றாள்.
தகுதியில்லாதவன் மீது அன்பு வைத்த தன்னையே கடிந்து கொண்டவள், அவன் மறுப்புத் தரும் வலி தனக்கு வேண்டியதுதான் என்றே எண்ணிக் கொண்டாள்.
இப்படி, இவள், குளியலறைக்குள்ளிருந்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்க, கதவில் தட்டினாள் அறைத்தோழி.
“மீரா, உன்ர வீட்டில இருந்து கால் பண்ணினம், கதவத் திற!”
“இந்தா வாறன், பத்து நிமிசத்தில் எடுக்கிறன் எண்டு சொல்லு!” என்றவள், விறுவிறுவென்று குளித்து முடித்து வெளியில் வருகையில் முகத்தில் ஒருவித பிடிவாதமான அமைதி நிலவியது.
“அம்மா சொறிம்மா, நல்லாக் களைச்சுப் போனன். தலையும் இடிக்குது, அதுதான் ரூமுக்கு வந்திட்டன்.” என்று அவள் சொன்ன பொய்யை அந்தப்புறம் அவள் தாய் சந்தேகிக்கவில்லை.
“தலையிடியா? இப்ப எப்படிம்மா இருக்கு? அப்பாவ வரச் சொல்லவா? அப்பம்மா ஆட்கள் எல்லாரும் உனக்காகப் பார்த்துக்கொண்டிருக்கினம்.” என்று தாய் சொல்ல, அவள் விழிகள் மீண்டும் கலங்கவே செய்தன.
“அப்பா வரத்தேவையில்லம்மா. நாளைக்கு விடியக்காலம நேரத்துக்கே வாறன்.” ஒருவழியாகச் சமாளித்து வைத்துவிட்டு வந்து, தோழிகளின் கேள்விபார்வைகளுக்குச் சிறுபுன்னகையைச் சிந்திவிட்டு மௌனக் கவசத்தோடு படுக்கையில் விழுந்துவிட்டாள்.
“மீரா! என்ன நடந்தது?” அவளருகில் வந்தமர்ந்தார்கள், தோழிகள்.
“ஒன்றுமில்லையப்பா, இலேசான தலையடி.”
“அப்ப ஏதாவது வெது வெதுப்பாக் குடிக்கிறியா?” என்று, ஒருத்தி அவள் தலையை வருட, “உன்ர பாய் ஃப்ரெண்டோட சண்டையா?” அடுத்தவள் கேட்டாள்.
ஜோரிக் பற்றி இவர்களிடம் சொல்லியிருந்தாளே! எத்தனை உயர்வாகச் சொல்லியிருந்தாள்.
அத்தனையும் பொய்த்துப் போனதே என்று சொல்ல வேணுமா?
‘இது எல்லாம் சகஜம். விட்டுத் தள்ளு. உனக்கு ஒரு நல்ல துணை கிடைப்பான்.’ என்ற ரீதியில் சமாதானம் சொல்வார்கள்.
அதைக்கேட்கும் மனநிலை இல்லை என்றாலும் அவனை பாய் ஃப்ரெண்ட் என்று சொல்லிக் கேட்கவும் பிடிக்கவில்லை. அவன் வேண்டாம் என்று ஒருதரம் முடிவு செய்தது செய்ததாகவே இருக்கட்டும்.
தோழிகளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள், மீரா.
“எனக்கு ஒண்டும் வேணாம்.” என்று முதல் கேட்டவளிடம் சொன்னவள், “எனக்கு பாய் ஃப்ரெண்ட் எண்டு யாருமில்ல!” என்றாள், கடினமாக.
கேட்டவர்களோ, விழி விரித்தார்கள். ‘எதுவோ பிரச்சனை!’ பார்வையால் பேசிக்கொண்டார்கள்.
“சரி மீரா, எதுவெண்டாலும் இப்ப மனசக் குழப்பாமல் தூங்கு! என்ன எண்டாலும் ரெண்டு மூணு நாளைக்குப் பிறகு நல்லா யோசிச்சு முடிவெடு!” ஒருத்தி சொல்ல, “அதைத்தான் நானும் சொல்லுறன்.” ஆமோதித்தாள் மற்றவள்.
“இதில யோசிக்க எதுவுமே இல்லை. அவன்…அவன் இனி என்ர வாழ்க்கையில இல்லவே இல்லை.” என்றவள், “நான் தூங்கப் போறன்.” சுவர்ப்புறமாகத் திரும்பிக்கொள்ள, “சரி தூங்கு!” நகர்ந்துவிட்டார்கள், தோழிகள்.
இருவருமே நல்ல தோழிகள் தான். எதையும் மறைக்காதும் பகிர்வாள் தான். ஆனால், அதில் ஒரு அளவு இருக்கும். மனதுக்கு மிக நெருக்கமான தோழிகளாக ஆரணி, ஆரபி இருந்ததாலோ என்னமோ வெளியில் யாரிடமும் அந்தளவுக்கு நெருக்கம் வரவில்லை. சிறுவயதிலிருந்து பெரியவர்களும் அதை ஊக்குவிக்கவில்லை. பெரும்பாலும் இவர்களின் நட்பு, பள்ளிப்படிப்பு தொடர்பான விசயங்களோடு நின்றது எனலாம்.
கண்ணை மூடியவளுக்கு, அந்த நிமிடமே ஆரணி, ஆரபியைப் பார்க்க வேண்டும் போலவே இருந்தது. அவர்களின் மடியில் சுருண்டு மனப்பாரத்தை இறக்கி வைக்கத் தவித்தாள், அவள்.
‘உங்கட பேச்சை அவ்வளவு சுலபமா உதாசீனம் செய்தனே! இவ்வளவு கெதியா அதுக்குத் தண்டனை கிடைக்குமெண்டு எதிர்பார்க்கேல்ல!’ என, மனதில் அடைந்திருப்பதைக் கொட்டிக் கவிழ்த்து மனத்தை இலேசாக்க வேண்டும் போலத் தடுமாறினாள்.
‘இப்ப அங்க விடிஞ்சிருக்கும் தான். ரெண்டுபேரும் வேலைக்குப் போற அவசரத்தில் இருப்பினம், நான் எடுத்து இதைச் சொல்லித் திரும்பவும்…” அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.

