அத்தியாயம் 31
வருடம் 2020. கொள்ளை நோயான கோவிட் 19(COVID 19) சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. எப்படி உருவானது, அதற்கு மருந்தென்ன, எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலகமே ஸ்தம்பித்துப்போயிருந்தது. தங்களின் கனவாய் ஐரோப்பிய நாட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிட பலர் துடித்த காலத்தில் மொத்த ஐரோப்பாவையும் சுழற்றிப் போட்டிருந்தது கொரோனா என்கிற அந்த வைரஸ். தினமும் பல ஆயிரத்தில் இறப்பும் தொற்றும் என்று உலகையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருந்தது. இலங்கைக்குச் சுற்றுலாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மூலம் அங்கும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் முழு நாடும் ஊரடங்குச் சட்டத்துக்குள் முடங்கத் தொடங்கியிருந்தது. ஆதிராவுக்குப் பள்ளிக்கூடம் நிறுத்தியிருந்தார்கள். அதனால் மயூரி வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி வாங்கியிருந்தாள்.
பிரதீபனுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளுக்கிடையில் அலுவலகம் இன்னுமே இயங்கிக்கொண்டு இருந்தது. ஒருநாள் அலுவலகம் சென்றவன் மயூரிக்கு அழைத்தான்.
ஒருநாளும் இல்லாமல் இன்றைக்கு என்ன? மனம் படபடக்க அழைப்பை ஏற்றாள் மயூரி.
“நாலு நாளைக்கு வரமாட்டன். ஆது கவனம். தனியா இருக்க பயம் எண்டால் அம்மா வீட்டை போய் நில்லு. வெளில எங்கயும் போகவேணாம்.” என்றுவிட்டு அழைப்பைத் தூண்டித்துவிட்டிருந்தான் அவன்.
இது என்ன திடீர் என்று. ஒன்றும் விளங்காமல் குழம்பிப்போனாள் மயூரி. ஏன் எதற்கு என்று சொல்லாமல் இப்படிச் சொல்லிவிட்டு வைத்தால் அவள் என்னதான் நினைப்பது. கொரோனாவோ? இப்போதெல்லாம் திரும்பின பக்கமெல்லாம் காதில் விழுகிற பயங்கரம் அதுதானே! சட்டென்று நெஞ்சைப் பயம் கவ்விப்பிடிக்க, கை கால்கள் எல்லாம் பதற, அவனுக்கு அழைக்க அழைக்க அழைப்பை ஏற்கவே இல்லை. கோபமும் பயமும் மனதை ஆக்கிரமிக்க, ஜெய்க்கு அழைத்து, “நான் சொன்னேன் எண்டு சொல்லாதீங்கோ அண்ணா. வாயே திறக்கமாட்டார். சும்மா கதைக்கிறமாதிரி கதைச்சு என்ன எண்டு கேட்டு சொல்லுங்க.” என்று கெஞ்சிக் கேட்டாள் மயூரி.
அவனோடு பேசிவிட்டு இவளுக்கு அழைத்தான் ஜெய்.
“என்னவாம் அண்ணா?”
“மயூரி, நான் சொல்லுறதை கேட்டு பயந்திடாத. இன்னும் முடிவில்ல. அவனுக்கு திடீர் எண்டு இன்றைக்கு நல்ல காய்ச்சலாம். கொரோனாவோ எண்டு பயப்படுறான் போல. டெஸ்ட்க்கு குடுத்திட்டானாம் மா. ரிசெல்ட் வர நாலுநாள் ஆகுமாம். அதுவரைக்கும் தனியா ஒரு அறை எடுத்து தங்கி இருக்கிறானாம்.”
அவன் சொன்னதைக்கேட்டு நிலைகுலைந்துபோனாள் மயூரி. மனம் பதற அடுத்த நொடியே பிரதீபனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை என்றதும், “இப்ப நீங்க கதைக்கவேணும். ஜெய் அண்ணா நான் சொல்லித்தான் கதைச்சவர். எனக்கு எல்லாம் தெரியும்.” என்று அவள் செய்தி அனுப்பிய மறுகணமே அழைத்துவிட்டிருந்தான் அவன்.
“அட்ரஸ் அனுப்புங்கோ.” எடுத்ததுமே சொன்னாள் மயூரி.
“மயூ நீ இங்க வராத.” சோர்வுடன் ஒலித்த அவன் குரலைக் கேட்டே கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
“இப்ப நீங்க அட்ரஸ் அனுப்ப போறீங்களா இல்லையா?” ஆத்திரத்திலும் அழுகையிலும் குரல் அடைக்கக் கடுகடுத்தாள் மயூரி.
“எனக்கு உண்மையா ஒண்டும் இல்ல. வெறும் காய்ச்சல் மட்டும் தான். எண்டாலும், ஆது அம்மா அப்பா இருக்கினம் எல்லா. அதாலதான் பயந்து டெஸ்டுக்கு குடுத்திட்டு இருக்கிறன். தப்பித்தவறி எனக்கு ஒண்டு எண்டாலும் அவேய பாக்க நீ..” என்று அவன் சொல்லிமுடிக்க முதலே,
“இதுக்குமேல ஏதாவது கதைச்சா கொன்றுபோடுவன் ராஸ்கல்! எனக்கு இப்ப அட்ரஸ் வரவேணும். இல்ல திரும்ப எங்கயாவது போய் துலைஞ்சிடுவன்.(தொலைந்துவிடுவேன்)” ஆத்திரத்தில் படபடத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தாள் மயூரி. அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. கண்ணீர் கொட்டியது. அவனில்லாமல் அவள் எப்படி? ஐயோ.. என்று நெஞ்சு பதறியது.
கடவுளே.. இந்த அறிவு ஏன் அவளுக்கு முதலே வராமல் போயிற்று? ஓடிப்போய் சுவாமிப்படங்களின் முன்னால் நின்றாள். விழிகள் அங்கிருந்த அத்தனை படங்களையும் வெறித்தது. ‘நீங்கள் எல்லாம் தெய்வங்களா? இன்னும் யாரையெல்லாம் என்னட்ட இருந்து பறிக்க போறீங்க? தீபனுக்கு மட்டும் ஏதும் நடந்தது.. உங்களை எல்லாம் கொளுத்தி போடுவன்..’
கண்ணீருடன் பெற்றவர்களின் முன்னே ஓடிப்போய் நின்றாள். ‘அம்மா அப்பா, அவருக்கு அப்படி ஒண்டும் நடந்திட கூடாது. பிறகு.. பிறகு நானும் அவரோடையே போய்டுவேன்.’ அதற்குமேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் உகுத்தாள் மயூரி!
‘எனக்கு அவர் வேணும்.. ஐயோ அம்மா எனக்கு அவர் வேணும்!’ என்று அரற்றியது அவளின் ஆழ்மனது.
இன்று இப்படித் துடிக்கிறவள் இத்தனை நாளாய் ஏனடி அவனைத் துடிக்கத் துடிக்கத் தூக்கி எறிந்தாய் என்று கேட்டது அறிவு.
அப்படியே மடிந்து அமர்ந்து அழுதாள் மயூரி. ‘நான் செய்தது பிழைதான். அதுக்கு இப்படி அவரின்ர உயிரோடதான் விளையாடுறதா? அவரை நீங்கதான் காப்பாத்தவேணும். உங்கட மருமகன் நல்லவர். பிழையான முடிவை எடுத்ததை தவிர வேற ஒண்டும் அவர் செய்யேல்ல அப்பா. கடவுளே.. வாழ்க்கை இப்படியெல்லாம் புரட்டிப்போடும் எண்டு தெரியாம அவரை சந்தோசமா நான் வச்சிருக்கேல்ல அப்பா.’ அழுது கரைந்து ஓய்ந்துபோய் சுவரோடு சுவராக ஒன்றியிருந்தாள் மயூரி.
திக்பிரமை பிடித்தவள் போன்று சிலையாக இருந்தவளை அலைபேசி தான் கலைத்தது. அவன் என்றதும் வேகமாக எடுத்து காதுக்கு வைத்தாள். “ஆதுவ கூட்டிக்கொண்டு வராத. நீ கையுறை வாய்க்கு மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு வா. அறைக்கு உள்ள வராத மயூ. வாசலுக்கு வெளியிலையே நில்லு. என்னை பாத்திட்டு போய்டவேனும். போனதும் வீட்டுல எதையும் தொடாத. போட்டுக்கொண்டு வாற உடுப்பை தனியா கழுவப்போடு. நீயும் தலைக்கு ரெண்டு மூண்டு தரம் சோப் போட்டு நல்லா குளி.” என்றான் அவன்.
“வைங்க வாறன்!” என்றுமட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
அன்று காலைதான் வெளியே எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்க முடியவில்லை என்று திருநாவுக்கரசு சொன்னதில் ஆதிராவைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருந்தாள் மயூரி. அதுவும் நல்லதிற்குத்தான். இல்லையோ இப்போது அவளும் இங்கிருந்து நன்றாகப் பயந்து போயிருப்பாள்.
புறப்படமுதல் புஸ்பவதி அம்மாவுக்கு அழைத்து, “இப்போதைக்கு ஆது அங்கேயே இருக்கட்டும் மாமி. நாங்களே வந்து கூப்பிடுறோம். அதுவரைக்கும் யாரும் இங்க வரவேண்டாம்.” என்றாள்.
அவர் பயந்துபோனார். “ஏனம்மா? யாருக்கு என்ன? எங்க தம்பி. என்ன எண்டாலும் அவன் பாப்பான் நீ ஒன்றுக்கும் கவலைப்படாத.” காரணம் அறியாமலேயே தேற்றியவரின் பேச்சில் தொண்டை அடைத்துக்கொண்டது அவளுக்கு.
‘அப்படி அவர் பாக்கவேணும். காலத்துக்கும் அவருக்குள்ள கரைந்து நான் வாழவேணும்..’ மனது அழுதது அவளுக்கு. “ஒருத்தருக்கும் ஒண்டும் இல்லை மாமி. என்னையும் அலுவலகம் வர சொன்னவே. நாங்க வேலைக்கு போய்வாறதால பயமா இருக்கு. ஆதுவ பாக்காம நீங்களும் இருக்கமாட்டீங்க தானே. அதுதான், அவள் அங்கேயே நிக்கட்டும். வேற ஒண்டும் இல்லை.” அதைத் தனக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்டவள் ஆதிராவுடனும் கதைத்தாள்.
“செல்லக்குட்டி, அப்பம்மா அப்பப்பா சொல்லுறதை கேட்டு கவனமா இருக்கவேணும். அம்மா அப்பாவை காணேல்ல எண்டு அழக்கூடாது சரியா. என்ன நடந்தாலும் எங்கட ஆதும்மா கெட்டிக்காரி சமாளிப்பா. என்ன செல்லம் அம்மா சொல்லுறதை கேப்பீங்க தானே?” எனும்போதே கண்ணீர் வந்தது.
இந்த மகளை எப்படியெல்லாம் சீராட்டி பாராட்டி வளர்க்க நினைத்தான். அவனுக்கு எத்தனை கற்பனை.. எல்லாம் இந்தக் கொடிய நோயால் சிதறிப்போய்விடுமோ.. நெஞ்சு பதறியது. தினம்தோறும் இந்தக் கொள்ளை நோய்க்குள் அகப்பட்டு பல குடும்பங்கள் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைத்தான் போதும் போதும் என்கிற அளவில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே.
மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கும் மேற்கத்தேய நாடுகளே இந்நோயிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்க, அடிப்படை வசதிகளுக்கே பற்றாக்குறையான இலங்கையில் நிலை என்ன?
“சரி அம்மா. அப்பா எங்க?” உடனேயே தகப்பனைத்தான் கேட்டாள் பெண்.
அழுகை வந்தது மயூரிக்கு. “வருவார் அம்மாச்சி.” அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னாள்.
“சரியம்மா. கெதியா வாங்கோ. நான் உங்களையும் அப்பாவையும் பாத்துக்கொண்டு இருப்பன்.” ஆதிரா சொன்னதும் ஃபோனை வைத்தவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அடுத்த நிமிடமே வீட்டைப் பூட்டிக்கொண்டு அவனிடம் புறப்பட்டாள்.
கதவைத் தட்டும் வேகத்திலேயே வந்திருப்பது யார் என்று கண்டுகொண்டான் பிரதீபன். கவனமாகத் தள்ளி நின்றுகொண்டு கதவைத் திறந்தவன், நிச்சயமாக அவளை அப்படியொரு கோலத்தில் எதிர்பார்க்கவே இல்லை. அழுது சிவந்த முகம், கண் மடல்கள் வீங்கியிருக்க, கலைந்த தலை, நலுங்கிய ஆடையோடு விசரிபோல் நின்றிருந்தாள் மயூரி.
பார்த்ததும் கோபம்தான் வந்தது. கண்டதையும் யோசித்து தேவையில்லாமல் தன்னையே வருத்திக்கொண்டிருக்கிறாள். ஆனால், எதற்கிந்தக் கண்ணீர்? பரிதவிப்பு எல்லாம்? அவன்தான் அவளுக்குத் தேவை இல்லையே!
முகம் கடினமுற, “நான்நல்லாத்தான் இருக்கிறன். பாத்தாச்சு எண்டா அப்படியே திரும்பி நட!” என்றான் அவளைப் பாராமல்.

