அத்தியாயம் 32
அடுத்தநாள், நாடு முழுவதிலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்று மத்தியானம் பன்னிரண்டு மணிவரைக்கும் ஊரடங்கைத் தளர்த்தியிருந்ததில் மகளைக் கூட்டிக்கொண்டு வர அம்மா வீட்டுக்குப் புறப்பட்டான் பிரதீபன். அந்த நான்கு நாட்களும், ஃபேஸ்டைமில் அழைத்துப் பேசியிருந்தாலும் ஆதிரா பெற்றவர்களுக்காக மிகவுமே ஏங்கிப் போயிருந்தாள். பெற்றவர்களின் நிலையும் அதேதான். பிரதீபனுக்கு மயூரி கை வளைவுக்குள் இருந்தும் மகளும் இல்லை என்பது பெரும் குறையே.
மயூரிக்குத் தன் உடலின் ஒரு பாகத்தையே இழந்த நிலை. அவனிடம் காட்டிக்கொள்ளவில்லையே தவிர, பிறந்ததில் இருந்து உறங்கும்போது பிரிந்திராத ஆதிரா இல்லாததால் அவனருகில் கூட ஆழ்ந்து உறங்கமுடியவில்லை.
அம்மா வீட்டுக்குச் சென்று அங்கே உள்ளுக்குள் போகாமல் கேட் வாசலில் நின்றுகொண்டு மகளை வரச்சொல்லி கைபேசியில் அழைத்தான். “அப்பா!” என்று கூவிக்கொண்டு பாய்ந்து ஓடிவந்த மகளை, “ஆதுக்குட்டி..!” என்றபடி, அப்படியே தூக்கிக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றினான் பிரதீபன்.
“எங்கட செல்லம் அப்பம்மா வீட்டுல குழப்படி செய்யாம இருந்தவளா?” மகளின் உயரத்துக்குக் குனிந்து வினவினான்.
அவளோ தகப்பனை முறைத்தாள். “அப்பா! நான் நல்லபிள்ளை. உங்களை மாதிரி இல்ல. அப்பம்மா உங்களப்பற்றி எல்லாம் சொன்னவா!” என்றுவிட்டு, குறும்புடன் கிழுக்கிச் சிரித்தாள்.
தானாக அவன் முகத்திலும் முறுவல் மலர, அவளின் நெற்றியில் மூட்டிவிட்டு, “உன்ர அப்பம்மா பொய் சொல்லி இருப்பா!” என்றான்.
“எனக்குத் தெரியும் யார் பொய் சொல்லுறது எண்டு.” என்றவள், “அம்மா வரேல்லையாப்பா?” என்று காருக்குள் எட்டிப்பார்த்துக் கேட்டாள்.
“பிள்ளைக்கு அம்மா சமைச்சுக்கொண்டு இருக்கிறா. அதுதான் அம்மா வரேல்ல.” என்று சும்மா ஒரு காரணத்தைச் சொன்னான் அவன்.
அங்கே மயூரியோ, ஆதிரா வருவதற்கு முதல் அவன் பாவித்த பெட்சீட் முதற்கொண்டு தலையணை வரை அனைத்தையும் கழுவிக்கொண்டிருந்தாள். கதவு, கைப்பிடி, மேசை, நாற்காலி என்று ஒரு இடம் விடாமல் எல்லா இடமும் துடைத்துத் துப்பரவாக்கி, வீட்டை மொப் செய்து என்று பெரும் வேலை நடந்துகொண்டிருந்தது.
பிரதீபனுக்கு கொரோனா இல்லை என்றாலும் ஒரு பயம். அவனைத் தாக்காமல் வைரஸ் வீட்டுக்குள் இருந்து பெண்ணைத் தாக்கிவிட்டால்?
இங்கே புஸ்பவதி அம்மாவோ வீடுவரை வந்த மகன் வீட்டுக்குள் வராமல் கேட்டிலேயே நின்றுவிட்டதைக் கண்டு கலங்கிப்போனார். மகன் அவர்கள் இருவருக்குமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்தாலும், அவன் கேட் வாசலில் நின்றுகொண்டு சுகம் விசாரிக்க அவர்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டு பதில் சொல்லும் நிலையில் இருப்பதை எண்ணிக் கண்ணீரே வந்துவிட்டிருந்தது அவருக்கு.
“அம்மா, என்ன இது? என்னவோ எங்களுக்கு மட்டும் தான் இப்படி எண்டமாதிரி அழறீங்க. உலகம் முழுக்க இதுதானம்மா நிலமை. அதுவும் வெளிநாடுகள்ல இன்னும் மோசம். நாங்க எல்லாரும் சுகமாத்தான இருக்கிறோம். இனியும் சுகமா எந்த நோயும் வராம இருக்கிறதுக்கான பாதுகாப்பு வழிதான் இது. சும்மா அழாதீங்க!” அதட்டல் பாதி அன்பு மீதியாக அன்னையைக் கடிந்துகொண்டான் அவன்.
“போடா! நீ உன்ர மகளை கூட்டிக்கொண்டு போவாய். நான் மட்டும் என்ர மகனை தூரத்தில நிண்டு பாக்கவேணுமோ? அங்க பிருந்தாவும் வரமாட்டாளாம். சின்னவளும் வரமாட்டாளாம். கேட்டா, நீங்க வயதான மனுசர் அம்மா. டக்கென்று தொத்திப்போடும் எண்டு ஒரு விளக்கம். என்ன கண்டறியாத வைரஸோ!” என்று புலம்பித் தள்ளினார் அவர்.
“இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு எல்லாம் சரியாயிடும்.” என்று அவரைத் தேற்றிவிட்டு, அப்பாவிடமும் அம்மா கவனம் என்றுவிட்டு அடுத்த ஊரடங்குத் தளர்த்தலின்போது வருவதாகச் சொல்லிவிட்டு மகளோடு அங்கிருந்து புறப்பட்டான் அவன்.
வீடு வந்த மகளை ஓடிப்போய் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள் மயூரி. நான்கு நாட்கள் தான். என்னவோ வருடக்கணக்காகப் பிரிந்திருந்ததைப்போல் தவித்துப்போயிருந்தாள் அவள்.
“வீட்டுல கூடவே இருந்தவனுக்கு ஒண்டுமே இல்ல. மகளுக்கு மட்டும் அள்ளியள்ளிக் கொடுப்பாள்!” மகளறியாமல் முணுமுணுத்தவனை பொங்கிய சிரிப்பை அடக்கியபடி முறைத்தாள் மயூரி.
சட்டென்று அவன் கண்ணடித்துவிட, அதிர்ந்து விழிகளை விரித்த மயூரி நம்ப முடியாமல் அவனையே பார்த்தாள். எத்தனை வருடங்கலாயிற்று அவனை இப்படிப் பார்த்து! மனம் அப்படியே பழைய நாட்களுக்கே போயிருந்தது. ஆனாலும் சமாளித்து மகளைக் கண்ணால் காட்டிப் பொய்யாக முறைத்தாள்.
‘ஓகே ஓகே!’ என்றான் அவனும் அடக்கிய சிரிப்புடன் உதட்டசைவில்.
“ஆதும்மா, பன்னிரண்டு வரைக்கும் தான் எங்களுக்கு டைம். வாறியா உள் வீதிகளுக்க சைக்கிள் ஓடிட்டு வருவோம்.” என்று அழைத்தான்.
“ஓம் அப்பா போவம்! வீட்டுலையே இருந்து போரடிக்குது.” என்று, துள்ளிக்கொண்டு அவனிடம் ஓடிவந்தாள் ஆதிரா.
அவர்கள் புறப்பட்டதும் மயூரி அவனுக்கும் மகளுக்கும் ஆசையாகப் பார்த்துப் பார்த்துச் சமைத்தாள். வேலை அதுபாட்டுக்கு நடந்தாலும், மகளறியாமல் கண்ணைச் சிமிட்டிய அந்தக் கள்ளனே நெஞ்சுக்குள் நின்று சில்மிஷம் செய்துகொண்டிருந்தான். ‘எத்தனை வயசாச்சு. இன்னும் என்னவோ சின்ன பெடியன் எண்டு நினைப்பு!’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.
சுவையாகச் சமைத்துவைத்துவிட்டு அவள் குளித்து முடித்தபோது வந்து சேர்ந்தனர் இருவரும்.
இளஞ்சிரிப்புடன் அவளை நோக்கியவனின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், “ஆது, ரெண்டுபேரும் போய் குளிச்சிட்டு வாங்கோ சாப்பிட.” என்றாள் மயூரி.
ஆதிரா குளியலறைக்குள் புகுந்ததும், அவளின் கைபிடித்து நிறுத்தி, “அதை நீ என்னட்டயும் சொல்லலாம் மயூ. அதுக்கெல்லாம் கட்டிப்பிடிக்கச் சொல்லமாட்டன்.” என்றான் அவன்.
அன்றைய நாளை நினைவு படுத்துகிறான். இவனை என்ன செய்யலாம்? அவள் முறைக்க, “நீ என்ன மறைச்சாலும் உன்ர கன்னம் சிவக்கிறது என்ர கண்ணுக்கு தெரியும் மயூ.” என்று, சிரிப்புடன் அவளின் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
அன்று இரவும் வளமை போலவே ஆதிராவை நடுவில் விட்டு இருவரும் இரு பக்கமும் படுத்திருந்தனர். மயூரிக்கு உறக்கம் வரவே மாட்டேன் என்று நின்றது. கண்ணைச் சிமிட்டிவிட்டுக் குறும்புடன் நகைத்தவனே நெஞ்சுக்குள் நின்றான். கூடவே, ஆதிராவுக்கு முத்தமிட்டபோது அவன் சொன்ன வார்த்தைகளும்.
இந்த நான்கு நாட்களும், இருவரும் தனியாகத்தான் இருந்தார்கள். ஆனாலும், கண்ணுக்குத் தெரியாத இடைவெளியை இருவருமே கடைப்பிடித்தனர். காரணம், ஆதிரா இல்லாத பொழுதைப் பயன்படுத்திக்கொள்ள மனம் ஒப்பவில்லை. கூடவே அவனுடைய உடல்நிலையை எண்ணி உண்டாகியிருந்த பயமும். அதைவிட, மகளும் இல்லை மனைவியும் தன்னை மன்னித்துவிட்டாள் என்றதும் நெருங்காத பிரதீபனின் செய்கை மயூரியை இன்னுமே அவன்பால் இழுத்துச் சென்றிருந்தது.
பிரதீபன் புரண்டு படுப்பது தெரிந்தது. அவனுக்கும் உறக்கமில்லை என்று புரிந்துபோயிற்று. மல்லாந்து படுத்து ஒரு கையைத் தூக்கி முகத்தில் வைத்துக்கொண்டவனை தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
ஆதிரா இவளைக் கட்டிக்கொண்டிருக்க, இருளின் போர்வையில் வரிவடிவமாய் தனியே கிடந்தான் அவன். “கட்டிப்பிடி மயூ!” அன்று அவன் கேட்டது காதுக்குள் ரீங்காரமிட்டது. எந்த உணர்வு உந்தியதோ மகளைக் கடந்துபோய் மெல்ல அவனை நெருங்கி மெதுவாக அணைத்துக்கொண்டாள். ஒருகணம் அவனிடம் அசைவே இல்லை. அவளின் கை தைரியமாக அவனை இன்னுமே தன்னிடம் இழுத்தது. முகம் திருப்பி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் எதை உணர்ந்தானோ அவளின் இழுப்புக்கு இசைந்து திரும்பியவன் அவளைக் கட்டிக்கொண்டு மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
அன்று ஹோட்டலில் வைத்தும் அணைத்துக்கொண்டாள் தான். உதட்டு முத்தம் கூட பதித்தாள் தான். அது ஒரு வேகத்தில் நடந்தது. அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் நடந்தது. ஆனால் இன்றோ.. நிதானத்தில் இருக்கையில் அவளாக நெருங்கி இருக்கிறாள். பிரதீபனின் அணைப்பு இறுகிப்போயிற்று!
தேகமெல்லாம் சிலிர்த்தது மயூரிக்கு. இப்படித்தானே ஆதிராவும்? நெஞ்சில் பாசம் பொங்க கண்ணோரம் கசிய அவனது பிடரிக்கேசத்துக்குள் கையை விட்டு கோதிவிட்டாள். முதுகை வருடிக்கொடுத்தாள். மனம் அப்போதுதான் எந்த முணுமுணுப்புக்களும் இல்லாமல் அடங்கிற்று.
“அன்றைக்கும் இதைத்தான் மயூ கேட்டனான்..” அவளின் முகம் பார்த்து மெல்லச் சொன்னான் அவன்.
அதற்கு அவள் விட்ட வார்த்தைகள் எவ்வளவு மோசமானவை? நெஞ்சில் பிசைய அவன் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் மயூரி. “நான் விலகிப்போனா என்னை ஏன் அப்படியே விலகிப்போக விடுறீங்க தீபன்?” பரிதாபமாய் கேட்டாள் அவள்.
அதிர்வோடு பார்த்தான் அவன். அவளோ அவன் மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்போது அவன் அவளைக் குழந்தையாய் தாங்கினான். “இனியும் நானே போனாக்கூடி என்னை விட்டுடாதீங்கோ தீபன்.” கமறிய குரலில் சொன்னவளை தன் மார்போடு சேர்த்தணைத்து வருடிக்கொடுத்தான் அவன்.
அடுத்தநாள், கண்விழிக்கும்போதே மயூரிக்கு மனம் உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. உடலிலும் அந்தப் பரவசம் பரவ, தன் இடையைக் கட்டிக்கொண்டு இரு பக்கமும் உறங்கும் இருவரையும் பார்த்தபோது இதழ்களில் முறுவல் மலர்ந்துபோயிற்று! ஆதிராவாவது மேலால் தான் கையையும் காலையும் போட்டிருந்தாள். அவனோ விட்டால் ஓடிவிடுவாள் என்று நினைத்தவன்போன்று இடையை வளைத்தபடி அவளை ஒண்டிக்கொண்டு கிடந்தான். விடவே மாட்டோம் என்பதுபோல் இருவரும் இப்படி அவளைப் பிடித்துவைத்தால் எப்படி அவள் எழுந்துகொள்வது? மலர்ந்த சிரிப்புடன் இருவரின் நெற்றியிலும் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு மெல்ல மெல்ல அவர்களின் உறக்கம் களையாவண்ணம் எழுந்துகொண்டாள் மயூரி.

