ரோசி கஜனின் மீரா 25 – 1

25

 

மறுநாள் வீடு வந்த வேகத்தில், “நேற்று இத்தாலியானாவில தான் பார்ட்டி கொடுத்தனான்.” என்ற மகளை, சட்டென்று தாக்கிய அதிர்வும், அதை விஞ்சிய கோபமுமாகப் பார்த்தார், நித்தி.

மனைவி வாய் திறக்க முதல், “நித்தி!” எச்சரிக்கும் குரலில் அழைத்தார், அருகில் நின்ற சதீஷ்.

மீராவால், அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

“சொறிம்மா! உங்களிட்ட ஒருவார்த்த சொல்லேல்ல. சொன்னா …கட்டாயமா வேணாம் எண்டுதானே சொல்லியிருப்பீங்க?” என்றவளுள்ளம், தாயின் குற்றச்சாட்டுப் பார்வையில் கலங்கிப்போயிற்று!

இப்படி ஒரு குற்றச்சாட்டுப் பார்வையை, ஏச்சுப்பேச்சை எல்லாம் ‘ஒன்றுமேயில்லை’ என்று அமைதியாக வாங்கிக் கட்டிக்கொள்ளும் வகையிலான ஒருவனையா நான் விரும்பினன்?

இதற்கெல்லாம் என்ன பெறுமதி?

முதல் நாள் மாலை அவனைச் சந்திக்கும் வரை, வீட்டினரின் ஒவ்வொரு எதிர்ப்பையும் சற்றும் சளைக்காது, இறுமாப்போடு தாங்கி வளைய வந்தவள் அல்லவா? அவன்தான் தன் சுயத்தைக் காட்டிவிட்டானே!

தன்னை எண்ணியெண்ணி வெட்கினாள் மீரா. தாயின் பார்வை வேறு மனத்தைத் தைத்தது.

“அம்மா!” நித்தியைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

“பச்! தள்ளு மீரா!” மகளிடமிருந்து விடுபட முயன்றார், நித்தி. அந்தளவுக்கு மகளில் மனம் விட்டுப் போயிருந்தது.

‘இடையில கொஞ்ச நாள் அமைதியாத்தானே இருந்தாள்? நாம எடுத்துச் சொன்னத விளங்கிக் கொண்டாள் என்றிருக்க, இப்ப வந்து என்ன சொல்லுறாள்?’

தாயின் பேச்சைக் காதில் வாங்காது அவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டே, திரும்பவும் “சொறிம்மா!” மெல்ல முணுமுணுத்தாள், மீரா.

‘இத்தாலியானாவுக்குப் போயிருக்கிறாள் எண்டால், பீட்டர் அண்டைக்குத் தாங்க இங்க வந்ததச் சொல்லி இருப்பாரோ!’ இந்த எண்ணத்தோடு கணவனைப் பார்த்தார், நித்தி.

“என்னத்துக்கு மீரா சொறி எல்லாம்?” என்றபடி, அருகில் வந்து மகளின் தலையை வருடிக் கொடுத்த சதீஷ், ‘கொஞ்சம் அமைதியா இரும்!’ மனைவியைப் பார்வையால் எச்சரித்தார்.

“இடையில உங்கள எல்லாம் நிறையக் கஷ்டப்படுத்தீட்டன். இனி அப்பிடியெல்லாம் நடக்கமாட்டன் மா!” மகள் தொடர்ந்து சொல்ல, நித்தியின் விழிகள் விரிந்தன.

“மீராம்மா!” அவருக்கு அழுகையே வந்துவிட்டது. கடந்த கணம் வரை, நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடி வலி தந்த உணர்வு மாயமாகியதை உணர்ந்தார், அவர்.

வலுக்கட்டாயமாக, மகளை விலத்தி நிறுத்தியவர் கலங்கிய விழிகளால் அவளைப் பார்த்தார்.

“உண்மையாத்தான் மா சொல்லுறன்.” என்றபடி தாயோடு நகர்ந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள, அருகில் வந்தமர்ந்தார், சதீஷ்.

“உண்மையாவே அவன எனக்குப் பிடிச்சிருந்திச்சி, அவன் யாரெண்டெல்லாம் எனக்கு எப்பிடிம்மா தெரியும்? அது தெரிஞ்ச பிறகும், உங்களப் போல அவனப் பிழை சொல்ல முடியேல்ல. அதில கொஞ்சம் கூட நியாயம் இருக்கிறதா எனக்குத் தெரியேல்ல, இப்பவும் தான்.” என்றவளை, மீண்டும் கோபமாகப் பார்த்தார், நித்தி.

‘விருப்பம் இருக்கும் வரைக்கும் சேர்ந்து வாழ்வோம். பிறகு பிரிஞ்சு போகலாம்.’ என்ற அவன் குரல் காதுகளில் ரீங்காரமிட்டாலும், ‘ஓம்! அவன் கயவன் பட்டியலில் சேரத் தகுதியானவன் தான்’ என்று, பெற்றோரிடம் ஒப்ப மனம் வரவில்லை, அவளுக்கு.

மகளை நெருப்பாகப் பார்த்த நித்தியோ, வெடுக்கென்று எதையோ சொல்ல முயன்றார்.

“நித்தி! அவள் என்ன சொல்லுறாள் எண்டு முதலில கேட்பமே!” சற்றே குரலுயரச் சொன்னார், சதீஷ்.

இந்தப்பிரச்சனை உருவானதற்கு இன்றுதானே வெளிப்படையாகக் கதைக்கிறாள். அதுவும், இனிமேல் கஷ்டம் தரமாட்டேன் என்று சொன்னதன் பின்னர்.

மகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட சதீஷ், “நீ சொல்லம்மா!” ஊக்கினார்.

“நீங்க உங்கட நியாயங்களச் சொன்னீங்க. எனக்கு அதில பெரும்பாலும் உடன்பாடு இல்ல. அப்பிடி, ஒரேயடியா அவனக் கெட்டவன் எண்டு வரையறுக்க முடியேல்லை. அதேநேரம், என்னால நம்மட வீட்டில வீண் பிரச்சனைகள் வாறதையும் நான் விரும்பேல்ல. அதனாலதான் அமைதியாக இருந்தன்.”

“இப்ப என்ன சொல்ல வாற? அவன விரும்பத்தான் போறயோ? நாங்க உனக்கு முக்கியம் இல்ல, அப்பிடித்தானே?”

கட்டுப்படுத்த முடியாது இடையிட்டுச் சீறினார், நித்தி.

சட்டென்று கண்கள் கலங்கின மீராக்கு. சாமர்த்தியமாக மறைத்தவளின் பார்வை நேரே சுவரை வெறித்தது.

இதழ்களில் ஒரு முறுவல்! அது என்ன முறுவல்? மகிழ்வில் வந்ததா? நிச்சயமாய் இல்லவே இல்லை. தன்னைத் தான் பார்த்து நக்கலாகச் சிரித்தாள்.

விரும்பியவன், ‘வா..சேர்ந்திருப்போம், அலுத்ததும் பிரிவோம்.’ என்கிறான்.

உற்றவர்களோ, ‘பாராட்டிச் சீராட்டி, பார்த்து பார்த்து வளர்த்த நாங்க வேணாம், இண்டைக்குக் கண்டவன் பெரிசாப் போய்ட்டானோ?’ என்கிறார்கள்.

திரும்பித் தாயைப் பார்த்தாள், மீரா.

“கொஞ்சத்துக்கு முதல் என்னம்மா சொன்னன்? இனி என்னால எந்தக் கஷ்டமும் வராது எண்டனே! நான் முழுதும் சொன்ன பிறகு என்னவெண்டாலும் கதையுங்கோ!” என்றவள் குரலில், வழமையான நிமிர்வு.

“அவன விரும்பினாலும் அவன் பற்றி எனக்கு அவ்வளவாத் தெரியாதுதான். ஆனா, எல்லாம் தெரியும் எண்டு நினைச்சிருந்தன். நேற்றுப் பின்னேரம் வரைக்கும் ஜோரிக் எண்டா இப்பிடித்தான் எண்டு என்ர மனசுக்க நான் நினைச்சிருந்த பிம்பம், உண்மையோடு ஒப்பிடேக்க முற்றிலும் வேற! அந்தப் பிம்பம்பத்த விரும்ப முடிஞ்ச என்னால, அவன் பற்றி முழுமையாத் தெரிஞ்ச பிறகு…” சற்றே நிறுத்தினாள்.

தன்னுள்ளத்தில் எடுத்த முடிவை வார்த்தைகளில் சொல்லும் பொழுது உண்மையிலும் மிகுந்த வலி தந்தது.

‘ச்சே! தகுதியற்றவனுக்காக ஏனிந்த வலி? என்ர அன்பையே உணராதவன் அவன்.’ மனதுள் அழுந்தச் சொல்லி, அவன் மீதான கோபத்தைத் தக்க வைத்துக்கொண்டே தொடர்ந்தாள்.

“எனக்கும் அவனுக்கும் கடைசிவரை சரிவராது எண்டு நல்லாவே விளங்கீட்டு. அதனால, இனி அவனுக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்லம்மா.” சொல்லிக்கொண்டே தாயை நேராகப் பார்த்தாள்.

“அவன் ஒருநாளும் என்னைத்தேடி வரேல்லம்மா. என்னை விரும்புறதாச் சொல்லவும் இல்ல. நானாகத்தான் அவனோட போய் போய்க் கதைச்சன்.”

தாய்க்குச் சொல்வதுபோல், தனக்கே சொல்லிக் கொண்டவளின் குரலும் முகமும் இறுகிக் கிடந்தன; தன் செய்கையில் மிகையாக வெட்கினாள், அவள்.

நித்தி, சதீஷ் இருவருக்குமே மனதுள் ‘அப்பாடா’ என்ற நிம்மதியுணர்வு பலமாகவே பரவினாலும், மகளைப் பார்க்க மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. சட்டென்று என்ன கதைப்பதென்று புரியாது ஒருவர் ஒருவரைப் பார்த்தார்கள்.

அவர்களிடமிருந்து எதையும் எதிர்பாராது, “பிறகென்ன? அது என்ர பிழை தானே? அவனப் பிழை சொல்லுறதுக்கு எதுவுமே இல்ல.” தொடர்ந்தவளின் மனமோ, ‘நீ அப்பிடி வலிய வலியச் சென்றதால்தானே அவனால் அப்பிடியெல்லாம் கதைக்க முடிஞ்சிது!’ என, கோபத்தில் சீறிற்று!

“குஞ்சு, வேணாம் விட்டிரு! இனி அவன்டகதை இந்த வீட்டில வரக் கூடாது.”

மகளை அணைத்துக்கொண்ட நித்திக்கு, முதல் நாள் அப்படி என்னதான் பிரச்சனை நடந்திருக்கும் என்றறியும் ஆவல் இருந்தாலும் பொறுமையாகக் கேட்போம் என்று அடக்கிக் கொண்டார்.

‘ம்ம்…வேணாம் விட்டிருவம். இதுவும் நல்ல பாடம் தானே? வாழ்க்கை முழுமைக்கும் போதுமான பாடம்!’ தாய் சொன்னதை அவள் மனமும் ஆமோதித்தது.

சற்றுநேரம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. அதைக் கலைத்தாள், மீரா.

“ம்மா! இப்ப உங்களுக்குச் சந்தோசம் தானே?” பளபளக்கும் விழிகளோடு கேட்டாள்.

சந்தோசம் இல்லாமல்? மகள் சொன்னதைக் கேட்டு இனிமையாக அதிர்ந்து போயிருந்த நித்திக்கு, அவள் இப்படி நேரடியாகக் கேட்டதும் பேச்சு வந்தால் தானே? விழிகள் கலங்க மகளின் தலையை வருடினார்.

“இதுக்குப் பிறகு அவன் பற்றி என்ர வாயிலிருந்து வராது.” மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டே எழுந்துவிட்டாள், மீரா. அவ்விடத்திலேயே நின்று, தொடர்ந்து கதை வளர்க்கவும் பிரியப்படவில்லை. விறுவிறுவென்று தன்னறை நோக்கிச் சென்று விட்டாள்.

மீரா வந்ததைப் பார்த்துவிட்டு ஓடி வந்திருந்தான், ஆதவ்.

முதல் நாளிரவு மனம் விட்டுக் கதைத்தவள், “வீட்ட வந்ததும் முதல் வேலையா அம்மாவோட கதைக்கோணும் ஆதவ், அப்பத் தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்.” என்றிருந்தாள்.

என்ன ஏதென்று பார்க்க வந்தவனுக்கு, இதுவரை அவர்கள் கதைத்தவற்றைக் கேட்டுக் கண்கள் கலங்கிப் போயின!

அந்நேரம், முதல் நாளிரவு ஜோரிக் வந்து நின்ற விதமும், மீரா வந்து சேர்ந்துவிட்டாள் என்றதும் அவன் விட்ட ஆறுதல் மூச்சும் தேவையே இல்லாமல் நினைவில் வந்து போயிற்று!

அவன் உதட்டோரம் நெளிந்த முறுவல் வேறு மீண்டும் மீண்டும் தமக்கைமாரோடு கைகோர்க்க நினைத்தது.

அப்போதும், ஜோரிக் என்பவன் தன் மைத்துனிக்குப் பொருத்தமானவன் என்றும் முடிவெடுக்க முடியவில்லை.

‘அதுதான் அவளே வேணாம் எண்டு உதறிட்டாளே!’ என்றெண்ணியவன், நித்தியின் அருகில் சென்றமர்ந்து, அவரின் மகிழ்வைக் கணக்கெடுத்தபடி, “இனிமேல் அந்த ஜோரிக் சம்பந்தமான எந்தக் கதையும் இங்க வேணாம் அத்தை!” தீர்மானமாகச் சொல்ல, அதையே பிரதிபலித்தார், சதீஷ்.

“எங்களுக்கு என்ன அவன் பற்றிக் கதைக்க விருப்பமா என்ன? அவனை நினைச்சும் பார்க்க மாட்டன். பிறகு கதைக்கிறது எங்க?” என்றார் நித்தி; அத்தனை மகிழ்வோடு. அது தன்னறையில் இருந்த மீராவின் காதுகளிலும் விழவே செய்தது.

அடுத்தடுத்த நாட்கள் அமைதியாகவே கடந்து சென்றன, ஹெலன் அழைக்கும் வரை.

அன்று சனிக்கிழமை. மீரா, குடும்பத்தோடு அமர்ந்து மதிய உணவை உண்டு கொண்டிருக்கையில் தான் ஹெலனின் அழைப்பு வந்தது.

யாரென்று பார்த்தவள் ஒரு கணம் நிதானித்தாள். அவளையுமறியாது பார்வை பெற்றோரில்!

“யாரம்மா?” நித்திதான் கேட்டார்.

“ஹெலன் மா!” என்றபடி அழைப்பை ஏற்றிருந்தாள், மீரா.

மகள் சாதாரணமாக உரையாடுவதைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாலும் ஹெலன் என்ற பெயரே எரிச்சலை ஊட்டியது நித்திக்கு.

“இப்ப ஏன் இவர் எடுக்கிறார்? அவர்ட பேரனுக்கு ஆள் கிடைக்காட்டி அதுக்கு என்ர மகளாப்பா கிடைச்சாள்?”

அருகிலிருந்த கணவரிடம் அடிக்குரலில் முணுமுணுக்க, “கொஞ்சநேரம் சும்மா இரும் நித்தி. என்ன நடக்குதெண்டு பார்ப்பமே!” எச்சரித்தார் சதீஷ்.

பொதுவான நலவிசாரிப்பின் பின் ஹெலன் சொன்னது மீராவின் முகத்தைக் கறுக்கச் செய்தது.

“ஹெலன்…ஹெலன் கொஞ்சம் நான் சொல்லுறதைக் கேளுங்கோ!” தாமதியாது குறுக்கிட்டிருந்தாள், மீரா.

error: Alert: Content selection is disabled!!