“இப்படி நான் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேணாம் ஹெலன்.” என்று ஆரம்பிக்கையிலேயே, அவள் குரலில் அத்தனை நிதானம்.
“தயவுசெய்து அவனப்பற்றி என்னட்ட ஒண்டும் கதைக்கக் வேணாம். அவனுக்கும் எனக்கும் கடைசிவரை சரிவராது ஹெலன். வீட்டில விரும்பாத போதும் நான் மனத்த மாற்றிக்கொள்ளேல்ல. அதனாலதானே அண்டைக்கு அவனச் சந்திச்சன்.
ஆனால், அவன்…பச்! வேணாம் ஹெலன், அண்டைக்குத்தான் அவனுக்கும் எனக்கும் சரிவர வாய்ப்பே இல்ல எண்டு தெரிஞ்சிது.
அதனால…ப்ளீஸ்…நீங்களும் விட்டிருங்கோ! அதோட, அவன் தனக்கு விருப்பமான முறையில வாழ்க்கையை அமைச்சுக் கொள்ளுவான். சின்னப்பிள்ளையா என்ன?
நீங்க அதைவிட்டுட்டு உங்கட பாட்டில இருங்கோ ஹெலன்.”
நின்று நிதானித்துச் சொன்னவள், அதன் பின்னரும் சிலவார்த்தைகள் கதைத்துவிட்டே அழைப்பைத் துண்டித்தாள்.
பின், எதுவுமே நடவாத பாவனையில் வந்து உணவுண்ண அமர்ந்தவளில் அத்தனை தெளிவு.
மகளைப் பார்த்த நித்தி, ஆசுவாச மூச்சுவிட்டார். மகளை நினைத்து, தான், எப்படி எப்படியோ பயப்பட, அவள் இவ்வளவு தெளிவாக இருக்கிறாளே என்று நினைத்த நித்திக்கு, மகள் பிழையான வழி செல்ல மாட்டாள் என்றது மிக்க உறுதியானதில் வழமையை விட சற்றே அதிகமாக உண்டார்.
மறுபுறமோ, மீராவின் குரலில் இருந்த தீர்மானத்தில் திகைத்துப் போனார், ஹெலன்.
குழப்பமும் கவலையும் அவரை ஆட்டி வைத்தன. பலத்த நம்பிக்கையோடு அழைத்தவர், இறங்கிய குரலில் தான் விடைபெற்றிருந்தார்.
ஆரம்பத்தில் இருந்து ‘எனக்கு அவன்தான்’ என்று அத்தனை உறுதியாகச் சொன்னவள், இன்றோ, ‘சரியே வராது’ என்று தீர்மானமாகச் சொல்கிறாள்.
மாறாக, ஒதுங்கி ஒதுங்கிச் சென்றவனோ, அவளோடு ஒரு முறையேனும் கதைக்கவேணும் என்கிறான்.
அவளின் அத்தனை அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் கண்டும் காணாது அசட்டையோடு நிராகரித்தவன், இன்றோ, ‘ஒருதரம் ஒரேயொருதரம் என்ர அழைப்பை ஏற்றுக்கொள்ளன்!’ என்று மனதுள் மன்றாடுகிறான்.
பேரனின் திண்டாட்டத்தைப் பார்த்துவிட்டே, “பொறு நான் எடுத்துத் தாறன், மனம் விட்டுக் கதைச்சுச் சமாதானம் ஆகுங்க!” என்று, எத்தனை நம்பிக்கையாக எடுத்தார்.
அதிலும், அவள் அழைப்பை ஏற்றதும் அப்படியே மகிழ்ந்து போனார். அவரையே பார்த்திருந்த ஜோரிக்கின் வாடிக்கிடந்த முகத்திலும் பிரகாசம் தான்.
இப்போதோ!
பேரனைத் தவிப்போடு பார்த்தார், ஹெலன். அவனுக்குப் புரிந்துவிட்டது.
“என்ன ஓமா?(பாட்டி) என்னோட கதைக்க மாட்டன் எண்டு சொல்லிட்டாளா?” கேட்டுக்கொண்டே சட்டென்று எழுந்து விட்டான்.
“ஜோரிக்…” தடுமாறினார், ஹெலன்.
“உங்கள் ரெண்டு பேருக்கும் இடையில அப்பிடி என்னதான் பிரச்சனை? அதையும் சொல்லுற இல்லயே! அவளோ, அவன் எப்படிப்பட்டவன் எண்டு இப்பத்தானே தெரிஞ்சுது, சரிவராது எண்டு சொல்லுறாள்.” கவலையோடு சொன்னவரைத் தொடரவிடவில்லை, அவன்.
“விடுங்க ஓமா…நான் பார்த்துக் கொள்ளுறன்.” என, அவரைச் சமாதானப்படுத்திவிட்டு எழுந்து சென்றவன் முகமோ, பிடிவாதத்தில் இறுகிக் கிடந்தது.
இப்படியே நகர்ந்த நாட்களில் இறுதிப்பரீட்சை, படிப்பு, பயிற்சி வேலை என்று ஆழ்ந்து விட்ட மீரா, ஒருநாள், நித்தியும் சதீஷும் அளவளாவிக்கொண்டிருக்கையில், “உங்கள் ரெண்டு பேரிட்டையும் கொஞ்சம் கதைக்க வேணும்” என்றபடி வந்தமர்ந்தாள்.
திக்கென்றிருந்தது நித்திக்கு.
‘ஏனிந்தப் பதற்றம்? அப்படியெண்டால்…இன்னும் இவள நினைச்சுப் பயம் இருக்கா எனக்கு?’ கேள்வியெழுப்பிய மனதால் துல்லியமான பதிலை உணர முடியவில்லை.
“நல்ல இடமா அமைஞ்சா கலியாணத்தச் செய்து வச்சிரலாம்.” என்று முடிவெடுத்து, மும்முரமாக சம்பந்தம் பார்க்கவும் தொடங்கியிருந்தாரே! ‘இப்ப என்ன?’ தவிப்பும் குழப்பமும் மறையாது கணவரைத் தொட்ட பார்வை, மகள் முகத்தில் நிலைத்தது.
மீராவோ, தாய் தந்தையின் குழப்பத்தைக் கவனிக்கவில்லை. அவளுக்குத் தான் சொல்லவந்ததைச் சொல்லிவிடும் ஆவல்.
“அப்பா! நான் மாஸ்டர்ஸ் செய்ய இருக்கிறன்.” இப்படி ஆரம்பித்த மகளை ‘அப்பாடா!’ என்ற நிம்மதியோடு பார்த்தார்கள், இருவரும்.
“நல்ல விசயம் தானேம்மா? படி!” சதீஷ் சொல்ல, “ம்ம்…படிடா! கலியாணமும் பார்க்கிறம், சரிவந்தாச் செய்திட்டும் படிக்கலாம்.” இடையிட்டார், நித்தி.
“கலியாணம் எல்லாம் இப்ப வேணாம் மா!” சட்டென்று சொன்னவள், “நான் மாஸ்டர்ஸ் செய்ய அவுஸ்திரேலியா போகலாம் என்றிருக்கிறன்.” என்றாள், அமைதியாக .
“என்ன?” தாய் தந்தை இருவரும் ஒன்றாகக் குரல் எழுப்பினார்கள்.
“ஏன்மா? இங்கயே படியன். ஆரணி, ஆரபியும் இல்ல… இப்ப நீயுமா?”
சதீஷ் தன் விருப்பமின்மையைச் சொல்ல, “அதுதானே?” என்று சொன்னாலும், மகள் கொஞ்ச நாட்கள் தூரமாக இருந்தால் என்ன என்றே தோன்றியது, நித்திக்கு.
அவரின் அடிமனதில் ஏதோ ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருக்குதே!
‘மீண்டும் ஜோரிக் என்பவனின் தலையீடு வந்துவிட்டால்?’
இந்த எண்ணத்தை முழுமையாக அழிக்க முடியாது திண்டாடிய உள்ளம், மகளைப் பிரிந்திருப்பதை ஏற்கத் தயாரானது.
தந்தை அப்படிச் சொன்னதும், “அப்பா ப்ளீஸ்…நான் எல்லாமே பார்த்திட்டன். ” என்று மீரா ஆரம்பிக்க, துணைக்கு வந்தார் நித்தி.
“ஒருவகையில பார்த்தா அதுவும் நல்ல அனுபவம் தானே சதீஷ்? தனிய எண்டும் இல்லயேப்பா, ஆரணி, ஆரபி, அக்கா ஆட்கள் எண்டு சொந்தமும் இருக்கே! அவளுக்கு விருப்பம் எண்டால் அங்கயே படிக்கட்டும்.” தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டார்.
“தாங்ஸ்மா?” தாயை அணைத்துக் கொண்டாள், மீரா.
சமாதானம் ஆகாது அமர்ந்திருந்த தந்தையின் கரத்தைச் சலுகையோடு பற்றிக்கொண்டாள்.
“ரெண்டே ரெண்டு வருசங்கள் தானேப்பா? பிறகு வந்து இங்கதானே இருக்கப் போறன். ப்பா..ப்ளீஸ்! நான் எல்லாமே பார்த்து வச்சிட்டன். நீங்க சரியெண்டு சொன்னால் அப்ளை செய்வன். பெரியம்மா வீட்டில இருந்தே போய் வரலாம்.” என்ற பிறகும் சதீஷால் மறுக்க முடியவில்லை.
எப்போதும் போலவே, எடுத்த முடிவை அவர்கள் சம்மதத்தோடு நடத்திக் கொண்டாள், மீரா.
பரீட்சை முடிந்த மறுகிழமையே அவுஸ்திரேலியா செல்லும் வகையில் ஆயத்தங்களை மேற்கொண்டவளை யாருமே தடுக்கவில்லை.
இப்படியே இரு கிழமைகள் கடந்திருக்கும்.
அன்று, பல்கலை முடிந்து அறைக்குத் திரும்பிய தோழிகள், காரை நிறுத்திவிட்டுக் கலகலத்தவாறே வீட்டினுள் வந்தவர்கள் அப்படியே நின்று விட்டார்கள்.
காரணம், வரவேற்பறையில் அமர்ந்திருந்து வீட்டுக்காரப் பெண்மணியோடு சுவாரஸ்சியமாக உரையாடிக்கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல, ஜோரிக் தான்.
இவர்களைக் கண்டதும் மீராவில் கூர்மையாகப் படிந்த அவன் பார்வை, விலக மறுத்துப் பிடிவாதமாகத் தரித்து நின்றது. அவனை எதிர்பாராது கண்டதும் அவளில் ஏற்பட்ட திடுக்கிடலையும் அவதானித்துக் கொண்டான், ஜோரிக்.
சுதாகரித்துக் கொண்ட தோழிகள், “ஹை! எப்படி இருக்கிறீங்க?” பரஸ்பரம் நலம் விசாரித்த வேகத்தில் மாடியேறிவிட்டார்கள்.
அசையாது நின்ற மீராவைப் பார்த்த வீட்டுக்காரப்பெண்மணி, “உன்னைச் சந்திக்க வேணும் எண்டு வந்தார் மீரா. எப்பிடியும் நீ வந்த பிறகு சந்திச்சிட்டே போறன் எண்டு அரைமணிநேரமாக் காத்திருக்கிறார்.” முறுவலோடு சொன்னார். அவருக்குத்தான் இவர்களிடையே நடந்தது எதுவும் தெரியாதே!
சுதாகரித்துக் கொண்டாள், மீரா. அவன் பார்வையை ஒருவித அலட்சியத்தோடு எதிர்கொண்டாலும் மனதுள் எழுந்த வெறுப்பை மறைக்கவும் முடியவில்லை.
‘உன்னால நான் எவ்விதத்திலும் பாதிப்புறவில்லை’ என்று காட்ட வேணாமா? வெறுப்பைக் காட்டினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவதாகத்தானே அர்த்தம்?
“என்ன விசயம்?” எதுவித பாவமுமின்றிக் கேட்டு வைத்தாள்.
அறியாதவரோடு கூட அறிமுகம் செய்து, அன்பும் பண்புமாகக் கதைக்கும் நாட்டில் பிறந்து வளர்ந்தவள், இதுவரை இப்படி யாரோடும் கதைத்ததும் இல்லை. ஆனால், இவனோடு வேறு எப்படிக் கதைப்பதாம்?
வீட்டுக்காரப்பெண்மணிக்கு எதுவோ விளங்கும் போலிருந்தது. அப்போதே, “வீட்டில இருக்கிறாளா எண்டு ஃபோன் பண்ணிப் பார்த்திட்டு வந்திருக்கலாமே.” என்றதற்கும் எதையோ சொல்லிச் சமாளித்தானே!
‘எதுவென்றாலும் கதைச்சுக் கொள்ளட்டும்’ என்று மெல்ல நகர முயன்றவர், அடுத்து அவர்கள் கதைக்க ஆரம்பிக்கவும் சற்றே தாமதித்தார்.
எல்லாம் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம் தான்; வேறென்ன?
“மீரா உனக்கு ஆட்சேபனை இல்லையெண்டா ஒரு அரைமணிநேரத்துக்கு வெளியில வாறியா? கொஞ்சம் கதைக்க வேணும்.” எழுந்து, அவளருகில் வந்து சொன்னவனை நெருப்பாகச் சுட்டன, அவள் விழிகள்.
‘எவ்வளவு தைரியம் இருக்கும் இவனுக்கு? அண்டைக்கு அவ்வளவு சொல்லியும் பிறகும் வருகிறான் எண்டால்…’ மனம் சீறியது.
“இங்க பார், உன்னோட கதைக்க எனக்கு எதுவுமே இல்லை. அப்படியிருக்க, நான் வருவன் எண்டு எப்பிடி எதிர்பார்க்கிற? எந்த நம்பிக்கையில இப்பிடி வந்து காத்திருக்கிற?”
கண்கள் வெறுப்பில் சுருங்க, அவள் கேட்ட தொனியில் வீட்டுக்காரப்பெண்மணியின் பார்வை ஜோரிக்கில்.
சட்டென்று அவரைத் திரும்பிப் பார்த்தவன் முகம் இரத்தமெனச் சிவந்து போனது, கோபத்திலும் அவமானத்திலும்.
“மீரா! நமக்குள்ள இருக்கிற பிரச்சனை மற்றவேக்குத் தெரியத் தேவையில்லை. ப்ளீஸ்! ஒருதரம் வாவன்.”
சற்றே இறங்கிய குரலில் கேட்டவன், அவள் கோபத்தை அதிகரித்தானேயொழிய குறைக்கவில்லை.
“ஹலோ! நமக்குள்ள இருக்கும் பிரச்சனையா? இது என்ன புதுக்கதை? இங்க பார்…எனக்கு உன்னோட கதைக்க எதுவுமே இல்லை.” தீர்மானமாகச் சொன்னாள், மீரா.
“அண்டைக்கு நீ என்னட்டச் சொன்னதையே தான் இப்ப நான் திரும்பிச் சொல்லுறன், வெளிய வர முடியாது எண்டு சொன்னால் என்ன அர்த்தம் எண்டு விளங்காதா உனக்கு? போயிரு!”
சற்றும் குரலைத் தாழ்த்தவில்லை அவள். வலக்கரமோ, வாயிலைச் சுட்டி நின்றது.
அன்று, கன்னத்தில் விளாசித் தள்ளினாளே; அது கூட அவனுக்கு வலி தரவில்லை. துளி கூட அவமான உணர்வைத் தோற்றுவிக்கவும் இல்லை. மாறாக, அவளை இன்னுமின்னும் நெருக்கமாக உணர வைத்திருந்ததே!
இன்றோ, அவள் பேச்சும் பாவனையும் சுளீர் சுளீரென்று கூரிய ஆயுதத்தால் இழுத்தது போல் வலிதந்து துடிக்க வைத்தன.
ஒரு தடவை அவளை ஆழ்ந்து பார்த்தவன், மறுகணம் வெளியேறி மறைந்தான்.
“பச்! வெட்கமில்லாமல் வந்திட்டான்…பெரிய இவனாட்டம்!”
இறுகிய உதடுகள் முணுமுணுக்க மாடியேறினாள், மீரா.

