ரோசி கஜனின் மீரா 26 – 1

26

 

 

“ஓப்பா(தாத்தா) உன்னட்ட ஏதாவது சொன்னவரா?”

பேரன் தந்த ஜூஸ் கிளாசை வாங்கிக் கொண்டே கேட்டார், ஹெலன்.

“ஏதாவது எண்டா…”

ஹெலனுக்கு எதிரில் அமர்ந்து, அங்கிருந்த பத்திரிகையை எடுத்து விரித்தபடி கேட்டான், ஜோரிக்.

அவனை, ஆழ்ந்து ஒருபார்வை பார்த்தார், ஹெலன்.

‘எப்பிடி இவனால ஒண்டுமே நடவாத மாதிரி இருக்க முடியுது? எல்லாமே சுத்த நடிப்பு! எங்களுக்காக நடிக்கிறான். அவளில நேசமில்லாதவன் எண்டாலும் பரவாயில்ல. நிச்சயம் மனம் நிறைஞ்ச நேசத்தை வச்சிருக்கிறான். பிறகு, ஒண்டுமே நடவாத மாதிரியான இந்த நடிப்பு ஏனாம்? ம்ம்…

‘என்ன மன்னிச்சுக்கொள் மீரா!’ எண்டு, அவள்ட கையைப் பிடிச்சிருந்தா உதறிட்டா போவாள்?’ ஆயாசத்தோடு எண்ணிக்கொண்டவர்,

“மீராவின் ஃப்ரெண்டை சிட்டியில(city) கண்டு கதைச்சவராம் பீட்டர். அவள்… அவுஸ்திரேலியா போய்ட்டாளாமே!” என்றவர் பார்வை, பேரனின் மனநிலையைக் கணிக்க முயன்று, எப்போதும் போலவே தோற்றுப் போயிற்று.

‘என்ன நடிப்பு நடிக்கிறான் கள்ளன்!’

அவனோ, அன்றைய பத்திரிகையில் மிகக் கவனமாக இருந்தான்.

“ஜோரிக்! நான் சொன்னது கேட்டிச்சித்தானே? மீரா…” மீண்டும் தொடங்க, பத்திரிகையிலிருந்த கண்களை அவரில் நிலைக்க விட்டான், அவன்.

“கேட்டுச்சு ஓமா!(பாட்டி!) ஆர் எங்க போனாலும் நமக்கென்ன? அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாம என்ன வேலைவெட்டியில்லாமலா இருக்கிறம்?”

அசட்டையாகச் சொன்னவன் பார்வை மீண்டும் பத்திரிகையில்! முக்கியமாக எதையோ வாசிக்கிறானாம்.

“ஓ! அப்ப அவள் இங்க இருந்து போனதில உனக்கு ஒண்டுமே வருத்தம் இல்ல. சிலவேளை அங்கயே தங்கிருவாளாம். அவளிட மச்சாள்மார் போல!”

“ஹா..ஹா..இதென்ன ஓமா உங்களோட ஒரே கரைச்சலாப் போச்சு? அவளுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல எண்டால் நீங்களோ விடுறீங்கள் இல்ல. சம்பந்தம் இல்லாத ஒருத்தி எங்க போனாலும், இருந்தாலும் நமக்கென்ன சொல்லுங்கோ பார்ப்பம்.”

“அப்ப நீ இப்படியேதான் இருக்கப் போறியா?” கவலையோடு கேட்டார், ஹெலன்.

சட்டென்று எழுந்து அவரருகில் வந்தமர்ந்து கொண்டான்.

“உங்களுக்கு ஏன் இந்தக் கவலை? நான் இப்பவும் நல்லாத்தான் இருக்கிறன் ஓமா. நிச்சயம் எனக்குப் பிடிச்ச பெண்ணைச் சந்திச்சா சேர்ந்து வாழ்வன்.” கண்ணடித்தான். நன்றாகவே முறைத்தார், ஹெலன்.

இவன் தங்கை, கணவன் குழந்தை என்று வாழ்வது போல இவனும் குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கின்ற அவா அந்த வயோதிபர் உள்ளத்தில்!

அதுவும், இவர்கள் பார்வையில், மீரா அவனுக்கு மிகவும் பொருத்தமானவளாகப்பட்டாள்.

அப்படியிருக்கையில், அவன் மீராவை விட்டு ஒதுங்க முயல்வதை, இவன் நடத்தையில் அவள் எரிச்சல் கொள்வதைத்தான் பொறுக்க முடியுமா?

பேரனின் மனநிலையைத் தெளிவாகக் கூறி அவனின் பேச்சை, செயலை நியாயப்படுத்த முயன்றார், அன்று. அதுதான் பயனளிக்கவில்லையே! இவர் சொல்வதைக் கேட்கும் பொறுமையெல்லாம் மீராவிடம் இருக்கவில்லை. மொத்தமாக இவனில் கறுப்பு வண்ணம் தெளித்துவிட்டாள் போல!

பேரனைக் கவலையாகப் பார்த்தார், ஹெலன். அவனோ, ‘எதுவுமே இல்ல; நான் நன்றாக இருக்கிறன்’ என்பதைக் காட்டும்முகமாக அழகாகச் சிரித்தான். அவள் செய்கையில், மறுப்பில், விலகலில் இங்கு எந்தப் பாதிப்பும் இல்லவே இல்லை என உணர்த்துகிறானாம்.

“கண்டபடி யோசியாதேங்க ஓமா!” என்றவனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

“அதுசரி, ‘பிடிச்சிருந்தால் சேர்ந்து வாழ்வம்; கலியாணம் குழந்தை எண்டெல்லாம் ஆசையோ பேச்சோ எடுக்கக் கூடாது!’ எண்டால் யார் தான் வருவீனம்?”

வெடுசுடு என்று ஆரம்பித்தவரைத் தொடரவிடாது இடையிட்டான், அவன்.

“ப்ளீஸ் ஓமா! இதையே, கேட்டு கேட்டுக் காது புளிச்சுப் போச்சு! அதனால உள்ள ஏறவே ஏறாது. வீணா ஏன் திருப்பி திருப்பி அதையே சொல்லுறீங்க?” இயல்பு முறுவலோடு தான் சொன்னான்.

“அப்படியே நான் சொன்னாலும் என்ன பிழை? நடக்காத எதையுமா சொல்லீட்டன். அவளுக்கு விருப்பம் இல்லையோ சத்தம் போடாது ஒதுங்க வேணும்.” என்றவன் முகம், கணம் இறுகி இயல்பானது.

“அதைத்தான் அவள் செய்தாள். அத்தோட விட்டிருவமே!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் போல. அதற்குப் பிறகு அதிக நேரம் தாமதிக்கவில்லை. சிடுசிடுப்பு மறையாது அமர்ந்திருந்த பெரியவரிடம் விடைபெற்று வெளியேறினான்.

விடுவிடுவென்று வந்து வீட்டின் எதிர்ப்புறமாக நிறுத்தியிருந்த காருக்குள் ஏறியமர்ந்தவன் காரை இயக்க முதலே, அவனுள் அடைந்திருந்த இறுக்கம் அவனை ஆட்கொண்டிருந்தது.

“சட்!” ஸ்டியரிங் வீலில் ஒரு குத்து!

“அவளப் பற்றிக் கதைக்கிறத எப்ப நிப்பாட்டுவினம்?” சினத்தோடு முணுமுணுத்தன, அவனுதடுகள்.

என்ன செய்தும் மனத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை மட்டும் அடக்கவே முடியவில்லை. வெளியே காட்ட விரும்பாத உண்மையிது! வேலைகளும் பொறுப்புகளும் நினைவை நெரித்தாலும், இயந்திரம் போன்றே இயங்கியவனால் மனதின் உணர்வுகளை மட்டும் சீராக்க முடியவில்லை.

மீரா மீரா மீரா அவன் உணர்வெங்கும் அதே பெயர்தான்.

அதுவும், எத்தனை எரிச்சலும் கோபமுமாக அவனை இலகுவாகத் தூக்கி எறிந்தாளோ, அப்படியே, தன்னுள் பதிந்துவிட்ட அவள் நினைவுகளைத் தூக்கி எறிய முயன்றான்; முயல்கிறான்; ஆனால், முடியாதிருக்கே!

‘நீ அவள என்ன மாதிரி நடத்தினாயோ அதையே உனக்குத் திருப்பித் தந்தாள்.’ என்ற மனசாட்சியின் குரலுக்கும் அத்தனை வலிமை இருக்கவில்லை.

‘அண்டைக்கு நான் பிழையாத்தான் கதைச்சிட்டன். அதை உணர்ந்ததால தானே அவள் அந்த அறை அறைந்த பிறகும் பின்னால ஓடினன். பிறகும் அவளைச் சந்திக்க முயன்றன்.

அவள் என்ன செய்தாள்? அந்த வீட்டுக்கார மனிசிக்கு முன்னால வச்சு என்னமாதிரிக் கதைச்சாள்?’

அன்றைய நாளின் நினைவு, செருப்பால் அடித்து அவமானப்படுத்தியது போன்ற உணர்வு, கோபத்தை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.

‘சமாதானமாக, அவையளை மதிச்சு வீடு தேடிச் சென்ற என்ர தாத்தா பாட்டியை அவ்வளவுக்கு அவமரியாதை செய்தது எல்லாம் ஒண்டுமே இல்ல. என்ர நடத்தைக்குக் கறுப்பு வர்ணம் பூசியதும் ஒண்டுமே இல்ல. சேர்ந்து வாழ்வம் வா எண்டது மட்டும் தான் பிழை.

அதுதான் நல்லது. அவள் இங்க இருந்து, அங்க இங்க எண்டு எங்கயாவது சந்திக்க வேண்டி வந்தால், எனக்குள்ள இருக்கிற கோவத்துக்கு வடிகாலாக அறைஞ்சு விட்டிருவன். போகட்டும். ச்சே!’

‘சட்’ ஸ்டியரிங் வீலில் மீண்டும் ஒரு குத்து. வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் சற்றே தடுமாறியது. பின்னால் வந்த கார்க்காரன் வேறு ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தான்.

‘சொறி’ அவனுக்கு ஒரு கையசைவைக் கொடுத்தவனுக்கு ‘ஏன் நான் அவளச் சந்திச்சன்?’ என்றிருந்தது.

அதிலும் அவளுக்கும் தனக்குமான தொடர்பு! ‘அது இல்லாமல் இருந்தால்…இண்டைக்கு இந்தப் பிரிவு வந்தும் இருக்காதோ!’ மனதோரம் இந்நினைவும் பிராண்டாதும் இல்லை.

‘அது எப்படி? உனக்குத்தான் கலியாணம் எண்ட பந்தத்திலயே ஈடுபாடு இல்லயே! உன்னைப் பெற்றவனோட அவர்களுக்குத் தொடர்பு எண்டு இருக்காட்டியும், உன்ர இந்தத் தீர்மானத்துக்கு அவள் எப்பவுமே ஒத்துக்கொள்ள மாட்டாளே!’ என்ற மனசாட்சி, ‘அப்ப…நீ வாழ்நாள் முழுதும் அவளோட வாழ ஆசைப்படுற தானே ஜோரிக்?’ விசமத்தோடு கேட்டு, அவனுள் இரத்தக் கொதிப்பை எகிற வைத்தது.

‘அப்படியெல்லாம் என்னக்குள்ள ஆசை இல்லவே இல்லை!’ பலமாக மறுத்தவன் அவள் நினைவைப் பிரட்டிப் பிடிங்கி எறியும் வேலையைத் தொடர்ந்தான், சற்றும் சளைக்காது.

நாட்கள் வேகமாகவே உருண்டன.

பீட்டர் சற்றே சுகயீனமுற ரெஸ்ட்டோரண்டை முழுமையாகப் பொறுப்பேற்றவனுக்கு, வேறு சிந்தனைக்கு நேரம் இருக்கவில்லை. அதுதானே அவனுக்கும் தேவை.

மின்னலாகச் சுழலும் இயந்திரம் போலானான், ஜோரிக்.

ஆரம்பத்தில் அடிக்கடி தொல்லை தந்த மீராவின் நினைவுகளோ புகைபடிந்து வலுக்குறைந்து போயிற்று! ஆனாலும், அவன் உணர்வுகள் வேறெந்தப் பெண்ணையும் நாடவில்லை.

‘அவை மரத்து விட்டனவோ!’ விசனம் கொண்டார்கள், பீட்டர் ஹெலன் தம்பதியினர்.

அப்படியில்லை. அவன் உணர்வுகளுக்கு உயிர்ப்பளிக்கவல்ல சக்தி ஒருத்திக்கே உண்டு என, அவனே, தெள்ளத் தெளிவாக உணரும்வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியது.

error: Alert: Content selection is disabled!!