அத்தியாயம் 8 – 1

ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அதற்குள் ஜன்னல் இடைவேளையில் ஓடி மறைந்த ஒரு கரப்பான் பூச்சி எத்தனை சுத்தம் செய்தாலும் என்னை எல்லாம் அழிக்கவே முடியாதாக்கும் என்று மீசை முறுக்கியது. நம்ம ஊரில் தான் இதுகளின் கதகளி ஆட்டமா? ஒரு வேளை எல்லா இடங்களிலும் இப்படித்தானோ? 

செம்பருத்தி நீண்ட தூரம் பயணம் செய்ததில்லை. ஒன்றிரண்டு முறை சென்னை, மதுரை சென்று வந்திருக்கிறாள். அவளது தேவைகளை திருநெல்வேலி டவுனே கவனித்துக் கொண்டதால் வேறு ஊருக்குச் செல்லும் தேவையே ஏற்படவில்லை எனலாம். 

எனவே இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது அவளுக்கு.

 உடலளவிலும் மனதளவிலும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த செம்பருத்தி வேறு. இரு வருடங்களுக்கு முன்பு வரை கூட மாங்கு மாங்கென்று தீபாவளிப் பலகாரங்களைச் செய்து சொந்தக்காரர்கள் அனைவரின் வீட்டிற்கும் கொடுத்து வந்த செம்பருத்தி வேறு. 

இப்போது காலத்தால் அடித்து துவைக்கப்பட்டு, மனதளவில் தானே தைரியத்தை நிரப்பிக் கொண்டு, ஒரு கை பார்த்துவிடுவது என்று துணிந்து வாழ்க்கை சமுத்திரத்தில் இறங்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் தற்போதைய புத்தம் புது  செம்பருத்தி வேறு. 

வண்டி நாகர்கோவில், திருவனந்தபுரம் ஸ்டேஷன்களைத் தாண்டிப் பயணித்தது. 

வழக்கமாக தெக்கத்திப் பக்கம், காதுவளத்த கிழவிகள் சொல்வது, ஒரு ஊருன்னா மூணு குளம் இருக்கணும். ஒண்ணு மனுசப்பய குளிக்க, ரெண்டாவது குடிதண்ணி எடுக்க, மூணாவது ஆடு மாடுங்களுக்குத் தண்ணி காட்ட. 

குளத்தை சுத்திலும்  நல்ல உயரமா பனை மரத்தை நட்டு வைக்கிறதோட மட்டுமில்லாம நல்ல உயரமான பச்சை பசேல்னு இலை  இருக்குற மரங்களையும் நட்டு வைப்பாங்க. 

அந்த மரங்களை எல்லாம் தூரத்தில இருந்து பாக்கும்போதே வழிப்போக்கங்க கண்ணில் படும். அதை வச்சு அங்க குளம் இருக்கு, படுத்து இளைப்பாற நிழல் இருக்குன்னு புரிஞ்சுகிட்டு சிரமப் பரிகாரம் செய்ய  வந்துருவாங்களாம். 

இதெல்லாம் இந்த ஊர் கிழவிங்க சொல்லல போல, எங்க பாத்தாலும் குளம். இதில் எது மனுஷங்க குளம்? எது ஆட்டுக்குளம்? எல்லா குளத்துலயும் மீன் நிறைய இருக்கும் போலிருக்கே! அதுதான் மீன் நிறையா சாப்பிடுறாங்களோ?

இப்படி வேறு பலதையும் யோசித்துக் கொண்டு பயணம் செய்வது சுகமாகவே இருந்தது. வீடு, அத்தை வீடு, அத்தை மகன் ரமேஷின் கல்யாணம், ஏமாந்து போன முப்பது லட்சம், திக்கற்று நின்றது எல்லாம் மறந்தே போனது. இதனாலதான் மாரியம்மாக்கா வெளிய போக சொன்னாங்ளோ. 

காலையிலிருந்து ஜலப்பிரியா வற்புறுத்தியும் வீட்டை விட்டுப் பிரியப் போகும் சோகத்தில் தொண்டை அடைக்க, ஒன்றும் சாப்பிடாமல் கிளம்பியவள், காவ்யாவின் பேச்சைக் கேட்டதும் வெறுப்பில் சமோசாவும் டீயும் உள்ளே தள்ளினாள். அதன் பின்னர் தண்ணீரைத் தவிர வேறெதையும் தொடவில்லை. கடையில் இருந்தால் இந்நேரம் எதையாவது வயிற்றுக்குப் போட்டிருப்பாள். இப்போது பயணமும் இயற்கையும் பசிக்கவே விடவில்லை. 

அதே பெட்டியில் இன்னொரு குடும்பமும் ஏறியது. வடநாட்டு தாய் தந்தை மகன்கள். ஜாம்நகர் சொல்கிறார்களாம். இந்தக்கா மைதாமாவால் செய்தது போல எவ்வளவு அழகு? 

காவ்யா கூட அழகுதான். குடும்பக் குத்துவிளக்காய்  பார்க்கும்போதெல்லாம் புடவைதான் கட்டிக்கொள்கிறாள். ஆனால் அவள் முகத்தை நினைத்தாலே பயந்தல்லவா வருகிறது. ஆனால் இந்தக்காவைப் பார்த்தால் அப்படியே மனசுக்குக் குளுமையாக சந்தோஷமாக வருகிறதே. ஏன் அப்படி?

ஹான்… கண்டுபிடிச்சுட்டேன். புன்னகை, இந்தக்காவுக்கு மனதில் இருந்து வரும் புன்னகைதான் அழகு. காவ்யாவின் புன்னகை தேவைக்காக மட்டும்,  உதட்டளவில் ஒட்டி இருப்பது. 

அந்த மாதிரி செயற்கை புன்னகை வேண்டாம் . நானும் இனிமேல் இந்தக்கா மாதிரி மனசில் இருந்து புன்னகை செய்யணும். கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் அந்தக் குட்டிக் குழந்தைகளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தக் குழந்தைகள் முதலில் சற்று நேரம் தயங்கின பின்னர் அவளுடன் விளையாட ஆரம்பித்தன. 

அந்தக்கா குழந்தைகளுக்குத் தின்னக் கொடுத்த பண்டங்கள் மங்கிலால் நிறுவனத்தின் தயாரிப்பு. தானும் அந்த நிறுவனத்தில் பணி புரிந்ததாக தன் சாப்பாட்டு மூட்டையில் ஜலப்பிரியா திணித்திருந்த தட்டை பாக்கெட்டைக் காட்டிச் சொன்னாள். குழந்தைகள் அவளது தட்டை பாக்கெட்டை வாங்கி மட மடவென பிரித்து சாப்பிட, 

“டேய், அது அந்தக்காவோடது டா… திருப்பித் தாங்க” என்று அந்தப் பெண்மணி சத்தம் போட 

“விடுங்க அக்கா… “ என்று செம்பருத்தி தடுத்து நிறுத்தினாள்.

“எங்க போற?” என்று கேட்குமளவுக்கு சில அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருங்கிவிட்டனர் சூர்யாவும் செம்பருத்தியும். கம்யூனிக்கேஷன் ஸ்கில் எப்படிப் பேசணும், என்ன பேசணும், எதைப் பேசணும், எங்க பேசணும் இதெல்லாம் இவங்களுக்குத் தன்னால வந்துடுமோ? 

ஆலப்புழா வந்தபோது கட்டுசோத்தை பிரித்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

“என் வீட்டு அட்ரஸ் தந்திருக்கேன். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா… “

“சரிக்கா… “ என்ற செம்பருத்தியின் அலைப்பேசியில் அவர்கள் வீட்டு விலாசம் முதற்கொண்டு அனைத்து விவரங்களும். 

குழந்தைகளுடன் விளையாடியதில் பொழுது போனதே தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் எர்ணாகுளம் வந்துவிட்டது. குழந்தைகள் தூங்க அவர்கள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டுக் கிளம்பினாள் செம்பருத்தி. 

“மறக்காம பருமேல ஜாதிக்காய் அரைச்சு வை. அப்படியே காஞ்சுடும். தடம் கூட வராது” என்று சொல்லி அனுப்பினாள் சூர்யா. 

இதைக் கூட இந்த சூர்யா அக்கா எப்படி வலிக்காமல் சொல்கிறாள். இதையே சிலர் 

“அய்யே என்ன செம்பருத்தி இப்படி வாரிக் கொட்டிருக்கு?”

“இதென்னது மூஞ்சில எல்லாம்… அம்மி கொத்துறவன் அம்மிக்கு பதிலா உன் மூஞ்சீல கொத்திட்டானா என்ன?” என்று சொல்லி கொல்லென்று அனைவரும் அவளைக் கேலிப் பொருளாக்கி சிரித்ததும். 

error: Alert: Content selection is disabled!!