அத்தியாயம் 8 – 2

இவளைக் கேலி செய்து சிரித்தவர்கள் யாரும் உலக அழகிகள் இல்லை. அதை விடுங்கப்பா உள்ளூர் அழகிகள் கூட இல்லை. 

குமுறிக் குமுறி அழுதவளை மாரியம்மா அக்காதான் மீட்டது. 

“செம்பருத்தி நான்தான் கிள்ளக் கூடாதுன்னு சொல்லிருக்கேனே. மறுபடியும் மறுபடியும் அதையே செஞ்சு தானா மறைஞ்சு போறதை ஆழமான புண்ணாக்கிட்டியே”

“அக்கா முடியலைக்கா… எல்லாரும் கிண்டல் பண்ணுறாங்க. நம்ம ஊரு பசங்க எல்லாம் நான் நடந்து வரும்போது ‘யானை வருது யான வருது வழிய விடுங்கடா’ ன்னு பாட்டுப் பாடுறாங்க. யானை பிளிறுற மாதிரி சத்தம் வேற கொடுக்குறாங்க அக்கா. அதைப் பாத்து தெரு பொம்பளைங்க எல்லாம் சிரிக்கிறாங்க அக்கா. என் உடம்பு இப்படி ஊதிப் போனா நான் என்னக்கா செய்வேன். எனக்கு உதவி செய்யலைன்னா கூட கேலி கிண்டல் செஞ்சு மனசைப் புண்படுத்தாம இருக்கலாம்ல. 

கடைக்கு வர கஸ்டமெர்ஸ் எல்லாம் எம் மூஞ்சியைப் பாத்து அருவருப்பு படுறமாதிரி இருக்குக்கா. இந்தப் பருவைக் குறைக்க அழகு நிலையத்துக்கு போயி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். இன்னும் கூடிப் போச்சு”

“பைத்தியம், இதுக்கெல்லாம் காரணம் தெரியாம எப்படி இதுதான் தீர்வுன்னு சொல்லுவ. சிகிச்சை எல்லாம் எடுத்துக்க வேண்டியது டாக்டர் கிட்ட. அழகு நிலையம் அழகு படுத்த கிளீன் அப் செய்ய, ஆனால் உன் உடம்புக்குள்ள என்ன இருக்கு? எதனால இப்படி வருதுன்னு தெரிஞ்சு காரணத்தை சரி பண்றதுதானே புத்திசாலித்தனம். 

வீட்டில் ஓதம் கட்டினால் பெயிண்ட் அடிக்கிறது சரியா இல்லை சேதமடைஞ்ச காரணத்தைக் கண்டுபிடிச்சு சரி செய்யணுமா?”

“அப்ப என்ன காரணம்னு கண்டுபிடிங்க… “

அப்போது கண்டுபிடித்ததுதான் பிகாஸ்(PCOS),ஆண்தன்மை சுரப்பியான ஆண்ட்ரொஜென் இவர்களுக்கு அதிகமாக சுரக்கும். அதன் விளைவால்  ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை, முகப்பரு, தோலில் கருமை படர்தல் என்று எக்கச்சக்கமான பிரச்சனைகள் வரிசைகட்டிக் கொண்டு வரும்.

மாரியம்மா அவளை பரிசோதித்துப் பார்த்து சொன்னது மன அழுத்தம். அதுனாலதான் உனக்கு ஏதாவது வாயில் போட்டுட்டே இருக்கணும்னு தோணுது. நீ காய்கறி கடைல வேலை பார்த்திருந்தால் அங்கே இருக்குற தக்காளி, வெள்ளரி எல்லாத்தையும் எடுத்துத் தின்னிருப்ப. சுவீட் கடைல வேலை பாக்குறது உன் உடல் நலத்துக்கு எதிரா வேலை செய்யுது. 

அப்பறம் சுத்தமா உடல் உழைப்பே இல்லை. உன்னை பொத்தி பொத்தி பாதுகாத்து வேனில் ஏறி வேலைக்கு போறதும், அதே வேனில் ராத்திரி வீட்டு வாசலில் இறங்குறதும், வந்ததும் சாப்பாட்டை புல் கட்டு கட்டிட்டுத் தூங்குறதும். இதெல்லாம் பிற காரணிகள். உன் வாழ்க்கை முறையில் கண்டிப்பா மாற்றம் தேவை செம்பருத்தி”

“பட்டினி கெடந்தா எல்லாம் சரியாயிடுமா அக்கா”

“பட்டினி கிடக்கிறது இருக்கட்டும். உன்னோட ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் குறை. மனசை லேசாக்கு”

“எனக்கு இருக்குற பிரச்சனை மத்தவங்களுக்கு இருந்தா அப்ப தெரியும் எத்தனை வேதனை என் வாழ்க்கைல இருக்குன்னு “

“மத்தவங்களுக்கு பிரச்சனை இல்லாம இல்லை செம்பருத்தி. என்னையே எடுத்துக்கோ. நான் பிரச்சனையை சந்திக்கலன்னு நினைக்கிறியா?”

“உங்களுக்கு அப்படி என்னக்கா பிரச்சனை? என்னை மாதிரி குண்டா இல்லையே. ஒல்லியா இருக்கிங்க. எனக்கு இருக்குற மாதிரி பரு இல்லை. கிளியர் ஸ்கின். என்னை மாதிரி பன்னெண்டாவதில் படிப்பை நிறுத்தல. டாக்டருக்கு படிச்சிருக்கிங்க” அடுக்கிக் கொண்டே போனாள். 

“ஒரு நாளைக்கு ஏழு வேளை சாப்பிட்டாலும் எனக்கு சதையே போடாது. ஏன்னா என் உடல்வாகு அப்படி. அதனால என்னை கிள்ளிப் பிடிக்க சதை இல்லை. உனக்கு அதிகமா உடம்பு போட்டதால யானைன்னு சொன்னவங்க என்னை உடல் சரியான வளர்ச்சி இல்லாம இருந்ததால ஆம்பிள்ளைன்னு சொன்னாங்க. வெளிய சொன்னா வெட்கம் வாழைக்காய் பஜ்ஜின்னு தான் அந்த டீக்கடை பெஞ்சு நாதாரிங்க கூப்பிடும்”

“எவ்வளவு தைரியம்? யாரும் கேள்வி கேட்கலையாக்கா?”

விரக்திப் பெருமூச்சுடன் தொடர்ந்தாள் மாரியம்மா “எங்கம்மா நம்ம ஊர் டாக்டர் விநாயகம் நர்சிங்ஹோம்ல ஆயாவா வேலை பாத்தாங்க. அப்பா, நான்  பொம்பளைப் பிள்ளையாப்  பிறந்ததும் ஓடிப் போனவர்தான் இன்னமும் எங்க இருக்கார்னு ஒரு தகவல் கூட இல்லை. இந்த மாதிரி ஒரு பின் புலத்தோட இருக்குறவங்களை யாரு வேணும்னாலும் கிண்டல் பண்ணலாம்”

“நிஜம்தான்கா. அனால் அது அரக்கத்தனம். இப்படி மெலியார் மேல் சொல்லாலும் செயலாலும் தாக்குற எல்லாமே அசுரத்தனம்தான்” என்றாள் உண்மையான வருத்தத்தோடு. 

“மூணு வேளை சாப்பாடு கிடைக்கிறதே கஷ்டம். அரசாங்கத்தை நம்பிப் படிச்சேன். அரசாங்கம் இந்த மார்க்கை வாங்கினது யானையா இல்லை வாழைக்காய் பஜ்ஜியான்னு பாக்குறதில்லை. நல்ல மார்க்கு வாங்கினதும் சீட்டு தந்தது. 

டாக்டருக்குப் படிக்கும்போது உடற்கூறு பாடம் எடுத்தாங்க. அப்பத்தான் உலக அழகியா இருந்தாலும் சரி உள்ளூர் கிழவியா இருந்தாலும் சரி, செத்தா இப்படித்தான் சதை அழுகும், நாத்தம் அடிக்கும் னு புரிதல் வந்தது. 

படிப்பை முடிச்சுட்டு நம்ம ஊருக்குத் திரும்பி வந்து, எங்கம்மா குனிஞ்சு நிமிந்து கூட்டி குப்பை வாரின அதே தெருவில் தலை நிமிர்ந்து நடந்தேன். இதே டீக்கடை பெஞ்சு ‘டாக்டரம்மாக்கு டீ போடுடே’ன்னு சலாம் போட்டது. 

இங்க பாரு செம்பருத்தி, இந்த டீக்கடை பெஞ்சோ இல்லை  பொழுது போகாத பொம்பளைங்களோ, அவங்க  யாரு நீ யானையா பூனையான்னு டிசைட் பண்ண? உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. அதை அடையுற வரைக்கும் இந்த கேலிப் பேச்சைக் கேட்காத செவிடா மாறிடு”

ஆமாம் எத்தனையோ நாட்களாக அவள் செவிடாகத்தான் இருக்கிறாள். நினைத்துக் கொண்டே பிளாட்பாரமைக் கடந்து படியில் ஏறி வேடிக்கை பார்த்தபடி நடந்தாள். கடைகளும் அதில் கேரளத்திற்கே உரித்தான தேங்காய் எண்ணெய் மணத்தோடு எழுந்த பலகாரத்தின் மனமும், வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்த சுற்றுப்புறமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

மேலிருந்து பார்த்தபோது நாலைந்து ட்ரெயின் டிராக்குகள் தெரிந்தது. ரயில் பாட்டுக்கு ஒரு டிராக்கில் பயணிக்க, பக்கத்தில் இருந்த டிராக்குகளில் ரோட்டில் நடப்பது போல் சாவகாசமாய் நடந்த சிகப்பு சொக்காய் வேஷ்டி கட்டிய சேட்டன்களும், குளித்து ஈரம் போவதற்குள் கிளிப் ஒன்றைத் தலையில் போட்டுக் கொண்டு வேகு வேகென்று நடந்த சேச்சிகளும் அவளை ஆச்சிரியப்படுத்தினார்கள். 

கிராஸ் பண்ணுறதுக்குள்ள ட்ரெயின் மேல ஏறிட்டா? இவர்களுக்கெல்லாம் பயமா இருக்காது? யோசித்துக் கொண்டே புக்கிங் ஆபிசுக்கு முன் வந்து நின்றாள். 

“அம்மா, நீங்கதான் ஷெம்பருத்தியா” என்று பக்கத்தில் மலையாளம் கலந்த தமிழ் அழகான ஜேசுதாஸ் பாடல் போல ஒலித்தது. 

“ஆமாம்… நீங்க?”

வெள்ளை நிற ஓட்டுநர் உடையில் இருந்தவன் “நான் கோபன். பெரியய்யாவோட ட்ரைவர்” தனது ஐடியை காண்பித்து லெட்டர் ஒன்றையும் அவளிடம் கொடுத்தான். 

செம்பருத்தி வக்கிலை அழைத்து அவன் சரியான ஆள்தான் என்று உறுதி செய்துக் கொண்டு கிளம்பினாள். 

கோபனுக்கு இருபத்தி ஐந்து வயதிற்குள்தான் இருக்கும். நல்ல உயரமாக வெளுப்பாக இருந்தான். மிகுந்த மரியாதையோடு அவளிடம் பேசினான். தனது தோற்றத்தை வைத்து பெரியவள் என்று நினைத்து மரியாதை கொடுக்கிறான். 

‘மரியாதை எல்லாம் தானாகக் கிடைக்கும்போது வேண்டாம் என்று சொல்லக் கூடாது. வாங்கிக் கொள் செம்பருத்தி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“வீட்டுக்கு போக ராத்திரி ஆயிடும். இங்க நல்ல டிபன் கிடைக்கும். சாப்பிடுறிங்களா அம்மா”

“இல்லை கோபன். நான் மத்தியானம் நல்லா சாப்பிட்டுட்டேன். வீட்டுக்கே போயிடலாம்” முதல் முறையாக உணவை வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறாள். இதுவே நல்ல மாற்றமாக அவளுக்குத் தோன்றியது. 

அவளது பெட்டிகளை எடுத்துக் கொண்டான் கோபன். வண்டி கிளம்பியது. 

error: Alert: Content selection is disabled!!