அத்தியாயம் 36 – 1

அன்றைய இரவும் மறுநாள் பகல் பொழுதும் சக்கரம் கட்டிக்கொண்டு விரைந்திட்டோ!

வீட்டில், பெரியவர் மூவரினதும் உள்ளங்கள் பெரும் பரிதவிப்பில் துடித்தபடி இருக்க,  ஆதித் விழித்ததிலிருந்து சிணுங்கியபடி இருந்தான்; கயல்விழியை நிழல் போல் தொடரவும் செய்தான்; அவள் குளியலறைக்குள் இருக்கையில் அதன் வாசலிலேயே, “சூட்டி சூட்டி” என்றபடி அமர்ந்திருந்ததைப் பார்க்கையில் பூபாலன் மனமும் சரசுவின் கண்களும் கசிந்தன.

எழுந்ததிலிருந்து ஒருபோதும் இன்றி இறுக்கமான தோற்றம் காட்டினாள், லாதி; வாய் விட்டு உதிர்த்த சொற்களை எண்ணிவிடலாம். 

காலையிலேயே மகளை அழைத்து அவள் கையில் ஒரு நகைப்பெட்டியைக் கொடுத்த பூபாலன், “உங்கட ஸ்வீட்டிக்கு நம்மட கிஃபிட் இது! தம்பியோடு சேர்ந்து குடுங்கோ!” என்றிருந்தான்.

“ஓபன் பண்ணிப் பார்க்கவாப்பா?”

“ம்ம்…” என்றவன், மகளை மடியில் தூக்கி வைத்துவிட்டு பெட்டியைத் திறந்தான். உள்ளே ஒரு தங்கச் சங்கிலி, இதயவடிவில் ஒரு குமிழ் பெண்டண்ட்.

“செயின்! வடிவா இருக்கப்பா!” கழுத்து வடிவில் கொழுவியிருந்ததை மெல்ல வெளியில் எடுத்துப் பார்த்தாள், லாதி.

“ஸ்வீட்டிக்கு நல்ல வடிவா இருக்கும்.” பெண்டனைத் தொட்டுப் பார்த்தாள்.

“அத ஓபன் செய்யலாம்.” என்ற பூபாலன், “திறந்து பாருங்கவன்.” மகள் காதோரம் கன்னம் வைத்தபடி மெல்லச் சொன்னான்.

“ஓ  ரியலி!” சின்ன விரல்கள் மெல்ல அழுத்தி அந்தப் பெண்டனைத் திறந்தன. மறுநொடி, விழிகள் விரியத் தகப்பனைப் பார்த்தாள், லாதி. அவன் பார்த்திருக்கவே அவன் மகள் விழிகள் நிறைந்து வழிந்தன. அவன் விழிகளும் கலங்கிற்று. மகளை அணைத்துக் கொண்டவன் என்னதான் சொல்லுவான்.

அச்சிறு இதயத்துள்,  பார்வையில் தீட்சன்யமும் அன்பும் போட்டியிட இருபக்கமும் லாதியையும் ஆதித்தையும் அணைத்தபடியிருந்தாள், கயல்விழி.

மறுபுறம் லாதியும் ஆதித்தும்.

அதையே பார்த்திருந்தார்கள் அப்பாவும் மகளும். நிமிடங்கள் சில கரைந்திருக்கும், “லாதி இங்க  ஒருக்கா வாங்கவன்.” கயல்விழியின் குரல்தான் இயல்புக்கு அழைத்து வந்திட்டு.

சங்கிலியை முதல் இருந்த மாதிரியே பெட்டிக்குள் வைத்துவிட்டு, “லவ் யூ அப்பா!” அவன் கன்னத்தில் கொஞ்சிவிட்டு எழுந்தோடினாள், லாதி.

“இந்தப் பெட்டிக்க  இருக்கிறதுகள் எல்லாமே விண்டர் உடுப்புகள், க்ளோதிங் பாங்க ல(Clothing bank) குடுத்து விடச் சொல்லி மறக்காம அப்பாட்டச் சொல்லுங்கோ என்னம்மா?” ஓடிவந்து நின்றவளிடம் சொன்னவள், பின்னாலே வந்த பூபாலனைப் பார்த்துவிட்டு, “குறை நினையாம ஒருக்காப் போட்டு விடுங்கோ என்ன? நேற்றுப் போட வேணும் எண்டு இருந்தன்…”  இழுத்தவளுக்கு, முறைப்பை  வழங்கிவிட்டு நகர்ந்துவிட்டான், அவன்.

வந்ததில்  இருந்து லாதி கைகளிரண்டும் பின்புறம் இருக்கவே, “கையில என்னம்மா?” என்றபடி இரு பெரிய பயணப்பைகளை  இழுத்து வாயிலருகில் வைத்தாள், கயல்.

லாதிக்கு அந்தப் பைகளைப்  பார்க்கையில் விழிகள் கலங்கின. ‘போக வேணாம் ஸ்வீட்டி!’  உள்ளிருந்து வந்த வார்த்தைகளை மட்டும் விடவில்லை, அவள்.

“நீங்க கட்டிலில இருந்து கண்ணை மூடுங்கோ ப்ளீஸ்!” என்றாள், கட்டளையாக.

விழித்தெழுந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாளே. சொன்னதும் செய்தாள்  கயல்.

மெல்ல அருகில் வந்து கட்டிலில் ஏறி அவள் பின்னால் முழங்காலில் நின்று கொண்டவள், “கண்ணைத் திறக்கிறேல்ல ஓகே!” மெல்ல எட்டிப் பார்த்து நிச்சயமும் செய்து கொண்டாள்.

அப்படியே சங்கிலியை எடுத்து அவள் கழுத்தால் போட்டுவிட்டு, பின்புறமிருந்து  கட்டிக்கொண்டு தோள்  வளைவில் முகத்தை சரித்துக் கொண்ட லாதிக்கு, எவ்வளவோ முயன்றும் முடியாது விம்மல் வெடித்திட்டு. 

“குஞ்சம்மா என்ர குட்டியல்லோ?” அவள் போட்ட பரிசை முந்திக்கொண்டு அவள் கண்ணீரும் கேவலும் கவனத்தை ஈர்த்து விட்டதில் சின்னவளைத் தேற்றுவதில் இறங்கி விட்டாள், கயல்.

அதுவே, கழுத்தில் தொங்கிய சங்கிலியையும் அந்தப் பெண்டனுள் இருந்த படங்களையும்  பார்த்தவளால் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லை.

ஓடிவந்து அணைந்த ஆதித்தும் சேர்ந்து சிணுங்கினான். 

“ஆறுக்கு அங்க நிக்க வேணும்.” இவர்களையே கவனித்தபடி சுற்றிக்கொண்டிருந்த பூபாலன் குரல் தான் கயலை சுதாகரிக்க வைத்திட்டு.

 ‘கிப்ட்’க்கு நன்றி என்று அவனிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. வார்த்தைகள் வரேன் என்றிட்டு. விட்டுவிட்டாள்.  

“சாப்பிட்டுட்டுக் கொஞ்ச நேரம் இருந்திட்டு வெளிக்கிடச் சரியா இருக்கும்.” என்றார் சரசு. மதிய உணவை அரையும் குறையுமாக முடித்துவிட்டு எழ, கைபேசி சிணுங்கிற்று.

“குட்டியன் வடிவா சாப்பிடவும் இல்ல. சும்மா சும்மா அழக் கூடாது.” ஆதித்தையும் தூக்கிக்கொண்டு சற்றே தள்ளியிருந்த மேசையில் கிடந்த கைபேசி நோக்கிச் சென்றவள், “பிள்ளேட சூட்டி ஓடிப்போய் அம்மம்மாவப்  பார்த்திட்டு அடுத்த ஃ பிளைட்டில ஓடி வருவனாம் ஓகே!” அவன் காதினுள் இரகசிமாகச் சொன்னாள், அது சரி அவனை அமைதிப்படுத்தாதா என்ற நப்பாசையில்.

“ப்ரொமிஸ்!” நான் ஒண்ணும் அந்தளவு சின்னாள் இல்லை என்றான், ஆதித். 

“ஆர் எண்டு பாப்பமா?” கைபேசியை எடுத்து காதில் பொருத்தியவள், சிறுவனைப் பிராக்குக்  காட்டும் சாட்டில் அழைத்தவர் யார் என்று கவனிக்காதே அழைப்பை ஏற்றிருந்தாள்.

“பிரணவா?” உண்மையாகவே சந்தேகமாக இருந்ததில் கேட்டாள்.

 

“அதுக்க குரல மறந்தாச்சுப் போல!’ என்றவன் குரலில் இலேசான வருத்தம் இருந்ததோ என்று அவள் யோசிக்கையில், “உண்மையாவே யாழ்ப்பாணம் போறீரா? இனித் திரும்ப வர மாட்டீர் அப்படியா?” தொடர்ந்து கேட்க, பதில் சொல்லாது நின்றாள், கயல்விழி. 

“நான் என்னவோ எல்லாம் நினைச்சன் கயல்…உண்மையாவே  சொறி!” இவள் கதையை எதிர்பாராதே தொடர்ந்தான்.

“நான் வெளிக்கிட்டுக்  கொண்டிருக்கிறன், வைக்கிறன் என்ன?” அவனோடு தொடர்ந்து கதைக்கப் பிடிக்கவில்லை, அவளுக்கு.

“கவனமாப் போயிட்டு வாரும், எப்பவாவது சந்திப்பமே!” என்றவன், “உண்மையாவே சொறி கயல்…நான் அவசரபட்டுட்டன் எண்டு இப்ப விளங்குது. எனக்குக் குடுத்து வைக்கேல்ல, அவ்வளவும் தான்.” சின்னக் குரலில் அவன் சொல்லி முடிக்கவில்லை, சுறுசுறுவென்று கோபமேறியது, அவளுக்கு. அதுவே, “ஆனா, நான் கிரேட் எஸ்கேப்!” என்று சொல்ல வைத்திட்டு. அதே வேகத்தில், “பை!” அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

‘கல்யாணம் கட்டிக் குடும்பம் நடத்திக்கொண்டு என்னட்ட வந்து கதையளக்குது மென்டல்.” முணுமுணுத்தவள், தன்னையே பார்த்திருந்த பூபாலனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!