காதல் காயங்களே 33 – 1

அத்தியாயம் 33

 

 

அன்று அலுவலகம் தொடர்பான வீடியோ கான்பிரென்ஸ் அழைப்புக்காகத் தயாராகிக் காத்திருந்தான் பிரதீபன். ஆதிராவை அதட்டி உருட்டிப் படிப்பதற்காக மேசையில் அமர்த்தி இருந்தாள் மயூரி. பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லை என்றதும் எந்த நேரமும் ஃபோன். இல்லையோ தகப்பனோடு சேர்ந்து டிவி பார்ப்பது. பிரதீபன் கொடுக்கிற செல்லத்தால், அவளுடைய பேச்சுக்கும் மதிப்பில்லாமல் போய்க்கொண்டிருக்க, இது இப்படியே போனால் சரியாக வராது என்று, நெட்டில் பார்த்து அவளின் வகுப்புக்கான பயிற்சிகளை பிரிண்ட் எடுத்து செய்யச் சொல்லி மேசையில் ஆளை அமர்த்திவிட்டிருந்தாள்.

 

தாயை மீறமுடியாத பெரும் கோபத்தில் வேறு வழியின்றி அவற்றைச் செய்துகொண்டிருந்தாள் ஆதிரா.

 

லாப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தாலும் பிரதீபனின் விழிகள் அடிக்கடி முறுவலோடு மகளிடம் சென்று வந்தது. படிக்கிறேன் என்கிற பெயரில் அவ்வளவு சுட்டித்தனம் செய்துகொண்டிருந்தாள். எழுந்து அருகில்போய் அவளைக் கொஞ்ச ஆசைதான். அவன் போனால் படிக்கமாட்டாள். மயூரியின் முறைப்பையும் வாங்கவேண்டிவரும் என்று அடங்கி இருந்தான். ஆனாலும் விழிகள் அவளின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தது.

 

மயூரி பிரிண்ட் எடுத்துக்கொடுத்த பேப்பர்கள் மேசை முழுவதுமே பரவியிருக்க, பென்சில் பொக்ஸ் வாயைத் திறந்தபடி கிடந்தது. பேனை பென்சில்கள் அவள் என்ன செய்கிறாள் என்று பிராக்குப் பார்த்துக்கொண்டிருந்தன.

 

வெகு தீவிரமாகச் செய்கிறவள் போன்று புருவங்களைச் சுருக்கி யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருந்தாள். சற்றுமுன்னர் முழுகியதற்கு(தலையில் குளிப்பது) அடையாளமாக வாரப்படாது விரிந்துகிடந்த முடிக்கற்றைகள் இரண்டுபக்கமும் சரிந்துவிழுந்து அரைவாசி முகத்தை மறைத்தபடி மேசையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

 

கால்களோ முகத்தின் தீவிரத்துக்கு நேரெதிராய் மேசைக்கு கீழிருந்து ஏதோ ஒரு டான்ஸ் ஸ்டெப்பை அன்னை அறியாமல் போட்டுக்கொண்டிருந்தது. தோள்கள் இரண்டையும் வேறு அதற்கு ஏற்ற வகையில் அவ்வப்போது அசைத்துக்கொண்டிருந்தாள். ஒரு கை எழுதிக்கொண்டிருக்க மற்றக்கையில் கொய்யாப்பழத் துண்டு ஒன்றின் கடித்த பாதி கிடந்தது.

 

“ஆசைப்பட்ட பிரியாணி கிடைக்கலனா.. கிடைச்ச உப்புமாவை ஆசைப்பட்டு ஏத்துக்கணும். பிரியாணி கிடைக்கலனா உப்புமா.”

 

“உப்புமாவும் கிடைக்கலனா..?”

 

“உன்ன கொல்ல வேண்டியதுதான்..” அன்று பிரியாணி கேட்டும் மயூரி வேண்டுமென்றே உப்புமாத்தான் செய்வேன் என்று சொன்ன கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தாள் ஆதிரா.

 

பிரதீபனுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமமாய் இருந்தது. எவ்வளவு சேட்டை செய்கிறாள் இவள். உண்மையிலேயே அவனுடைய மய்யு பாவம்தான்.

 

அவளோ சொல்லிவிட்டு கள்ளத்தனமாய்த் தன்னைப் பார்ப்பது தெரிய வேகமாக லாப்டாப்பில் தலையைக் குனிந்துகொண்டான்.

 

“சிரிப்பு வந்தா சிரிங்கய்யா. சிரிக்கத் தெரிஞ்ச மிருகமையா மனுசன்.”

 

பெற்றவனையே மிருகமாக்கிவிட்டாள் அவனுடைய மகள். சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ஆ…து!” என்று இவன் பார்வையை உயர்த்தாமல் சொல்ல, “நடக்குது நடக்குது. படிப்பு நடக்…க்குது!” என்றாள் அவள்.

 

சற்றுநேரம் அமைதியாய் கழிந்திருந்தது.

 

“என்னய்யா தப்பு பண்ணா? ஏதோ ஒரு ஃபோன ராங்கா போட்டிருக்கான். ராங் நம்பர்னா சாரி சொல்லிட்டு வச்சிர வேண்டியதுதானே.. அதானய்யா உலக வழக்கம். அத விட்டுபுட்டு அம்பதுபேர் சேந்து ஆட்டோவுல வந்து என் கட்சிக்காரர ஸ்பாட்ல வச்சு தொவை தொவைனு தொவச்சிருக்கீங்க நீங்க.” மீண்டும் ஆரம்பித்திருந்தாள் ஆதிரா.

 

“மாப்பிள! இவன்தான் எங்கயோ செமத்தியா வாங்கி இருக்கான். இங்க வந்து வேற எவனோ வாங்கின மாதிரி அவுத்துவிடுறான் பாத்தியா.”

 

“இப்ப வந்தன் எண்டால் உனக்குத்தான் ரெண்டு போடுவன். பேசாம படி!” தாயின் குரல் உள்ளிருந்து கேட்க, “ஓக்…கே…ய்! டோன்ட் வொர்ர்ர்ரி…!” அதுவும் அச்சு வடிவேலுதான்.

 

அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்துவிட்டிருந்தான் பிரதீபன். பிறகென்ன! அத்துடன் ஆதிராவின் வீட்டுப்பாடம் முடிந்திருந்தது. ஓடிவந்து தகப்பனின் மடியில் ஏறி அமர்ந்திருந்தாள்.

 

“அம்மா பாத்தாவோ அடி விழும்.” சிரிப்பை அடக்கிக்கொண்டு மடியில் இருந்தவளிடம் சொன்னான்.

 

“எனக்கா உங்களுக்கா?” ரகசியமாய் கேட்டாள் மகள்.

 

“கள்ளி! அப்பாக்கு அடி வாங்கித் தரத்தான் இவ்வளவுமா?” எனும்போதே, அவனுக்கு அலுவலக அழைப்பு வந்தது.

 

உடனே, “அப்பா, ஷர்மி வீட்ட போயிட்டு வாறன். நாய்க்குட்டியோட விளையாடப்போறன். அம்மா கேட்டா சொல்லுங்கோ!” என்று, அவன் மறுக்கச் சந்தர்ப்பமே கொடுக்காமல் சொல்லிவிட்டு ஓடிப்போயிருந்தாள் ஆதிரா.

 

அதற்குமேல் தடுக்க முடியாமல் அழைப்பை ஏற்றிருந்தான் அவன்.

 

அறைக்குள் இருந்தவளோ உடைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். வீட்டில் இருந்துதான் பிரதீபனுக்கு வேலை என்றாலும், பெரும்பாலும் வீடியோ கோலில் உரையாடுவதால் ஜீன்சும் ஷர்ட்டும் பொறுத்தம் பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

 

டார்க் பிரவுனில் பிட் டெனிமுக்கு பீச் கலரில் முழுக்கை ஷர்ட்டை எடுத்தபோது, ‘இத போட்டா அவரின்ர பொடி ஷேப்புக்கு ஃபிட்டா அருமையா இருக்கும்.’ என்று நினைக்கும்போதே கற்பனையிலேயே அவனை சைட் அடிக்கும் தன்னை எண்ணி வெட்கினாள் மயூரி.

 

“இந்த வெக்கத்துக்கு காரணம் நானா? நீ தந்த முத்தமா?” பின்னிருந்து அவனது குரல் சீண்டியது.

 

தன் களவு பிடிபட்டதில் திகைத்தாலும், “ஆது எங்க?” என்றாள். அவள் இருக்கையில் அவன்தான் மகா மகா நல்லபிள்ளை ஆயிற்றே. அவளிடம் வந்திருக்கிறான் என்றால் ஆதிரா அங்கில்லை என்று அர்த்தம்.

 

“பக்கத்துவீட்டு நாய்க்குட்டியோட விளையாட போய்ட்டா.” என்றான் கண்களில் சிரிப்புடன்.

 

மயூரிக்குள் அபாயமணி ஒலித்தது. இவளின் வயதிலேயே அங்கும் ஒருத்தி இருப்பதில் போனால் இலகுவில் வரமாட்டாள் ஆதிரா. ஆதிரா இல்லையோ அவன் தன் விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிடுவான். அதுவும், ‘நானா விலகினாலும் என்னை விட்டுட்டு போய்டாதீங்க தீபன்’ என்று அவள் சொன்னாலும் சொன்னாள் அதைவைத்தே அவளை உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டிருந்தான் அவன். கூடவே அவளாகக் கொடுத்துவிட்ட முத்தமும் சேர்ந்துகொண்டிருந்தது.

 

“வடை இருக்கு. தேத்தண்ணியோட தரட்டா?” என்று கேட்டபடி வேகமாக அங்கிருந்து நழுவப்பார்க்க, “எங்க ஓடுறாய்?” என்றபடி அவளின் இடையைப் பற்றி இழுத்தான் அவன்.

 

“எப்ப பாத்தாலும் என்னை விட்டுட்டு ஓடுறதிலேயே குறியா இருப்பியா நீ?” என்றவனின் கேள்வி கிறக்கத்தோடு ஒலித்தது. காரணம் அவளின் இடை! அதில் அழுத்தமாய் பதிந்துவிட்ட அவன் விரல்கள். அந்த இடை உணர்த்திய மென்மையில் அவன் மயங்கினான். விரல்கள் அதுபாட்டுக்கு இயங்க அவள் தடுத்தும் நிறுத்தமுடியவில்லை.

 

அவளைத் தன் மார்போடு சாய்த்துக்கொண்டவனின் உதடுகள் காதோரமாய் குனிந்து பாடியது.

 

“இளையவளின் இடை ஒரு நூலகம்

படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னை தீண்ட கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்த கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்…” அதற்குமேல் முடியாமல் தன் உதடுகளை அவளின் கன்னக்கதுப்பில் அழுத்தினான். கைகள் அவள் விதித்த தடைகளை மீறியது.

 

மயூரியோ அவன் வேகத்தில் திகைத்துத் திணறினாள்.

 

“தீபன்..” ‘என்ன இது’ என்று கேட்டுமுடிக்க விடாத அளவில் இறுக்கி அணைத்திருந்தான் அவன்.

 

“என்ன விட்டுட்டு எங்கயும் போகாத மயூ!” தன்னை மறந்து உளறியவன் அவளின் கழுத்துவளைவில் முகம் புதைத்தான்.

 

அந்த வார்த்தைகளில் அப்படியே உறைந்தாள் மயூரி. வேகமாய் துடிக்கும் இதயம் அவனின் தவிப்பைச் சொல்ல மயூரியின் விழியோரம் மெல்ல நனைந்தது. அவள் பிரிந்து போனது அவனை மிகவுமே ஆழமாய்க் காயப்படுத்தி இருக்கிறது. மீண்டும் பிரிந்துவிடுவாளோ என்கிற பயம் வெளியே காட்டிக்கொள்ளாத போதிலும் அவனது ஆழ் நெஞ்சத்தில் அழுத்தமாய்ப் பதிந்து போயிருக்கிறது. அதனாலேயே இன்னும் தனக்குள் பயந்துகொண்டிருக்கிறான். அவன் கைகளிலும் மெல்லிய நடுக்கம். வெளியே காட்டிக்கொள்ளாத போதிலும் தனக்குள் மிகவுமே போராடுகிறான் என்று புரிந்து போயிற்று!

 

அன்றைக்கு அவன் கேட்டும் செய்யாததை இன்று அவன் கேளாமல் செய்தாள் மயூரி. அவனைத் தானும் அணைத்துக்கொண்டாள். கூடவே ஆறுதலாய் முதுகை வருடியும் கொடுத்தாள். அதை உணர்ந்தவனின் அணைப்பு இறுகியது. அன்று இவளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத ஆதிரா நினைவில் வந்தாள் மயூரிக்கு.

 

நொடித்துளிகள் சிலபல ஓடிமறைய, மெல்ல விலகி, “ஓடிப்போ! ஆனா நிறைய நாளைக்கு விடமாட்டன்!” என்று அவளின் கன்னம் தட்டிச் சொன்னான் அவன்.

அவளோ அவனைவிட்டு விலகாமல் மையலுடன் அவன் முகம் பார்த்தாள்.

 

“என்ன?” கனிந்த விழிகளில் காதலைத் தேக்கிக் கேட்டான் அவன்.

 

“நீங்க, இந்த அணைப்பு, இந்த அன்பு இதெல்லாம் வேண்டாம் எண்டு எப்படித்தான் இத்தனை வருசம் வாழ்ந்தேனோ தெரியா தீபன்..” சொல்லும்போதே, கூட்டினை ச் சுமந்தபடி நகரும் நத்தையைப்போல் அவன் நினைவுகளைச் சுமந்தபடி நகர்ந்த கொடுமையான நாட்கள் நினைவில் வந்து போக விழிகளில் நீர் நிறைந்துவிட்டிருந்தது.

 

ஒன்றும் சொல்லாமல் மனைவியை நேசமாய் அணைத்துக்கொண்டான் அவன். அவளின் முகம் பார்த்துப் புன்னகைத்தான். அவளுக்காவது ஆதிரா இருந்தாள். தாளவே முடியாத பொழுதுகளில் தோள் சாய்ந்து அழ நந்தினி இருந்தாள். அவனுக்கு? மூச்சுக்கூட விடமுடியாமல் மூச்சு முட்டிப்போயிருந்தானே. அவள் பிரிந்தது ஒரு வலி என்றால், அவள் பிரிந்தபிறகுதான் அவன் ஆற்றிய தவறின் ஆழமே முழுவதுமாக விளங்கிற்று! அவளையும் பிரிந்து குழந்தையையும் இழந்து எங்கு போனாள் என்று தெரியாமல் என்ன ஆனாள் என்றும் தெரியாமல் அவன் பட்ட பாடுகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. எத்தனையோ முறை இதயம் நின்றுவிடும்போல் வலித்திருக்கிறது. மூச்சு எடுக்கமுடியாமல் திணறி இருக்கிறான். உண்மையிலேயே இதயத்தில் தான் ஏதும் பிரச்சனையோ என்று வைத்தியரிடம் காட்டியும் இருக்கிறான். இதையெல்லாம் சொல்ல மனம் வரவில்லை. முடிந்தவைகளைப் பேசி அவளை வருத்தி என்ன வரப்போகிறது?

 

“இன்னும் கொஞ்சக் காலம் அப்பா இருந்திருக்கலாம்.” தழுதழுத்த குரலில் சொன்னாள் மயூரி. விழிகள் அறையில் இருந்த பெற்றவர்களின் படத்தின் மீதிருந்தது. இத்தனை வருடங்களைத்தான் தொலைத்துவிட்டார்கள் என்றால் மிகுதிக் காலத்தைக்கூட வாழமுடியாமல் நிற்கிறார்களே. வாழ்வோம் என்று முடிவெடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் முடியாமல் திணறிக்கொண்டு அந்த நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் மயூரி. ஒரு மன்னிப்பினைக் கேட்பதற்குக்கூட வழியற்றுப் போயிற்றே! ஒருமுறை அவர்களின் மடியில் விழுந்து அழுதுவிட்டால் இந்தப் பாரம் குறைந்துவிடக் கூடுமே!

error: Alert: Content selection is disabled!!