காதல் காயங்களே 34 – 1

அத்தியாயம் 34

 

 

பிரதீபனுக்கு நடுச்சாமத்தில் உறக்கம் கலைந்துபோயிற்று. இயல்பாகவே கை அவளைத் தேடி, காணாமல் கண்ணைத் திறந்து பார்த்தான். ஆதிரா மட்டும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ‘என்ன செய்கிறாள்’ என்று எழுந்துவந்தான். அங்கே ஹாலில் பெற்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மயூரி.

 

அவன் எழுந்துவந்ததை உணராமல் சுய அலசலில் மூழ்கிப்போயிருந்தாள். நிறைய நாட்களாக அவளுக்குள் நடப்பதுதான். இப்போதெல்லாம் சற்று அதிகமாயிருந்தது. காரணம், அவன் மீது முழுவதுமாகச் சாய்ந்துவிட்ட மனது.

 

அவுஸ்திரேலியாவில் இருந்த நாட்களில், இத்தனை வருடங்களில் அவன் என்னை மறந்திருப்பான், இன்னொரு வாழ்க்கை வாழ அராம்பித்தும் இருப்பான் என்றெல்லாம் எண்ணித் துடித்திருக்கிறாள். என்றைக்கும் எனக்கு நீ மட்டும் தான் என்றானே. எப்படி மறந்தான் என்றெல்லாம் அழுதிருக்கிறாள். அப்படி என்னை விட்டுவிட்டு இன்னொருத்தியிடம் போய்விடுவானா என்று கோபப்பட்டு இருக்கிறாள்.

 

நாட்கள் நகர நகர, தன்னையே சமாளித்துக்கொண்டாள். அவனுடைய அசுரத்தனமான ஆக்கிரமிப்பில் இருந்து வெளியே வந்துவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தாள். அதெல்லாம் அவனை வெகு நெருக்கத்தில் காணும்வரைதான்.

 

இலங்கைக்கு வந்தபிறகு தூரத்தில் கண்டபோதெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடி மறைந்திருக்கிறாள். அப்போதெல்லாம், அவன் என்னைப் பார்த்துவிடக்கூடாது அதனாலதான் என்று அவளே அவளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அன்று தியேட்டரில் வைத்துத்தான் விளங்கியது, வெகு நெருக்கத்தில் அவனை அவள் பார்த்துவிடக்கூடாது என்றுதான் அவளின் மனம் அவனைக் கண்ட போதிலெல்லாம் அவளைத் துரத்தி அடித்திருக்கிறது என்று.

 

அன்று, தியேட்டரில் அத்தனை அருகில் கண்மூடி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும், ஒருகணம் அவள் இதயம் துடிப்பதையே நிறுத்திவிட்டது. இது, இன்னொருத்தியோடு இல்லறத்தில் இன்புறும் ஒருவனின் தோற்றமல்ல! காதலில் தோற்றுப்போய் கதிகலங்கி நிற்கிறவனின் பிம்பம்! ஆங்காங்கே நரை விழுந்திருக்க, வாழ்வில் பற்றுதல் அற்று, மூப்பு கூடித் தெரிந்த மனிதனைக் கண்டு அதிர்ந்துதான் போனாள். இது குறும்பும் சிரிப்பும் பொங்கி வழியும் அவளுடைய தீபன் அல்ல. அவன் அவளை இப்படியாக்கிவிட்டானே என்றுதான் அத்தனை நாட்களாகத் நினைத்துக்கொண்டிருந்தாள். அன்றுதான், தான் அவனை எப்படி மாற்றிவிவிட்டிருக்கிறோம் என்று கண்ணால் கண்டாள். கண்ட கணத்தில் துடித்துப்போனாள்.

 

அப்படி இருக்கையில்தான், அவன் அப்போதுதான் திருமணத்துக்குச் சம்மதித்திருக்கிறான் என்று அவன் வாயாலேயே அன்னையிடம் சொல்வதைக் கேட்டபோது அவளுடைய தீபனும் அவளை மறந்துவிடவில்லை; அவனாலும் இலகுவாக அவளைத் தூக்கிப்போட முடியவில்லை: மண்ணுக்குள் ஆழமாய் ஓடும் வேரைப்போல தானும் அவனுயிரில் இரண்டரக் கலந்துதான் போயிருக்கிறோம் என்கிற எண்ணத்தில் அவளிதயம் ததும்பித்தான் போயிற்று!

 

கண்கள் கலங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பத்து வருடத் தாகம் தீர்கிறவரைக்கும் ஊனிலும் உயிரிலும் அவள் நிரப்பி வைத்திருக்கும் உருவத்தை அவனறியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 

பார்க்கப் பார்க்கத்தான், பழைய நினைவுகள் எல்லாம் அவளுக்குள் படையெடுத்து வந்தது. நடந்த விபத்து, அதன்பிறகான அழகிய நட்பு, இரயில் நிலையத்தில் நடந்தது, அம்மாவின் இழப்பு, காதலில் கசிந்துருகி வாழ்ந்தது, கடைசியில் குழந்தை. அந்தக் குழந்தையில் அப்படியே நின்றுபோயிற்று அவளின் நினைவுகள் எல்லாம். எவ்வளவு கெஞ்சினாள். கல்லாக நின்று மறுத்தானே!

 

இப்போது வேதனைப்பட்டு, துன்பப்பட்டு என்ன பயன்? மனம் விரக்தியில் துவள, படம் முடிந்ததுமே முதலாவது ஆளாக மகளையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள் மயூரி.

 

முதலில் இலங்கைக்கு வரவே பயந்தாள். அவனைக் கண்டுவிட்டால் என்ன செய்வது என்று. ஆனால், வந்து அப்பாவின் வைத்தியத்துக்காக அலைந்து திரிந்து எல்லாம் பார்த்து, அவரும் இவ்வுலகை விட்டு நீங்கியபோதும் அவள் அவுஸ்திரேலியா திரும்பவில்லை. கண்களை மூடினால் உறக்கம் இங்கேதான் வந்தது. வாழ்வில் ஏதோ அர்த்தம் இருப்பதாயும் இங்கு வந்தபிறகுதான் உணர்ந்தாள். அவன் இருக்கும் தேசத்தில் நானும் வாழ்கிறேன் என்கிற நினைப்பினாலோ என்னவோ, இங்கேதான் அவளால் கொஞ்சமேனும் தன் உயிர்ப்பை மீட்டுக்கொள்ள முடிந்தது. அதனால், இங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கொண்டு நாட்கள் சாதாரணமாக நழுவத் தொடங்கியபோது, என்னால் முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்குள் வேரூன்றியிருந்தது.

 

அதன்பிறகுதான் மூன்று முறைகள் எதேர்ச்சையாக அவனைத் தூரத்தில் கண்டுவிட்டு ஓடியிருக்கிறாள்.

 

மூன்றாவதுமுறை தியேட்டரில்.

 

அன்று ஜெய் அழைத்து அவனுக்குமுன்னால் நிறுத்தியது அவளும் எதிர்பாராததுதான். அதன்பிறகு நடந்தவை அனைத்தும் அவளின் கட்டுப்பாட்டை மீறியவை. அப்படித்தான் அவளின் மனமாற்றமும்.

 

ஆனாலும் இல்லறத்துக்குள் அவனோடு இணைந்துவிட முடியாமல் பெற்றவருக்கு அவள் இழைத்த பெரும் நம்பிக்கைத் துரோகம் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தது.

 

இந்த வேதனை என்றைக்குமே அவளுக்குத் தீராது போலும்.

 

அன்று ஆதிரா தலைமுடியை வெட்டிவிட்டுச் சொல்லாமல் இருந்தது சின்ன விசயம். சொல்லப்போனால் அது ஒரு விடயமே அல்ல. அதற்கே அவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது. அப்படியிருக்க அவள் செய்தது?

 

இன்றைக்கு நீயும் ஒரு பெண் பிள்ளைக்கு அம்மா. அந்த இடத்தில் இருந்து யோசித்துப்பார், நீ செய்தது எத்தனை இழிவான காரியம் என்று? ஆதிராவைக் கையில் ஏந்திய நாள் தொட்டு அவளின் மனச்சாட்சி அவளிடம் கேட்கும் கேள்வியிது. என்ன பதிலைச் சொல்லுவாள்?

 

எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பைக்கூட கேட்கமுடியாத நிலையில் விதி அவளை நிறுத்திவிட்டதே. அதைத்தான் அவளால் இன்னுமே தாங்கிக்கொள்ள முடியவில்லை. அல்லது, இதையெல்லாம் கேட்டுத் தாங்கிக்கொள்கிற சக்தி இல்லாமல் தான் இருவருமே போய்ச் சேர்ந்தார்களோ?

 

மனம் துடிக்க அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் பிரதீபன். அவளிடம் அசைவில்லை. மெல்ல அவளைச் சுற்றிக் கையைப்போட்டுத் தோளில் சாய்த்துக்கொண்டான். அவளும் சாய்ந்துகொண்டாள்.

 

“தங்கட மகள் அருமையான மகள் எண்டு நினைச்சிருப்பினம் என்ன தீபன்?” துயரம் நிறைந்த விழிகளோடு அவனிடம் கேட்டாள். எவ்வளவு நம்பினார்கள். அதனால் தானே ஒற்றைப் பெண்ணைத் தொலை தூரத்துக்கு தனியாக வேலைக்கே அனுப்பினார்கள். அப்படியிருக்க அவள் செய்த காரியம்?

 

அவளின் மனச்சாட்சியே அவளின் முகத்தில் உமிழ்ந்தது!

 

“எப்பவுமே அவேன்ர மகள் அருமையான மகள், அற்புதமான தாய், நல்ல மனைவி.” அடிக்கடி அவள் சொல்லும், ‘நான் நல்ல மகளாத்தான் இருக்கேல்ல. நல்ல அம்மாவாவது இருக்கோணும்’ என்பதை நினைவில் வைத்து அழுத்திச் சொன்னான் அவன்.

 

அதை அவள் ஏற்கவில்லை. மறுத்துத் தலையசைத்தாள்.

 

“முதல் உன்னை நீயே இப்படி தாழ்வா நினைக்கிற பழக்கத்தை விடு மயூ!” என்றான் கண்டிப்பு நிறைந்த குரலில்.

 

அவள் கலங்கிய முகத்தோடு பார்த்தாள். “உன்னை தாழ்வா நினைக்கிறது காணாம அதை ஆதுட்டயும் காட்டுறது நல்லமில்ல மயூ!” என்றான் அதே குரலில்.

 

தன் தவறை உணர்ந்தவளாகத் தலை குனிந்தாள் மயூரி. ஆனால், பட்டுவிட்ட ஆறாத காயம் தன்னைப்போல் மகளும் நடந்துவிடுவாளோ என்று அஞ்சிநடுங்க வைக்கிறதே. அதை என்ன செய்வாள்?

 

“இந்த உலகத்தில கேவலமான விசயங்கள் நிறைய இருக்கு. வெக்கமே இல்லாம அதையெல்லாம் செய்துபோட்டு தலையை நிமித்திக்கொண்டு வாழுற மனுசர் இன்னும் நிறைய இருக்கினம். அந்தளவுக்கு நாங்க நடக்கேல்ல மயூ. நாங்க செய்ததும் பெரிய பிழைதான். இல்லை எண்டு சொல்லமாட்டேன். அதுக்காக உன்னை நீயே மோசமா நினைக்காத எண்டுதான் சொல்லுறன். யோசிச்சுப்பாரு, பாத்த எல்லோரோடையும் நாங்க அப்படி வாழ இல்ல. என்னோட நீயும் உன்னோட நானும் தான் வாழ்ந்தோம். நாளைக்கு நீயும் நானும்தான் கல்யாணம் கட்டுவோம் எண்டு மனதால உறுதி எடுத்து வாழ்ந்தோம். பிரிஞ்ச பிறகும் வேற தேட இல்ல பாத்தியா? அதுதான் மயூ உன்னதமான காதல். அர்ஜுன் மாதிரி பெஸ்ட்டான ஒருத்தன் கேட்டும் நீ சம்மதிக்க இல்ல. அவனை வேணாம் எண்டு சொல்ல எந்தக் காரணமும் இல்லையே. அம்மா பத்து வருசமா படாத பாடுபட்டும் சம்மதிக்காத நான் அவவுக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு பயந்துதான் கல்யாணத்துக்கு பாக்க சொன்னனான். ஆனா சத்தியமா சொல்லுறன், அந்தக் கல்யாணம் நடந்தே இருக்காது. என்னால இன்னொருத்திய ஃபோட்டோல கூட பாக்க முடிஞ்சது இல்ல மயூ. அதுதான் மயூ காதல். அதுதான் வாழ்க்கை. நாம ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காம பிரிய இல்ல. வேற தேடிக்கொண்டும் பிரிய இல்ல. நமக்குள்ள வந்த கருத்துவேறுபாடுதான் பிரிச்சது. நான் பார்த்த ஒரு முட்டாள்தனம் தாங்கமுடியாமத்தான் நீ பிரிஞ்சு போனாய். அதாலதான் கல்யாணம் நடக்க முதலே நீ குழந்தை பெறவேண்டி வந்தது. அப்ப எல்லாத்துக்கும் காரணம் நான். நீயில்லை!” என்றான் தெளிவாக.

 

“யோசிச்சுப்பாரு, ஊருக்கும் உலகத்துக்கும் அஞ்சி கருவை நான் சொன்ன நேரமே அழிச்சுப்போட்டு நானும் நல்லவள்தான் எண்டு நீ வாழ்ந்திருக்கலாம். அப்ப நீ உன்ர அம்மா அப்பாக்கும் நல்லவளா இருந்திருப்பாய். என்ர அம்மா அப்பாக்கும் நல்லவளா இருந்திருப்பாய். ஆனா நம்ம மனச்சாட்சிக்கு? நம்மட மனச்சாட்சியே நம்மளை குத்திக் கூறுபோட்டிருக்கும் மயூ. ஒரு உயிரை கொன்று நம்மை நல்ல மனுசரா காட்டுறது எவ்வளவு கேவலம் சொல்லு? அதைத்தான் அன்றைக்கு நான் செய்ய நினைச்சிருக்கிறன். அந்தப் பாவத்தில இருந்து என்னையும் சேர்த்து காப்பாத்தினவள் நீ. நீ பிழையானவளா? என்ன மயூ நீ!” என்றான் அவன்.

 

அவள் விழிகளில் கண்ணீர் வடிந்தது. என்னவோ அவளைக் கட்டிப்போட்டிருந்த தழைகளை எல்லாம் அவன் மெல்ல மெல்லக் களைவது போலுணர்ந்தாள்.

 

“உனக்கு கெட்டபெயர் வரும், ஊரே தூற்றும், மதிக்காது எண்டு தெரிஞ்சும் உயிரா காதலிச்சவன கூடி பெருசா நினைக்காம, வயித்தில வளர்ந்த உயிரை பெருசா நினைச்சுத்தானே பிரிஞ்சு போனாய். இதைவிட நல்ல மனதும் நல்ல குணமும் யாருக்கு இருக்கும் சொல்லு? பிரிஞ்சு போயும் எங்கயும் நீ தோத்து போகேல்ல. நல்ல நிலமைல இருந்து ஆதுவையும் நல்லாத்தானே வளத்திருக்கிறாய். எல்லாத்தையும் விட உயிரோட இல்லாத அம்மா அப்பாக்கு நல்ல மகளா நடக்க இல்லையே எண்டு அழுறாய் பாத்தியா இதுதான் மயூ நல்ல மகளுக்கு அர்த்தமே. சும்மா அழாத. நானும் நீயும் செய்தது பெரிய தவறுதான். ஆனாலும் நம்ம வாழ்க்கை தவறிப்போகேல்ல. திரும்ப கிடைச்சிட்டுது. அதை சந்தோசமா வாழுவோம்.” என்றான் கெஞ்சலாக.

 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அவனாலும் தொடர்ந்து பேச முடியவில்லை. குரல் அடைத்துப் போயிருந்தது. நடந்த நிகழ்வுகளை எல்லாம் அந்தக் கனமான பொழுதினில் இன்னுமொருமுறை நினைவுகளால் கடந்துகொண்டிருந்தனர்.

 

“நீ என்ன எல்லாம் நினைச்சு கவலைப்படுறியோ அத்தனை விசயத்திலையும் சரிசமமான பங்கு எனக்கும் இருக்கு. உண்மையை சொல்லப்போனா கூடுதலான பங்கு எனக்குத்தான் இருக்கு. அம்மா சொன்ன மாதிரி ரெண்டு பொம்பிளை சகோதரங்களோட பிறந்த நான் உன்னோட வாழுறதுக்கு யோசிச்சு இருக்கவேணும். என்ன இருந்தாலும் நீ என்னைவிட சின்னப்பிள்ளை. நீயே தடுமாறி இருந்தாலுமே நான் தடுமாறாம நிண்டு நல்ல முறையில எங்கட உறவை கொண்டு போயிருக்க வேணும். அப்படிக் கொண்டுபோயிருக்க இண்டைக்கு எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அதையெல்லாம் செய்யாம கிடைச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்தின மாதிரி நீயும் இடம் தாறாய் எண்டு நல்லா அனுபவிச்சவன் நான். இதுல குழந்தை வந்திட கூடாது எண்டு நிபந்தனை வேற. யோசிச்சு பார், எவ்வளவு கேவலம் எண்டு. குழந்தை வேண்டாம் எண்டால் நான் அடங்கி இருந்திருக்க வேணும். அதைவிட்டுட்டு.. ப்ச்!” என்றான் தன்னையே வெறுத்தவனாக.

error: Alert: Content selection is disabled!!