காதல் காயங்களே 34 – 3

அவளின் கண்கள் அப்போதும் கலங்கிற்று. “சின்னதா ஒரு கவலை இருக்குத்தான் தீபன். மேலோட்டமா எண்டாலும் சொல்லியிருக்கலாம் நான். ஆனா.. என்ர அப்பாக்கு அவரின்ர மகள் மனதால படுற வேதனை விளங்கும். தினம் தினம் நான் கேக்கிற மன்னிப்பும் அவருக்குக் கேக்கும். கட்டாயம் என்னை மன்னிப்பார். நான் நம்புறேன். நான் சந்தோசமா வாழ்ந்தா மட்டும்தான் அவர் சந்தோசப்படுவார். அதால சாகிறவரைக்கும் உங்களோட திகட்டத் திகட்ட வாழப்போறன் தீபன்.” கலங்கிச் சிவந்துவிட்ட விழிகளோடு தழுதழுத்த குரலில் என்றாலும் உறுதியாக அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள் மயூரி.

 

அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவன். “இதை நீ சொல்லுற வரைக்கும்தான் காத்திருந்தன் மயூ.” என்றவன், அவள் முகத்தையே பார்த்து, “நான் மாமாவை போய் பாத்தனான்.” என்றான்.

 

“என்னது?” என்று அவள் அதிர அவன் ஆம் என்பதாகத் தலையை ஆட்டினான்.

 

“இந்த தேசமெல்லாம் உன்னை தேடினவன் அங்க போக மாட்டனா?”

 

“அப்பா சொல்லவே இல்லையே.” அவளால் நம்பவே முடியவில்லை.

 

“நான் தனியா போனது அவருக்கு சந்தேகம் வந்திருக்கு மயூ. நீ எங்க இருக்கிறாய் என்ன ஏது எண்டு சொல்லவே இல்ல. நானும் நமக்குள்ள நடந்த பிரச்னையைப் பற்றிச் சொல்லாம, ‘இந்தப்பக்கம் வந்தனான், மயூ உங்களிட்ட வாறன் எண்டாள். வந்திருந்தா ரெண்டுபேரும் ஒன்றாவே திரும்பி போகலாம் எண்டு பாத்தன்’ எண்டு சொன்னது அவருக்கு சந்தேகத்தை கொடுத்திருக்க வேணும். ஒரே ஒருக்கா நெஞ்சையே அலசுர மாதிரி பாத்தார். பிறகு அப்படி ஒண்டும் அவள் சொல்ல இல்லையே தம்பி எண்டார். நீ எங்க இருக்கிறாய் எண்டு எப்படி கேக்கிறது சொல்லு. கேட்டா நடந்ததை சொல்லவேண்டி வரும் என்று என்னவோ சொல்லி சமாளிச்சிட்டன்.” என்றான் அவன்.

 

அவளோ அவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்வுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

“ஆனா, நீ வந்தாலும் தெரியவரும் என்று அடிக்கடி அவரை போய் பாக்கிறானான் மயூ. சின்ன வயசில இருந்த உன்ர போட்டோக்களை காட்டுவார், நீ செய்த சேட்டைகளை சொல்லுவார். படிப்பில நீ நல்ல கெட்டிக்காரியாம், ஸ்போர்ட்ஸ் எல்லாம் நீதான் முதலாம் எண்டு பழசு எல்லாம் சொல்லுவாரே தவிர ஒருநாள் கூட மனுசன் உன்னைப்பற்றி வாயே திறக்க இல்ல. தேவகி ஆன்ட்டியும் மகனோட அமேரிக்கா போயிட்டா. பக்கத்து வீட்டுக்காரரை மெல்ல விசாரிச்சு பாத்தனான். நீ வரவே இல்லை எண்டு சொன்னவே. நான் நினைச்சன் என்னில இருக்கிற கோபத்தில் நீ மாமாவையும் தனியா விட்டுட்டாய் எண்டு. ஆதிரா இருக்கிறது அப்ப எனக்கும் தெரியாது தானே. ஒவ்வொரு மாதமும் அவரைப்போய் பாத்தனான். ஒரு நாள் ரெண்டு நாள் எண்டு அவரோட இருந்திட்டு வருவன். அப்படித் தங்கின நாட்கள்ல அவரும் நானும் கார்ட்ஸ் விளையாடுவோம், காரம்போட் விளையாடுவோம், பழையாகாலத்து படம் பாக்கிறது, சும்மா ஒரு நடை நடப்போம் இப்படி சந்தோசமா போகும் பொழுது. என்னவோ எனக்கும் உன்னோட வாழ்ந்திட்டு வாற ஒரு பீல். அவருக்கும்.. அவரும் நான் எப்ப வருவன் எண்டு பாத்துக்கொண்டு இருப்பார். ரெண்டுபேரும் காணி எல்லாம் சுத்தம் செய்திருக்கிறோம். சேர்ந்து சமைச்சிருக்கிறோம். பார்பிகியூ போடுவோம். நல்ல மனுசன் மயூ. நான் நினைக்கிறது சரியா இருந்தா, அவருக்கு கான்சர் எண்டு அவருக்கே தெரிஞ்சதும் தான் வீட்டை வித்திருக்கிறார். கடைசியா அவரே என்னை ஃபோன் செய்து கூப்பிட்டவர். நான் போக, ‘இனி என்னை பாக்க வரவேண்டாம்’ எண்டார். ஏன் எண்டு கேட்டதுக்கு, ‘வீட்டை வித்திட்டன். கோயில் கோயிலா போகப்போறன்’ எண்டார். எங்கேயெல்லாம் போறீங்க எண்டு கேட்டதுக்கு ‘எங்க எண்டில்லாம பாக்கோணும் எண்டு நினைக்கிற இடத்துக்கெல்லாம் போகப்போறன்’ எண்டு சொன்னார். நான் நம்பாம பாக்க, ‘எங்க போனாலும் உங்கட நம்பர் என்னட்ட இருக்கு தானே தம்பி. தேவை எண்டால் கட்டாயம் கூப்பிடுவன்.’ என்று சொன்னவர். என்னவோ எனக்கு மனசே சரியில்ல. இவ்வளவு நல்ல மனுசனுக்கு மறைக்கிறது பெரும் பாவமா மனதில குத்திக்கொண்டே இருந்தது. அதைவிட அவ்வளவு காலமும் நீ டெலிபோன்ல கூட கதைக்காம இருக்கமாட்டாய் எண்டு தெரியும். அப்ப எப்படியும் எனக்கும் உனக்கும் ஏதோ பிரச்சனை எண்டு கண்டு பிடிச்சிருப்பார். அதுக்கும் மேல மறைக்கமுடியாம நீ எங்க எண்டு அவரிட்டையே கேட்டுடன். எவ்வளவு கேட்டும் சொல்லேல்ல அவர். ‘உங்களுக்க என்னவோ சண்டை எண்டு தெரியும் தம்பி. ஆனா அதைப்பற்றி மயூ என்னட்டையே சொல்லேல்ல என்றேக்க நானும் அவளைப்பற்றி உங்களிட்ட சொல்லேலாது’ எண்டு சொல்லிப்போட்டார். ” என்றான்.

 

அவளுக்கோ தந்தையின் பாசத்தில் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது. இதைப்பற்றியெல்லாம் அவளிடம் மூச்சே விடவில்லை அவர். அவர்களுக்குள் சண்டை என்பதை ஊகித்திருக்கிறார். அவள்தான் பிரிந்தும் போயிருக்கிறாள் என்பதையும் கண்டு பிடித்திருக்கிறார். அதனால்தான், அவளின் மனதை அறியத்தான் அவ்வப்போது எப்போது கல்யாணம் என்று கேட்டிருக்கிறார்.

 

அந்தநாள் நினைவுகளிலேயே இருந்தவன் தொடர்ந்தான். “அவர் உன்னை விளங்கி வச்சிருக்கிற அளவுக்கு நீயே உன்னை விளங்கி வச்சிருக்க மாட்டாய் மயூ. என்ன சொன்னவர் தெரியுமா? ‘உங்களுக்க என்ன நடந்தது யார்ல பிழை எண்டு தெரியேல்ல தம்பி. ஆனா என்ர மகள் பிழை விடமாட்டாள். அப்படி விட்டிருந்தாலும் தெரியாம செய்திருப்பாள். இல்ல அளவுக்கதிகமான அன்பில செய்திருப்பாள். அவள் என்ன செய்தாலும் அவளுக்குத் துணையாத்தான் நான் இருப்பன். இத்தனை நாள்ல அவள் உங்களிட்ட திரும்ப வரேல்ல எண்டேக்க அவளுக்கு அதுல விருப்பம் இல்லை எண்டு நினைக்கிறன். அவளின்ர முடிவுதான் என்றைக்குமே என்ர முடிவு. என்னால எதுவுமே செய்யேலாது தம்பி’ எண்டு சொன்னவர். ‘நீங்களும் நல்ல பிள்ளையாத்தான் தெரியிறீங்க. கட்டாயம் கடவுள் உங்க ரெண்டுபேருக்கும் துணையா இருப்பார். என்றைக்காவது நீங்க ரெண்டுபேரும் ஒண்டு சேர்ந்தால்.. அந்த நேரம் நான் இருக்கிறனோ தெரியாது. எனக்கு ஒண்டும் தெரியாது எண்டு மயூரி அழுவாள். அப்ப சொல்லுங்கோ என்ர மகளிட்ட, அவள் என்ன செய்தாலும் அப்பா அவளுக்காக இருப்பேனாம் எண்டு. அவா சந்தோசமா வாழுறது மட்டும் தான் எனக்கு வேணுமாம் எண்டும் சொல்லிவிடுங்கோ’ எண்டு சொன்னவர் மயூ. எனக்கு கண்ணில தண்ணியே வந்திட்டுது. அவரின்ர கையை பிடிச்சுக்கொண்டு நடந்ததை எல்லாம் சொல்லிப்போட்டன். ஆனா ஆதிரா இருக்கிறது எனக்கும் தெரியாதே மயூ. அதால அது மட்டும் தான் மாமாக்கு தெரியாது. அதுதான் நான் அவரை கடைசியா பாத்தது. பிறகு அவவரின்ர நம்பரும் வேலை செய்ய இல்ல. அவரும் எனக்கு எடுக்கேல்ல.” என்றான் அவன்.

 

கேட்டுக்கொண்டு இருந்தவள் அவனிலேயே சாய்ந்து விம்மி வெடித்து அழத் தொடங்கியிருந்தாள்.

 

“மயூ.. அழாதடி. இத முதலே சொல்லி, உன்னோட வாழுறதுக்காக நான் சொன்னதா இருக்க கூடாது எண்டுதான் இவ்வளவு நாளும் சொல்லேல்ல. செல்லம் இங்கப்பார். அழாத. உன்ர மனசுல சின்னதா கூட அந்தக் கவலை வேண்டாம் எண்டுதான் இதெல்லாம் சொல்லுறன். அழாத மயூ.” அவன் பேச்சை கேட்கும் நிலையிலேயே இல்லை அவள். இருக்கிற கண்ணீரை எல்லாம் அழுது தீர்க்கிறவள் போன்று அழுதாள்.

 

அப்பாவுக்கு அவள் செய்த பிழைகள் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவளை மன்னித்து இருக்கிறார். மன்னித்தது மட்டுமல்லாமல் அவளுக்காகப் பேசி இருக்கிறார். எந்தக்காலத்திலும் தன் மகள் துன்பப் பட்டுவிடக் கூடாது என்று யோசித்து நடந்திருக்கிறார். அதனால் தான் கடைசி வருடங்களில் அவனைப்பற்றி அவர் கேட்கவே இல்லை. அவனிடம் இனி வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் ஹாஸ்ப்பிட்டலில் வந்து தங்கியிருக்கிறார். ஆனாலும், தன்னிடம் கூட அவனைப்பற்றிச் சொல்லவில்லையே. கடைசியில் கூட. அவள் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார். எதுவாயினும் தன் விருப்பம் போல் அவள் வாழட்டும் என்று எண்ணியிருக்கிறார். அப்பா அப்பா என்று மனம் ஓலமிட்டுக் கதறித் தீர்த்தது.

 

பிரதீபனால் கூட அவளைத் தேற்ற முடியவில்லை. இன்றோடு அழுது முடிக்கட்டும் என்று அணைத்து, ஆறுதல் சொல்லி, தேற்றியபடி அமைதியாக இருந்தான். ஆதிரா எழுந்துவிட்டாலும் என்று வேகமாகச் சென்று அறைக்கதவைச் சாற்றிவிட்டு வந்தான்.

 

“மய்யு காணும்மா. நீ அழ அழ என்ர மனம் என்னைத்தான் குத்துது. இதெல்லாத்துக்கும் நான் தானே காரணம்.” என்றதும், “இல்ல இல்ல தீபன்.” என்றவளின் அழுகை மெல்ல மெல்ல குறைந்து போயிற்று!

 

கூட்டிக்கொண்டுபோய் முகம் கழுவ வைத்து கூட்டிக்கொண்டு வந்தான். முகமே வீங்கிப் போயிருந்தது. “ஆது பாத்தா பயந்துபோவா. அப்பிடி இருக்கு உன்ர முகம்.” என்றவன் துவாலையால் தானே துடைத்துவிட்டான்.

 

அவளை அமர்த்திவிட்டு, சமையலறைக்குப்போய் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்து தானும் பருகினான்.

 

அவள் அருந்தி முடித்ததும், “இப்ப ஓகேயா என்ர மய்யுக்கு?” என்றவனை ஒருகணம் விழி நிறையப் பார்த்தவள் அடுத்த கணமே அவனை முத்தமழையில் நனையவைத்தாள்.

 

அவளின் தந்தையின் தனிமையான நாட்களை முடிந்தவரை நிறைவாக மாற்றிக் கொடுத்ததற்கும், அவளைப்பற்றி அப்பாவுக்குத் தெரியப்படுத்தியதற்கும் அவரின் வாயாலேயே அவளுக்கான மன்னிப்பை வாங்கி வைத்ததற்கும் தான் இந்த முத்தப்பரிசு என்று அவனுக்குத் தெரியும். என்றாலும் அவளைச் சீண்ட மனம் உந்தியது.

 

“மய்யு… எதையுமே எக்ஸ்ட்ரீம் லெவல்லதான் காட்டுவியா நீ? காதலா இருந்தா திக்குமுக்காட வைக்கிறாய். கோவமா இருந்தா கண்ணுக்கே தெரியாம மறைஞ்சு போறாய். சந்தோசமா இருந்தா திணற வைக்கிறாய். என்ன ஆளடி நீ?” என்று சிரித்தவனுக்குமே சந்தோசம் தான்.

 

அவளோ ஆவேசம் கொண்டவள் போன்று தன் முத்தத்தால் அவனைத் திக்குமுக்காடச் செய்துகொண்டிருந்தாள். அவனுடைய கட்டுப்பாடும் மெல்ல உடைந்தது. அவளை வளைத்தவனின் விரல்கள் இடையில் மெல்ல அழுந்தின. பார்வை மாறியது. மெல்லச் சிரித்தான். அப்படியே அவளின் அசைவுகள் அனைத்தும் அடங்க அவன் கைகளுக்குள் அடங்கினாள் மயூரி.

 

“ரெண்டு பிள்ளையையும் இரட்டை பிள்ளையா பெறுவமா?” கேட்டுவிட்டுக் காதோரமாய்ச் சிரித்தான் அவன்.

 

அந்தச் சிரிப்பில் மோகம் முளைக்க அவன் கழுத்துக்குத் தன் கைகளை மாலையாக்கினாள் மயூரி.

 

அப்படியே அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டவன் பக்கத்து அறைக்கு நடந்தான். “பத்து வருசமாச்சு மயூ!” கட்டில் பாடத்தைக் கற்றுக்கொடுக்க அவன் ஆரம்பிக்க, மறந்துவிட்ட இன்பங்களை எல்லாம் மீட்டுக்கொண்டு வந்தவனிடம் அப்படியே தன்னைக் கொடுத்தாள் மயூரி.

 

அவனுக்கில்லாதது என்று அவளிடம் எதுவுமில்லை. அவளில்லாமல் அவனுக்கு இவ்வுலகில் எதுவுமே இல்லை.

 

காதலைச் சொன்னவனும் அவனே. காயங்கள் தந்தவனும் அவனே. மருந்தாய் வந்தவனும் அவனே. அவளின் வாழ்வின் உயிர்ப்பும் அவனே என்று உணர்ந்த மயூரி கணவனின் கைகளில் பூவாய் மலர்ந்துகிடந்தாள்.

 

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!