27
‘டேய் காண்டீப்! மீரா. மறந்திருப்பியே! என்ன திடீரெண்டு என்று நினைக்கிறியா? இனி உயிரோட இருப்பனோ என்னவோ! இண்டைக்கு என்ர பிறந்தநாள். உனக்கு எங்க நினைவிருக்கப் போகுது? சின்னப் பார்ட்டி என்று ரெஸ்ட்டோரண்ட் வந்தால்….தீவிர…வாதிகள்…’
இதோடு குறுஞ்செய்தி நிறைவுற்றிருந்தது.
உடல் நடுங்க போர்வையை உதறிவிட்டு இறங்கியவன் மீண்டும் மீண்டும் அந்த இலக்கத்துக்கு அழைத்தான்.
“ராட்சசி! விளையாடுறியா? இப்பிடியாடி?”
கண்களால் கண்ணீர் சொரிந்தது. தன்னை மறந்து கத்தினான்.
என்னதான் விளையாடுகிறாள் என்று எண்ணினாலும் அழைப்பு எடுபடவில்லை என்றதும் என்ன செய்வதென்றே புரியவில்லை அவனுக்கு.
ஒருவேளை உண்மையாக இருந்தால்? இன்றைய காலகட்டத்தில் உலகத்தில் எங்க என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த இடத்திலும் உத்தரவாதம் இல்லையே!
விரைந்து சென்று தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தான். அப்படியெதுவும் சொல்லப்படவில்லை.
‘இவள் பொய் சொல்லுறாள்’ என்று சற்றே சமாதானம் அடைந்தவனுக்கு ‘காண்டீப்’ என்ற அழைப்பிலிருந்தே அவளின் மனநிலை புரிந்தது. இவனின் நொந்து கிடந்த மனதுக்கு அது அருமருந்தாகவும் அமைந்தது.
அதில் முழுமையாகச் சுகம் காண முடியாத பதற்றம் ஆட்டுவிக்க, “நெட்டில பார்ப்பமே!” என்று கைபேசியை எடுத்து அவுஸ்திரேலியா நாட்டு நிகழ்வுகளைத் தட்டினான். முதல் செய்தியாக வந்து விழுந்தது, அவசரகாலச் செய்தியொன்று!
‘சிட்னியில் ஆளரவம் மிக்க பகுதியில் அமைந்துள்ள சிறு ரெஸ்ட்டோரண்ட் தீவிரவாதிகள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள்…’
அடுத்தநொடி, வீட்டுக்கதவை அறைந்து சாத்திவிட்டு ஒரே ஓட்டமாக இறங்கியிருந்தான், ஜோரிக்.
சிட்னி எங்கே நெதர்லாந்து எங்கே? இங்கிருப்பவனால் சட்டென்று என்ன செய்ய முடியும்? ஓடிச் செல்லவாவது முடியுமா என்ன? சென்றும் இந்த நிலையில் என்ன செய்வாய்?
எந்தக் கேள்விக்கும் பதில் தேடவில்லை அவன். என்ன செய்யப் போகிறோம் என்றில்லாதுதான் வெளியேறியவன், மின்னல் வேகத்தில் காரை இயக்கி அல்மேரே நோக்கி விரைந்தான்.
‘இப்ப ஏன் அங்க போறன்? போய் என்ன செய்யப் போறன்? அத்தூரத்தில ஆபத்தில இருக்கிறவளுக்கு எப்பிடி உதவப் போறன்?’
நெஞ்சில் முட்டிய எந்தக் கேள்விக்கும் விடையில்லை. வெறி பிடித்தவன் போல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான், அவன்.
நடுச்சாமமே என்றாலும் சாலை விதிகளுக்கு விலக்கா என்ன?
பாதையில் இருந்த சிவப்பு விளக்குகளைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. ஐம்பது, அறுபது, எழுபது, நூறு என ஒவ்வொரு வேகத்தில் செல்லும் பாதைகளையும் அசுர வேகத்தில் கடந்து சென்றான். வளைவுகள், நெளிவுகளில் சற்றும் வேகம் குறையாது அவன் சென்ற விதம், எப்போ எங்கு சென்று முட்டிக் கவிழ்வானோ என்ற பதற்றத்தைத் தோற்றுவித்தது.
அப்படியொரு வளைவில் அவன் கார் சீறிச் செல்கையில், எதிர்புறமிருந்து வந்த காவல்துறை வண்டி அப்படியே புல்வெளியில் இறங்கித் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.
மறுநொடி தம் காரைத் திருப்பியவர்கள் ‘ஸ்டாப் பொலீஸ்’ சைகையுடன் அவன் காரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து விரட்டிச் சென்றார்கள்.
அதை அவன் எங்கே பார்த்தான்? அப்படியே பார்த்து, அது கருத்தில் பதிந்தாலும் நிறுத்துவானா என்ன?
அவனுக்கு அவன் தேவதையின் இப்போதைய நிலை தெரிய வேண்டும், அவ்வளவும் தான். முதல், உண்மையாகவே அவள் அந்த ரெஸ்ட்டோரண்ட் போனாளா என்று அறிய வேண்டும்.
ஒத்த கணத்தையும் வீணாக்காது விரைந்தவன் கார்த்திகேயன் வீட்டு வாயிலில் சென்றுதான் காரை நிறுத்தியிருந்தான்.
அதுவும், அடுத்த கணமே இறங்கி, பின்னால் வந்த காவல்துறையினர் “நில்!” என்றபடி விரைந்து வருவதைப் பொருட்படுத்தாது கேட்டைத் திறந்து உள்ளிட்டும் இருந்தான்.
கையில் நீட்டிப்பிடித்த துப்பாக்கியுடன் பாய்ந்து வந்து பிடித்துக் கொண்டார், ஒரு காவலர். அடுத்தவர் முன்னால் வந்து துப்பாக்கியை நீட்டினார்.
“நட!” ஒரே தள்ளில் வெளியே தள்ளி அவன் கார்மீதே சாய்த்திருந்தார்கள்.
மனதில் பலமிழந்திருந்தவன் எதிர்க்க நினைக்க முதல் அடக்கியிருந்தார்கள்.
அவனை ஒரு தீவிரவாதிபோல் பார்த்தார்கள், இருவரும். உண்மையில் அப்படியொரு சந்தேகம் அவர்களுள். எங்கு என்ன எப்படி என்ற ஒரு கலவரத்தோடும் சந்தேகத்தோடும் நடமாட வேண்டிய காலமாச்சே! அப்படியிருக்க, ‘நிறுத்து’ என்ற பின்னும் தலைதெறிக்கும் வேகத்தில் வந்தால்?
“சொல்லு… நில் எண்ட பிறகும் அந்த வேகத்தில வந்தியே எதுக்காக? உனக்கு ஏதாவது நடக்கிறது வேற, எதிரில வாறவேக்கு ஏதாவது நடக்கும் எண்டு ஒரு கணம் சரி நினைச்சுப் பார்த்தியா?”
“இங்க பாருங்க, வேகமா வந்தது பிழைதான். என்ன கேட்கிறது எண்டாலும் கொஞ்சநேரம் இங்க நில்லுங்க, முக்கியமாக ஒரு விசயம் கதைச்சிட்டு வாறன்.” நகர முயன்றவனை, அடிப்பது போல நெருங்கிய காவலருக்கு அப்போதுதான் அவன் நின்ற கோலமே உரைத்தது.
அந்தளவுக்கு அவனில் கோபம் கொண்டு வந்து பிடித்திருந்தவர்கள், இப்போதோ, யோசனையாகப் பார்த்தார்கள்.
இரவுடை; கோடு போட்ட பிஜாமா கால்சட்டை; மேலே கறுப்பு மொட்டக்கை டீ சேர்ட்…அவனை மேலிருந்து கீழாக அளந்தார்கள் காவலர்கள் இருவரும். அதுவும் வெற்றுக்கால்.
“உன்ர லைசன்ஸ் எடு!”
“லைசன்ஸ்?” அவன்தான் பேர்ஸ் எடுத்து வரவில்லையே!
“அது வீட்டில…நான்…நான் அவசரமா வந்தன். ப்ளீஸ்! முதல் அவளுக்கு ஒண்டுமில்ல எண்டு அவே சொல்லட்டும். அதுக்குப் பிறகு என்ன எண்டாலும் செய்யிறன். ஃபைன் அடியுங்க. லைசன்ஸ்… அதை வேண்டுமெண்டாலும் பறியுங்க. இப்ப என்னை விடுங்க…அவளுக்கு..” கண்ணீரோடு அவன் கதைத்தது அவர்களுக்கு விளங்கவே இல்லை.
“என்ன பிரச்சினை?” அவன் மீதிருந்த கரத்தை விலக்கியபடி கேட்டார், அந்த முதிய காவலர்.
“மீரா! அவளுக்கு ஆபத்து…” படபடவென்று சுருங்கக் கூற, இவர்களுக்கும் தான் அதிர்ச்சி.
“அப்படியெல்லாம் இருக்காது…நீ ஏதாவது பிழையாப் பார்த்திருப்ப.” சமாதானமாகச் சொன்னபடி கைபேசியைத் தட்டினார், அவர்.
அவன் கூற்று சரியே என்றது செய்தி. அப்படியே அருகில் நின்றவரிடம் வாசிக்கக் குடுத்தவர், “இவர்கள் யார்?” கார்த்திகேயன் வீட்டைக் காட்டிக் கேட்டார்.
அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே நடக்கவும் செய்தார்.
“மீராவின் மாமா வீடு.” சொன்னவன், ஓடிச் சென்று முன்வாயில் கதவில் படபடவென்று தட்டினான்.
“ஆதவ்…அவளின் மச்சான்ட பெயர்…ஆதவ்…ஆதவ்…” கதவை இடித்தான்.
அழைப்பு மணியை அழுத்தினார், காவலர்.
“நீ கொஞ்சம் பொறுமையா இரு!”
அவனை இலேசாகக் கடிந்தும் கொண்டார். அதையெல்லாம் அவன் காதில் வாங்கிக் கொண்டால்தானே?
ஆழ்ந்த நித்திரையில் இருந்த கார்த்திகேயனே கதவு இடிபடும் சத்தத்தில் முதலில் அருண்டார்.
“நம்ம வீட்டுக்கதவா?” எழுந்தமர்ந்தவர் காதுகளில், “ஆதவ்” என்ற அழைப்பும் விழவே, “ஆரது?” சட்டென்று கட்டிலைவிட்டு இறங்கி வெளியேறினார்.
அந்த அரவத்தில் அருண்டெழுந்த மதுராவும், கதவு இடிபடுவதையும் மகனை யாரோ அழைப்பதையும் கேட்டுவிட்டு, பதற்றத்தோடு எழுந்து கணவரைத் தொடர்ந்தார்.
அதேநேரம், “ஆர் அப்பா இப்படிக் கதவ உடைக்கிறது?” அரைக்கண் விழிப்போடு எழுந்து வந்தான், ஆதவ்.
“பார்ப்பம்…” என்று விரைந்த கணவனை முந்திச் சென்ற மதுரா, யன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு, “அப்பா பொலீஸ்!” என்றார், யோசனையை விழுங்கிய அதிர்வோடு!
‘மகன் பெயரை அழைத்தபடி இந்தச் சாமத்தில்…’ மகனை நோக்கினார்.
அவர்களுக்குமே குழப்பம் தானே?
“நான் என்னம்மா செய்தன்? கதவத் திறந்து என்ன எண்டு கேட்பம் பொறுங்கோ!” முன்னேறியவனைத் தடுத்துவிட்டு, தானே சென்று கதவைத் திறந்தார், கார்த்திகேயன்.
மறுகணம், அவரும் அவரைத் தொடர்ந்து வெளியில் எட்டிப்பார்த்த ஆதவ், மதுராவும் அதிர்ந்து நின்றனர்.
“இவனா?” தன்னை மறந்து வாய்விட்டார், மதுரா.
“என்ன இப்பிடி வந்து நிற்கிறார்? என்ன பிரச்சினை எண்டு கேளுங்கோப்பா!” ஆதவ்.
“ஜோரிக் என்ன நடந்தது?” காவலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடமே கேட்டார், கார்த்திகேயன். ஏனோ அவன் அந்நியன் என்று ஒதுக்கிவிட்டு காவலரிடம் விசாரிக்க முடியவில்லை.
ஆனாலும், “மீரா மீராக்கு…” என்று அவன் தடுமாறித் திக்க, அப்படியே உறைந்து போனார்கள், மூவரும்.
‘எப்பவோ முடிந்த கதை என்றிருந்தால் இவன் என்ன இந்த நடுச்சாமத்தில் அவள்ட பெயரைச் சொல்லிக்கொண்டு பொலீசோடு வந்து நிற்கிறான்?’ என்ற எண்ணமே மூவர் உள்ளத்திலும்.
மறுகணம் சுதாகரித்த கார்த்திகேயன், “மீராக்கு என்ன?” என்றார் ஒருமாதிரிக் குரலில்.
“அவள் அவள் அங்க வீட்டில இருக்கிறாளா? அல்லது எங்க இருக்கிறாள்? நல்லா இருக்கிறாளா? ஒருதடவை ஃபோன் பண்ணிக் கேளுங்கோவன்.” எப்போதும் போல நெதர்லாந்தில் படபடத்தான்.
“இங்க பார் ஜோரிக், என்ன விசயம் எண்டு சொல்லாமல் இப்பிடி மொட்டையாச் சொன்னால் நாங்க என்ன எண்டு நினைக்கிறது? முதல் இதென்ன கோலம்?” அவனைச் சுட்டிக் காட்டிக் கேட்டார், கார்த்திகேயன்.
“எனக்கு இப்ப மீரா நல்லா இருக்கிறாளா எண்டு தெரியோணும். அதுக்குப் பிறகுதான் வேற கதை!” பிடிவாதமாகச் சொன்னவன் குரலும் உயர்ந்திருந்தது.
சட்டென்று அவன் தோளில் கை வைத்து அமைதிப்படுத்திய காவலர், சுருக்கமாக அவன் சொன்னதைச் சொல்ல, “என்ன!?” ஒன்றாகக் கூவினார்கள், மூவரும்.
“இல்ல அப்பிடியெல்லாம் இருக்காது. அக்காட்ட கேட்கிறன்.” பாய்ந்து சென்று தமக்கைக்கு அழைத்தான், ஆதவ்.
“ஆரணிக்கா?” கிட்டத்தட்ட கூவினான். அந்தப்புறமிருந்து சத்தம் வரவில்லை போலும் .
“அக்கா…லைனில் இருக்கிறீங்களா? நான் கதைக்கிறது கேட்கிதா?” என்றவன், தமக்கையின் கேவல் சத்தத்தில் நெஞ்சம் நடுங்கிப் போனான்.
“அப்ப மீரா..மீரா…உண்மையாக்கா?” திக்கினான்.
“ஓமடா!” என்ற ஆரணி அழ, தொலைபேசியைப் போட்டுவிட்டு அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டான், அவன்.
அவர்கள் கதைப்பதைக் கேட்டிருந்த ஜோரிக், ஆதவ் கீழே போட்ட தொலைபேசியை எடுக்க முனைந்த கார்த்திகேயனை முந்திக்கொண்டு பாய்ந்து சென்று எடுத்துவிட்டான்.
“ஆரணி..நான்…நான் ஜோரிக். மீரா…அந்த ரெஸ்ட்டோரண்டிலா? பொய் சொல்லாத! அவள் அங்க போக இல்லையெண்டு சொல்லிரு! போக இல்ல தானே?” வாய்விட்டு அழுதபடி கேட்க, இவன் குரலில் பேச்சு மறந்து நின்றாள், ஆரணி.
‘இவன்…இவர் எப்பிடி எங்கட வீட்டில? மீரா விசயம் இந்த இரவில எப்பிடித் தெரிஞ்சிருக்கும்?’ என்ற அவள் குழப்பத்துக்கு விடை தந்தான், அவன்.
“கொஞ்சம் முதல் மீரா ஃபோன் பண்ணினாள். நான் நம்பேல்ல. உங்கட வீட்டில வந்து கேட்பம் எண்டு வந்தால்…” தொலைபேசியை அருகில் வந்த கார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டுத் தளர்வாக வெளியேறினான்.
“ஜோரிக், நீ இப்ப டிரைவ் பண்ண வேணாம். கொஞ்சம் நில்லு!”
தடுத்த கார்த்திகேயன் குரலுக்குச் சற்றும் தயங்கி நிற்காது முன்னேறினான், அவன்.

