28
அமஸ்டர்டாம் சர்வதேச விமானநிலையம் காலைநேரப் பரபரப்பில் நனைந்த வண்ணம் இயங்கிக் கொண்டிருந்தது.
அதன் வாயிலருகில் காரைக் கொண்டுவந்து நிறுத்திய ஆதவ், “நீங்க எல்லாரும் உள்ளுக்குப் போங்க, நாங்க காரை நிப்பாட்டிப்போட்டு வாறம்.” கார் நிறுத்தம் நோக்கிச் சென்றான்.
அழுதழுது சோர்ந்திருந்தார், நித்தி. அவரைக் கைத்தாங்கலாக பற்றியபடி உள்ளே நடந்தார், சதீஷ்.
சிறு பயணப்பைகள் இரண்டையும் ஆளுக்கொன்றாக இழுத்துக்கொண்டு பின்தொடர்ந்தார்கள், கார்த்திகேயனும் மதுராவும்; யாரிலும் உயிர்ப்பேயில்லை.
‘மீரா! எங்கட பிள்ள எந்த ஆபத்துமில்லாமல் வந்திர வேணும்!’
ஒவ்வொருவரினதும் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இதையே யாசிக்க, ‘கடைசிநேர பயணச்சீட்டுச் சரி கிடைச்சால்…’ என, அவுஸ்திரேலியா போகும் எண்ணத்தில் வந்திருந்தார்கள்.
அதிகாலையில் ஜோரிக் தம் வீட்டுக்கு வந்ததும், தீவிரவாதிகள் வசமாகியுள்ள ரெஸ்ட்டோரண்டில் மீராவும் உள்ளாள் என்றறிந்ததும், உயிர்ப்பைத் தொலைத்தவன் போல் அவன் சென்றதும் கனவு போல் நடந்திருக்க, இது எதுவுமே கனவில்லை என்றுணர்ந்து, மைத்துனி ஆபத்தில் உள்ளாள் என்பதை ஓடிச்சென்று நித்தி வீட்டில் சொல்லியிருந்தான், ஆதவ்.
அதன் பின்னர், யார் யாரைத் தேற்றுவது?
அழுகையும் புலம்பலும் கலக்கமும் தவிப்புமாகப் புலர்ந்தது அன்றைய பொழுது.
அக்கணமே மகளிடம் சென்றுவிட வேண்டுமென்று ஒரேபிடியாக நின்றார் நித்தி; எல்லோருக்குமே அந்த மனநிலைதான்; நினைத்ததும் போவதென்றால் சாத்தியமா?
விடிந்தும் விடியாததுமாக கதைத்து, கடைசிநிமிட பயணச்சீட்டு கிடைத்தால் என்ற நம்பிக்கையில் இதோ வந்துள்ளார்கள்.
நித்தியும் மதுராவும் முதலில் போவதென்ற முடிவில் பயணத்துக்கு ஆயத்தமாகியே வந்திருந்தார்கள்.
ஆண்கள் நால்வரும், இருநாட்களின் பின்னர் செல்லக் கூடியவகையில் பயணச்சீட்டுக்குப் பதிந்திருந்தார்கள்.
“போய்ப் பாப்பம், உங்களுக்கும் கிடைக்கேல்லையோ ரெண்டு நாளைக்குப் பிறகுதான் போக வேணும். மீராக்கு ஒண்டும் ஆகாது. எப்பிடியும் எல்லாரையும் சின்னச் சேதமும் இல்லாமல் மீட்டிருவம் எண்டு அரசாங்கம் சொல்லுறத நம்பிறத விட வேறென்ன செய்யிறது?” சமாதானம் செய்ய முயன்றிருந்தார், கார்த்திகேயன்.
அடிக்கடி, அங்கு என்ன நிலவரம் என்பதைக் கைப்பேசியில் ஆராய்ந்தபடியே இருந்தார்கள்.
ரெஸ்ட்டோரன்டை சுற்றி வளைத்திருந்தது, இராணுவம். உள்ளே இரு தீவிரவாதிகள் இருக்கலாம் என்றார்கள். உள்ளிருப்பவர்கள் இதுவரை எந்தவித ஆபத்துமின்றி இருப்பதாகவும் நம்பிக்கை கொடுத்தார்கள்.
முகமூடி அணிந்த ஒருத்தன் துப்பாக்கியோடு அப்படி இப்படி நடப்பதை வீடியோவாகவும் யாரோ போட்டிருந்தார்கள்.
அதையெல்லாம் பார்க்க பார்க்க இவர்களின் நெஞ்சம் தடதடத்தது.
அதுவும், கதைத்துக்கொண்டிருந்த மீராவின் கைபேசி இடையில் செயலிழந்ததை ஜோரிக் சொன்னதே அதிக பயத்தையும் கொடுத்தது. இருந்தும், நல்லதையே எண்ணினார்கள். ஏதோ ஒரு அசாத்திய நம்பிக்கை, தம் குழந்தைக்கு எதுவும் ஆகாதென்றே எண்ண வைத்தது.
அப்போதும் அங்கு என்ன நிலவரம் என்று பார்த்துவிட்டு, இவர்களை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டுச் சென்ற கார்த்திகேயன், நிர்வாகத்தோடு கதைத்துவிட்டு வர, காரை நிறுத்திவிட்டு வந்து சேர்ந்தார்கள் ஆதவ், நிரூஜ்.
“கொஞ்ச நேரம் இருக்கட்டாம், டிக்கெட் கிடைக்கும் போலக் கிடக்கு. பிசினஸ் கிளாஸ் என்றாலும் பரவாயில்லை…” என்றபடி சதீஷ் அருகில் வந்தமர்ந்து கொண்டார், கார்த்திகேயன்.
சொன்னபடி, சிறிது நேரத்தில் கார்த்திகேயனை அழைத்தார், அந்த நடுத்தர வயதுப் பெண்மணி.
“பிசினஸ் கிளாசில தான் இருக்கு.”
“எதுவெண்டாலும் பரவாயில்ல.” பரபரப்படைந்துவிட்டார், கார்த்திகேயன்.
மதுரா, நித்தி இருவரின் கடவுச்சீட்டுகளையும் அவர் முன்னால் வைக்க, “ஆனால் ஒன்று…உங்களுக்கு ஒரு டிக்கெட் தான் தர ஏலும். சொறி கார்த்திகேயன்.” என்றார் அவர்.
“ஒண்டுதானா? இன்னும் ஒண்டு… எவ்வளவு எண்டாலும் பரவாயில்ல.” கெஞ்சினார் அவர்.
ஏற்கனவே நித்தி மிகவும் தளர்ந்து விட்டார். ‘தனியா எப்பிடி அவ்வளவு தூரம் அனுப்பிறது ?’ என்ற கவலை அவருக்கு.
“ரெண்டு தான் இருக்கு. அதில ஒண்டு இன்னொருவருக்கு. உங்களுக்கும் முதலே விடிய முதல் வந்திட்டார்.” என்ற அப்பெண்மணி, கண்ணாடியைக் கழட்டிப்பிடித்தபடி யோசனையாகக் கார்த்திகேயனைப் பார்த்தார்.
“அட! அவரிட காதலியும் இதே ரெஸ்ட்டோரண்டில அகப்பட்டிருக்கிறா எண்டுதான் சொன்னவர்…” கார்த்திகேயனின் முகம் மாறுவதைக் கவனியாது, “அந்தா அங்க பாருங்க! தலையைக் கைகளில தாங்கிக்கொண்டு இருக்கிறாரே…அவர்தான்.” சற்றே தூரத்தில் அமர்ந்திருந்தவனைச் சுட்டிக் காட்டினார்.
அவர் கைகாட்டிய இடத்தைப் பார்த்த கார்த்திகேயன் அப்படியே சிலையாகிப் போனார்.
அப்பெண்மணி அழைத்ததும் கார்த்திகேயனைத் தொடர்ந்து வந்திருந்த சதீஷ், மற்றும், இவர்களையே பார்த்திருந்த மது, நித்தி, ஆதவ், நிரூஜ் என அனைவர் பார்வையும் ஜோரிக்கைத் தொட்டு நின்றது.
“இவன்…இவன் இங்கயும் வந்திருக்கிறானே? இவனுமா வரப் போறான்?” விசுக்கென்று எழுந்து, தமையனை நோக்கி விரைந்தார், நித்தி.
அதிகாலையில் வீட்டுக்கு வந்த அதே கோலம்தான்; கூடுதலாக, மேலே ஒரு லெதர் ஜாக்கெட்; காலில் ரப்பர் சிலிப்பர். காலடியில் ஒரு முதுகுப்பை.
பைத்தியகாரன் போல அமர்ந்திருந்தவனை விட்டுப் பார்வையை விலக்கவில்லை, மதுரா.
“என்ன அண்ணா டிக்கெட் கிடைச்சுதா?” தமையன் அருகில் வந்த நித்தியின் பார்வை என்னவோ ஜோரிக்கில்.
“ம்ம்…ஆனால் ஒண்டுதான்மா…நீ தனியாப் போய்க்கொள்வ தானே?”
“அதெல்லாம் போவன் ணா. ஆனால்…இவன் ஏன் இங்க வந்திருக்கிறான்?” ஜோரிக்கைக் கண்ணால் காட்டினார்.
“ரெண்டு டிக்கெட் இருக்காம். ஒண்டு அவனுக்காம், முதலே சொல்லிப் போட்டானாம்.” இடையிட்டார் சதீஷ்.
“இப்ப இவன் ஏன் அண்ணா வர நிக்கிறான்? இவனால தானே அவள் இங்க இருந்து போனதே! ஐயோ! எல்லாம் முடிஞ்சிருந்தது எண்டு நினைக்க, திரும்ப முதலில இருந்தா?” சற்றே, பெரிதாகவே அழுதார், நித்தி.
“நித்தி!” கடிந்துகொண்ட கார்த்திகேயனின் கரம் தங்கையின் தலையில் பரிவாகப் படிந்தது.
“எதுவுமே முடிஞ்சிருக்க இல்ல நித்தி. நாம தான் அப்படி நினைச்சிட்டம். அப்பிடி முடிஞ்சிருந்தா, அவ்வளவு ஆபத்திலும் நம்மள நினைக்காமல் இவனுக்குக் கோல் பண்ணியிருப்பாளா உன்ர மகள்?”
இது தமையன் சொல்ல முதலே முகத்தில் அறைந்த உண்மைதான்.
‘என்றாலும்…’ நெஞ்சை அடைத்தது நித்திக்கு! இக்கணம், மகளைத் திட்டி எண்ணக் கூட முடியவில்லை.
“என்ர செல்லம் அங்க ஆபத்தில் இருக்கிறாள் அண்ணா! என்ர குஞ்சு கவனமா வெளியில வரவேணும். அதுக்குப் பிறகு தான் மிச்சம்…” தனக்குத்தானே சொல்வது போல் சொல்லிக்கொண்டார்.
இவர்கள் இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கையில், அவனை நோக்கிச் சென்று அவனருகில் அமர்ந்தார், மதுரா.
மனைவியைத் தொடர்ந்த கார்த்திகேயனும் அவனை நோக்கி நடந்தார்.
முழங்கைகள் தொடைகளில் ஊன்றியிருக்க, கரத்தினுள் முகத்தை அடக்கியபடி அமர்ந்திருந்தவன், அருகில் ஆள் அமர்ந்தும் அசையவில்லை. அதை உணர்ந்தான் போலவே தெரியவில்லை.
‘டிக்கெட் இருக்கு’ என்று எப்போது அழைப்பு வரும் என்று காத்திருந்தான்.
இதுவரையும் இல்லாத புதுப்பழக்கமாக இறைவனை வேறு நாடியிருந்தான். பழக்கமில்லாததில் தட்டுத் தடுமாறி அவனை நெருங்க முனைந்தான்.
‘என்ர மீராவுக்கு எந்தத் துன்பமும் வந்திரக்கூடாது. எது எண்டாலும் எனக்குத் தா!’ மனமும் உதடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு முணுமுணுத்தன.
“ஜோரிக்!” அவன் தோளில் ஆதரவாகப் படிந்த கரமும், கனிவோடு வந்த குரலும் அவனை விலுக்கென்று நிமிர வைத்ததுடன், அங்கு மதுராவைச் சிறிதும் எதிர்பாராதவன் சட்டென்று எழுந்து நின்றான்.
மதுராவும் எழுந்து கொண்டார்.
“நீங்க…நீங்களும்…”
“ம்ம்…நாங்களும் டிக்கெட் கிடைச்சாப் போகலாம் எண்டு வந்தம், ஒண்டுதான் கிடைச்சுது.” என்றபடி நெருங்கினார், கார்த்திகேயன்.
“கிடைச்சுதா? நான்…எனக்கு…” சற்றே தள்ளியிருந்த கௌண்டர் நோக்கி நடந்தவனை, எதிர்கொண்டார் அப்பெண்மணி.
அவன் கடவுச்சீட்டு அவர்களிடம் இருந்தது போல்.
அதை அவன் கையில் வைத்து அழுத்தியவர், தோளில் ஆதரவாகத் தட்டினார்.
“உன்ர காதலிக்கு எதுவுமே நடக்காது. போய்ப் பார்த்திட்டுச் சந்தோசமாக வா!” வாழ்த்திவிட்டு, “என்னோட கொஞ்சம் வந்திட்டுப் போ!” என்று நகர, “போயிட்டு வாறன்.” கார்த்திகேயனிடம் முணுமுணுத்துவிட்டு பின்னால் சென்றவன், சில அலுவலக நடைமுறைகள், பணம் செலுத்துதல் போன்றவை முடியவிட்டு, மீண்டும் ஏற்கனவே அமர்ந்திருந்த இடம் நோக்கி வர, அங்கே அவனுக்காகக் காத்திருந்தார்கள், கார்த்திகேயனும் மதுராவும்.
சதீஷ், நித்தி, ஆதவ், நிரூஜ் தள்ளியே நின்றிருந்தார்கள்.

