எப்படியும் பயணச்சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கையில் பயணச்சீட்டுடன் அவர்களை நெருங்குகையில் விழிகள் இரண்டும் நிறைந்துவிட்டன, அவனுக்கு.
‘மீரா! நான் வாறன் மீரா. உன்னப் பார்க்க வாறன். அப்ப நீ…ஓடி வந்து வரவேற்க வேணும். வருவ தானே?’ மானசீகமாக வேண்டிக்கொண்டே, விழிகளின் கசிவைத் துடைத்தான்.
வெகுவாக முயன்று தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், “நீங்க நீங்களா வாறீங்க?” மதுராவிடம் கேட்டபடி வர, சட்டென்று அவனை அணைத்துக்கொண்டார், கார்த்திகேயன்.
மிக மிக இறுகிய அணைப்பு, இதுவரை அறிந்தேயிராத இதத்தை அவனுள் பாய்ச்சி நின்றது. வலுக்கட்டாயமாக அழுத்தி அடக்கிய உணர்வுகள் உடைய, தளர்வாக அவரில் சாய்ந்தவன் உடல் கிடுகிடுவென நடுங்கியது.
அருகில் வந்த மதுராவின் கரம் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தது.
‘உனக்கு நாங்க இருக்கிறம்!’ என்று மனதில் சொல்லிக் கொண்டவரால் தொண்டையில் இருந்து வார்த்தைகளை விட முடியவில்லையேயொழிய அவர் பார்வை கனிவோடு அவனில்தான்.
“மதுராவும் நித்தியும்…மீராட அம்மா பேர் நித்தி…ரெண்டு பேருமாப் போகலாம் எண்டுதான் வந்தவே. இப்ப, நித்தி மட்டும் தான் வரப் போறாள்.” என்ற, கார்த்திகேயனிடமிருந்து விலகிய போது அவன் மனதில் அத்தனை உறுதி.
“நீ கொஞ்சம் பார்த்துக்கொள்!” என்றார், மதுரா.
“கட்டாயம்.” என்றவன் நித்தியைப் பார்க்க, அவரோ, வெடுக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டார் .
“இவன் என்னப் பார்த்துக் கொள்வானாமே! கலிகாலம்!” தமிழில் முணுமுணுத்தத் தங்கையை நெருங்கிய கார்த்திகேயன் தாழ்ந்தகுரலில் கதைத்தார்.
“நித்தி ப்ளீஸ்! உன்ர கோபத்த, வெறுப்ப, பழச எல்லாத்தையும் தூக்கிப் போடு! இல்லாட்டி, தேவையில்லாத மனக்கஷ்டம் தான் மிஞ்சும். இதையும் நான் சொல்ல இல்ல, உன்ர மகளே அவனுக்கு கோல் பண்ணி அடிச்சுச் சொல்லீட்டாள். அதுக்குப் பிறகும் நாம முரண்டு பிடிச்சா நம்மட பிள்ள வாழ்க்கையில தான் பிரச்சினை!” என்ற தமையனை, கண்ணீரோடு பார்த்தார், நித்தி.
“இவன்…அந்தக் கேடுகெட்ட கொடும்பாவி கணேஷிட மகன் எண்டதை என்னால மறக்கவே முடியாது அண்ணா.” சொல்லவும் செய்தார்.
“மறக்கத்தான் வேணும் நித்தி. நம்மட பிள்ளையில அவனுக்கு இருக்கிற அன்பப் பார்த்துச் சரி மறக்க வேணும்.” இடையிட்டார், மதுரா.
“சின்ன உதாரணம், நாம கூட வெளிக்கிட்டு, பிரயாணத்துக்குத் தயாராகத்தான் வந்தம். அவனப் பார்! பைத்தியம் போல வந்து நிக்கிறான். இரவு உடுப்பை கூட மாற்றேல்லை. இத்தனைக்கும் இப்ப அங்க குளிர் காலம். நாம அதையெல்லாம் யோசிச்சு ஆயத்தமாக வந்தமே!” என்றார், ஜோரிக்கையே பார்த்தபடி.
அவனோ, மீண்டும் முதல் இருந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டான்; அதே நிலையில்.
மனைவி சொன்னதை ஆமோதித்தார், கார்த்திகேயன். தங்கைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னார்.
‘நாங்க அவன ஏற்றுக்கொண்டுவிட்டோம்!’ வெளிப்படையாகச் சொல்லும் தமையனிடம் என்ன சொல்வதாம்? அதுவும் மதுராவே இப்படிச் சொல்கையில்.
அமைதியானார் நித்தி. “எது எப்படியோ, என்ர குழந்தை உயிரோட சந்தோசமாக இருந்தாலே போதும்!” விம்மினார்.
தங்கையை அணைத்துக்கொண்டார், கார்த்திகேயன்.
“மீரா! உன்ர அம்மாவே சமாதானம் ஆகீட்டாள். இப்ப நீ எங்களோட இல்லையே! வந்திரம்மா!”
கலங்கிக் கசங்கிய உள்ளத்தோடு முணுமுணுத்தார்.
அழுகையை நிறுத்தாது விம்மிய நித்தியை, சதீஷும் மதுராவும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, இளையவர்களோடு தாழ்ந்த குரலில் கதைத்துக்கொண்டிருந்தார், கார்த்திகேயன்.
பிறகு, “செக்கின்னுக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே…” என்றவர், ஜோரிக்கை நோக்கிச் செல்ல, நிரூஜ், ஆதவும் சேர்ந்து கொண்டார்கள்.
“என்னோட வா!” அவன் தோள் தட்டி அழைத்தவரிடம், “எதற்கு? எங்க?” எழுந்தான், அவன்.
“சொல்லுறம் வாங்க!” என்றவாறே, இருபுறமும் அவன் கரத்தைப் பற்றி, கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு நடந்தார்கள் இளையவர் இருவரும். கார்த்திகேயனும் பின் தொடர்ந்தார்.
“இப்ப எங்க போகினம்?” நித்தியும் மற்றவர்களும் பார்த்திருக்க, சற்றே தள்ளியிருந்த ஆடையகம் ஒன்றினுள் நுழைந்து மறைந்தார்கள் நால்வரும்.
சிறிது நேரத்தில் வெளிவந்த ஜோரிக், புது ஆடைகளுக்கு மாறியிருந்தான். அவுஸ்திரேலியா சென்றதும் உபயோகிக்கவென சில ஆடைகளும், அத்தியாவசிய பொருட்களும் வாங்கி ஒரு பையில் வைத்து அவனிடம் கொடுத்த கார்த்திகேயனை இறுகக் கட்டிக்கொண்டான், ஜோரிக்.
தகப்பனை கட்டியணைத்தவனை தானும் அணைத்துக் கொண்டான், ஆதவ். நிரூஜும் சேர்ந்து கொண்டான்.
அவர்களை அந்நிலையில் பார்த்த மதுராவின் விழிகள் உடைப்பெடுத்தன. எந்தவித உறுத்தலுமின்றி கசிந்த சந்தோசக் கண்ணீர் அது.
‘அண்டைக்கே இவனோட சமாதானம் ஆகியிருக்க, நிச்சயம் மீரா அங்க போயிருக்க மாட்டாள்.’ நினைக்காதிருக்கவும் முடியவில்லை.
அதற்கு என்ன செய்வது? அது அது நடக்க வேண்டிய நேரம் காலம் வருகையில் தானே நடந்தேறும்!
இப்படியே, சிறிது நேரத்தில் செக்கின் ஆரம்பிக்க, நித்தியும் அவனும் வரிசையில் இணைந்து கொண்டார்கள்.
“நித்தி…” தாழ்ந்த குரலில் அழைத்த மதுராவின் கரம், மைத்துனியின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டது.
“அவனும் பாவம் நித்தி. நல்லாவே குழம்பிப் போயிருக்கிறான். மலேசியாவில நிண்டு அடுத்த ஃபிளைட் ஏறி அவுஸ்திரேலியா போய்ச் சேரும் வரைக்கும் அவனையும் பார்த்துக்கொள்!” என்றவர், விழிகளில் மினுமினுப்போடு, “எனக்காக!” என்றதையும் சேர்த்துக்கொள்ள, “அண்ணி!” தன் துயர் மறந்து மதுராவை ஆச்சரியமாகப் பார்த்தார், நித்தி.
“எப்படி அண்ணி உங்களால…” வார்த்தைகள் வராது தடுமாறியவருக்கு, பல வருடங்களின் முதல், மதுரா அனுபவித்த வேதனைகளின் நினைவு வராதில்லை.
“பச்! அவன் என்ன பாவம் செய்தான் சொல்லு?” என்றவர் பார்வை, சுரத்தின்றி, இலக்கின்றி அலைந்த பார்வையோடு நின்றவனைத் தொட்டு வந்தது.
“விடு நித்தி, போனது எல்லாம் போகட்டும். இவன் நம்மட மீராட அன்புக்குரியவன். இந்தக்கணம் அதுமட்டும்தான் என்ர மனசுக்குத் தெரியுது. நீயும் அப்பிடியே பார்க்கப் பழகு! நம்மட குழந்தையின்ட சந்தோசம் மட்டும் தான் முக்கியம்.”
நித்திக்கும் புரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தோடு அழுத்திச் சொன்னார், மதுரா.
எதுவும் பேசாது கேட்டிருந்த நித்தி, வரிசை அசையவும் விடைபெற, தானும் விடைபெற்று நகர்ந்தான், ஜோரிக்.
ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்பவர்களையே பார்த்திருந்தார்கள், குடும்பத்தினர்.

