ரோசிகஜனின் சுடரி – 1

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின்,  போதைப்பொருள் வர்த்தகத்தின் தெற்குப் பாதை, இந்து சமுத்திரத்திற்கூடாகச் செல்கிறது. இவ்விடப் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிராந்திய மையமாக, இலங்கை விளங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமில்லாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான, வளர்ந்து வரும் மையமாகவும்  கொழும்புத் துறைமுகம் சுட்டிக்காட்டப்படுகிறது.

நெரிசல் மிகுந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி…

காதைக் கிழிக்கும் இரைச்சலோடு சீறிச் சென்று கொண்டிருந்த, பஜாஜ் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளில் ஆரோகனித்திருந்தான், அவன். விழிகளில் தீட்சண்யமா, கோபமா, ரெண்டும் கலந்தா? பகுத்தறிய முடியவில்லை. நேர்ப்பார்வையில் இருந்த விழிகளோடு சேர்ந்து நெற்றியும் சுருங்கிக் கிடந்தது. தடித்த மீசை, அவன் முகத்துக்குக் கம்பீரம் சேர்த்தது. தோற்றம் வலு மிரட்டலாக இருந்தது. 

அவன் குணம் போலவே, படிந்து கிடந்தெல்லாம் பழக்கமில்லை என்று, முடிக்கற்றைகள் கண்டபடி பறந்தன. 

அக்கறையின்றித் திறந்து கிடந்த கழுத்துப் பொத்தான்களால், உள்ளே நுழைந்த காற்று வேறு, முதுகுப் புறத்தில் நின்று புரிந்த நர்த்தனத்தில், திடகாத்திரமான அவன் தோற்றம் மேலும் வலிமையாகத் தெரிந்தது. 

பாதை நடமாட்டம், தம்மையும் அறியாதே அவன் பால் பார்வையைத் திருப்பியது; திருப்ப வைத்தான், ஆரூரன்.

வழமையாகவே, அவன் பொழுதுகள் நடுயிரவில் முடிந்து, அதிகாலையில்,  சேவல் அருள முதலே ஆரம்பமாகிவிடும். பதினாறு வயதில், தந்தை இறந்ததில் இருந்தே அப்படித்தான். அதன்படி, இன்றும் எழுந்து தயாராகியிருந்தான். தாய் நீட்டிய பசும்பால் தேநீரை  மடமடவென்று தொண்டைக்குள் சரித்துக் கொண்ட வேகத்தில், கொக்குவில் காளான் பண்ணைக்குச் சென்றவன் தான், நிமிடம் ஓயவில்லை. இதோ, சினம் கனக்க கனக்க மோட்டாரில் ஏறி உதைத்தானே, அதுவரை வேலை தான்.  

முழங்கால் வரை நனைந்து சுருங்கிக் கிடந்த காற்சட்டைக் கால்கள், காற்றில் படபடத்துத் தம்மை உலர்த்திக் கொள்ள முயன்றன. அழுக்கேறியிருந்த மேற்சட்டை அப்படியெதுவும் செய்யவில்லை; அவன், ‘உழைப்பாளி’ என்ற பெருமையில் ஒட்டியொட்டி உறவாடியது.

 “என்ன தம்பி நீங்க? ஒரு ஐஞ்சு நிமிசம் பிடிக்குமா? வந்து போட்டுப் போங்கோவன் அப்பன். அப்பம் சுட்டுட்டன் ராசன்!” ஒரு மணித்தியாலமாக அழைத்துக் கொண்டிருக்கிறார், அவன் தாய் கௌசல்யா. 

“இந்த வயித்துக்காகத் தானே உழைப்பு! காயப்போட்டு என்ன காணப்போறீங்கள்?” என்றவரை, “இந்தா வாறன் மா!” சமாளித்துக்கொண்டு நின்றவன், மூத்த தங்கை நிலா அழைத்த மறுநொடி புறப்பட்டுவிட்டான். 

விர்ரென்று வந்த மோட்டார் சைக்கிள், ஆரியகுளம் சந்தியில் தாமதிக்கவெல்லாம் இல்லை; அவன் கண்கள் மட்டுமே வலமும் இடமும் பார்த்தன. நான்கு பக்கமிருந்தும் பாதைகள் முத்தமிடும் சந்தியது; போக்குவரத்துக்கும் நெரிசலுக்கும் குறைவில்லாதது; இருந்தாலும், இலாவகமாக முன்னேறிக் கடந்தான், ஆரூரன். சில நொடிகள் தான், ஆஸ்பத்திரி வீதியைத் தொட்டு, இடப்புறமாக வளைந்தான். அடுத்த ஒரு நிமிடத்தில், அங்கிருந்த ஒரு வீட்டு வாயில் மதிலில் உரசி நின்றது, பஜாஜ் டிஸ்கவர். 

அவ்விடத்திலிருந்து சற்றே முன்னேறிச் சென்று, வலப்புறமாகப் பார்த்தால், அடைக்கலமாதா கோவிலோடு சேர்ந்ததாக, அடைக்கல மாதா வித்தியாலயம் உண்டு. அங்கு தான், அவன் பெரிய தங்கை நிலா, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் கற்பித்துக் கொண்டிருப்பாள். 

‘பதற்றம் இன்றிப் படிப்பிப்பாளா?’ நினைத்தவன் தாடைகள் விடைத்தன; கைத் தசைகள் இறுகின. 

விசுக்கென்று இறங்கினான். பெரிய இரும்புக் கதவைத் திறந்த வேகத்தில் நங்கென்று மதிலோடு மோதியதது. வேக எட்டு எடுத்து வைத்து உள்ளே விரைந்தான், ஆரூரன்.  கண்கள், லேசர் திரை போல் சுற்றத்தை அலசியது. நல்ல பென்னாம் பெரிய மாளிகை, அது. முன் தோட்டமும் சேர்ந்தே அவர்கள் நிதி நிலையைக் காட்டியது. போதாததுக்கு மினிவான், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டிகள் என்று, வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. வாசலில் இரண்டு பாதுகாவலர்கள் தான் குறை!

‘அற்பனுக்குப் பவிசு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!’  ஆரூரன், உதடுகள் ஏளனமாக வளைந்தன. 

ஒரே தாவலாக படிகளில் ஏறியவனுக்கு, அழைப்பு மணியை அழுத்தி மினக்கடும் நோக்கம் எல்லாம் இல்லை. சோப்புச் சீப்பு விற்கவா வந்தான்? சேர்பெக்ஸல் போட்டு ஊற வைத்தாலும் சுத்தமாகான் அந்த ராஸ்கல்! அடித்துத் துவைத்து, பிரயோசனம் இல்லையோ, குப்பையில் போட்டு கொழுத்தி விட வேண்டியது தான். மனம் கபகபவென்று எரிய எரிய கதவில் காட்டினான். 

உள்ளே…

வரவேற்பறையில் கிடந்த மெத்தென்ற அகன்ற இருக்கையில், புதைந்து கிடந்தாள், பைரவி. அவள், பிறந்து வளர்ந்த நாடான கனடாவில் இப்போது நடுச்சாமம். அதனால் என்ன? நண்பிகளோடு கலகலவென்ற அரட்டை போய்க் கொண்டிருந்தது. அதில், கதவு இடிபடும் சத்தம், வேண்டா விருந்தாளியாக வந்து கடமுடவென்று மூக்கை நுழைத்திட்டு! 

 “வெயிட் கைஸ்!” முகம் சுளித்தபடி எழுந்தாள். 

“ஓகே டார்லிங்ஸ், கிட்டத்தட்ட ஒண்டரை மணித்தியாலமாக் கதைக்கிறம். இரவுக்குக் கதைப்பமா? சரியா தூக்கம் வருது!” கொட்டாவியுடன்  இழுத்தாள், ஒருத்தி.

“ஓகே தென்… கோ அண்ட் ஸ்லீப் கைஸ். குட் நைட்! கச் யூ லேட்டர்!”  விடைபெற்றுக் கொண்டே நகர்ந்தாள், பைரவி.

“டோர் பெல் இருக்க… இதார் இப்பிடி? கதவை உடைச்சிருவினம் போலக் கிடக்கே! இண்டீசன்ட் ஃபெல்லோவ்ஸ்!” எரிச்சல் முணுமுணுப்போடு தான் கதவைத் திறந்தாள்.

 மறு நொடி, வெளியில் நின்றவன் திடுக்கிட வைத்தான்.

‘ஆர் இந்த ரவுடி?’ முதல் எண்ணம்! ‘டோர் ஹோல்’ என்னத்துக்கு இருக்கு பைரவி? மனம் அதட்டியது. அவளையும் அறியாது, வலக்கால், பின்புறமாக ஓரடி வைத்திட்டு. என்றாலும் கதவு அகலத் திறபடவில்லை. இடக்கரம் கதவில் இருக்க, வலக்கரம் நிலைப்படியைப் பற்றிக் கொண்டது. 

 ‘ஆர் நீங்க? என்ன வேணும்?’ கேட்க உன்னினாள். அதற்குள், “அங்கால தள்ளு!” உறுமியிருந்தான், ஆரூரன். அவள் அசையவில்லை. அதற்கென்னவாம்! நொடி தாமதிக்காது உள்ளே நுழைந்திருந்தான், அவன். 

தன் கரத்தை, அப்படி விலக்கிவிட்டு நுழைவான் என்று எதிர்பார்க்கவில்லை, அவள்.  முகம், கணத்தில் உக்கிரமாகியது. 

 “ஹலோ! வட் த ஹெல் ஆர் யூ டூயிங்!” சீறிய வேகத்தில் நகர்ந்து வழிமறித்தாற் போல் நின்றுமிருந்தாள். 

 நிதானமாய் அவள் முகம் பார்த்தான், ஆரூரன். “தள்ளு எண்டனே! தமிழ் தெரியாதாக்கும். முண்டம்!” ஒரே தள்ளு, வழியிலிருந்து அகற்றிவிட்டு முன்னேறினான். 

“ஏய்ய்ய்! ஆர் முண்டம்? பல்லத் தட்டித் தந்திருவன். ஆர் எண்டு கேட்டனான் எல்லா? செவிடா நீ?” கிறீச்சிட்டாள்,பைரவி. கனடாவில், பக்கத்து வீட்டுச் செல்லப் பாட்டி கனகாம்பிகை கற்றுத் தந்த தமிழ் இது! அதைக் குறை சொல்ல ஒருவன் பிறந்தல்லா வர வேண்டும்! 

கோபாக்கினியும் வெறுப்பும் கலந்து கட்ட, துவம்சம் செய்திடும் ஆவேசத்தோடு வந்திருந்த ஆரூரன் திடுக்கிட்டு விட்டான். பார்க்க நவநாகரீக பொம்மை போல்  இருந்தாளே! தோற்றத்தில், ‘வெளிநாட்டுக்காரி’ என்று வேறு, முத்திரை குத்தி வைத்திருந்தாள். உள்ளே, ‘காட்டேரி!’ நெற்றி சுருங்கீற்று. 

 

அதற்குள், சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்து விட்டார்கள்.

தங்கை கரத்தைப் பிடித்தவனைத் துவைத்தெடுக்க வந்தவன் ஆவேசம் பிரேக்கிட்டிருந்தது. கொதித்துக் கொண்டிருந்த மனம், நிதானமாக நிற்க முயன்றது. எல்லாம் முயற்சி தான். நெடிய கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, நடுவீட்டில் விறைப்பாய் நின்றிருந்தான், அவன். வந்து நின்ற வீட்டினரைக் குற்றவாளிகள் போல் துச்சமாகப் பார்த்தவன் பார்வை உக்கிரமாகச் சுழன்றது.

அந்த நொடியில், மீண்டும் குற்றச்சாட்டாக வெளிவந்தது, பைரவி குரல்.

 “கதவத் திறந்தோன்ன என்னத் தள்ளிட்டு உள்ள வந்திட்டான் மாமா! கள்ளனோ? முதல் பொலிசுக்கு அடியுங்க!” 

இப்படி, கோபமும் எள்ளலுமாகச் சொன்ன மகளை, ஓடி வந்து, வாயைப் பொத்தி அறைக்குள் இழுக்க முயன்றார், அவள் அன்னை பாமினி. 

“விடுங்கோ அம்மா. பெரிய கொம்பனா அவன்? என்னப் பார்த்து முண்டம் எண்டுறான். எனக்குக் ‘கராத்தே’ தெரியும் எண்டதை மறக்காதீங்க!” அவள் சீறல், விசுக்கென்று ஆரூரனைத் திரும்ப வைத்தது.  

அதற்குள், “தம்பி நீ…நீங்க… ஆரூரன் தானே?” பைரவியின் அத்தை கலாவின் குரல் குறுக்கிட்டிருந்தது.  

“காணி விசயம் கதைக்கவோ வந்தீங்க? அதான், விக்கிற ஐடியா இல்ல எண்டு அண்டைக்கே முடிவாச் சொல்லியாச்சே! பிறகென்ன?” என்றிருந்தார், அத்தை கணவர் சேகர். 

ஆரூரன் பார்வை, பாமினியை மின்னலாக உரசி விட்டுச் சென்றது. 

“பெரிய காணி! அந்தக் காணி இல்லையோ நான் நடுரோட்டில் நிக்க வேணுமாக்கும்!” மகளை இழுத்துக்கொண்டு நகர முயன்ற பாமினியை மீண்டும் பார்வையால் சுட்டான்.

“இங்க பார்! பிள்ளையைப் பெத்தா ஒழுங்கா வளக்க வேணும். இல்லையோ…” 

வயதுக்கும் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை, அவனுக்கு. சேகர், கலா நோக்கி, விரல் நீட்டி எச்சரித்தபடி சொல்லிக் கொண்டிருக்கையில், தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி வந்தான், டினோசன் ; சேகர், கலா தம்பதியின் மூத்த மகன்; தனுசூயா அனுசூயா என்பவர்களின் தமையன்.

 

 

error: Alert: Content selection is disabled!!