“லட்சம் கோடிகளைக் கொண்டு போய், வேற நாட்டில கொட்டிப் படிக்கிறதுக்கு, இலங்கையில் வந்து படியன. நாட்டுக்குள்ள டொலர் வந்ததாவும் இருக்கும், எங்கட பிள்ளை எங்களோட இருந்ததாகவும் இருக்கும்.” என்றெல்லாம் முயன்று வர வைத்தவர் ஆச்சே! அவர், சந்தோசத்தில் திக்கு முக்காடி நிற்கையில் இதென்ன கூத்து?
ஆவேசமாக முன்னால் வந்தார், கலா; ஒரே தள்ளுத் தான், ஆருரனை விலக்கியிருந்தார். ஆண்களைப் பிடித்துத் தள்ளி விட்டவனால், அந்தப் பெண்மணியைத் தள்ள முடியவில்லை.
“நீ மட்டும் விரும்பி… அவளுக்கும் உன்னில விருப்பம் இருக்க எல்லோ வேணும்?” கலா வாய் திறக்க முதல் முந்திக் கொண்டான், ஆரூரன்.
“அவளுக்கும் விருப்பம். உங்களுக்குப் பயந்து…” அவன் சொல்லி முடிக்கவில்லை, பெரும் சத்தத்தில் சிரித்தான், நிலாவின் தமையன்.
“ஆர், என்ர தங்கக்சி உன்ன விரும்பிறாளோ! அவள் என்ன அந்தளவுக்கு…” தன் நெற்றிப் பொட்டில் சுட்டியவன், “இல்லாதவளோ? அல்லது கழன்ற கேசோ?” மேலிருந்து கீழாக, ஏளனப் பார்வை பார்த்தபடியே தான் கேட்டிருந்தான்.
“கடைஞ்செடுத்த தெல்லுவாரி! நாதாரி! நீ போட்டிருக்கிற பென்டர் சரி, உன்ர உழைப்பில வாங்கினதா சொல்லு பாப்பம்? இந்த அழகில, ப்ராண்டட் உடுப்பும் லட்சக்கணக்கில கொட்டி வாங்கின மோட்டார் சைக்கிளுமா போய் நிண்டா, உனக்கு விருப்பமான பொம்பளைகள் எல்லோரும் விரும்பிருவினம் என்னடா?” எள்ளல் நிறைந்து வழிய, அங்கிருந்தவர்களைப் பார்த்தபடியே நகைப்புக் குரலில் கேட்டான்.
வீட்டுப் பெரியவர்கள் மட்டுமன்றி, அவன், லெவலாக நிமிர்ந்து நடமாடும் மைத்துனி முன்னால் வைத்து, அவமானப்படுத்த படுத்த வெறி கிளம்பியது, டிஷானுக்கு.
இவனை, இந்தக் கணமே எறும்பை நசுக்குவது போல் நசுக்கிக் கொல்ல முடிந்தால்!
‘உனக்கு… உனக்கு முன்னால வச்சே உன்ர தங்கச்சியக் கட்டிக் காட்டுறன் பாரடா! அவளுக்கு நான் தானடா புருசன்!’ வன்மமாக நினைத்துக் கொண்டான். வாய் மட்டும் திறபடவில்லை.
“என்ர தங்கச்சி, தனக்கு விருப்பம் இல்ல எண்டு, ரெண்டு வருசத்துக்கு முதலே உன்னட்டச் சொன்னவள். ஓம் எல்லா? பிறகு, பின்னால திரியிறது, இழிக்கிறது, பெடி செட் சேர்ந்து நிண்டு போக வரக் கடிக்கிறது. எல்லாம் போய், இண்டைக்கு, நடு ரோட்டில வச்சுக் கையப் பிடிச்சு இழுத்திருக்கிற!” கலாவே எதிர்பார்க்கவில்லை, பாய்ந்து, விட்டான் ஒரு அறை!
“ஆஆ அம்மோஓஓஓய் !” காதைப் பொத்திக் கொண்டு நிலத்தில் குந்தி விட்டான், டினோசன். இடியாக இறங்கிய அடியில் கிறுகிறுத்த காது, கிர்ரென்று சத்தம் வைக்க, தலை சுழன்றது.
“ஐயோ! சனியன் பிடிச்சவனே! அடியாத அவன!” சேகரும் சுகுமாரும் வர முதல், ஆரூரன் சேட்டைப் பிடித்திருந்தார், கலா.
“நீங்க எல்லாம் பெரிய ஆக்கள் எண்டு என்ர மகன் விரும்பிறானோ? ச்செய்க்! கோதாரி பிடிச்சதுகள்!” அவனை அப்பால் தள்ளி விட்டார்.
“ஏன்டா உனக்குப் புத்தி இப்பிடிப் போகோணும்? அன்னக்காவடிகளிலயா உனக்கு விருப்பம் வரோணும். அதுகளே, காளான் அது இது எண்டு கண்ட குப்பைகளையும் வித்துப் பிழைக்கிறதுகள். குடும்பமா, நாலு வீட்டுக்குச் சமைச்சுப் போட்டு, வாய்க்கும் வயித்துக்கும் அடிபட்டுச் சீவிக்கிற சனங்கள்!” ஆவேசமாக மகனிடம் கத்திவிட்டு ஆருரனிடம் திரும்பினார்.
“இந்த வடிவில, எவ்வளவு தைரியம் இருந்தா, என்ர மகன வெருட்ட வந்திருப்ப? பணக்காரப் பெடியளாப் பாத்துப் பிடிக்க அலைவாளாக்கும் அவள்.” தரம் தாழ்ந்த மகனைக் காக்கவென, காளி அவதாரம் எடுத்து விட்டார், கலா.
“ஏய்! இவ்வளவும் தான் உனக்கு மரியாத!” ஆரூரன் ஆட்காட்டி விரல், கலாவின் கண்ணுக்குள் சென்றுவிடும் கணக்கில் நீண்டிருந்தது.
“பொம்பள எண்டு பாக்கிறன். இல்லாட்டி… நடக்கிறதே வேற! நாங்க வசதி இல்லாத மனுசர் தான். இப்பிடி, உங்களைப் போல கையேந்தி வசதியா இருக்க எங்களுக்கு ஆசை இல்லச் சரியோ! உடம்பு நோக உழைச்சுத் தின்னுற மனுசர் நாங்க. வெளிநாட்டில களவெடுத்து, சுத்து மாத்துச் செய்து, அங்க கணக்குக் காட்ட முடியாமல் இங்க அனுப்ப, மாட மாளிகை கட்டியிருந்து, சோக்குப் பண்ணுற வாழ்க்க எங்களுக்கு வேணாம்!” எள்ளலாகச் சீறினான்.
“என்ன? களவெடுத்தா?” வாயைப் பொத்தினார், கலா. ‘இருக்குமோ!’ மனம், ஒரு கணம் எண்ணிவிட்டது. ‘பச்! இருந்தாலும் நமக்கு என்ன? நாமளா எடுக்கிறம்?’ சமாதானம் செய்து கொண்டார்.
ஆரூரன் வார்த்தைகள் ஒன்று ஒன்றும் பாமினியின் இதயத்தில் சுருக்கென்று குத்தின; கண்கள், கண்ணீரைச் சொரிந்தன.
வெளிநாடு சென்ற அடுத்த நாளிலிருந்து மாடாக வேலை செய்பவர், அவர். சுகுமாரோ, ஒன்றுக்கு இரண்டு வேலை. இன்னொரு குழந்தை பெறும் ஆசையிருந்தும் அதைக் கூடத் தவிர்த்துவிட்டு, வேலை வேலை என்று அலைபவர்கள்.
அந்தக் காசு, அவர்கள் உடல் உழைப்பு மட்டுமில்லை, குடும்பச் சந்தோசம்; ஒற்றை மகளோடு மட்டுமா, தம் இணையோடும் கழிக்க ஏங்கி ஏமாற்றமடைந்த மணித்துளிகள்; நிம்மதியான நீண்ட நித்திரை; ஆற அமர சமைத்து உண்ணும் உணவு வேளைகள் என, எல்லாம் சுருட்டி ஏப்பம் விட்டு வந்த காசு!
அது, ஊருக்கு வந்து, உருப்படாதவர்களிடம் சேர்ந்து, அவர்கள் உழைப்பையே கேவலப்படுத்துதே! இதைச் சொன்னால், அவர் கணவர், காது கொடுத்துக் கேட்கார்.
“இது சரிவராது சேகர், கண்ட மனுசரோடும் கதைச்சு நாம அரியண்டப்பட வேணாம். பேசாமல் பொலீசுக்கு ஃபோன் பண்ணுங்க!” இடையிட்டார், சுகுமார்.
“போடும். ஃபோனப் போடுமன். நான் போடவோ? பெரிசா கதை அளக்கிறீங்களே, இவன், என்ன ஏது செய்யிறான் எண்டு தெரியுமா உங்களுக்கு? பெத்த பிள்ளைய ஒழுங்கா வளக்கத் துப்பில்ல, பெரும் பெருமை!” அவன், அருவருப்பாய் டினோசனைப் பார்க்க, பெரியவர்களுக்குத் ‘திக்’ என்று இருந்தது.
தம் பிள்ளை அப்படி என்ன செய்கிறான்? சோக்குப் பண்ணுவான் தான்; அதைக் கேட்க இவன் யார்?
வெளிநாடு செல்லும் நோக்கத்தில் இருக்கிறான். கல்யாணம் முடிச்சுப் போகலாம், என்ன அவசரம் என்று பெரியவர்கள் சொன்னதையும் மறுக்கவில்லை.
சிரம துன்பங்கள், இல்லாமை என்றெல்லாம் அறவே தெரியாது வளர்ந்த பிள்ளை; இரண்டு வருசமா ஏதோ பிசினெஸ் என்று ஓடித் திரிகிறான்; மற்றும்படி வேறென்னவாம்?
கலாவுக்குப் பொறுக்கவில்லை. “இங்க பார், எங்கட பிள்ளைய எங்களுக்குப் பாக்கத் தெரியும். நீ முதல் வெளில போ! என்ர மகனில் கை வச்சதுக்கு, உன்னச் சும்மா விட மாட்டன் சொல்லீட்டன்.” உரத்துக் கத்தினார்.
“இதோட விட்டன் எண்டு சந்தோசப்படுங்கோ! குடி கூத்து எண்டு அலையிற தெல்லுவாரி நாய்க்கு எல்லாம் என்ர தங்கச்சி கேக்குதோ! இங்க பார், உன்னப் பற்றி இவேக்குத் தெரியாம இருக்கலாம். எனக்கு அ தொடக்கம் அக்கன்னா வரை தெரியும். வலு கவனமா இருந்திரு!” தன்னை மீறிய கோபத்தில் வாய் விட்டவன் கணத்தில் நிதானித்தான். இருந்தாலும் உக்கிரம் சற்றும் குறையவில்லை.
“இனி ஒரு தடவை… என்ர தங்கச்சிய நீ பாக்கக் கூடாது! மீறி, இடையில மறிச்சு ஒரு வார்த்த கதைச்ச எண்டு காதுக்கு வந்திச்சோ, நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்ல. ராஸ்கல்ஸ்!” புயலாக வெளியேறியிருந்தான், ஆரூரன்.
குடியும் கூத்துமா? இந்த வார்த்தைகள் அங்கு நின்றவர்களை சிலையாக்கி விட்டிருந்தது.
போட்டுடைத்து விட்டானே! தன் ரகசியம் எப்படி அவன் வரை அம்பலமாகியது? ஒரு கணம் ஆடிப் போனான், டிஷான்.
மறுநொடி, ‘பச் குடி… எண்டு தானே சொன்னவன்.’ தன்னைத்தான் சமாதானப்படுத்தியபடி, முட்டாள் வீட்டினரைச் சமாளிக்க வார்த்தைகளைத் தேடிக் கோர்த்தான், டினோசனாக!