இலங்கையின் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் மீதான போரை, கிளர்ச்சி – எதிர்ப்பை அடக்குவதற்கான கருவியாக (Counter insurgency tool) அவதானிக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் அளவு, அங்கு வாழ்வோரின் அளவோடு ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருக்கிறது!
புயல் என்ன புயல்? சூறைக்காற்று சுழற்றியடித்த கணக்கில் இருந்தது, கலா வீடு! எல்லாமே வைத்த இடத்தில் வைத்தபடி தான் இருந்தன. அவர்கள் கூட, நேர் சீராகத் தான் நின்றிருந்தார்கள். ஆக்கோரசமாக உள்ளிட்டிருந்தவன், அந்தளவுக்கு, வலு நேர்த்தியாகவல்லவா தாக்கிவிட்டுப் போயிருந்தான்! ஐந்தோ பத்தோ நிமிடங்களும் நின்றிரானே! ஒவ்வொருவரினதும் மனங்களும் சிதறிக் கலைந்து கலகலத்துப் போகச் செய்து விட்டான்!
கலா தான் முதலில் அசைந்தார். ஓவென்று அழுதபடி மகனை நாடினார்.
“ஏன்டா கண்ட கண்டவனிட்டையும் அடிவாங்கிக் கொண்டு நிண்டனி? இங்க ஆம்பளைகள் எண்டு நிக்கிற, இவே ரெண்டு பேரும் தான் துடை நடுங்கிகள் எண்டா, நீ அவனைப் போல இளந்தாரியல்லே? திருப்பி நாலு இழுத்திருக்கலாம் தானே? ஐயோ, என்ர பிள்ளேட கன்னம் ரெண்டும் உப்பிப் போயிட்டு! அடேய் தம்பி, சொண்டு கிழிஞ்சு ரெத்தம் வருதடா! எழும்பு சொல்லுறன்!” பெற்ற மனமும் வயிறும்பதறின.
“ஒவ்வொருத்தரும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி முழுங்குவீங்களே! இப்ப என்ன, பிடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கில நிக்கிறீங்க? பொலீசுக்கு ஃபோனப் போடுங்கோவன்!” கத்தினார்.
“பச்! ஆக்கினை(தொந்தரவு) தராமல் பேசாமல் உங்கட அலுவலப் பாருங்கம்மா. பொலீஸ் எல்லாம் தேவேல்ல. நான் பாத்துக் கொள்ளுறன்.” அன்பும் பரிவும் பதற்றமுமாக நின்ற தாயை, உதறி விலத்தி விட்டு எழுந்தான், டினோசன். அதே வேகத்தில் தடதடவென்று மாடியேறினான்.
“டினோசன், கொஞ்சம் இங்க நில்லும்!” அதட்டியிருந்தார், சுகுமார்.
நின்று விட்டான். திரும்பி மட்டும் பார்க்கவில்லை.
“லவ் எண்டு விளங்குது.” தமையன் தொடங்க, அவசரமாக இடையிட்டார், கலா.
“எவனோ சொன்னா, அதை நம்பி லவ் அது இது எண்டுறீங்க அண்ணா! அவன் சின்னவன், நாம தான் நல்லது கெட்டது சொல்லி விளங்கப்படுத்தோணும்.” அழுதவருக்குத் தானே அவர் நெஞ்சிடி தெரியும். ‘அடேய் டினோ, கைக்க இருக்கிறதின்ட அருமை தெரியாமல், எங்கயோ இருக்கிற பிச்சைக்காரியப் பாத்தியோ!’ மகனுக்கு, நாலு இழுவை இழுக்க வேண்டும் போலிருந்தது.
“கொஞ்ச நேரம் சும்மா இரு கலா!” தங்கையை அதட்டிவிட்டு மருமகனைப் பார்த்தார், சுகுமார்.
“ரோட்டில வச்சுக் கையப் பிடிச்சும் இருக்கிறீர்! நம்மட வீட்டிலும் பொம்பளப் பிள்ளைகள் இருக்கினம். ஆர் எண்டாலும் வெறியே வரும். அதோட, அது என்ன குடி கூத்து எண்ட கதை?” அவர் முடிக்கவில்லை, விசுக்கென்று திரும்பியிருந்தான், டினோசன்.
“எங்கயோ கிடந்த ஒருத்தன் வீடு பூந்து என்ன அடிக்கிறான். பார்த்துக்கொண்டு நிண்டனீங்கள் எல்லா மாமா? பிறகு, அவன் அலட்டினத வச்சு, என்னை விசாரிப்பீங்களோ? நல்ல வடிவா இருக்கு மாமா… வடிவா இருக்கு!” உறுமினான்.
“அதானே அண்ணா, இது சரியில்லச் சொல்லிட்டன். என்ர பிள்ளையப் பற்றி எனக்குத் தெரியாதா? வந்து அடிச்ச விசரனப் பாத்தாத்தான் குடிக்கிறவன், இல்ல… குடு அடிச்சிட்டு வந்தது போல இருந்தது. விசர் நாய்! அன்றாடம் காச்சி! எரிச்சல் பொறாமையில ஏதோ சொன்னா, அதைப் பெரிசாக்கிக் கொண்டு வாறியல்! அவனப் போட்டுக் குதறி இருக்க வேணாமா?” ஓவென்று அழுத இடைவெளியில், தன்னறைக்குள் புகுந்திருந்தான், டினோசன்.
மைத்துனன் கேட்ட கேள்வி தான் சேகருள்ளும். உண்மையில், மனம் கலங்கிப் போனார், அந்த மனிதர். குடும்பத்துக்காக, மாடாய் உழைக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கவே இல்லை. மைத்துனன் அந்தளவுக்கு வைக்கவில்லை. தயங்கிக் கேட்டுக் கையேந்தும் தேவையின்றி பொருள், பணமாக உதவிகள் வந்த வண்ணம் இருந்ததால், வேலை என்றது பெரும் பிரச்சினையாக இருந்ததேயில்லை. ஆனாலும், பிள்ளைகளைக் கருத்தாக வளர்த்தார் என்று தான், இப்ப வரை எண்ணிக் கொண்டிருந்தார். மகன், தன் காலில் நிற்க ஆரம்பித்து விட்டான் என்று மகிழ்ந்திருந்தாரே! அவரறிய, மகன் குடித்தெல்லாம் கண்டதும் இல்லை. அதுதான் பெரும் கவலையாக இருந்தது.
“என்ன ஏதெண்டு கேட்க நீ விடுறாய் இல்ல கலா!” சுகுமாருக்குத் தங்கையில் ஒருபோதும் இன்றிக் கோபம் வந்தது. கதை மாறி மாறி வளர்ந்தது.
அந்நேரம், கோவில் சென்றிருந்த சுகுமார், கலாவின் பெற்றோரும் வந்துவிட்டதில் சலசலப்பு அதிகரித்திருந்தது.
“என்ன சொல்லு கலா, பிள்ளைகள் எந்த நேரம் என்ன செய்யீனம் எண்டு தெரிஞ்சு வச்சிருக்கிறது உங்கட கடமை. தவறு, பிழை செய்யிறது இயல்பு. நீங்க கவனிச்சுக் கொண்டு இருந்தாத் தான் அதைத் தட்டித் திருத்தலாம். அதும் ஆரம்பத்திலேயே! அதை விட்டுப்போட்டு என்ர பிள்ளையள் தங்கக் கம்பிகள் எண்டு, குருட்டாம் போக்கில சொல்லுறது முட்டாள்த்தனம்!”
தமையன் இப்படிச் சொல்ல சொல்ல, கலாவுக்குக் கோவம் தலைக்கேறிவிட்டது. மகனை அடிவாங்க விட்டுப்போட்டு, இப்ப என்ன வியாக்கியானம் வேண்டிக் கிடக்காம்?
“போதும் அண்ணா நிப்பாட்டுங்க! பெத்த எனக்கு இதெல்லாம் தெரியும். அவன் ஒண்ணும் நல்லது கெட்டது தெரியாத வயசுக்காரன் இல்ல. சொந்தமா பிசினெஸ் தொடங்கியிருக்கிறான். ரெண்டு வருசமா நல்லபடி செய்து கொண்டிருக்கிறான். காசு, சொத்துப் பத்து எல்லாமே இருக்கு எண்டு, அவன் என்ன சும்மாவே இருக்கிறான்? ராப்பகலா ஓடித் திரிஞ்சு உழைக்கிறான். வவுனியாவில காணி வாங்கிப் போட்டிருக்கிறான். அவனுக்கு இப்பத்தான் இருபத்திநாலு. இதெல்லாம் தெரிஞ்சும் இப்படிக் கதைக்கிறீங்க! அயலட்டம் எல்லாம் என்ர பிள்ளைகளப் பாத்துப் பொறாமைப்படுகினம். நீங்க என்னவோ… பச்!”
மருமகள் முன்னால் வைத்து, மகன் அடிவாங்கினான் என்றால், இப்ப இப்படியும் கதைத்தால்? அவருக்குத் தமையன் மீதும் ஊமையாக நிற்கும் கணவன் மீதும் கொலை வெறியே வந்தது.
“கெட்டித்தனம் இருந்தா பொலீஸ் கொம்பிளைண்ட் குடுத்து அந்த ரவுடிய உள்ளுக்குத் தள்ளுங்க. என்ர பிள்ளைக்குப் புத்தி சொல்லத் தேவேல்ல!”அழுதபடியே உள்ளே சென்று விட்டார்.
“கலாக்கு நான் சொல்லுறது விளங்கவே இல்லை. ஊர் கெட்டுக் கிடக்கு.” திரும்பவும் அவன் நடத்தையில் எதுவோ இருக்கு என்ற வகையில் கதைத்தார், சுகுமார்; நான் விசாரிக்கிறன் என்றார், சேகர்; வெறி கொண்டு விட்டான், டினோசன். அறைக்குள் இருந்தாலும் காதுகளைக் கீழேயல்லவா விட்டுக்கொண்டிருந்தான்.
நிலா என்பவளை உண்மையாகவே விரும்பினானே!
முதல் முதல், தின்னவேலியில் உள்ள அவர்கள் சூப் கடையில் வைத்துத்தான் கண்டிருந்தான்; ரெண்டு வருடமாக, அவள் காதலுக்காகப் பின்னாலும் முன்னாலும் திரிகிறான்; மறுப்பையும் முறைப்பையும் தருகிறாள் என்ற எரிச்சலில் தானே கையைப் பிடித்திருந்தான்.
அதுவும், நண்பர்களோடு நின்று கதைக்க முயன்றிருந்தான்; அவள், அசட்டையாகச் செல்ல முயன்றிருந்தாளா? பெரும் அவமானமாக இருக்கவே கையைப் பற்றியிருந்தான்.
இப்போதோ, அந்த ‘விருப்பு’ கொடூர குரோதமாக வடிவம் கொண்டிட்டு!
அவமானம், காதலை வக்கிரமாகக் தண்டித்தது; தன்னை, தன் காதலை மதிக்காதவளை, அவளின் திமிர் பிடித்த தமையனை, எப்படியாவது தண்டிக்க நினைத்தது.
விளைவு, கைப்பேசியை எடுத்தான்; அடுத்த நிமிடமே, அவன் நெருங்கிய நட்புகள் நால்வரோடு குழு அழைப்பில் இணைந்திருந்தான்.
இதே நேரம்…
எவ்வளவு ஆத்திர மிகுதியோடு வந்தானோ, அதே மாதிரித்தான் திரும்பிச் சென்று கொண்டிருந்தான், ஆரூரன்.
எவ்விதமான சிரமங்களுமின்றி, எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் தேவைகளின்றி, சிறிதாகக் கூட, மினக்கடலோ உழைப்போ போடாது, பலாப்பழச் சுளையாகக் கிடைக்கும் செல்வம், ஒருவனைச் சீராக வாழ வழி செய்வதைக் காட்டிலும் இலகுவில், தீய வழியில் இட்டுச் சென்றுவிடும்; அங்கு, தன்னைத்தான் உணரவோ, திறமைகள் தனித்தன்மைகளை வெளிப்படுத்தவோ தேவை இல்லாததால், நோகாமல் கிடைக்கும் செல்வத்தை, எந்த வழியில் சென்றால், மேலும் மேலும் இலகுவாகப் பெற முடியும் என்றே சிந்திக்கவும் வைத்து விடுமோ! சந்தேகமான கேள்வி ஏன்? மிகப் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
காளான் பண்ணையில் பார்க்க வேண்டிய வேலைகள் பலதிருந்தாலும் மனதளவில், முற்றாகக் களைத்திருந்தவன் அங்குச் செல்லவில்லை.
“தம்பி, வருவீங்களா இல்லையா?” என்று, அழைப்பின் மேல் அழைப்பு விடுத்த தாய்க்கு, “ம்மா, மத்தியானச் சாப்பாடக் குடுத்து விடுங்க. கொஞ்சம் வேலை இருக்கு!” உறுமி விட்டு வைத்து விட்டான். இனி, இவனாக அழைத்தாலொழிய கடைசிவரை எடார். தாயோடு இப்படிக் கடினமாகக் கதைப்பது மனதில் வருத்தம் உண்டு பண்ணியது தான். இல்லையேல், அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது.
மோட்டார் சைக்கிள், எங்கென்றில்லாது சீறிச் சென்றது.