ரோசிகஜனின் சுடரி 5 – 2

‘முதல் அப்பா சுகமாகி வரட்டும்.’ மனதுள் சொல்லிக்கொண்டே, “இப்பிடியே நிக்கேலுமா மா? பேசாமல் ஒரு அறையை எடுத்துத் தங்குவமா?” கேட்டவள், “பாருங்க மறந்திட்டன், நான் மயூரனுக்கு எடுத்துச் சொல்லப் போறன்.” அவர் தடுப்பதைக் கருத்திலெடாது அழைத்தே விட்டாள்.

அதே கையோடு, “நான் இப்படி ஹொஸ்பிட்டலில நிக்கிறன் எண்டு சொல்லேல்ல மா. வந்து நாலஞ்சு நாளாகிற்று, இப்பத் தான் தன்ர நினைவு வந்திச்சா எண்டு கடிக்கிறார், ஆள். கம்பஸ் அடிக்கு வர ஏலுமா எண்டவர். ஓமெண்டு சொல்லிட்டன். வாங்க போவம்.” வெளிக்கிட்டு விட்டாள்.  

“போகலாம். இப்ப வேணாம் பைரவி. முதல் அப்பாக்கு நல்லாகட்டும்.” என்று, அவர் மறுத்தும் அவள் கேட்கவில்லை. பாமினியாலும் உறுதியாக நிற்க முடியவில்லை. இங்கே நிற்கப் போகும் சில நாட்களுக்கு என்றாலும் மயூரன் துணையாக நிற்பான் என்றது மனம். கணவருக்கு இப்படியாகிற்றே என்ற பதற்றத்தில் பின் தள்ளிப் போயிருந்த டினோசன் விசயம், இப்போ, அவரை மிரட்டியது. ‘இந்தளவில் தப்பினோம்’ மகளை எண்ணி நினைத்தபடியே வந்தார்.  

பல்கலைக்கு முன்னாலுள்ள, சாப்பாட்டுக் கடையில் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் புகுந்தார்கள், தாயும் மகளும்.

நேற்றும் உண்ணவில்லை. காலையில் ஒரு தேநீர் மட்டும் தான். பைரவியின் வயிறு காந்தியது. கணவருக்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்றது பாமினியையும் துவளச் செய்திருந்தது. சக்தி வடிந்த உடல், சக்தி கொடு என்று கெஞ்சியது. மகள் இழுப்புக்கு நடந்தவர், தாம் நுழைந்த ஹோட்டல் பெயரைக் கூடக் கவனிக்கவில்லை. சென்றமர்ந்தவர் மீது தழுவிய மின் விசிறிக் காற்றுக்கு, அப்படியே, சுவரோடு தலை சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டார்.

பிறந்த வீடு ஒன்றும் தூரமில்லை; தொண்டை அடைத்திட்டு; துள்ளித் திரிந்த பள்ளிக் காலம் தொட்டு, காதலி, மனைவி, தாய் என்று அவர் வாழ்வு மனக்கண்ணில் விரைந்தோடியது. 

தாயைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள், பைரவி. வேறு என்ன செய்வது?

அவரை விட்டு விலகிய பார்வை, உணவகத்தைச் சுற்றி வந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் போலும், சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் சுவாரசியப் பார்வைகளைக் கண்டும் காணாது, சிறு மலர்வோடு வந்த பெடியனிடம் சூப் சொல்லிவிட்டு, பார்வையைப் பாதைக்குத் திருப்பினாள்.

பல்கலைக்கழகம் இப்போது தான் உயிர் பெற்றபடியிருந்தது. கண்ணாடிக்கு அப்பால் பாதையையும் கைப்பேசியையும் கவனித்தபடி அமர்ந்திருந்தாள், பைரவி. 

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், இரு சூப் கோப்பைகள் அவர்கள் இருந்த மேசையில் வைக்கப்பட்டன. மஷ்ரூம் வாசம் மெல்ல மெல்ல அவ்விடத்தைக் கைப்பற்றத் தொடங்கியிருந்தது. 

அவற்றை வைத்தவன் பார்வை அவர்களில் தான்; அவனுள் கொஞ்சம் பதற்றம்; பழக்கமேயில்லாதது. நடந்ததைக் கேள்விப்பட்டிருந்தானே! பாமினியின் கலங்கிய தோற்றம் விசாரி என்று தூண்டியது. பேசியில்  பார்வை பதித்திருந்தவளை ஒரு தடவை பார்த்துவிட்டு, அவன் வாய் திறக்க முன்னர், நாசியில் மோதிய சூப் வாசனைக்கு, மலர்வோடு நிமிர்ந்தாள், பைரவி. மறு நொடி, ஆளே மாறிப் போயிருந்தாள். பார்வையில் செந்தணல்! என்ன ஏதென்று இல்லாது, வார்த்தை வராது கோபத்தில் ஆடிப் போனாள்.  

வார்த்தை வராவிட்டால்? அவள் சிந்தனையை முந்தி விட்டிருந்தது செயல். சுட சுட இருந்த சூப் அவன் முகம் நோக்கிச் சிதறியது; ஒரு கிண்ணம் இல்லை, அண்டாவில் கொதிக்க வைத்தல்லவா ஊற்ற வேண்டும்? 

ஆரூரன் எதிர்பார்த்தானா என்ன?  “ஏய்! விசரா? ஸ்ஸ்ஸ்” அருந்தப்பு! அவன் விலகியதால் தோளில் பட்டு அப்பால் சிதறியிருந்தது, சுடு சூப்! சுதாகரிக்க இடம் கொடாது, மறு கிண்ணத்தையும் விசிறி அடித்துவிட்டு விசுக்கென்று எழுந்து நின்றாள், பைரவி.

கண்ணயர்ந்தே போயிருந்தார், பாமினி. அங்கிருந்த மாணவர்கள், “ஏய்ய்!” குரல் உயர்த்திக்கொண்டு, கதிரைகளையும் தள்ளிக்கொண்டு எழுந்ததில் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தால்?

“அம்மாளே பையாம்மா! என்ன இது த…த தம்பி நீங்க… உங்கட”

அவருக்கு வார்த்தைகள் வரவில்லை; ஏற்கனவே நெஞ்சு நடுக்கம்; இப்போ தலையே சுற்றியது. மகள் கரத்தைக் கெட்டியாகப் பற்றியவர், “தம்பி… மன்னிச்சுக்கொள்ளுங்க ப்ளீஸ்!” என்றவர் கண்கள், கலங்கி விட்டன. ஆவேசத்தில் எத்திவிட்ட பைரவியும் தன் செயல் உறைக்க, மனம் கொதித்தாலும் வார்த்தை வராது நின்றிருந்தாள்.

எல்லோரும் சேர்ந்து கும்மி விட்டிருவார்கள் போலவே! 

ஆரூரன் பார்வையும் அவளில் தான். அது வேறு முதுகுத் தண்டைச் சில்லிட வைத்தது.   

“வா…” அவள் கரம் பற்றிய பாமினி வெளியேற முனைந்தார். 

“ஹலோ! ஆர் நீர்? எங்கட அண்ணாவிலேயே சூப் எத்துறீர், துணிவு தான்! அவா எத்த நீங்க சொறி சொன்னால் சரியோ? ஏய்… சொறி சொல்லடி!” சேர்ட் கையை மடித்துக்கொண்டு, அடித்து விடுவான் போல்  நெருங்கிவிட்டான், ஒருவன்.

“ஸ்ஸ்ஸ் சுதா… ஸ்…விடுங்க. இட்ஸ் பெர்சனல்.” கூரான கத்தி, வெட்டியது தெரியாது வெட்டுமே, அப்படித்தான் அந்த, ‘பெர்சனல்’ என்றதும் அவன் பார்வையும் பைரவியைத் தாக்கிற்று. அவனோ, விசுக்கென்று  பின்புறமாகச் சென்று விட்டான். 

வந்தமர்ந்ததும் மலர்வோடு என்ன வேணும் என்று வந்து கேட்டானே பெடியன், இப்போ, அந்த இடத்தைச் சுத்தம் செய்ய வந்தான்; சும்மா இல்லை, பைரவியையும் பாமினியையும் எரிச்சலோடு தான் பார்த்து வைத்தான்.

“அண்ணாட சொல்லுக்கு நிக்கிறன். இல்லையோ… ஆளையும் முழியையும் பாருங்கவன். ஓடுறி! இனி இங்கனேக்க கண்ணில கிண்ணில பட்டியோ கதை கந்தல். நினைவில் வச்சிரு!”

சுதா என்றவன், என்னவோ, தன் காதலியின் கையைப் பற்றிவிட்ட கணக்கில் துள்ளினான்.

“மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பிமார்! மன்னிச்சுக் கொள்ளுங்கோ!” குரல் நடுங்கச் சொன்னபடி, மகளை வெளியில் இழுத்து வந்தார், பாமினி.

 

error: Alert: Content selection is disabled!!