ரோசிகஜனின் சுடரி 6 – 1

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு – கிழக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளது. இப்பகுதிகளில், குறிப்பாக, இளைஞர்களின் சமூக முதலீடு என்பது, உரிமை மறுப்பு, நேரடி மறைமுக அடக்குமுறை என்பனவற்றிற்கு  எதிரான விழிப்பில், எதிர்ப்பில் கவனம் செலுத்தப்படாது, அதற்கெதிரான திசையில் திருப்பப்படுகிறது. போதைப்பழக்கம், அதில் முக்கிய பங்கு வகிக்கிறது!

ஏன் பைரவி? இருக்கிற பிரச்சினை போதாதா? முதல் இதெல்லாம் என்ன வேலை? இப்பிடிப்பட்ட உன்ன நம்பி, இங்க தனியா எப்பிடி விடுறது? எங்களோடயே கிளம்பிற வழியப் பார் சரியோ!” 

கலக்கத்தோடு சொன்னப்படி, அந்த ஹோட்டலில் இருந்து சற்றே தூரமாக இழுத்து வந்த பின்னரே, மகள் கையை விட்டார், பாமினி. அப்போதும், அவர் பார்வை திரும்பி ஹோட்டலைத் தான் பார்த்திட்டு.

“ஆரூரன் வீட்டு மனுசர், நீ நினைக்கிறது போல இல்ல. நல்ல சனங்கள் சரியா?” என்ற தாயைக் கேள்வியாகப் பார்த்தாள், பைரவி. முதல் நாள், அவள் அத்தை கலா கதைத்ததிலிருந்து, அவன், தன் மாமா குடும்பத்தோடு நெருக்கமான பழக்கமுள்ளவன் என்று தெரிந்தாலும் அன்னைக்கும் தெரியுமோ என்ற கேள்வி இப்போது தான் எழுந்தது.

“அப்படி இருக்கப் போய்த்தான் நீ செய்த வேலைக்கு அமைதியா நிண்டவர் அந்தத் தம்பி.” என்ற தாயை முறைத்தாள், மகள்.

“என்ன முறைக்கிற? உண்மையைத் தானே சொல்லுறன். இல்லையோ, உள்ள பிரச்சினைகள் போதாதெண்டு இப்ப, அதில நிண்டு பரிசிகெட்டு வந்திருப்பம்.” கோபமாகச் சொன்னார்.

“நான் உங்கட அப்பாவக்  கலியாணம் செய்யேக்க, ஆரூரனுக்கு ரெண்டு ரெண்டரை வயசு இருக்கும் எண்டு நினைக்கிறன். எங்கட பக்கத்து வீடுதான் அவேட. என்னோடவே ஒட்டிக்கொண்டு இருப்பான். இப்ப…” பெருமூச்செறிந்தார். 

“ம்மா… அந்தாளுக்கு உங்களை நினைவே இராது. நீங்க வேற!” வழமையான துடுக்குத்தனத்தோடு கதைக்க உன்னிவிட்டு, கப்சிப் என்று நின்றுகொண்டாள்; தாய், ஏற்கனவே கொதியில் நிற்கிறார், கூட்டுவான் ஏனென்று.

“கௌசல்யா அக்கா, அதான் ஆரூரன்ட அம்மா அருமையானவா. என்னில நல்ல அன்பும்!” நினைவு, இளமைக்காலம் சென்று வந்ததாக்கும். பெருமூச்செறிந்தார், பாமினி. அதே வேகத்துக்கு மகளைக் கண்டிப்போடு பார்த்தார். 

“நீ ஒண்ணும் குழந்தை இல்ல என்ன? நல்லது கெட்டது விளங்காதவளும் இல்ல. அப்பிடியிருக்க, இப்ப நீ செய்த வேலை சரியா எண்டு சொல்லு பாப்பம்? கேவலமா இல்லையா பைரவி?” என்று அவர் கேட்கையில், அவள் விழிகள் நிறைந்திட்டு. உதடுகளை அழுந்த மூடியபடி நின்றவள் மனம், ஆரூரனைக் கொதித்துப் புகை விட்டுக்கொண்டிருக்கும் கருகிய   எண்ணையில் பொரித்துக்கொண்டு இருந்ததை தாய் அறியாரே!

“டினோ செய்த வேலைக்கு, ஆர் எண்டாலும் கொதிக்கத்தான் செய்வினம். அவன் சினேகிதன்களோட திட்டம் போட்டத, நீயும் தானே கேட்டனி? படங்களில வாற வில்லன்கள் போல!” என்கையில் பாமினி குரல் நடுங்கிற்று. 

பைரவியாலுமே, இன்னமும் அதையெல்லாம் நம்ப முடியவில்லைத் தான். அதுவும், அப்பாவி போலிருக்கும் மைத்துனனுக்கு இன்னொரு முகமா? காதல் என்று சொல்லிவிட்டு, இவ்வளவு வில்லத்தனோடு! கற்பனை கூட செய்ய முடியவில்லை. 

என்றாலும், “இவனும் ஒண்டும் இலேசுப்பட்டவன் இல்லை சரியா?  செய்யிறதையும் செய்திட்டு பொலிசிலும் பிடிச்சுக் குடுத்திட்டான் எல்லா? பிறகும் அவனுக்காகக் கதைக்கிறீங்க?” பாதையில் செல்வோரைப் பார்த்தபடி அடிக்குரலில் சீறினாள். 

“முதல், அவன் இவன் எண்டு கதையாத பைரவி!” சீறலாகக் கண்டித்தார், பாமினி. மகள் முகம் கன்றிச் சிறுத்திட்டு.

“என்னதான் எண்டாலும் இப்பிடிச் சுடு சூப்ப எத்துவியா? தோள்ப்பட்டையில பட்டது போல இருந்தது. நல்லா சுட்டும் இருக்கும்.” என்றவர், “சுடட்டும் எண்டுதான் எத்தினனான்.மூஞ்சி தப்பிற்று எண்டு சந்தோசப்படுங்க.” என்ற, அவள் முணுமுணுப்பைக் கேட்டு, அடக்கப்பட்ட கோபத்தில் பற்களை நறும்பினார்.

“வந்த இடத்தில பிரச்சினைய விலைக்கு வாங்கிறன் எண்டு நிக்கிற நீ. இது சரிவராது. இங்க தங்கிற யோசனையை விட்டிரு!” என்றுகொண்டே, வந்த ஓட்டோவை, கை காட்டி நிறுத்தினார், பாமினி. 

“மயூரனப் பிறகு சந்திக்கலாம். வா… போகலாம்.” என்று, ஓரடி எடுத்து வைத்திரார், “ஹோட்டலில இருக்கச் சொன்னனே. பிந்திட்டனோ!” என்றபடி, அவர்கள் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நேரம் பார்த்தான், மயூரன்.

இறுதி வருட மருத்துவத்துறை மாணவன் அவன்; பாமினியின் ஒரே தமையனான, யாழ்ப்பாண மாவட்ட Superintendent of Police  நவநீதனின் மூத்த மகன். 

“என்ன அத்த எதுக்கு ஓட்டோ ?” அவன் கேட்டு முடிக்கவில்லை, “வரேல்ல, சொறி அண்ணா!” பட்டென்று சொல்லி, ஓட்டோவுக்கு விடை கொடுத்து விட்டாள், பைரவி. 

மகளை நெருப்பெனப் பார்த்தார், பாமினி.

“பைரவி… என்ன ஏதாவது பிரச்சினையா?” என்றவனுக்கு, அவர்கள் தோற்றம், முகங்கள் ஒன்றுமே சரியாகப்படவில்லை. என்னவோ நடந்திருக்கு.

வாடி நின்ற அவர்களின் தோற்றமே ஆரூரன் ஹோட்டலைக் கைகாட்டி அழைக்க வைத்திருந்தது. 

“ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே கதைக்கலாம், வாங்க. அத்தை, நம்மட ஆரூரன் அண்ணாவத் தெரியும் எல்லா? கௌசல்யா ஆன்டிட மகன்… அவர் தான் இப்ப அந்த ஹோட்டல வாங்கி நடத்திறார்.” என்றவனிடம் என்னவென்று சொல்வது? தாயும் மகளும் ஒருவர் ஒருவரை வெட்டும் பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, “என்ன நடந்தது? பிரச்சினை ஏதுமா? மாமா… எல்லாரும் சுகம் தானே?” தீவிர பாவனையோடு கேட்டான், மயூரன்.

தமையன் தோற்ற ஒற்றுமையில், தன்னை விடவும் உயரமாக நின்றவனை, ஒரு கணம் பார்த்த பாமினியால், அதற்கு மேலும்  கட்டுப்படுத்த முடியவில்லை; விம்மிக்கொண்டே அவனை கட்டிப் பிடித்தவர், அழுதுவிட்டார்.

error: Alert: Content selection is disabled!!