ரோசிகஜனின் சுடரி 6 – 2

“அத்த, என்ன நடந்தது அத்த? சொல்லாமல் கொள்ளாமல் அழுதா? முதல் ரோட்டுல நிண்டு கொண்டு. நீங்க வாங்க!” ஹோட்டல் நோக்கித் திரும்பியவனிடம், சுருக்கமாக எல்லாவற்றையும் கொட்டிவிட்டார், பாமினி.

கேட்டிருந்தவன், அதிர்ந்து அசையாது நின்றான்.

“இவ்வளவுக்கும் பிறகு, இவளிட கொழுப்பு வேலையை என்ன எண்டு சொல்லுறது சொல்லும் பாப்பம்?”

“ம்மா, என்ன நீங்க என்னையே பிழை சொல்லுறீங்க? நேற்று ஆரால பிரச்சினை தொடங்கினது?” சீறிக்கொண்டு வந்தவள், பாமினியின் பார்வையில் நிறுத்திவிட்டாள். சற்றே தள்ளிச் சென்று நின்று கொண்டு தாயை முறைத்தாள்.

“அப்பா ஆஸ்பத்தியில. நம்மட வீடு எண்டு உரிமையா நிக்கிற இடத்துக்கே போகேலாமல் நாம நடு ரோட்டில.  எல்லாத்துக்கும் முதல் காரணம்… அவன்!” அவள் பார்வையைத் தொடர்ந்து, பாமினி மயூரனும் பார்த்தால், வெளியில் வந்து நின்ற ஆரூரன் பார்வை, இவர்களில் தான்.

“இவ்வளவு நடந்திருக்கு, நிலா ஒரு வார்த்தை சொல்லேல்லையே!” தன் பாட்டில் முணுமுணுத்த மயூரன், “ஒரு ரெண்டு நிமிசம் இதிலேயே நில்லுங்கோ அத்தை!” ஆரூரனை நோக்கி ஓடினான்.

“மயூரன்… உங்கட பங்குக்கு சொறியா? கடவுளே!” இங்கிருந்தே கல்லை விட்டெறிந்து, அந்த ஆரூரன் எண்டவன் மண்டையை உடைக்கும் ஆத்திரம், அவளுள். தாயின் பார்வைக்குக் கட்டுப்பட்டு அமைதியானது போல் நடிக்க வேண்டியிருந்தது.

“என்ன அண்ணா நடந்திருக்கு? முதல் உங்களுக்கு ஒண்ணுமில்லையே! சொறி அண்ணா!”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல விடும்.” சின்னதாகச் சிரித்தான், ஆரூரன். அப்போதும், தூர நிற்பவளிடம் பார்வை போயிற்று; கடினமாகவே!

“எனக்காக, பெரிசா எடுக்காதீங்க அண்ணா! பைரவி சரியாக குழம்பி நிக்கிறா. மாமா வேற ஆஸ்பத்திரியிலயாம்.” சமாதானமாகச் சொல்லிக் கொண்டு வந்தவனிடம், அவர்கள் வீட்டு நிலவரத்தைக் கேட்டறிந்து கொண்டான், ஆரூரன்.

“சரி, நீர் அவையளப் பாரும். ஏதாவது தேவை எண்டா சொல்லும்.” மயூரன் முதுகில் தட்டி அனுப்பியவன், “அப்பாட்டக் கதைச்சு வீட்ட கூட்டிக்கொண்டு போகப் பாருமன். இன்னும் எத்தினை நாளுக்கு? உம்மட மச்சாள் இங்க படிக்கிறது எண்டா, உங்களோட இருந்து படிக்கிறது பெட்டர்.” இதுவெல்லாம் அவனுக்குத் தேவையே இல்லாத வேலை. இருந்தாலும், ‘பாமினி ஆன்ட்டிட முகத்துக்காக’ தன்னையே தேற்றிக்கொண்டு தொடர்ந்தான். 

“இல்லையோ, ஐஞ்சு வருசத்தில என்ன என்ன டிசைன் டிசைனான  பிரச்சினைகளில மாட்டுவாவோ!” அடிக்குரலில் சொல்லிவிட்டு  ஹோட்டலுள் உள்ளிட்டு விட்டான்.

யோசனையோடு திரும்பிய மயூரன், “சரி வாங்க, அங்க  சந்தியில் ஒரு சாப்பாட்டுக் கடையிருக்கு.” ஓட்டோவை மறித்து அவர்களை ஏற்றிவிட்டு,  கடையின் பெயர் சொல்லிவிட்டுப் பின்னால் சென்றான்.

மறுப்புச் சொல்லாது சென்றவர்கள், உண்டு, சுட சுட தேநீர் குடித்த பின்னரே சீராக மூச்சு விட்டார்கள். அதே கையோடு, சுகுமாரோடு கதைத்துவிட்டு நிமிர்ந்தமர்ந்தார், பாமினி.

“அங்க… இவரிட தங்கச்சி வீட்டில தங்கிறது சரிவராது மயூரன்.  அறை ஒண்டு கிடைச்சா நல்லம். பாதுகாப்பும் சுத்தமும் மட்டும் போதும். இவருக்குப் பயணத்துக்கு ஓகே எண்டு சொல்லும் மட்டுக்கும் தான்.”

“பிரச்சின இல்ல அத்த. நல்லூரடியில ஃபிரெண்ட் வீடு ஹோட்டல் தான். பொறுங்க கேக்கிறன்.” என்று கதைத்துவிட்டு, “அறை இருக்கு, வாங்க போகலாம்” எழுந்து கொண்டான்.

இதேநேரம், சேகர், தெரிஞ்சவர் அறிஞ்சவரெல்லாம் பிடித்து, மகன் பற்றி விசாரித்தால், எல்லோருமே கை விரித்தார்கள்; டினோசன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.

நண்பர்கள் நான்கு பேர் வீட்டினரும் சேர்ந்துகொண்டு ஒருவர் மற்றவரால் தம் பிள்ளைகள் கெட்டுப்போனதாக மல்லுக்கட்டி, கதைவழிப்பட்டுக்கொண்டே பிள்ளைகளைத் தேடினார்கள். 

கடைசியில், அன்று இரவு தான், ‘போதைப்பொருள் தடுப்புப் பிரிவால்’ அவர்கள் கைதானதே தெரிய வந்தது. சற்றும் எண்ணிப் பார்த்திராத புது இடி; நான்கு குடும்பங்களும் செய்வதறியாது தடுமாறிப் போயினர்.

 

error: Alert: Content selection is disabled!!