ரோசிகஜனின் சுடரி 7- 1

இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு, போதைப்பொருள் வியாபாரத் தலைகள் பார்வை, இலங்கையில் அழுத்தமாகவே விழுந்தது. உள்நாட்டின் அரசியல், பாதுகாப்பு, வியாபார முக்கிய புள்ளிகள் சிலர், அவர்களிடம், நல்ல கொழுத்த விலைக்குப் போயினர். அதுவே, போதைப்பொருள்க் கடத்தல்காரர்களின் போக்குவரத்து மையமாக, இலங்கையை உருவாக்கவும் உதவியது. 

காளான் பண்ணையில் தொடங்கி, அடுத்தடுத்து உருவாகிக் கொண்டிருக்கும்  ‘சூப் ஸ்டோல்கள்’ ஒன்றொன்றும் ஆரூரன் என்னும் தனி மனிதனின், பெரும் கனவு! சுயமாகத் தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்பது, பதின்ம வயதில் விழுந்த விதை; அன்றுதொட்டு, அவனுள், அதற்கான உன்னிப்பான தேடல் இருந்து கொண்டேயிருந்தது;  அதற்கு முதற்படியாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையிலேயே, வீட்டு வளவில், சிறு கொட்டிலில் காளான் உற்பத்தியை ஆரம்பித்தும் இருந்தான்.

பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து படிக்க வேண்டியிருந்ததால், தினமும் நின்று கவனிக்க முடியாதே! தீர்வாக, பகுதிநேர  வேலைக்கு  ஒரு நபரை வைத்திருந்தான். விடுமுறைகள் என்றால் ஓடி வந்து பார்த்துவிட்டு ஓடுவான்.

“ஏனப்பு ரெண்டு தோணியில் கால் வைக்கிறீங்க? கையில இருக்கிற கொஞ்ச நஞ்ச காசையும் இதுக்கப் போட்டு? முதல், படிச்சி முடிச்சுப் போட்டு…” என்று ஆரம்பித்த தாய்க்கு, நம்பிக்கை தரும் வகையில் கதைத்து, அவரையும் இதில் இழுத்துவிட்டு விட்டான்.

நாட்டில் நடந்த யுத்தத்திற்கு, தகப்பனைப் பலியாகக் கொடுத்த பெண் தலமைத்துவக் குடும்பம், அது. அதுவரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிள்ளைகளுக்கு, மதிய மற்றும் இரவுணவு கொடுப்பதே அந்த வீட்டின் பிரதான வருமானம். இவனும் தங்கைகளும் தத்தம் பங்குகளுக்கு, டியூசன் சொல்லிக் கொடுத்து உழைத்தார்கள். அவர்கள் நால்வரும் வசிக்கும் அச்சிறு கூட்டில், ஆடம்பரங்களுக்கு இடம் இருந்ததில்லை; பிள்ளைகள் எதிர்பார்க்கவும் இல்லை. அதேநேரம், அத்தியாவசியங்களுக்குக் குறையும் இருக்கவில்லை. 

இருந்தாலும், குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும்; சகோதரிகளுக்கு நல்லதொரு இடத்தில் மணம் முடித்து வைக்க வேண்டும்; இரு அறைகள் கொண்ட தம் கல் வீட்டைப் பெருப்பித்துக் கட்ட வேண்டும்; ஓய்வற்ற உழைப்பும் தம் மூவர் முன்னேற்றமும் மட்டுமே குறியாக இருக்கும் அன்னையைச் சந்தோசமாக வைத்துப் பார்க்க வேண்டுமென்று, பல கனவுகள் சேர்ந்தே, காளான் உற்பத்தி தொடர்பான அவன் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் உரமிட்டன. வீரியமான உரம் தான்!

ஆரூரன் விருப்பில், அச் சிறு கொட்டிலில் வைத்த 400 பைகளிலும்  காளான் இதழ் விரித்து விளைய, அவன் தாய், சகோதரிகள் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பையும் உழைப்பையும் இட்டார்கள். அதுவே, நான்கு வருட முடிவில், பேராதனியாவில் விவசாய இளமானிப் படிப்பை முடித்த கையோடு, முழு மூச்சாக, தொழிலாக ஆரம்பித்து நடத்த முடிந்தது. 

கொக்குவில் வளவு அவ்வளவு பெரிதில்லை. இருந்தாலும், 3 பெரிய  கொட்டகைகளில் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது. வீட்டு வளவில், முதன் முதலில் போட்டதும் உள்ளது தான். அதோடு, அப்படியே பெரிதாக்கும் திட்டமும் உண்டு. அந்தளவுக்குக் காளான்களுக்கான கேள்வியும் தேவையும் அதிகரித்துச் செல்கிறது. அதுவே, அவர்கள் பின் வளவை வாங்கி, அதிலும் செய்யலாம் என்று முயன்று பார்த்தான். அது பாமினியின் சீதன வளவு. விற்கவில்லை என்று விட்டதில் அப்படியே நிக்குது. 

முழுமையாகத் தொழில் இதுதான் என்று இறங்கி ஒரு வருடத்தில், அடுத்த படிக்கு முன்னேறியிருந்தான், ஆரூரன்; தம் வீட்டின் முன், தின்னவேலிச் சந்திக்கருகில் பலாலி வீதியில், ஒரு சிறு சூப் ஸ்டால் ஆரம்பித்திருந்தான். அது, இந்த நான்கு வருடங்களில், யாழ்ப்பாண டவுன், சாவகச்சேரி டவுன், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு என்று, ஓரளவு நவீன மொபில் சூப் கடைகளாகப் பெருகியிருந்தன.

‘ஆரூர் மஷ்ரூம் ஃபூட்’ வடகிழக்கில் அனைத்து மக்கள் பார்வைக்கும் செல்ல வேண்டும், அவர்கள் சுவை பார்க்க வேண்டும் என்பதே  இப்போதைக்கு இவன் குறிக்கோள்!

இத்தனை ஓட்டத்தினுள், பல்கலைக்கழகத்தின் முன்னால் விலைக்கு வந்த சாப்பாட்டுக்கடை, ‘ஆரூர் மஷ்ரூம் ஃபூட் கோர்ட்’ ஆனது, அவன் திட்டத்தில் இல்லாதவொன்று. ஆனால், நல்ல வருமானம் தந்தது. காலை ஏழு மணிக்குத் திறந்தால், இரவு பதினோரு மணிவரை, அங்கு நிரந்தர வேலையில் உள்ள நால்வரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். காலையில், கொக்குவில் காளான் பண்ணைக்குச் சென்றுவிட்டு இவனும் அங்கு போனால், நேரம் கிடைக்கும் மட்டுக்கும் நின்றுவிட்டுப் புறப்படுபவன்,  அநேகம் கடை பூட்டும் நேரத்துக்கும் சென்று விடுவான். 

இதுவரைக்கும், எட்டு முழு நேர வேலையாட்கள், 16 க்கு மேற்பட்ட பகுதி நேர வேலையாட்கள் என்று, தொழில் நடத்தும் இரும்பனுக்கு, இன்று, மனதை எதிலுமே ஒருமித்துச் செயல்படுத்த முடியவில்லை. அந்தளவுக்குச் சமநிலை தவறிப் போயிருந்தான், அவன்.

அதுவே, அங்கிங்கு மினக்கடாது, வழமையை விட நேரத்துக்கே, கொக்குவில் காளான் பண்ணைக்கு இழுத்து வந்திருந்தது.

மனதுள் எத்தனை எத்தனையோ எண்ணங்கள், திட்டங்கள், முக்கிய  வேலைகள் சுழன்றடித்தபடியே இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் போதும், அவனை, அச்சூழல் விழுங்கிக் கொள்ளும். 

அந்த வளவில், சின்னதாக இருந்தது அலுவலகக் கட்டிடம்; அந்த ஒரே ஒரு அறை, அவன் மட்டுமே பாவிப்பது. பின்னால், நீளமான தகரக் கொட்டில். அதனுள் தான், இங்கு பாவிக்கும் பொருட்களை வைத்தெடுப்பார்கள். 

முன்னால் இருந்த சீமெந்து வராண்டாவில், ‘தூசு’ கலந்து கொண்டு நின்றான், கணேசன். 

error: Alert: Content selection is disabled!!