இலங்கையில், அண்மைய நாட்களில், ஐஸ் போதைப் பொருள் பாவனை பெரும் அச்சுறுதலாகப் பரவியுள்ளது. அதிலும் இளம் மாணவ சமுதாயம், பால் வேறுபாடின்றி இப்போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகிறார்கள்.
இரு வருடங்கள் வரை இப்போதைப் பொருளைப் பாவிப்பவர், மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்து, தம் ஆயுட்காலத்தை முடித்துக் கொள்ளும் அபாயம் உள்ளதாக, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
இலங்கையைப் பொறுத்தமட்டில், இலட்சக்கணக்கில் பாவனைக்கு உட்பட்டிருக்கும் இப்போதைப்பொருள் சார்பில், உடனடி கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் பாவனை அதிகரித்து, இளம் சமுதாயமே பெரும் அழிவுக்கு உட்பட்டு விடும்.
மறுநாள், சுகுமார் வீடு செல்லலாம் என்றிருந்தார்கள். அந்த ஒன்றுக்காகத் தானே காத்திருந்தார்கள்? காலையிலேயே வந்துவிட்ட பைரவியும் பாமினியும் பணத்தைக் கட்டிவிட்டு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
“எதுக்கும் ஒருக்கா அம்மா அப்பாவையளப் பார்த்திட்டு, ஹோட்டல் போவமா பாமினி?” மனம் கேட்காது வினவினார், சுகுமார்.
பாமினி, பதில் சொல்லவில்லை; பைரவியும் தான். என்னதான் அவர்கள் வீட்டிலும் பிரச்சினை என்றாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிதனை வந்து பார்க்கவில்லையே! அண்ணா, மகன், மைத்துனன் என்று, பாசமாகத் தலையில் தூக்கி வைத்திருந்தது எல்லாமே நடிப்பா? தம் தேவைகளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தும் உறவாக வைத்திருந்தார்களோ! பாமினி, பைரவி மனங்களில் இந்த எண்ணம் அழுந்தவே விழுந்து விட்டது!
“அவே போலவே நாமளும் நடக்கத் தேவேல்ல. போய்ட்டுப் போவம் பாமினி.” முடிவாகச் சொன்னார், சுகுமார். அந்நேரம், அறைக்கதவு தயக்கத்தோடு திறந்து கொண்டது. முதலில், சுகுமாரின் பெற்றோர் உள்ளிட, கலா, சேகர் உள்ளிட்டார்கள்; பின்னால், டினோசனின் சகோதரிகள்.
இளையவர்கள் ஓடிவந்து, “மச்சாள்” என்று கட்டிப் பிடித்து விம்மினார்கள். “மாமா, இப்ப எப்பிடி இருக்கு?” பெரியவள் வினவினாள். முதல் நாளும் தொலைபேசியில் கேட்டவள் தான்.
“எனக்குப் பரவாயில்ல, வீட்ட போகலாம் எண்டு சொல்லிட்டினம். நீங்க எப்பிடி இருக்கிறீங்க? எல்லாம் ஓகேவா?” சுகுமார் கேட்க, மகன் முகம் தடவி விம்மினார், அவர் தாய்.
“இப்ப எப்பிடி இருக்கிறியப்பு? வீட்டில நடந்த கலவரங்களில என்ர ஐயனப் பாக்க வரேலாமப் போயிட்டு. நெஞ்சு தடதடத்தபடி அப்பு! குறை நினையாத என்ன? இவள் தனு எடுத்து, பைரவியோட கதைச்சிட்டு, பயப்படுற மாதிரி ஒண்டும் இல்ல எண்டு சொன்னதாச் சொன்னவள். அந்த நிம்மதியிலதான் வரேல்ல அய்யன்.” அழுதபடி சொன்னார்.
“நீ தனியா இல்ல, மருமகள் கவனமாப் பாப்பா எண்ட நம்பிக்கை தான் குமார்.” தன் பங்கிற்குச் சொன்னார், தகப்பன்.
“அதான் அண்ணா. நான்… நான் தான் அனாதை! என்ர மகனுக்கு என்ன ஏதெண்டு தெரியாமல், முந்த நாளில இருந்து, நாய் போலத் திரிஞ்சம் தெரியுமா?” கேவி அழுதார், கலா.
சுகுமார் வாய் திறக்கவில்லை; பார்வை மைத்துனனில் படிந்தது; அவரோ, முகம் இறுகிக் கலங்கி நின்றார்; ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை.
“என்ர மகன, எங்க வச்சிருக்கிறான்கள் எண்டு தேடி தேடி, சீவன் போனது தான் மிச்சம். அதுக்க உண்மையா உங்கள மறந்திட்டம் அண்ணா!” தொடர்ந்து அழுதார், கலா.
சகோதரியைப் பார்க்கையில் பெரும் கருமமாக இருந்தது, சுகுமாருக்கு. தங்கை தங்கை தங்கை என்று, பார்த்து பார்த்து ஒன்று ஒன்றையும் செய்தது, இன்று, இப்படி நிற்கவா? அவருக்குத் திரும்பவும் நெஞ்சு நோகும் உணர்வு! கோபத்தை, எரிச்சலைப் பிடித்து வைக்க முடியவில்லை.
“பொலிஸ் தானே கொண்டு போனவங்கள்? ஸ்டேஷனில கேட்க வேண்டியது தானே?” சுகுமார் முடிக்கவில்லை, “பின்ன, போகாமல் இருப்பமா? ஒரு லோயரோட அங்க போனா, தாங்க அப்பிடி ஆரையும் அரெஸ்ட் செய்யேல்ல எண்டு சாதிசான்கள்.” என்றதும் திக்கென்று இருந்தது, சுகுமார் ஆட்களுக்கு.
எச்சரிக்கை செய்து விட்டுவிட்டதாகச் சொன்ன மகள், மனைவியை முறைத்தார், சுகுமார். அவர்கள் என்ன சொல்வார்கள்? தன் உடல்நிலை கருதியே மறைத்திருப்பார்கள் என்பது விளங்கினாலும்…
“பிறகு? டினோவ கண்டீங்களா? இப்ப எங்க இருக்கிறான்?” சுகுமாருக்குத் தன் உடல் நிலை மறந்து போயிற்று.
“தேடி தேடி இப்பத்தான் விடியப்புறம் வீட்ட வந்த பொலிஸ்…” என்றுவிட்டு, எச்சிலை விழுங்கியபடி கணவரைப் பார்த்தார், கலா; விம்மலை வாய்பொத்தி அடக்கினார். எப்படிச் சொல்வார்? அவராலேயே இன்னமும் நம்ப முடியவில்லை.
“என்ர பிள்ளையப் பற்றி எனக்குத் தெரியாதா? ஏன், உங்கள்களுக்குத் தெரியாதா? அவனப் போய்… அறுவான்கள்! பெட்டப் பிரச்சினை எண்டு பிடிச்சிட்டு, உள்ள கேசெல்லாம் அவன்ர தலையில போடுறாங்கள் அண்ணா. ஐயோ! நான் என்ன செய்வன்? என்ன பாடுபட்டு எண்டாலும் எவ்வளவு செலவழிச்சு எண்டாலும் அவன வெளில எடுத்துத் தந்திருங்க அண்ணா!” அழுதபடி, தமையன் காலைப் பிடித்து விட்டார், கலா.
“கலா, என்ன இது? பச்! எழும்பு சொல்லுறன்!” அதட்டினார், சுகுமார்.
“என்னால ஏண்ட விசயம் எண்டா நீ கெஞ்சவா வேணும்? செய்ய மாட்டனா? இப்பவரை உங்களுக்கு என்ன செய்யாமல் விட்டிருக்கிறன்?” என்றவர் தொண்டை அடைத்திட்டு. முதல் நாள், அவ்வளவாகப் பழக்கமில்லா சூழலில், மனைவியும் மகளும் தனியாக அந்தரித்து நின்றது மனதில் வந்து போயிற்று.