Skip to content
‘பச்! அவே வேணும் எண்டு வராமல் இருக்கேல்லையே! மகனத் தேடிக்கொண்டு இருந்தவே எப்பிடி வேதனைப்பட்டிருப்பினம்!’ தன்னைத்தான் தேற்றிக் கொண்டு என்ன விசயமென்று விசாரித்தார்.
இலங்கைக்குள், கடல் மார்க்கமாக, டன் கணக்கில் உள்வரும் போதைப்பொருட்கள், இங்கு வைத்து, ஒவ்வொரு அளவுகளில் பொதிகளாக்கப்பட்டு மற்றைய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறதாம். அந்த வேலையைச் செய்யும் ஒரு ஏஜென்ட், டினோவும் அவன் நண்பனுமாம். கடந்த இரு வருடங்களாக அந்த வேலையைச் செய்கிறார்களாம். வவுனியாவில், அவன் வாங்கிய காணிக்குள் இருந்த பெரிய கோடவுன் இரவு எரிந்திருக்கிறது. அதில், மூட்டை மூட்டையாகப் போதைப்பொருள் உள்ள புகைப்படங்கள், நாடளாவிய ரீதியில் வெளியாகும் இன்றைய முன்னணிப் பத்திரிகைகளின் தலைப்பைப் பிடித்திருந்தன.
அழுதபடி, கலா சொல்ல சொல்ல, மீண்டும் நெஞ்சைத் தேய்த்தார், சுகுமார். அடுத்த அரை மணி நேரம், அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.
மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, மன அழுத்தம் தரும் விடயங்கள் வேண்டாமே என்று விட்டுப் போனார். மற்றும்படி ஒன்றுமில்லை என்றதும், வீடு போய்க் கதைப்போம் என்று புறப்பட ஆயத்தமாகிய நேரம், மயூரனோடு உள்ளிட்டான், ஆரூரன்.
அங்கு அவர்கள், கலா குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை என்றது, சில கணங்களே என்றாலும் முகம் மாறியது; சுதாகரித்துக் கொண்டார்கள். ஆரூரன் முகத்தைச் சுடும் பார்வையால் தொட்ட பைரவி, விசுக்கென்று வெளியே சென்றுவிட்டாள். இவன் தானே எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டான்? இதை, மறுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
தனு கையிலிருந்த அன்றையான் பத்திரிக்கை, பைரவி கைக்கு வந்திருந்தது. தமிழ் அவ்வளவாக வாசிக்க வராது. ஆனாலும், முக்கிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாக, டினோவின் புகைப்படம் போட்டிருப்பதைப் பார்க்கையில் கவலை, அவமானம், கோபம் என்று, கலவையான உணர்வுகளின் பிடிக்குள் அகப்பட்டுப் போனாள், அவள்.
எவ்வளவு சந்தோசமான, கலகலப்பான குடும்பம் அவர்களுடையது! எவ்வளவு ஆர்வமாக இலங்கை வந்து லூட்டி அடித்துத் திரிவார்கள்! இந்த முறை, படிக்க இங்கயே இருக்கப் போகிறேன் என்று எவ்வளவு மகிழ்வோடு வந்தாள்! அதுவும் அத்தை குடும்பம், அப்பம்மா, அப்பப்பா அவளுக்கு மிகவும் பிடித்தவர்களாச்சே! எல்லாமே, ஒரு சொடுக்கில் தலைகீழாகிற்றே!
கலங்கும் விழிகளோடு, அறை வாயிலோரமாகப் போடப்பட்டிருந்த கதிரையில் தளர்ந்தமர்ந்தாள்.
அறைக்குள்ளே …
“ஆன்ட்டி, நான் …” என்றபடி, கலா முன்னால் வந்து நின்றவனை, அவரோ, உச்சபட்ச வெறுப்போடு நோக்கினார்.
“உங்கட வீட்டிலும் பொம்பளைப் பிள்ளைகள் இருக்கினம். உங்களுக்கு என்ர நிலை விளங்காமல் இராது. தங்கச்சி அழுதபடி சொல்ல, கோவத்தில வந்து கத்தினனானே ஒழிய, மற்றும்படி, உங்கட வீட்டில, இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு எனக்குத் தெரியா ஆன்ட்டி!” சொன்னபடி, கலாவின் கையைப் பற்றிக்கொண்டான், ஆரூரன். விசுக்கென்று உதறிவிட்டார், அவர்.
“நீ தான் தொடக்கி வச்சனி! இப்பப் பார், என்ர மகன் செய்யாத குற்றத்துக்குப் பலியாகிட்டான்!” வெடித்து அழுதார்,கலா.
“உண்மையாவே, உங்கட வீட்ட பொலிஸ் வந்ததே, மயூரன் சொல்லித்தான் தெரியும். நேற்றுப் பின்னேரம் போல ரெண்டு அண்ணாமார் வந்து, நீயா பொலிசில சொன்னனீ எண்டு வெருட்டினவே! அண்டைக்கு பொலிஸ் எண்ட கதை எடுத்ததே நீங்க தானே? நானும் கோவத்தில…சொல்லுங்க எண்டன். மற்றும் படி, நாங்க அண்டு அண்டு உழைச்சுச் சீவிக்கிற சாதாரண மனுசர் ஆன்ட்டி. மன்னிப்புக் கேட்க வீட்டுக்கு வர இருந்தன். முதல், சுகுமார் அங்கிளிட்டக் கேட்டுட்டுப் போகலாம் எண்டு தான் இங்க வந்தனான். இங்கயே உங்களக் கண்டிட்டன்.” என்றவன், மிகவும் சாதுரியமாக, அவர் வினையாற்ற இடம் கொடாது சேகர், சுகுமாரிடமும் மன்னிப்பு வேண்டி விட்டான். ஒரு நொடி தாமதிக்கவில்லை, மயூரன் கரத்தில் தட்டிவிட்டு விறுவிறுவென்று வெளியேறியுமிருந்தான். உள்ளிருந்தவர்கள், என்ன ஏதெனச் சுதாரிக்க முதல் வெளியேறிவிட்டவன், வெளியில் வந்த வேகத்தில் சடக்கென்று நின்றுமிருந்தான்.
அங்கு, கலங்கிய விழிகளும் கன்றிய முகமுமாக அமர்ந்திருந்தாள், பைரவி. மடியில் அண்டையான் பத்திரிகை. ஆரூரன் பார்வை அவளருகில் படிந்தது. பக்கத்துக் கதிரையில் ஒருத்தன் அமர்ந்திருந்தான். டிப் டொப்பாகத்தான் இருந்தான். ஆனாலும், பார்த்ததும் ஏதோ சரியில்லை என்ற எச்சரிக்கை மணி அடித்தது. அதுவும் அவன் பார்வை, என்ன ஏதென்று ஆராயும் தேவையின்றியே பிடிக்கவில்லை.
பைரவியோடு, நட்புக் கரம் நீட்டிக் கொண்டிருந்தான் போலும்.
“நானும் மூண்டாம் வருசம் மெடிசின் தான் செய்யிறன்.” என்று, அவன் சொன்னது அதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
காஞ்ச மிளகாயை, புகையும் அடுப்பில் போட்டது போல், எரிச்சல் கொடுத்த அவள் பார்வையைத் தாங்கிக் கொண்டு அதில் நிற்கவில்லை, ஆரூரன்.
அதேநேரம், மனம் சும்மா இருக்கவும் இடம் கொடுக்கவில்லை. விறுவிறுவென்று நடந்து கொண்டே, கைபேசியில் இலக்கத்தை அழுத்தியபடி அந்த கொரிடோர் வளைவால் திரும்பியவன், “மயூரன், உம்மட மச்சாள் தேவையில்லாத எதையோ இழுத்து வைக்கப் போறா போலக் கிடக்கு. வெளில ஒருத்தனோட கதைச்சுக் கொண்டு இருக்கிறா. அவன்… ஆள் சரியில்லை போல இருக்கு. ஃபோனக் கட் பண்ணிட்டுப் போய்க் கூப்பிடும்.” என்று விட்டு வெளியேறினான்; அவனையே பார்த்தபடி, இன்னொருத்தன் வெளிவாயிலில் நிற்பதைக் கண்டும் காணாது.
அந்த ஒருவன் கைபேசிக்கு, ‘வேஸ்ட்’ என்று குறுஞ்செய்தி வந்து விழுந்தது. எல்லாம் பைரவியோடு கதைத்துக் கொண்டிருந்தவன் தான். ஆரூரன், என்னவோ ஏதோ பெரிய ஆள் என்று வந்தால், ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டே காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டால்?
அந்த, ‘வேஸ்ட்’ இன்னொருவனுக்குச் சென்றது. ‘அப்பிடி நினைத்து விடாதே, தொடர்!’ பதில் அனுப்பினான், அந்த அவன்.
error: Alert: Content selection is disabled!!