தனியே,போதைப்பொருள் கடத்தல், பதுக்கல், விநியோகம், பாவனை எனக் கட்டுப்படுத்துவதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வு கிடைத்து விடுமா என்ன?
படித்தவர் தொடக்கம் பாமரர் வரை, பாலர் தொடக்கம் முதியவர் வரை, போதைப்பொருள் பாவனையால் தனிப்பட்ட நபர் தொடங்கி குடும்பம், சமூகம், நாடு என ஏற்படும் தீமைகள் பற்றிய தெளிவான அறிதல், விளக்கம், விழிப்புணர்வு நிச்சயம் அவசியம். அதற்கான முன்னெடுப்பை, தனிப்பட்ட ஆர்வலர்கள் தொடங்கி, தனியார்க் குழுக்கள், அரச அமைப்புகள் என்று, பரவலாக முன்னெடுத்தல் மிகவும் அவசியமாகிறது.
மகளுக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த பின், மேலும் ஒரு கிழமை நின்று விட்டே கனடா போக இருந்தார்கள், பைரவியின் பெற்றோர். நடந்த களேபரங்கள், சுகுமார் உடல் நிலை எல்லாம் சேர்ந்து மூன்று கிழமைகளுக்கு முன்னரே புறப்பட வைத்திருந்தது.
பெற்றோருக்கு, யாழ்ப்பாணத்தில் வைத்தே விடைகொடுத்திருந்தாள், பைரவி. என்னதான் பிடிவாதமாக இருந்தாலும் அவர்கள் புறப்பட்ட பின்னர் தான், சீராக மூச்சு விட்டாள்; அவளின் இயல்பான துறுதுறுப்பும் மீண்டிருந்தது. அதுவே, பல்கலை தொடங்கும் மட்டுக்கும் என்ன செய்வது என்ற கேள்வியை முளைவிட வைத்திருந்தது.
வீட்டு ஆன்ட்டி, அங்கிளோடு நட்புப் பயிர் வளர்ப்பதும் எத்தனைக்கு?
ஆரம்பத்தில், கலா வீட்டிலிருந்து போய் வருவதாகத் தானே ஏற்பாடு. அதற்காக, வந்ததும் வராததுமாக ஸ்கூட்டி வாங்கியிருந்தாள். இப்போ பார்த்தால், நாலே எட்டுத்தான், பல்கலைக்குள் சென்று விடலாம். அப்போ ஸ்கூட்டி? முற்றத்தில் நின்று பரிதாபமாகப் பார்த்து வைத்தது, அது.
“அங்க இங்க எண்டு சுத்தித் திரியிறது இல்ல.” தாயின் குரல் ஒலித்தாலும் ஒரு நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“ஆன்ட்டி, நான் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கோணும். போயிட்டு வரப்போறன்.” காலை பத்து மணி போல் புறப்பட்டு விட்டாள்.
“எங்கம்மா பெரிய கடைக்கா? அல்லாட்டி இங்கனேக்கப் போறீங்களோ?”
“டவுனுக்கு ஆன்ட்டி” என்று விட்டாள்; சத்தியமாக, எங்கு போக வெளிக்கிடுறாள் என்று அவளுக்கே தெரியாது.
“முதலே சொல்லி இருக்க நானும் வந்திருப்பன். தனிய… இடவலம் தெரியுமாம்மா?”
“அதெல்லாம் தெரியும் ஆன்ட்டி. பக்கத்தில தானே! அதோட, கூகிள் இருக்கப் பயமேன்!” கைப்பேசியை ஆட்டிக் காட்டினாள்.
“மினக்கடாமல் கெதியா வந்திருவன்.” அவர் சொல்ல முதல் முந்திக்கொண்டாள்.
சர்ரென்று ஸ்கூட்டியைச் செலுத்தியபடி சென்று மறைந்தவளைப் பார்த்தபடி நின்ற சுகிதான் அந்தரப்பட்டுவிட்டார். பாமினியோ, “உங்கட மகள் போலப் பார்த்துக் கொள்ளுங்கோ!” என்று விட்டுப் போயிருக்கிறார்; இவரும் சம்மதித்தார். ஆனால், வளர்ந்த பிள்ளையை எந்தளவுக்குக் கட்டுப்படுத்துவது? உண்மையில் ஆரூரன் முகத்துக்காகத் தான் அறை கொடுக்கவே முன்வந்தார்கள். அந்தளவுக்கு, அவன், இவர்களோடு நல்ல பழக்கம்.
“என்ர பேர எதுவும் எடுத்து அவேயோட கதைச்சீராதீங்க சேர்.” சின்னச் சிரிப்போடு சொல்லியும் இருந்ததில், இவர்கள் அந்தக் கதையே எடுக்கவில்லை. மயூரனிட மச்சாள் என்று சொல்லியிருந்தான். மயூரன் குடும்பம், ஆரூரன் குடும்பத்தோடு நெருக்கம் என்று தெரிந்ததில் விட்டு விட்டார்கள்.
நல்ல வெக்கை. போட்டிருந்த ஹெல்மட்டுக்குள் முகம் எரிந்தது. கை போன போக்கில் ஸ்கூட்டி பறந்தது. தின்னவேலி, பரமேஸ்வரா சந்தி வந்ததும் நிதானித்தாள், பைரவி. ஏதோ ஒரு உந்துதல், அப்பாலும் இப்பாலும் பார்த்துவிட்டு, சடக்கென்று பல்கலைக்கழக முன்வாயில் பாதையால் விட்டாள்.
நிதானமாக, பார்த்தும் பாராது பார்த்தபடி ஆரூரன் ஹோட்டலைத் தாண்டியது, ஸ்கூட்டி.
சூப் எற்றியது நினைவிலாடியது; சின்னதாகச் சிரிப்பும் வந்தது. என்றாலும், அவன் ‘முண்டம்’ என்ற போது, துளிர்விட்ட கோபம் சற்றுமே மட்டுப் படவில்லை. அவன் செய்கைகளுக்கும், டினோசன் கைதுக்கும் தொடர்பில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருந்தாலும், அவன் மீதான எரிச்சல், கோபம் சற்றுமே குறையவில்லை.
அன்று, ஆஸ்பத்திரியில், அப்பாவியாக மன்னிப்புக் கேட்டவன், வெளியே அவளைக் கண்டதும் ஒரு பார்வை பார்த்தானே! எதற்காம்? அருகில் அமர்ந்திருந்தவனோடு கதைத்ததற்கா? அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவன் பார்வையில் இருந்த கண்டிப்புப் பிடிக்கவே பிடிக்கவில்லை. அவளைக் கண்டிப்பாகப் பார்க்க அவன் யார்? அந்த நினைவில், மனதில், அவன் முகத்துக்கு நாலு குத்து விட்டுக்கொண்டே சென்றவள், ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதியை அண்மித்திருந்தாள். விஞ்ஞான பீட வாயிலுக்கருகில் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். சட்டென்று இவளை மறிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
“ஹெல்மெட்ட கழற்று!” என்ற அதட்டலோடு வந்தனை, அப்போதுதான் அடையாளம் தெரிந்தது. அவள் தங்கியுள்ள வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவன்.
‘இவன் கம்பசா? ராகிங்கா?’ மனதிலோட, சொன்னதைச் செய்திருந்தாள், பைரவி.
“நான் சொன்னன் மச்சான், அவளே தான்.”
“எப்படியடா?” இன்னொருவன் வியந்தான்.
“பக்கத்து வீட்டில எல்லா இருக்கிறா! எல்லாம் எங்கயும் அம்பிட்டா குடுக்க வேணுமே எண்டு கவனிச்சு வச்சது தான்.” அடிக்குரலில் சொன்னவன், “என்னடி பார்வை? இறங்கடி! மகா ராணி ஸ்கூட்டியில இருந்து கொண்டுதான் கதைப்பாவாம்.” நக்கலோடு சொன்னாலும் அவன் பார்வையில் எக்கச்சக்கக் கோபம்.
ராகிங்! உறுதியாகிற்று. ‘ஆனா பைரவி, நீ அந்தளவு ஃபேமஸா என்ன!’ அவர்கள் நால்வரையும் பார்க்கையில் சிரிப்பு வந்திரும் போலவும் இருந்தது; கட்டுப்படுத்திக் கொண்டாள். வலு மரியாதையாக இறங்கி நின்றபடி, கேள்வியாகப் பார்த்தவளை, அவர்களோ, ஒருசேர எரிக்கும் பார்வை பார்த்தார்கள்.
“பார் ஆளிட திமிர!” என்றபடி, அவள் பற்றி ஒன்று ஒன்றாகக் கேட்டு வாங்கினார்கள். முக்கால்வாசி பொய்; கனடா என்றதோடு, கால்வாசி மெய் படபடவென்று அவள் வாயால் உதிர்ந்தது.