ரோசி கஜனின் மீரா 30 – 2

மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங்க. அதுவும், அந்த டெரரிஸ்ட் என்ர தலையில துவக்கால அடிச்சதையும்…” என்றபடி, முகம் கோண தலையைப் பிடித்துக்கொண்டு முனகினாள்.

“ஐயோ! என்ர குஞ்சு என்ன சொல்லுற? உனக்கு ஒண்டும் இல்லையெண்டு தானே இவன் சந்துரு சொன்னவன்.” பதறிய நித்தி, “காட்டு பார்ப்பம்!” அவள் கரத்தை விலக்க முனைந்தார்.

“மீரா!” ஓரெட்டில் அணுகியிருந்த ஜோரிகோ, “என்ன செய்யிது மீரா?” தலையை இறுகப் பற்றியிருந்த அவள் கரத்தை விலக்க முனைந்தான்.

அவர்களின் பதற்றத்தைக் கடைக்கண்ணால் இரசித்தாள்,இவள்.

“இவள் இப்பிடி ஒண்டும் சொல்லவே இல்ல அத்தை. தனக்கு ஒண்டும் இல்ல, நல்லா இருக்கிறன் எண்டுதான் சொன்னவள்…” ஆரணியும், ஆரபியும் அழுகுரலில் சொல்லிக்கொண்டு நெருங்க, “ஹா..ஹா..ஹா..” நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டி நகைத்தாள், மீரா.

“லூசாடி எருமை!” ஆரணி,ஆரபியின் அடிகளை முறுவல் மாறாது வாங்கிக் கொண்டவள், நகர எத்தனித்த ஜோரிக்கின் கரத்தைப் பற்றி இழுத்து தன் மறுபுறம் அமர்த்திக் கொண்டாள்.

மறுக்கவில்லை அவன். கண்ட கணத்திலிருந்து கை வளைக்குள் பொத்தி வைத்திருக்க, நெஞ்சம் தவிக்க தவிக்க அல்லவா பொறுமையாகக் காத்திருந்தான்.

“ஏனம்மா தங்கச்சி, இப்படிப் பக்கத்தில் வந்திருங்க என்றிருக்க வந்திருக்கப் போறார். அதுக்குப் போய் ஏன் இவ்வளவு நாடகம்? எங்களை எல்லாம் பயப்படுத்திப் பார்க்கிற?” முறைத்தான், சந்துரு.

“கொஞ்ச நேரத்தில வயிற்றில புளி கரைச்சிட்ட மீரா. இதெல்லாம் என்ன விளையாட்டு?” சந்துருவின் தாயும் சேர்ந்து கொண்டார். கடிந்து கொள்ளும் குரலும் பார்வையுமாகத்தான் சொன்னார். யார் என்ன சொன்னாலும் கணேஷ் என்பவன் மகன் இவன் என்றதை அவர்களால் சட்டென்று மறக்க முடியவில்லை.

“அதில்ல பெரியம்மா…எனக்கு ஒரு ஆபத்து எண்டதும் அம்மாவும் இவனும் என்ன செய்யீனம் எண்டு நேர்ல பார்க்க…” அவளைக் கதைக்கவிடாது வாயைப் பொத்திவிட்டான், ஜோரிக்.

“இன்னொருமுறை இப்பிடியெல்லாம் கதைக்காத!” கலக்கத்தோடு சொல்லவும் செய்தான்.

“ம்ம்…அதுதான் இனி இப்பிடிக் கதைச்சா என்னட்ட நல்லா வாங்குவ!” எச்சரித்த நித்தி, “பிறகு என்ன நடந்திச்சு? ஏன் ஃபோன் இடையில கட் ஆகிச்சு?” என்றார்.

“எனக்கு முன்னுக்கு நின்ற ஆட்களிட மறைவில நின்றுதான் இவனுக்கு மெசேஜ் போட்டன்மா. பிறகு, எடுத்துக் கதைக்க, ஒருத்தன் கண்டிட்டான்.” சொன்னவளின் தேகம் அதை நினைத்து இப்பவும் நடுங்கீற்று!

“துவக்கையும் நீட்டிக் கொண்டு வந்தானா, பக்கத்தில் நின்ற என் ஃப்ரெண்ட் ஃபோனைத் தட்டி விட்டுட்டாள். அது பார்த்தால் எனக்கு முன்னுக்கு நின்ற ஒரு ஆளும் ஃபோனில கதைச்சிருக்கிறான். அதைக் கண்டிட்டு வந்தவன் அந்த மனிசனைக் கீழ தள்ளி, மிதித்து, அடிச்சு…” கண்களை மூடிக்கொண்டு தாயின் மடியில் சுருண்டுவிட்டாள்.

“குஞ்சு!” மகளை அணைத்த நித்தியின் நெஞ்சு அக்காட்சியை நினைத்து நடுநடுங்கிப் போயிற்று!

நடந்த பயங்கர நிகழ்வின் நினைவில், முகம் இருள, தாயின் மடியில் பதுங்கியவளைத் தன் புறமாக இழுத்திடத் துடித்தன ஜோரிக்கின் கரமிரண்டும். கட்டுக்குள் வைத்திருக்க முனைந்து பார்த்தவன், முடியாதென உணர்ந்ததும் பட்டென்று எழுந்துவிட்டான்.

அவர்களையே அவதானித்துக் கொண்டிருந்த ராகுலன், சந்துருவுக்கு அவன் படும் பாட்டைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“மீரா! ஒன்றரை நாட்களுக்கும் மேலாகப் பயணம் செய்து வந்தவையல், முதல் ஃபிரெஷாகி வரட்டும். ஆறுதலாக் கதைக்கலாம்.” இடையிட்டான் சந்துரு.

“அதுதானே நித்தி, நீ எழும்பு பார்ப்பம். போயிட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன். நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் எண்டு இங்க இவையளும் இன்னும் சாப்பிடேல்லை.” என்றார், சந்துருவின் அன்னை.

“சரிக்கா…” நித்தி எழ, “சந்துரு, இங்க பக்கத்திலயே நான் தங்கிறதுக்கு ஹோட்டல் கிடைக்கும் தானே?” என்றபடி, தன் முதுகுப்பையை எடுத்தான், ஜோரிக்.

“என்ன ஹோட்டலா?” மீராவின் குரலோடு இணைந்தது இளையவர்களின் குரல்கள்.

“ஹலோ! என்ன பகிடியா?” சட்டென்று நெருங்கி, அவன் கரத்தை அழுந்தப் பற்றினாள் மீரா; விடமாட்டேன் என்கின்ற வகையில்.

சந்துருவிலிருந்த ஜோரிக்கின் பார்வை மீராவில் படிந்தது.

சற்றுமுன், இவர்கள் வீட்டினுள் புகும் போது மனதுள் இருந்த தடுமாற்றம், துளியும் இப்போதில்லை. அதற்கு முதல் காரணமே மீராவின் நடத்தைதான்!

இவன் வந்த கணத்தில் இருந்து அவளின் ஒவ்வொரு செய்கையும் ‘உன்னோடு நானிருக்கிறேன்’ என்றுணர்த்தி, அவனுள் இதம் பரவச் செய்கின்றதே!

சற்றே பிடிவாதத்தில் மடிந்த இதழ்களும், ‘என்ன நீ?’ எனும் பார்வையுமாக நின்றவளைப் பார்த்துச் சந்தோசமாக முறுவலித்தவன், மீண்டும் சந்துருவிடமே திரும்பி வாய் திறக்க முதல், “இதென்ன ஹோட்டல் அது இதென்று கொண்டு ஜோரிக்? நம்மட வீட்டிலயே தங்கலாம்.” என்றான் அவன்.

“அதுதானே அண்ணா! இங்கேயே தங்கலாம்.” ஆரணியும் சேர்ந்துகொள்ள, “இந்தப் பெரிய வீடிருக்க, பக்கத்திலயே எங்கட வீடிருக்க நீங்க வெளியில தங்கிறதா?” என்றான் ராகுலன்.

சங்கட முறுவலோடு மீராவையும் நித்தியையும் பார்த்தான், ஜோரிக்.

நித்தி எதுவும் சொல்லவில்லை என்றாலும் ‘என்ன இது?’ என்ற மாதிரிப் பார்வையோடுதான் நின்றார்.

“இல்ல சந்துரு, எதுவும் நினைச்சுகொள்ள வேணாம். ஹோட்டல் எண்டா எனக்குக் கொஞ்சம்…” எப்படிச் சொல்வதென்று சற்றே தயங்க வேண்டியிருந்தது.

சற்றேதான். “இல்ல நான் ஹோட்டலில தங்கிக் கொள்ளுறன்.” முடிவாகச் சொன்னவன், “மீரா, நீயும் என்னோட வாறியா?” தெளிவாகவே கேட்டு வைத்தான்.

அத்தனை இலகுவாக அவன் கேட்ட விதத்தில் சுற்றி நின்றவர்கள் அதிர்ந்தார்கள் என்றால், மீராவின் விழிகளில் படீரென்று ஒரு மாற்றம் வந்து போனது. அது கணம் தான் என்றாலும், அவள் பதிலுக்காக அவள் விழிகளையே பார்த்திருந்தவன் மனம் துணுக்கிட்டு விட்டது.

“அய்யோ மீரா! எனக்கு உன்னோட நிறையக் கதைக்க வேணும்மா. அதுக்காகத்தான் வரச் சொன்னன், இண்டைக்கு மட்டும்.” தாமதிக்காது பதற்றத்தோடு சொன்னவனைப் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருந்தது.

‘பிறகு, கன்னத்தில் விசுக் விசுக்கென்று விளாசி வெளியே தள்ளிவிட்டாள் என்றால்…’ அவன் மனதின் அலறலை அப்படியே கேட்க முடிந்தது மீராவால்.

“ம்ம்…அந்தப் பயம் இருக்கட்டும்!” அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னவள், அவன் கரத்தைப் பற்றியிருந்த பிடியை விலக்கவில்லை.

நித்தி மகளைப் பார்த்த பார்வையில் நெருப்புப் பறந்தது.

‘அவன் தான் இதெல்லாம் ஒன்றுமேயில்ல எண்ட மாதிரிக் கேட்கிறான் எண்டால்…இவள்…’ சுறுசுறுவென்று எரிச்சல் ஏற, “மீரா!” என்று ஆரம்பிக்க, இடையிட்டான், சந்துரு.

“ஹலோ ஹலோ…நீங்க இப்பிடி வாங்க ஜோரிக்.” மீராவின் கரத்தை அவன் கரத்தில் இருந்து பிரித்துவிட்டுவிட்டு, அவனைத் தன் புறமாக நகர்த்தியவன், “ஹோட்டலில தங்கிறதெல்லாம் சரிவராது.” திட்டவட்டமாகச் சொன்னான்.

“இவ்வளவு நாளும் எப்பிடி எப்பிடியோ தெரியாது. இப்ப, எங்கட வீட்டுக்குள்ள வந்தாச்சே! இனி, விருப்பம் இருந்தாலும் இல்லையெண்டாலும் சிலதுகளைக் கேட்டுத்தான் ஆக வேணும்! அதெல்லாம் எங்கட வீட்டில எழுதப்படாத சட்டங்கள்.” பொய் மிரட்டல்!

“இல்ல சந்துரு உங்களுக்கு ஏன் வீண் கஷ்டம்?” ஜோரிக்!

“கஷ்டமா? நல்ல கதைதான் போங்க. உங்களுக்கு அறை எல்லாம் தயாரா இருக்கு.; எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் உங்கட வீடு எண்டு நினைச்சுக்கொண்டு இங்க தங்கலாம்.” அவனை இழுத்துக்கொண்டு நகர்ந்தான்.

இனியும் மறுப்பது சரியில்லை என்று அவனோடு நடந்தவன், திரும்பி மீராவைப் பார்த்தான்.

அவளோ, முறைத்த தாயைச் செல்லமாகக் கட்டியணைத்துச் சாமாதானம் செய்துகொண்டிருந்தாள்; பார்வை மட்டும் இவனில் தான்.

‘இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?’ மனதுள் ஏங்கிப் போனான், ஜோரிக்.

அன்றைய தன் பேச்சுக்கும் நடத்தைக்கும் சப்பைக்கட்டெல்லாம் கட்டத் தயாராக இல்லை என்றாலும், ‘என்ன மனநிலையில் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்று அவளிடம் சொல்ல வேணும். எங்களிடையே ஒரு சிறு உறுத்தலும் இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது’ என்ற மனமோ, அவளின் அருகாமைக்காகப் பிடிவாதம் பிடித்தது; பயனில்லை என்று புரிந்த பிறகும்.

பலமாகவே பெருமூச்செறிந்தான், ஜோரிக்.

சட்டென்று நின்ற சந்துரு, “ஹா..ஹா…” வாய்விட்டே நகைத்து இவனைச் சங்கடத்தில் நெளிய வைத்தான்.

“மீரா எங்கயும் ஓடிட மாட்டாள். நீங்களும் தானே? பிறகென்ன? என்ன கதைக்கிறதெண்டாலும், முதல் வந்த களைப்புப் போகக் குளிச்சு, சாப்பிட்டுட்டு, நல்லாத் தூங்கி எழும்பி, நாளைக்குக் கதைக்கலாம்.” கேலியிழையோடச் சொல்லிக்கொண்டே நகர்ந்தான்.

மீண்டும் திரும்பி மீராவைப் பார்த்தான், ஜோரிக்.

விழிகளை மூடித் திறந்து முறுவலித்தாள், அவள். அவளுக்கும் அவனோடு தொத்திக்கொண்டு போகத்தான் ஆசை. தாய், காளி அவதாரம் எடுக்காது இருப்பாரா? இப்பத் தான் எல்லாம் சரியாகியிருக்கு! அதைக் கெடுத்துக்கொள்ள அவளுக்கென்ன பைத்தியமா?

முறுவலோடு சென்று தாயின் தோளில் சரிந்தவள், “அவன் அப்படிக் கேட்டதும் நான் என்னவோ பின்னால் போன மாதிரி முறைக்கிறீங்களே நித்தி! இது அநியாயம் சொல்லிப்போட்டன்.” தாயின் கன்னத்தில் மூக்கை உரசினாள்.

“உன்னை!” மகளின் தோளில் தட்டினார், நித்தி. மனக்குறையைச் சொல்லாதும் இருக்க முடியவில்லை.

“என்னம்மா வெள்ளக்காரன் போல இவ்வளவு இயல்பா நீயும் என்னோட வாறியா எண்டு கேட்கிறான்…ர்…”

முகம் சுருங்க ஆரம்பித்தவர், மீராவின் விற்புருவங்கள் ஏறியிறங்க, நிறுத்திவிட்டு முறைத்தார்.

“அவன் பார்த்தால் தான் நம்ம ஆட்கள் போல, பழக்க வழக்கம் டச்சுக்காரன் போலத்தான் மா.” மெதுவாகச் சொன்னவள், “ஆனாலும், அவன் நல்லவன் மா! என்னில நிறையவே அன்பும் இருக்கு!” என்றவள், “நீங்க நீங்க… உங்கட மனசில குறையில்லையேம்மா! என்னால அவனை…” முடிக்காது நிறுத்தியவளின் விழிகள் கசிந்தன. தாயின் கழுத்தில் முகத்தைப் புதைத்து அதை மறைக்க முயன்றாள்.

‘என்ர செல்லம் சந்தோசமாக இருந்தாலே எனக்குப் போதும்!’ மனதுள் சொல்லிக் கொண்டே, அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டார், நித்தி.

அந்த அணைப்பே அவளுக்கான பதிலைச் சொல்லிவிட்டதே! தன்னைத் திரும்பி திரும்பிப் பார்த்தபடி படியேறும் ஜோரிக்கைப் பார்த்து அழகாக முறுவலித்துக் கண்ணடித்தாள்,மீரா.

ஒரு கணம் நின்றுவிட்டு, ‘உனக்கு இருக்கு!’ விழிவீச்சால் எச்சரிக்கை அனுப்பியபடி மாடியேறினான், அவன்.

சுபம்

 

error: Alert: Content selection is disabled!!